செவ்வாய், 16 ஜூன், 2026

நன்றியுரை!

 

                                                                நன்றியுரை!

=========================================================================

(விழுப்புரம் ‘மருதம்’ – 19ஆம் ஆண்டுவிழாவின் போது 16-01-26 அன்று ‘வாழ்நாள் தமிழ்ப்பணி மருதம் விருது’ தரப்பட்டதற்காக,  புதுச்சேரியில்  22-05-26இல் நடைபெற்ற தமிழ்மாமணி இறைவிழியனார் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் விழாவில் ‘நற்றமிழ் அறக்கட்டளை’யாரால் நடத்தப்பட்ட ‘பாராட்டு நிகழ்ச்சி’யில் ‘தமிழநம்பி’ ஏற்புரையாக ஆற்றிய நன்றியுரை)

==========================================================================

நற்றமிழ் நிறுவுநர், தமிழ்ப்போராளி, தமிழ்மாமணி, புலவர் மு.இறை விழியனார் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் விழாவின் தலைவரும், ‘நற்றமிழ் அறக்கட்டளையின் தலைவருமான பேரன்பிற்கும் பெருமதிப்புக்குமுரிய பெ.மூர்த்தி ஐயா அவர்களே! தமிழ்வாழ்த்துப் பாடிய பைந்தமிழ்ப் பாவலர் இரா.இளமுருகனார் அவர்களே! இசைப்பாவினால் அனைவரையும் மகிழ்வித்த கலைமாமணி முனைவர் கா.இராசமாணிக்கம் ஐயா அவர்களே!  முன்னிலை வகிக்கும் பெரியோர்களே!

ரவேற்பரை நிகழ்த்திய நற்றமிழ் அறக்கட்டளையின் துணைத் தலைவர் திருவமை தாசுநிர்மலாசெகதீசன் அம்மையார் அவர்களே! நிகழ்வை ஒருங்கிணைக்கும் தொகுப்புரையர் தலைமையாசிரியர், இலக்கியச்சிந்தனையாளர் திரு.பு.விசாகன்அவர்களே! தமிழின் பெருமையை மீட்டெடுக்கும் ஈடெடுப்பற்ற மொழியாய்வர், சொல்லாய்வர், வேரியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் அருளியார் அவர்களே!

தமிழ்மாமணி புலவர் மு.இறைவிழியனார் இருபதாம் ஆண்டு நினைவேந்தல் மலரை வெளியிட்ட  முதுபெரும் தமிழறிஞர் தெளிதமிழ் இதழாசிரியர் செ.இராமலிங்கன் ஐயா அவர்களே! மலரைப் பெற்றுக் கொண்ட பெரியோர்களே

அகத்தியர் புரட்டு நூலை வெளியிட்ட அறிவியல் அறிஞர் தாமரைக்கோ ஐயா அவர்களே! நூலைப் பெற்றுக்கொண்ட பெரியோர்களே!

நற்றமிழ்இணையதளம் அறிமுகம் செய் இருக்கும் புத்திலக்கிய ஈடுபாட்டாளர் நற்றமிழ் இதழின் துணையாசிரியர் சீனு. தமிழ்மணி ஐயா அவர்களே! இணையதள வடிவமைப்பாளர் சிவ.கோவிந்தன் ஐயா அவர்களே! 

நன்றியுரையாற்ற விருக்கும் பகுத்தறிவுத் தொண்டுச் செம்மல் திரு.கோ.மு.தமிழ்ச்செல்வன் ஐயா அவர்களே! 

ஐயா இறைவிழியனார் நினைவு நூலகம், நூலக வாசகர் வட்டம், அறக்கட்டளையின் திருக்குறள் தொடர் சொற்பொழிவுகள், நற்றமிழ் இணையதளம் ஆகியவற்றின் அரிய வினைப்பாடுகளில் துணையிருக்கும் பேருள்ளங்களே!  இந்த அரிய நிகழ்ச்சிக்கு அடிப்படையான உழைப்பாளராக இருந்து அரும்பணி யாற்றிவரும் செயலாண்மையும் அறிவாண்மையும் சான்ற பண்பாளர்நற்றமிழ்இதழின் பொறுப்பாண்மையர் செழியன் ஐயா அவர்களே! 

அவையிலுள்ள அறிஞர்களே!, பெரியோரே! தாய்மாரே! இளேயோரே! அனைவர்க்கும் என் பணிவான அகங்கனிந்த வணக்கம்.

நிறையநேரம் நான் பேசமாட்டேன். விரைவில் முடித்து விடுவேன்! அமைதிகாத்து செவிமடுக்கப் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.   

     விழுப்புரம்மருதம்’ – என்ற அமைப்பின் மூலவர், தலைமை ஒருங்கிணைப் பாளர் இரவி கார்த்திகேயன் ஐயா, குமுகநயன்மை உணர்வும் தமிழ்மொழி ஈடுபாடும் தமிழ்ப் பண்பாட்டுச் சிந்தனையும் உடையவர். நான் பாவலரேறு ஐயாவிடம் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் புதுவையில் அருளி ஐயாவிடம் கொண்டிருந்த தொடர்பு பற்றியும் எல்லாம் அவர்க்குச் சரியாகத் தெரியாது. 

பதினேழு ஆண்டுகளுக்குமுன், அவரிடம், ‘தமிழ்க் கணிப்பொறிப் பயிலரங்குஒன்றை விழுப்புரத்தில் நடத்த உதவி செய்யவேண்டுமெனக் கேட்டேன். ஒப்புக் கொண்டார். புதுவை இரா.சுகுமாரன் ஐயாவும் இன்னும் பல அன்பர்களும் அரிய உதவிசெய்தனர். பயிலரங்கு விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி கணிப்பொறி ஆய்வுக்கூடத்தில் மிகச்சிறப்பாக நடந்தது. உலகதுரை ஐயாவும் பிறரும் உதவியாக இருந்தனர்.புதுவையில் இருந்தும் கூட சிலர் வந்து பயிலரங்கில் கலந்துகொண்டனர். அந்தப் பயிலரங்கிற்கு முழுமையாக ஒத்துழைத்து உதவியவர் இரவி கார்த்திகேயன் ஆவார்.

அதற்கும் முன்பாக, விழுப்புரத்தில் தமிழில் மரபுப்பா எழுதப் பயிற்சி தரும் பயிலரங்கு ஒன்றைப்பாடல் வளாகம்என உருவாக்கப்பட்ட அமைப்பின் சார்பில் நடத்தினேன். பாவலர் பாலதண்டாயுதம், காலஞ் சென்ற ஐயா விழுப்பரையனார், எழில். இளங்கோ, ஆசிரியர் கு.அண்டிரன் ஐயா, உலகதுரை ஐயா முதலிய அன்பர்கள் துணையிருந்தனர். நல்லுள்ளம் சோழன் ஐயா பள்ளியில் வகுப்புகள் நடந்தன. ஏறத்தாழ ஒன்றரை யாண்டுக்காலம் ஞாயிற்றுக்கிழமைகளில் வகுப்பு நடந்தது. தொடக்க நிகழ்விலும் நிறைவு நிகழ்விலும் யாப்பறிபுலவர் அரங்க. நடராசன் ஐயாவும் இந்திய அரசின் இலக்கியப் பரிசை இருமுறை பெற்ற தங்கப்பா ஐயாவும் கலந்து கொண்டனர். இறுதி நிகழ்வில்நற்றமிழ்ஆசிரியராக அப்போது இருந்த திருவமை அரியநாயகி அம்மையார் கலந்துகொண்டு பயின்றோர் அனைவர்க்கும் சான்றிதழ்களை வழங்கினார். இவற்றை யெல்லாம் பற்றி இரவி கார்த்திகேயன் நன்றாக அறிந்திருந்தார்.

     இடையில், ‘விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தை நிறுவி நடத்திவந்த தமிழ்உள்ளம் பாவலர் பாலதண்டாயுதம் ஐயா, விழுப்புரம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருக்க வலியுறுத்தினார். பிறபணிகளில் ஈடுபடுவதால், என்னால் அந்த அளவு உழைப்பளிக்க இயலாதென்ற என் இயலாமையைத் தெரிவித்தபின், அந்த அன்புள்ளம் என்னை விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தின் துணைச் செயலாளர் என்றே தொடர்ந்து குறித்துவந்தார். என்னால் இயன்றவரை அவருக்கு நிகழ்ச்சிகளின் போதும் ஆண்டுவிழாக்க ளிலும் பிறநிலைகளிலும் உதவி வந்தேன். இவற்றையும் இரவிகார்த்தி கேயன் ஐயா அறிவார்.

என் துணைவியார் இறப்பிற்குப் பிறகு, 2017-இல் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு.வி.சோமசுந்தரம் ஐயா, ந.சுப்பிர மணியன் என்ற பார்ப்பன அறிஞர் ஆங்கிலத்தில் எழுதிய “The Brahmin in the Tamil Country” என்ற ஆங்கில நூலை மொழிபெயர்த்து எழுதுவதில் உதவும்படி கேட்டார். அவர் அமராவதியில் படைத்துறை சார்ந்த ஆங்கிலப் பள்ளியில் பணிநிறைவு செய்தவர். அவருக்குத் தமிழ் சொற்றொடர் அமைப்பதில் சிக்கல் இருந்தது.

     ஒவ்வொரு நாளும் காலை பத்துமணி முதல் மூன்றரை மணிநேரம் ஏறத்தாழ நான்கு மாதங்கள் அந்த நூலை மொழிபெயர்க்க அவர்க்கு உதவிசெய்து தூயதமிழில் அந்த நூலை எழுதிக்கொடுத்தேன். அதற்காக அவர் தரமுன்வந்த பொருளுதவியையோ வேறு எந்த உதவியையோ ஒரு சிறிதும் ஏற்கவில்லை. ஆனால், நூலில் என் உழைப்பை அவர் முறையாக, சரியாகக் குறிப்பிடவில்லை என்பது வேறு செய்தி. அந்த நூல் விடுதலை அச்சகத்தில் அச்சாகும் போது சில தூய தமிழ்ச் சொற்களை மாற்றி அயல்சொற்களில் எழுதிவிட்டனர். எனினும் அந்த நூலில் எல்லா இடங்களிலும்  தூய தமிழ்ச்சொற்களை அவர்கள் மாற்றவில்லை என்பதை நூலைப் பார்த்தபோது தெரிந்தது. இந்தச் செய்திகளை நான்கூறக் காரணம் இவற்றை ஐயா இரவிகார்த்திகேயன் அறிந்திருந்தார் என்று குறிப்பிட்டுச் சொல்வதற்காகவே ஆகும்.

     அதன்பிறகு நான் ஆங்கிலத்திலிருந்து நேரடியாக மொழிபெயர்த்தஆபிரகாம் கோவூரின் நிகழ்வு ஆய்வுகள்என்ற நூலை புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில், திருவமை சுடர் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்வின்போது ஐயா இரவி கார்த்திகேயன் ஐயா அவர்களே வெளியிட்டார்.

     2023-இல் விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பின் கோ.பாபு, தினகர் அன்பழகன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பள்ளிப்பாடத்திட்டப்படி பாடநூலில் உள்ள தமிழிலக்கணங்களை விளக்கிச் சொல்லித்தரும் வகுப்பு நடத்தினேன். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மூன்றரைமணி நேரம் என முப்பத்து நான்கு வகுப்புகள் நடந்தன. அதனைத் தொடர்ந்தே அவர்களுக்கு உதவுவதற்காகவே, ‘தமிழில் பிழைநீக்கி எழுதுவோம்என்ற பெயரில் எழுதிய என் தொகுப்பு நூலை 2024-இல் விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பு வெளியிட்டது. இதனையும் இரவிகார்த்தி கேயன் ஐயா நன்கு அறிவார்.

இக்கால், தூயதமிழ் மாத இதழான ‘நற்றமிழ்’ ஆசிரியர் பொறுப்பில் உழன்று வருவதையும் இரவிகார்த்திதேயன் ஐயா அறிவார்.

     இடையிடையே, நான் விழுப்புரத்திலுள்ளமருதம்உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளின் பாட்டரங்கங்கள், கருத்தரங்குகளில் தொடர்ந்து கலந்துகொண்டு வந்ததும் இரவிகார்த்திகேயன் ஐயாவுக்கு நன்கு தெரியும்.

இவற்றையெல்லாம் அறிந்திருந்த ஐயா இரவிகார்த்திகோயன்இந்தத் ஆள், தமிழநம்பி, தமிழ்,தமிழ் என்று ஏதாவது ஒரு நிலையில் தொடர்ந்து ‘;ழைப்பறித்துக் கொண்டிருக்கின்றான்என்று கருதிய காரணத்தால், என்னைமருதம்வாழ்நாள் தமிழ்ப்பணி விருதுக்காகத் தேர்ந்தெடுத்துச் சிறப்புச்செய்தார். அதற்காகவே, இங்கு இப்போது இந்தப் பாராட்டு நிகழ்வை நற்றமிழ் அறக்கட்டளையார் ஏற்பாடு செய்துள்ளனர்.     

என் நெஞ்சங்கனிந்த நன்றியை அறக்கட்டளைத் தலைவர் மூர்த்தி ஐயா அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பணிவோடு தெரிவித்துக் கொள்கின்றேன். 

     அரியதொரு தமிழ்ப்பாவில் வாழ்த்தியதுடன், பாராட்டுரையில் அளவுகடந்து பாராட்டிப் புகழுரை வழங்கிய ஆய்வறிஞர் பேரா.சிரியர் அருளியார்க்கும், சிறப்பாகப் பாராட்டி உரையாற்றிய திருவமை பூங்கொடி பராங்குசம் அம்மையார்க்கும், இதற்கு அடிப்படையானவரான செழியன் ஐயாவுக்கும் என் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

     பாவலரேறு ஐயா பெருஞ்சித்திரனார் பாடுவார்:

"எதுவரை எம்மூச்சு இயங்குகின்றதோ, 

எதுவரை எம்முடல் இம்மண் தோயுமோ, 

எதுவரை எம்மனம் நினைவலை எழுப்புமோ, 

அதுவரை மொழியின ஆர்ப்படங்காது!" -------- என்பார்.

     என்னால் இயங்க இயலும் வரை தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன் களுக்காக இயங்குவேன் என்ற உறுதியுடன் என் உரையை முடிக்கின்றேன். நன்றி. (புதுச்சேரி 22-5-26)                                                                                                                   -------------------------------------------------------------------------------------------------------------

சனி, 13 ஜூன், 2026

எங்கள் அரிமாப்பாண்டியன்!

 

எங்கள் அரிமாப்பாண்டியன்!

-    தமிழநம்பி -

நயனில் காலனே! நனிபே தையே!

செயற்கை அறிவிலி! மயக்காழ்ந் தனையோ?

விதைசமைத் துண்ணும் கதையாய் நல்லோர்

துதைந்தவர் நல்லுயிர் பதைபதைப் பில்பறி

மடஞ்சேர் செயலோய்! திடமுடைத் திமிரில்

அடம்பிடித் தலைவோய்! மடவ! இதுகேள்:

படிய வாரிய கருமுடி தாங்கி!

முடியழ கோடே முகமொளிர் வடிவில்

பளிச்சென வெள்ளை ஒளிரும் தூயுடை!

எளிஞராய் எவரையும் ஈர்க்கும் புன்னகை!

 

பெருநீள் மீசை பேச்சில் தெளிவு

அருந்தமிழ் காக்கும் திருத்தக் கொள்கை!

கல்வி பண்பு நல்லொழுங் கதனுடன்

ஒல்லும் வகைதமிழ்ப் பற்றைப் புகட்டிய

நல்லா சானே! நற்றனித் தமிழிதழ்

செல்லா நல்லிசைத் ‘தென்மொழி’ தொடர்பால்

தனித்தமிழ்க் கழகம் தானே தோற்றி

நுனித்தநன் முயல்வில் இனித்த குழாத்துடன்

நான்குமா நாடுகள் நோன்புற நடத்தி

ஊன்றிட தனித்தமிழ் உழைத்தவர் உண்மையாய்!

 

புதுவை அதிரபுத் தெழுச்சி பெற்றிட

மதுகையில் பேரணி விதுப்பில் நடத்தியார்!

பைந்தமிழ்க் கெதிரன் பகைமைக் கீரன்

நைந்துநொந் தோடிட நனிஓட் டியவர்!

கற்றார் எழுதிய நற்றமிழ் நூல்சில

பொற்புறப் பதித்துப் பொலிவோடு தந்தவர்!

தமிழக மடத்துத் தலைவர் பலரையும்

அமிழ்விலா முயல்வினில் அழைத்துத் ‘தமிழ்வழி

பாட்டுமா நா’ட்டினைக் கூட்டித் தமிழை

மீட்டிட உழைத்த நாட்ட வினையினர்!

 

பெயர்ப் பலகைகள் பிறங்கு தமிழினில்

வயங்கலில் எழுதிட இயங்கிய முயற்சியார்!

ஒல்லாங் கெல்லாம் எல்லார்க் குமென்றும் 

ஒல்லுற உதவிய நல்லுள வள்ளல்!

அரசு நிறுவன அறக்கட் டளையால்

பரப்பிடத் தனித்தமிழ் பயிலரங் குகள்பல

அறிஞர் பலரை அழைத்து நடத்தினார்!

செறிவுற மாணவர் அறிந்தனர் செய்திகள்!

தமிழ்மொழி தமிழினம் தமிழ்நாட் டின்நலம்

இமைப்பொழு தும்மறந் திருந்திடா வாழ்வார்!

 

அன்புடன் பழகுநர்; இன்னினிப் பண்பார்;

என்றுமெப் போதும் எந்த நிலையிலும்

நின்ற கொள்கையில் நெகிழ்வுறா நிலையினர்!

என்றென் றைக்கும் இறைவிழி யர்பால்

மாற்றமில் அன்பினர்; மதிப்பொடு போற்றுநர்!

கூற்றே அவர்பெயர் சாற்றுவன் அறிகநீ

அவரே எங்கள் அரிமாப் பாண்டியன்!

அவலம் அவருயிர் இவவுறக் கொண்டனை!

உய்விலை பழியே உனக்கே

எய்தினர் அவரே நொய்தலில் புகழே!

-------------------------------------------------------------------------

புதிய ஆட்சியாளர்க்குச் சிலசொல்!

 

புதிய ஆட்சியாளர்க்குச் சிலசொல்!

                

திங்கள், 18 மே, 2026

அரசியல் கட்சிகளும் - தமிழும், தமிழ்வழிக்கல்வியும்!

 



ரசியல் கட்சிகளும் - தமிழும், தமிழ்வழிக்கல்வியும்!

----------------------------------------------

தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கவும் அதன்வழி தமிழ்நாட்டின் மாநில அரசை உருவாக்கி ஆட்சி செய்யவும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இம் முறை சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 23, ஏப்பிரல் 2026 அன்று தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இத் தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணியாகவும் தனித்தும் போட்டியிடுகின்றன.

தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியாரும் தாம் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், மக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்வோம்; என்ன என்ன வளர்ச்சித் திட்டங்களையும் நலத்திட்டங்களையும் உருவாக்கிச் செயற்படுத்துவோம் என்று அவ்வக் கட்சியின் பல செயல்திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தேர்தலுக்கு முன்னர்த் தேர்தல் அறிக்கைகள்வழி அறிவிப்பர்.

சில சிறிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகளே வெளியிடாமல் இருந்துவிடுவதும் உண்டு; ஏதாவது உறுதிமொழிகளைக் கூறிவிட்டுப் பின்னர் நிறைவேற்ற முடியாமல் திண்டாடும் நிலையைத் தவிர்த்துவிட! கொள்கைகளே இல்லாத, வருமானத்தையே குறிக்கோளாகக் கொண்ட சில கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவதில்லை! சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்! சில அரசியல் கட்சிகள் நம்பகத்தன்மை குறைந்தவையாக நமக்குத் தெரிந்தாலும், தேர்தல் அறிக்கை என்பது முகன்மையான ஆவணம் என்பதால் அதனைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.

இப்போது தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக உள்ள தி.மு.கவும், எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.கவும் தனித்தனியே கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தனித்துப் போட்டியிடும் கட்சிகளும் உள்ளன. இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் தமிழரின் இருப்பிற்கும் உயர்வுக்கும் அடிப்படையான தமிழ்மொழியின் காப்பிற்கும் வளர்ச்சிக்கும் உயர்விற்கும் என்னென்ன அறிவிப்புகள் உள்ளன? இக் கட்சிகள் தமிழ்வழிக் கல்வியைச் செயற்படுத்த என்ன செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன என்ற இரண்டு கூறுகளை

மட்டும் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் தேடினோம். அவற்றை மட்டுமே திரட்டிக் கீழே தந்திருக்கின்றோம்.

1.திராவிட முன்னேற்றக் கழகம்:

ஒன்றிய அரசு “ஒரே நாடு ஒரே மொழி”என்ற திட்டத்தைக் கைவிடவேண்டும் என்றும், ஆங்கிலமும் தாய்மொழியும் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு மாற வேண்டும் என்றும் வலியுறுத்தப்படும்.

ஆங்கிலம் நிலையான ஆட்சி மொழிகளில் ஒன்றாகவும் இணைப்பு மொழியாகவும் இருக்க வேண்டும். அரசியலமைப்பின் 8-ஆவது அடைவுப் பட்டியலில் (அட்டவணையில்) உள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழி களையும் ஆட்சி மொழிகளாக அறிவிக்கத் திமுக தொடர்ந்து போராடும்.

உயர் நயன்மன்றங்களில் அந்தந்த மாநிலமொழியை (தமிழ்நாட்டில் தமிழ்) நயன் மன்ற மொழியாகப் பயன்படுத்த இசைவளிக்க ஒன்றிய அரசை வலியுறுத்தும்.

கழக(சங்க)த் தமிழ் முதல் கணினித் தமிழ் வரை தமிழின் வளர்ச்சியை ஆய்வுசெய்யவும், அதன் எதிர்காலச் செலவை (பயணத்தை)த் திட்டமிடவும் சென்னையில் “செம்மொழி மாநாடு” சிறப்பாக நடத்தப்படும்.

அனைத்து நாட்டு ஆய்விதழ்களில் வெளியாகும் முகன்மையான கட்டுரைகள் உடனுக்குடன் தமிழாக்கம் செய்யப்படும். இது தமிழ் வழியில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பேருதவியாக அமையும்.

பள்ளிகளில் புதுத் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தமிழ்மொழி கற்பித்தலுக்கான ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ்மொழி ஆர்வத்தை அதிகமாக்க, மாநில அளவில் பேச்சு, கட்டுரை, பாப் போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு முதலமைச்சர் கிண்ணி(கோப்பை) வழங்கப்படும். வெளிநாட்டுச் சுற்றுலாக்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

செயற்கை நுண்ணறிவு காலத்தில் தமிழுக்காகப் பல்வேறு வட்டார வழக்குகளை உள்ளடக்கிய உரைகள், பேச்சுகள் மற்றும் படங்கள் திரட்டப் பட்டுத் “தரவுக் களஞ்சியம்” உருவாக்கப்படும்.

தமிழ்மொழிக்கான செயற்கை நுண்ணறிவு மென்பொருட்கள் உருவாக்குவதை ஊக்குவிக்க, கல்வி நிறுவனங்களில் தமிழ்-செயற்கை நுண்ணறிவு புத்தாய்வு நிதி நல்கை (Tamil-AI Fellowship) வழங்கப்படும்.

மைசூரில் உள்ள இந்தியத் தொல்லியல் துறையிடமிருந்து தமிழ்க் கல்வெட்டுப் படிகளைப் பெற்று, அவற்றை ஆய்வு செய்து ‘தமிழ்நாட்டு கல்வெட்டுப் பெருங்களஞ்சியம்’ என்ற பெயரில் நூல் வரிசைகளாக வெளியிடப்படும்.

இளைய தலைமுறையினர் மொழிப்போர் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொள்ளாச்சியில் புதுமை(நவீன)க் காட்சித்தளம் அமைக்கப்படும்.

2. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்:

இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை நடுவண் அரசின் ஆட்சி மொழிகளாக அறிவிக்க வலியுறுத்தப்படும்.

சென்னை உயர் நயன்மன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழைத் கொண்டு வர உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நடுவண் அரசின் அனைத்துப் போட்டித் தேர்வுகளையும் தமிழிலேயே நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.

வெளிமாநிலப் பல்கலைக்கழகங்களிலும் 25 அனைத்து நாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் இருக்கைகள் அமைக்க நிதி உதவி யளித்துப் பிற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பேரறிஞர் அண்ணா வழியில் இருமொழிக் கொள்கையை (தமிழும் ஆங்கிலமும்) அதிமுக அரசு தொடர்ந்து உறுதியுடன் கடைப்பிடிக்கும்.

நடுவண் அரசின் தேசியக் கல்விக் கொள்கையில் இருமொழிக் கொள்கைக்கு இடையூறு உண்டாக்குகின்ற (பாதிக்கின்ற), தமிழ்நாட்டின் கொள்கைகளுக்கு எதிரான கூறுகள் புறக்கணிக்கப்படும்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான (பெரும்பாலும் தமிழ்வழியில் பயில்பவர்கள்) மருத்துவப் படிப்பு உள்-இடஒதுக்கீடு 7.5 விழுக்காட்டிலிருந்து 10 விழுக்காடாக உயர்த்தப்படும்.

3. தமிழக வெற்றிக் கழகம்:

இக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழ் பற்றியோ தமிழ்வழிக்கல்வி பற்றியோ எந்த அறிவிப்பும் காணப்படவில்லை.

4. நாம் தமிழர் கட்சி:

தமிழ்மொழி ஆட்சி மொழி, அதிகார மொழி, பண்பாட்டு மொழி, பயன்பாட்டு மொழி, வழிபாட்டு மொழி மற்றும் நயன்மன்ற மொழியாக மாற்றப்படும்.

சிற்றூர் ஆட்சிசார் அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை அனைத்து அரசு ஆவணங்கள், பதிவுகள், கோப்புகள் தமிழில் மட்டுமே பேண(பராமரிக்க)ப்படும். அரசு அலுவலகப் பெயர்ப் பலகைகள், வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் இருப்பதைச் சட்டம் மூலம் உறுதி செய்யப்படும்.

செய்தி ஒளிபரப்புத் துறையில் இருந்து தமிழ் வளர்ச்சியைப் பிரித்து, “தமிழ் மீட்சித் துறை” என்ற தனித் துறை உருவாக்கப்படும்.

உயர் நயன்மன்றம் முதல் உள்ளூர் நயன்மன்றம் வரை அனைத்து நயன்மன்றங்களிலும் தமிழ் ஆட்சி மொழியாகவும், வழக்காடு மொழியாகவும் மாற்றப்படும். அனைத்துப் படிவங்களும் தமிழில் அமைய ஆட்சிமொழிச் சட்டம் கொண்டுவரப்படும்.

தமிழகக் கோயில்களில் தமிழில் மட்டுமே வழிபாடு செய்யப்பட வேண்டும் என்பது சட்டமாக்கப்படும். சிற்றூர்ப்புறக் கோயில்களில் திருமுறைகள், (நாலாயிரத்) தெய்வத் திருப்பனுவல்கள் ஓதுவதற்கான பயிற்சிகள் அளிக்கப்படும்.

தமிழ் தெரியாதவர்கள் - பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், தமிழை எளிதாகக் கற்க அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் தனித்தமிழ்ப் பயிற்சி நடுவம்அமைக்கப்படும்.

தமிழ் இலக்கியக் கல்வி பள்ளி முதல் முனைவர் பட்டம் வரை ஊக்குவிக்கப்படும்.

மைசூரில் இருக்கும் பண்டையத் தமிழ்க்கல்வெட்டுகள் தமிழகத்திற்கு மீட்டுக் கொண்டுவரப்படும்.

தொடக்கக்கல்வி முதல் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற உயர்கல்வி வரை அனைத்தும் தமிழ்மொழியிலேயே கற்பிக்கப்படும்.

ஆங்கில மருத்துவப் படிப்புகள் அனைத்தும் தூய தமிழில் நடத்தப்படும். இதற்காகத் தமிழ்வழி மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும்.

தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 20 விழுக்காட்டில் இருந்து 40 விழுக்காடாக உயர்த்தப்படும்.

நன்னூல் அடிப்படையிலான மொழியறிவை மட்டும் வழங்காமல், தொல்காப்பியம் காட்டும் தமிழர்களின் வாழ்வியல், அறநெறிகளை உள்ளடக்கியதாகப் பாடத்திட்டங்கள் சீரமைக்கப்படும்.

5. (இரா.அன்புமணி தலைமை) பாட்டாளி மக்கள் கட்சி:

தமிழகத்தில் உள்ள மாநிலப் பாடத்திட்டம், மேல்நிலைக் கல்விக்கான நடுவண் கழகம் (சி.பி.எசு.இ) பாடத்திட்டம் உள்ள பள்ளிகள் உட்பட அனைத்துப் பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படும்.

பள்ளிக்கல்வித் துறையில் தமிழ்வழிக் கல்வி முறைக்கு முன்னுரிமையும் முகன்மையும் அளிக்கப்படும். முதற்கட்டமாக 8-ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கச் சட்டம் இயற்றப்படும்.

மருத்துவம், பொறியியல் படிப்புகள் தமிழ்வழியில் கற்பிக்கப்படும் அதற்கான பாடநூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வழங்கப்படும்.

அனைத்து வகையான துணை மருத்துவப் படிப்புகளும் (Paramedical courses) தமிழில் மட்டுமே கற்பிக்கப்படும்.

முனைவர்பட்டப் படிப்பு (Ph.D.) வரை தமிழையே பயிற்றுமொழியாக்குவதைத் தனது குறிக்கோளாககக் கொண்டு இக்கட்சி, பட்டப் படிப்பு வரை தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை எடுக்கும்.

உயர் நயன்மன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும்.

குழந்தைகளுக்ககுத் தூயதமிழில் பெயர் சூட்டும் பெற்றோர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தைத் தகை உயர்த்தித், “தமிழ் நடுவண் பல்கலைக் கழகமாக” மாற்ற நடுவண் அரசிடம் வலியுறுத்தப்படும்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 8-ஆவது பட்டியலில் (அட்டவணையில்) உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக அறிவிக்க மற்ற மாநில முதல்வர்களுடன் இணைந்து பாடுபடும்.

நடுவணரசு நிறுவனங்களின் விளம்பரங்கள், செய்திகள் அந்தந்த மாநில மொழிகளில் (தமிழ்நாட்டில் தமிழில்) இருப்பதை உறுதி செய்ய அழுத்தம் கொடுக்கப்படும்.

தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

உலகம் முழுவதும் தமிழ் மொழியைப் பரப்பும் நோக்கில் “தமிழ் பரப்புரைக் கழகம்” என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும். வெளிநாடுகளில் இக்கழகத்தின் கிளைகள் தொடங்கப்பட்டு, அங்குள்ள வர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுவதுடன், தகுதியானவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் அனைத்து வசதிகளுடன் கூடிய மீப்பெரு “தமிழிசை அரங்கம்” அமைக்கப்படும். தமிழ் நாட்டுப்புற இசையை வளர்க்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் “தமிழிசைப் பள்ளிகள்”தொடங்கப்படும்.

திரையிடப்படும் படங்களுக்குத் தனித்தமிழில் பெயர் வைத்தால், அவற்றுக்கு உள்ளாட்சி வரி விதிப்பிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படும்.

6. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்:

தமிழ்மொழியை ஆட்சிமொழியாக அறிவித்து, தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள், வைப்பகங்கள் (வங்கிகள்) அனைத்தும் தமிழ்மொழியின் வழியாகச் செயல்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

உச்ச நயன்மன்றக் கிளையைத் தமிழகத்தில் அமைத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள உயர் நயன்மன்றங்கள் உட்பட அனைத்து நயன் மன்றங்களிலும் தமிழ் வழக்காடு மொழியாக இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்மொழியின் பெருமையையும் தொன்மையையும் உலகறியச் செய்யும் வகையில் உலகம் முழுக்க உள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் தமிழ்மொழிக்கான இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

7. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்:

தமிழகத்தில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வைப்பகங்களில் தமிழிலேயே அனைத்துப் படிவங்களும், பணிகளும் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தல்.

“உயர் நயன்மன்றத்தில் தமிழ்” என்பது மதிமுக-வின் நீண்டகாலக் கோரிக்கை. 2026-ல் அமையும் புதிய ஆட்சியில் இதற்குத் தீர்வுகாண முன்னுரிமை அளிக்கப்படும்.

புதிய கல்விக் கொள்கை வழியாக நுழையும் மறைமுக இந்தித் திணிப்பைத் தமிழக மண்ணில் காலூன்ற விடமாட்டோம் என உறுதி பூண்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தி, சமசுகிருதம் நுழைய இசைவளிக்கக் கூடாது என்பதில் கழகம் உறுதியான நிலைப்பாட்டைக்

கொண்டுள்ளது.

8. இந்திய பொதுவுடைமைக்கட்சி – மார்க்சியர் (CPI-M)

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நயன்மை (நீதி), ஆட்சிமுறை (நிர்வாகம்), கல்வி என அனைத்துத் துறைகளிலும் தமிழ் முழுமையாக ஆட்சி மொழியாக இருப்பதை உறுதி செய்யப்படும்.

ஒன்றிய அரசின் இந்தி, சமசுகிருதத் திணிப்பு முற்றிலுமாக எதிர்க்கப்படும்.

தமிழ் உள்ளிட்ட எட்டாவது பட்டியலில் (அட்டவணையில்) உள்ள அனைத்து மொழிகளையும் ஒன்றிய அலுவல் மொழியாக்க வலியுறுத்தப்படும். அதுவரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக நீடிப்பதை உறுதி செய்யப்படும்.

அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் சமமான நிதி ஒதுக்கீடு கோரப்படும்.

மருத்துவம், பொறியியல் உட்பட உயர்கல்வி வரை தாய்மொழியான தமிழில் பயின்றிட வழிவகை செய்யப்படும்.

தமிழகத்திலுள்ள அனைத்து ‘கேந்திரிய வித்யாலயா’ பள்ளிகளிலும் தமிழ் ஒரு மொழிப்பாடமாக இருப்பதை உறுதி செய்யவும், இதைக் கண்காணிக்க மாநில அரசுக்குச் சட்ட அடிப்படையில் உரிமை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் நயனர் சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வற்புறுத்தப்படும்.

நாட்டுடைமையாக்கப்பட்ட படைப்பாளிகளின் நூல்களைப் பாடநூல் நிறுவனம் மூலம் அச்சிட்டு மலிவு விலையில் கிடைக்கச் செய்யப்படும்.

தமிழகத்தில் தமிழ்வழியில் பயின்றோருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்க வலியுறுத்தப்படும்.

மாநிலஅரசுப் பணிகளில் சேர தமிழ்மொழித் தேர்ச்சி கட்டாயமாக்கப் பட்டிருப்பதை வரவேற்பதுடன், அந்தந்த மாநிலங்களில் உள்ள ஒன்றிய அரசுப் பணிகளிலும் அந்தந்த மாநில மொழித் தேர்ச்சியைக் கட்டாயமாக்க வலியுறுத்தப்படும்.

தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தை நடுவண் பல்கலைக் கழகங்களுக்கு இணையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தி, அனைத்து நாட்டு அளவிலான மொழியியல் ஆய்வு மையமாக மாற்றப்படும்.

உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆய்வு இருக்கைகள் அமைக்கப்படும்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு நூல்கள் எளிய விலையில் மக்கள் பதிப்பாகக் கொண்டு வரப்படும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதிய கலைச்சொற்களை உருவாக்க “தமிழ்க் கலைக்களஞ்சிய அறிஞர் குழு” அமைக்கப்படும்.

கோயில்களில் தமிழில் வழிபாடு (அருச்சனை) செய்வதைப் பரவலாக்கவும், குடமுழுக்கு உள்ளிட்ட வழிபாட்டு நிகழ்வுகளைத் தமிழில் நடத்தவும் குரல் கொடுக்கப்படும்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (RTO) அலுவலகங்களில் வழங்கப்படும் படிவங்கள் அனைத்தும் தமிழிலும் இருப்பதை உறுதி செய்யப்படும்.

9. இந்திய தேசியப் பேராயக் கட்சி

மாநிலம் முழுவதும் தொடங்கப்படவுள்ள ஆறு மண்டலத் தனிச்சிறப்புத் தங்கிப் பயிலும் பள்ளிகளில் (Residential Schools of Excellence), வலுவான தமிழ் அடித்தளத்துடன் கூடிய ஆங்கில வழிக் கல்வி வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பள்ளிகளில் இருமொழிக் கொள்கை (Tamil and English) கட்டாயம் பின்பற்றப்படும்.

அரசுப் பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியலோடு, மொழி மேம்பாட்டிற்காகவும் (Language development) செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான கற்றல் கருவிகள் பயன்படுத்தப்படும்.

இத் தேர்தல் அறிக்கை உயர்தரக் கல்வியில் தமிழுக்கு வலுவான அடித்தளம் அமைப்பதையும், அதே நேரத்தில் மாணவர்களை உலகளாவிய அளவில் தயார்படுத்த ஆங்கில வழிக் கல்வியையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது

10. இந்திய பொதுவுடைமைக்கட்சி:

மழலையர் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழ் வழிக் கல்வி கற்பிக்கப்படுவதை ஊக்குவித்தல் மற்றும் அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழிப் பாடத் திட்டத்தை வலுப்படுத்துதல்.

மாநில அரசின் அனைத்து மட்டங்களிலும் தமிழ்மொழியே முதன்மையான ஆட்சிமொழியாக உறுதி செய்தல்.

தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை வைப்பகங்கள், அஞ்சலகங்களில் தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துதல்.

ஒன்றிய அரசு மறைமுகமாக மேற்கொள்ளும் இந்தி மற்றும் சமசுகிருதத் திணிப்பைத் தடுத்தல்.

தமிழ்நாட்டின் தனித்தன்மையான குமுக-பண்பாட்டு விழுமியங்களை எதிரொளிக்கும் வகையில், பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று இக்கட்சி வலியுறுத்துகிறது,.

தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு (தமிழ், ஆங்கிலம்) இக்கட்சி துணைதருகிறது.

மேற் குறித்தவற்றுள், வரிசை எண் ஒன்று முதல் ஒன்பதுவரை யிலுள்ள கட்சிகளின் அறிவிப்புகள் நேரடியாக அவர்கள் இத்தேர்தலுக்காக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளினின்றும் தொகுக்கப்பட்டவையாகும். வரிசை எண் பத்தாகவுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் நேரடியான தேர்தல் அறிக்கை கிடைக்கவில்லை. அத் தேர்தல் அறிக்கை பற்றி வந்த செய்திகளிலிருந்து தொகுத்தவை தரப்பட்டுள்ளன.

இந்த ‘நற்றமிழ்’ இதழ் அச்சுக்குப் போகும்வரை பாரதிய சனதாக் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் வெளியிடப்படவில்லை. இவ் விரண்டு கட்சிகளும் தேர்தல் அனிக்கை வெளியிட குழு அமைத்திருப்பதாகச் செய்திகள் வந்தன. அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் இனிமேல் வந்தால், அவற்றில் நாம் தேடும் அறிவிப்புகள் நற்றமிழின் அடுத்த இதழில் இடம்பெறும்.

ஐயா இராமதாசு தலைமையிலான பா.ம.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையைத் தேடியும் கிடைக்கவில்லை. அதைப் பற்றிய நம்பகமான செய்திகளும் கிடைத்தில. இனி, தே.மு.தி.க., த.மா.கா. முதலிய கட்சிகள் தேர்தல் அறிக்கைகள் வெளியிடுவதாகத் தெரியவில்லை.

இத் தேர்தல் அறிக்கைகளில் தமிழ், தமிழ்வழிக்கல்வி குறித்த அரசியல்கட்சிகளின் நிலைப்பாடு, உறுதிமொழிகளைத் தமிழர் ஒப்பிட்டு அறிந்துகொள்வதற்காகவே ‘நற்றமிழ்’ இம்முயற்சியை மேற்கொண்டது. தமிழர் ஒப்போலையிடும்போது இச்செய்திகளும் அவர்கள் முடிவெடுக்க உதவுமெனக் கருதுகின்றோம்.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும். – குறள்:508.

- த.ந.

மேலாண்மையில் தமிழ்

 

 

மேலாண்மையில் தமிழ்

=========================

(விழுப்புரம் ‘மருதம்விழாப் பாட்டரங்கில் கலந்துகொண்டு பாடிய அறுசீர்மண்டிலப் பதிகம் எந்த ஆண்டு என நினைவில்லை)

 

பெருமதிப்புக் குரியோரே! பேரன்பீர்! தலைமையமர்

பெரும்பா வாண!

அருந்தமிழ்ப்பா யாத்தளிக்கும் ஆற்றல்சால் பாவலரே!

அன்பு நண்பீர்!

இருளகற்றும் அறிஞர்களே! இன்னன்புத் தாய்மாரே!

இளமை யோரே!

தெருளார்ந்த தமிழ்வணக்கம் தெரிவித்தேன் எல்லோர்க்கும்

தெளிந்த அன்பால்!

 

விழுப்புரத்தில் மருதவிழா! விருப்பூட்டும் இனியவிழா!

விளக்க மாக

செழுமரபுக் கலைகளெலாம் சீருறவே தொகுத்தளிக்கும்

சிறப்பு மிக்க

எழுச்சிமிகு சுறவவிழா! எல்லாரும் மகிழ்கின்ற

இவ்வி ழாவின்

கெழுவலுறு பாட்டரங்கில் கிழமையிழந் தேங்குதமிழ்

கிளத்த வந்தேன்!

 

மேலாண்மை செய்மொழியாய் மேற்குலக மொழியின்னும்

மேலி ருக்க

ஏலாத மொழியிங்கு எமையாள ஏற்றமிகு

எம்த மிழ்த்தாய்க்(கு)

ஆலாத்தி எடுத்ததன்பின் அங்கோர்மூ லைதொலைப்பார்

அதையு ணர்ந்தால்

மேலான இந்தஇனம் மீத்தாழ்ச்சி உற்றகதை

மிகவி ளங்கும்!

 

வரப்பகலந் தொடர்பாக வழக்கொன்று நம்சிற்றூர்

வடிவே லுக்கும்

பரப்புகுறை நிலமுடைய பச்சையப்பன் இருவருக்கும்

      பட்ட ணத்தில்

உரத்தகுரல் வழக்கறிஞர் உகைத்தெழுந்தே ஆங்கிலத்தில்

      உரைசெய் கின்றார்!

கரப்பின்றிக் கூறின்இவர் கவலைமிகப் புரியாமல்

      கலங்கி நிற்பார்!

 

சிற்றூரில் வாழ்கின்ற சின்னத்தாய் மனைஉரிமை

      சிறுகு டிற்கு

கொற்றத்தார் அலுவலகம் கொடுத்தவிடை ஆங்கிலத்தில்!

      கூறும் செய்தி

கற்றறியாச் சின்னத்தாய் கலங்கிடுவாள் புரியாமல்!

      காணீர் ஈதே

உற்றநிலை! தமிழிலதை உரைத்திருந்தால் சின்னத்தாய்

      உணர்வாள் அன்றோ?

 

ஆண்டைம்பைத் தொன்றாயிற்(று) ஆட்சிமொழி சட்டமினும்

      ஆழத் தூங்கும்!

மாண்தமிழில் எழுதாது மக்களுக்குப் புரியாத

      மயக்க மூட்டும்

வேண்டாத மொழியினிலே விடைதருவார்! அரசாணை

      விடுப்ப தெல்லாம்

ஈண்டெமக்கு விளங்காத இன்னொருவர் மொழியிலெனில்

      இதுவா ஞாயம்?

 

அரசாணை நூற்றுக்கும் அதிகமுண்டு! தேவையெலாம்

      அவற்றை மெய்யாய்

அரசுநடை முறைப்படுத்தல்! ஆட்சிதமிழ் வழிநடந்தால்

      அதனால் மக்கள்

அரசாளும் முறைபுரிந்து அதன்நிறைகள் குறைகளையும்

      அறியக் கூடும்!

அரசினிலும் பங்கேற்க அதன்வழியாய்த் தொண்டாற்ற

      ஆகும் யார்க்கும்!

 

அதிகாரம்  மக்கள்தந்(து) அரியணையில் அமர்ந்திடுவோர்

      அச்சம் இன்றி

அதிர்தலுற செயற்படுவீர்! ஆட்சிமொழி தமிழென்றே

      அறுத்துச் சொல்வீர்!

மதியாரைப் புறக்கணித்து மக்களுக்கு விளங்குவகை

      மாண்பில் ஆள்வீர்!

புதியமொழி குழப்பமற பொருந்துதமிழ் மக்களுக்குப்

      புரியும் அன்றோ?

 

அலுவலகப் பணியாளர் ஆசிரியர் மற்றவரும்

      அவர்கை யொப்பம்

பொலிதலுறத் தாய்மொழியில் பொறித்திடுவீர்! மக்களுக்குப்

      புரியும் வண்ணம்

சலியாதே தந்திடுவீர் தமிழினிலே உம்விடையைச்

      சட்ட திட்டம்

புலனாகும்! அவருணர்ந்தே போயடுத்த பணிபார்ப்பார்

      பொல்லாப் பில்லை!  

 

அலுவலக நடைமுறைகள் அரசாணை தமிழினிலே

      அளிக்க வேண்டும்!

மலியமிகக் கணிப்பொறிகள் மாத்தமிழில் மென்பொருள்கள்

      மன்ற வேண்டும்!

நலிவில்லாத் தொடர்புமொழி நற்றமிழே எனுமுறுதி

      நாளும் வேண்டும்!

வலிவோடு இவைசெய்தால் வண்டமிழிங் காட்சிசெயும்

      வாழ்வும் ஓங்கும்!               

தமிழநம்பி (thamizhanambi44@gmail.com,  thamizhanambi.blogspot.com)

 

திங்கள், 23 மார்ச், 2026

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் இனம்!

 

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் இனம்!

       

தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் இயல்பு உள்ள உயிரியினங்கள் சில உள்ளன. தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒருவகை எறும்புகள் (Camponotus saundersi) தம் குடியிருப்புக்குப் பெருந்தீங்கு ஏற்படும்போது, தம்முடைய உடலை வெடிக்கச்செய்து உள்ளிருக்கும் நச்சுத்தன்மையுடைய ஒட்டும் நீர்மத்தை எதிரி மீது தெளித்து, எதிரிகளை அழிக்கின்றன. இச் செயலின்போதே உடல்பிளந்து அவை இறந்து விடுகின்றன.

தேன்கூட்டைப் பாதுகாக்கத் தேனீக்கள் மேற்கொள்ளும் தாக்குதல் உலகறிந்ததாகும். மாந்தரோ, விலங்குகளோ தீங்கு செய்வதாக உணரும்போது தீங்கிழைப்போரைக் கொட்டிவிட்டுப் பறக்கமுயலும். அப்போது தேனீயின் கொடுக்கோடு சேர்ந்து அதன் செரிமானமண்டலமும் நரம்புகளும் தேனீயின் உடலில் இருந்து பிடுங்கப்படுவதால், தேனீ இறந்து விடும்.

சில வகைச் சிலந்திகளில் (Stegodyphus lineatus) தாய்ச்சிலந்தி குட்டிகள் ஈன்றவுடன், தன் உடலின் உட்பகுதியை நீர்மமாக மாற்றிக் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கிறது. குட்டிகள் வளரவளரத் தாயின் உடல் உறுப்புகள் முழுமையாக உண்ணப்பட்டு, தாய்ச்சிலந்தி எச்சமின்றி இறந்துவிடும்.

எண்காலி (Octopus) இனங்கள் சிலவற்றில், பெண் எண்காலி முட்டைகளைக் காக்கப் பல கிழமைகள் உண்ணாமலிருந்து, முட்டைகளிலிருந்து குஞ்சு பொரித்த பிறகு, வலுவெல்லாம் இழந்து இறந்து விடும்.

ஆறுகளில் இடும் முட்டையிலிருந்து பிறக்கும் வெண்மீன்கள் (Salmon fish) சில மாதங்களோ, சிலஆண்டுகளோ ஆற்றில் வளர்கின்றன. பின்னர்க் கடலுக்குச் சென்று பல ஆண்டுகள் வாழ்கின்றன. இந்தக் காலத்தில், கடலில் ஆயிரக் கணக்கான அயிரமாத்திரி தொலைவு செல்கின்றன. முழு வளர்ச்சிக்குப் பிறகு, வெண்மீன்களுக்கு உள்ள ஒரு விந்தையான திறனால், அவை தாம் பிறந்த ஆற்றிற்கு மீண்டும் திரும்புகின்றன. இந்தச் செலவின் (பயணத்தின்) போது எதுவும் உண்பதில்லை. இதனால், உடல் வலுவிழந்து, முட்டையிட்ட பிறகு சிலநாள்களில் இறந்துவிடுகின்றன.

மேலே கூறப்பட்ட எறும்புகள், தேனீக்கள், சிலந்திகள், எண்காலிகள், வெண்மீன்கள் ஆகியவை தம் இனத்தைக் காக்கவோ, தம் குட்டிகளுக்காகவோ தம்மைத்தாமே அழித்துக்கொண்டு தம் உயிரை ஈகம் செய்வதை அறிகிறோம். இனத்தைக் காப்பதில் அவற்றுக்குள்ள ஈக உணர்வு மிகவும் வியப்பளிப்பதாகும்.

மாந்தத் தொகுதியில் உள்ள பல இனங்களும் தம்மினத்தின் காப்பிற்காகவும் மேன்மைக்காகவும் எல்லா வகையிலும் ஈகம் செய்வதையும் கண்டுவருகின்றோம். ஆனால், ஓர் இனம் தான் மேற்கொள்ளும் வாழ்க்கைமுறையால், தன்செயல்களால், தன்புறக்கணிப்பினால், அறிந்தோ அறியாமலோ தன் இனத்தைத் தானே அழிக்கும் இரங்கத்தக்க நிலையைக் காண்கிறோம். அதைப்பற்றிப் பின்னர்ப் பார்ப்போம்.

‘மொழி அழிந்தால் இனம் அழியும்’ என்பது பலகாலமாக எடுத்துக் கூறப்படும் அறிஞர் கூற்றாகும். இது வெறும் உணர்ச்சி அடிப்படையிலான கூற்று அன்று; வரலாற்று அடிப்படையில் மெய்ப்பிக்கப்பட்ட, வரலாற்றில் பலமுறை நிகழ்ந்துள்ள தெளிந்த உண்மையாகும்.

தாய்மொழி என்பது வெறும் செய்தித் தொடர்புக் கருவி மட்டுமில்லை; அது, ஒரு குமுகத்தைக் கட்டமைக்கும் முதன்மைக் காரணியாகும். ஒரு குறிப்பிட்ட குமுகத்தின் அறங்கள், அழகியல் விழுமியங்கள், பண்பாடு, நாகரிகம் முதலியவை அதன் மொழியிலேயே பொதிந்துள்ளன. தாய்மொழி புறக்கணிக்கப்படும் போது, அந்த இனத்தின் தனித்த சிந்தனைமுறையும், பல தலைமுறைகளாக வழிவழி வந்த அறநெறிகளும் சிதைந்து விடுகின்றன. ஓர் இனம் தனது அடையாளத்தைக் காத்துக்கொள்ளவும், உலகளவில் செழிக்கவும் தாய்மொழி இன்றியமையாததாகும். ஓர் இனத்தின் அறிவுச் செல்வங்கள் அடுத்த தலைமுறைக்குச் சரியாகக் கையளிக்கப்படாமல் போனால், அந்தஇனம் தனது அறிவுசார் அடையாளம், வரலாற்றை இழந்து அழியும் நிலைக்குத் தள்ளப்படும்.

ஒரு கருத்தைச் சிந்திப்பதற்கும், ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் தாய்மொழி மிகச்சிறந்த ஊடகமாகும். தாய்மொழி கைவிடப்படும்போது, அந்த இனத்தின் சிந்தனைமுறையும், பல தலைமுறைகளாக மரபுவழி வந்த அறநெறிகளும் சிதைந்துபோகின்றன. மொழி என்பது அம்மொழி பேசும் மக்களின் பட்டறிவுகளின் “கூட்டு நினைவக வைப்பகம்” (collective memory bank) ஆகும். தாய்மொழி அழியும்போது, அந்த மொழி பேசும் இனம் தனது முன்னோருடனான தொடர்பையும், மரபுகளையும் முழுமையாக இழந்து விடுகிறது. இது மீளமுடியாத பண்பாட்டு இழப்பிற்கு வழிவகுக்கிறது என ‘ஒன்றிணைந்த நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பு’ (UNESCO) எச்சரிக்கிறது,

ஒரு குமுகத்தின் தாய்மொழி, உறுப்பினர்களிடையே குமுக ஒருமைப்பாட்டையும் பிணைப்பையும் வலுப்படுத்துகிறது. இளைய தலைமுறையினர் தங்கள் தாய்மொழியில் புலமை பெறாதபோது, அவர்களால் தங்களின் மரபுவழி நடைமுறைகள், வாய்மொழி வரலாறுகள், அவர்களின் தொன்மை அறிவு அமைப்புகளுடன் (Indigenous knowledge systems) தொடர்புகொள்ள முடிவதில்லை. இது அந்த இனத்தின் குமுகக் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்கிறது.

சுமேரிய மொழி, இலத்தீன் மொழி போன்றவை இன்று பேச்சு வழக்கில் இல்லாததால், அந்தத் தொன்மையான நாகரிகங்களின் நேரடித் தொடர்ச்சி அறுந்துபோனதைச் சான்றுகள் சுட்டிக் காட்டுகின்றன. உலகில் இன்று பேசப்படும் 7,000 மொழிகளில் 40% அழியும் நிலையில் உள்ளன; மொழி அழிவோடு அந்த இனத்தின் அடையாளமும் வரலாறும் அழிகிறது.

இன்றைய உலகவயமாக்கல் சூழலில், பல சிறிய மொழிகள் கொஞ்சம்கொஞ்சமாக அழிந்துவருகின்றன. ஒரு மொழியின் அழிவு என்பது வெறும் சொற்களின் இறப்பு இல்லை; அது அந்த இனத்தின் வரலாறு, வாழ்வியல் முறைகள், அறிவு, மரபு, தனித்த உலகப் பார்வை ஆகிய அனைத்து அடையாளங்களின் இறப்பாகும். மொழி அழிக்கப் பட்டதால் அடையாளத்தை இழந்த சில இனங்களைப்பற்றி இங்கே மிகச் சுருக்கமாகக் காணலாம். இந்தப் பட்டியல், அவ்வினங்களின் முழுமையான பட்டியல் இல்லை; சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே ஆகும்.

1. அமெரிக்கக்கண்டத்தின் பழங்குடிமக்கள் (Native Americans) தங்களின் நிலத்தை மட்டுமன்றி மொழியையும் இழந்ததால் இன்று பெரும் அடையாளச்சிக்கலை எதிர்கொள்கின்றனர்.

19, 20-ஆம் நூற்றாண்டுகளில் ‘உண்டுறை பள்ளிகள்’ (Boarding Schools) என்ற பெயரில் பழங்குடிச் சிறுவர்கள் அவர்களின் குடும்பங்களிடமிருந்து பிரிக்கப்பட்டனர். குழந்தைகள் தங்கள் தாய்மொழியில் பேசினால் தண்டிக்கப்பட்டனர். இக் கட்டுப்பாடுகளால், சில தலைமுறைகளிலேயே அவர்களின் மொழியும், அத்துடன் பிணைந்திருந்த இயற்கை சார்ந்த மருத்துவ முறைகளும், சடங்குகளும் மறைந்து போயின. அவர்களுக்குரிய அடையாளங்களை இழந்தார்கள்.

2. காடோ (Caddo) இனம்: அமெரிக்காவின் ஓகலகோமாவில் வாழ்ந்த இந்தப் பழங்குடி அமெரிக்க இனத்தின் ‘காடோ’மொழி, 2025 சூலையில் அம்மொழியின் கடைசிப் பேச்சாளரான 95 அகவை ‘எட்மண்டு சான்ச’னின் இறப்புடன் முற்றிலுமாக அழிந்துபோனது. சான்சன் ஒரு ‘உயிருள்ள நூலகமாக’ விளங்கியதுடன், தன் பழங்குடியினரின் பண்பாட்டையும், கதைகளையும் கூறி வந்தார். அவர் மறைவு, அந்த இன மரபிற்கு ஈடற்ற பேரிழப்பாகும்.

3. உயுச்சி (Yuchi) இனம்: இவர்களும் ஓகலகோமாவில் வாழ்ந்தவர்கள். இவர்களின் மொழியான உயுச்சி, உலகின் வேறு எந்த மொழியுடனும் தொடர்பில்லாத ஒரு தனித்த மொழியாகும். 2021 ஆகத்து மாதத்தில், கடைசியாக அம்மொழியைப் பேசியவரான ‘மாக்கிசின் வைல்டுகேட்டு பார்னெட்டு’ இறப்புடன் அம்மொழியும் இறந்துபோனது.

4. மசுகோகி (Muscogee) இனம்: இவர்களின் மசுகோகி மொழியும் உயுச்சி மொழியும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாயின. பெருந் தொற்றுக் (covid-19) காலத்தில் மசுகோகி மொழி பேசுவோர் மிகப்பலர் இறந்துவிட்டதாக இனத்தின் தலைமைத் தலைவர் தெரிவிக்கிறார். “உங்கள் மொழியை இழந்துவிட்டால், உங்கள் பண்பாட்டையும் வரலாற்றையும் இழந்துவிடுவீர்கள், பிறகு நீங்கள் இல்லாமலேயே போய்விடுவீர்கள்” எனக் குறிப்பிட்டு, மொழிக்கும் இன அடையாளத்திற்கும் உள்ள ஆழமான தொடர்பை அவர் உணர்த்தியுள்ளார்.

5. ஆத்திரேலியாவில் நடந்த மொழி, பண்பாட்டு அழிப்பு, வரலாற்றில் மிகவும் கொடுமையானதாகும். ஆத்திரேலியப் பழங்குடியினரைக் (Aborigines ‘The Stolen Generations’) கிறித்துவ மதத்திற்கு மாற்றவேண்டும் என்றநோக்கில், பழங்குடியின மக்கள் தங்கள் தாய்மொழியைப் பேசினால் கடும் தண்டனை வழங்கப்பட்டது. 1910 முதல் 1970 வரை, அரசின் கொள்கைகளின்படி பல்லாயிரக் கணக்கான பழங்குடிக் குழந்தைகள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு வெள்ளைக்காரக் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். தம் தாய்மொழியையே கேட்காதவகையில் அவர்கள் தனியே வளர்க்கப்பட்டனர்.

மேலும், பழங்குடியினரின் மொழிகள் ‘குப்பை’, ‘பழமையான உளறல்’ என்றெல்லாம் இழிவுபடுத்தப்பட்டதால், மக்கள் தங்கள் சொந்தமொழிபேச வெட்கப்பட்டனர். இதனால், 250 க்கும் மேற்பட்ட மொழிகள் இருந்த ஆத்திரேலியாவில், இன்று பல மொழிகள் ‘அழிந்த

மொழிகள்’ பட்டியலில் உள்ளன. மொழியை இழந்ததால் அந்த இனக்குழுக்கள் தங்கள் முன்னோர் தொடர்பை இழந்து, இன்று குமுகத்தின் விளிம்பு நிலையில் அடையாளமின்றித் தவிக்கின்றனர்.

6. சப்பானின் வடக்குப்பகுதியில் வாழ்ந்த ஐனு மக்கள் (Ainu People) ஒரு தனித்தன்மையான மொழியையும் பண்பாட்டையும் கொண்டிருந்தனர். 1899-இல் சப்பான் அரசு கொண்டு வந்த சட்டங்கள் ஐனு மக்களைச் சப்பானியர்களாக மாறக் கட்டாயப்படுத்தின. அவர்களின் மொழி தடை செய்யப்பட்டு, சப்பானிய மொழி அவர்கள்மீது திணிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் ஐனு மொழி பேசும் மக்களே இல்லாத நிலை உருவானது.

7. கார்னிசு, மாங்கசு (Cornish & Manx) இனத்தவர் - ஐரோப்பா): பிரித்தனின் பகுதிகள் சிலவற்றில் பேசப்பட்ட கார்னிசு, மாங்கசு மொழிகள் ஆங்கிலத்தின் வல்லாளுமையால் முற்றிலுமாக அழிந்தன. 18-ஆம் நூற்றாண்டோடு கார்னிசு இனத்தின் தனித்தன்மை உடைய இலக்கியம், வாய்மொழி வரலாறுகள் அனைத்தும் புதைந்து போயின. இன்று அவர்கள் தங்களை மீட்டெடுக்க முயன்றாலும், தொலைந்துபோன மொழியின் நுணுக்கங்களை மீட்கமுடியாமல் ஒரு ‘பண்பாட்டு வெற்றிடத்தை’ உணர்கின்றனர்.

8. அந்தமான் தீவுகளின் அகா-போ (Aka-Bo) இனத்தினர் பேசிய ‘அகா-போ’ மொழி 2010இல் கடைசிப் பேச்சாளர் ‘போயா இசிரி’ இறந்ததும் அழிந்தது. 65,000 ஆண்டுகள் பழமையான இந்த இனத்தின் மொழிஅழிவு அவர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியை முற்றிலும் முடித்துவிட்டது.

9. உருசியாவில், சைபீரியாவின் சில பழங்குடி இனங்கள் தங்கள் மொழிகளை இழந்து அழிந்தன. எடுத்துக்காட்டாக, கமாசின்கள் (Kamasins) 17ஆம் நூற்றாண்டில் வெறும் 500 பேர் மட்டுமே இருந்தனர், இன்று அவர்களின் மொழி அழிந்துவிட்டது. அவர்கள் உருசிய மொழிக்கு மாற்றப்பட்டதால், இன அடையாளம் இழந்து வேறு இனங்களுடன் இணைந்தனர். வேட்டை, மான் வளர்ப்பு போன்ற மரபுகள் மொழியுடன் அழிந்தன.

10. மஞ்சு மக்கள் (Manchu people) சீன நாட்டில் ஒரு முகன்மை அரச இனமாக இருந்தனர். இவர்கள், குயிங்கு அரசமரபில் (Qing dynasty 1644 –1912) சீனாவை ஆட்சி செய்தவர்கள். இவர்களைச் சீன (Mandarin Chinese) மொழி ஏற்கச் செய்ததால், இன்று மஞ்சு மொழி பேசுபவர்கள் அரிதாயினர். அரச இனமாக இருந்தாலும், மொழி மறைந்ததால் தனித்த அடையாளம் போய் விட்டது.

மொழி அழிப்பால், முன்னோரின் பாடல்கள், கதைகள் மற்றும் கல்வெட்டுகளைப் புரிந்துகொள்ளும் திறன் அற்றுப் போகும். அதாவது, வரலாற்றுத் தொடர்பு அறுந்துபோகும். ஒவ்வொரு மொழியும் ஒரு தனித்த சிந்தனைப் போக்கைக் கொண்டது. மொழி அழியும்போது அந்த இனத்தின் தனித்தன்மையான அறிவுத்திறன் அழிகிறது. மொழி, ஓர் இனத்தைப் பிணைத்து வைத்திருக்கும் தொடரி (chain) ஆகும். அது அறுந்தால் அந்த இனம் சிதறிப் போய்ப் பிற இனங்களுடன் கரைந்துவிடும். மேலும், மொழிஅழிவு அம் மொழி பேசும் மக்களின் வழிவழி மருத்துவ அறிவு, நிலைத்திணை அறிவு, சுற்றுச்சூழல், உயிரியியல் அறிவு முதலியவற்றின் இழப்புக்குக் காரணமாகிவிடும்.

பள்ளிகளில் தாய்மொழி பேசத் தடை, தாய்மொழிக் கல்வி, தாய்மொழிவழிக் கல்விக்குத் தடை, குழந்தைகளைக் குடும்பத்திலிருந்து பிரித்து விடுதியிலிருந்து பள்ளிகளில் படிக்கவைப்பது, அரசுவேலை, ஊடகம், மேலாண்மை, நயன்மன்றம், வாணிகம் முதலிய அனைத்திலும் ஒரே வல்லாண்மை மொழியைக் கட்டாயப்படுத்துதல் முதலியவை பிற மொழியைத் திட்டமிட்டு அழிக்கும் வழிகளில் சிலவாகும்.



அறிஞர் சோம.வள்ளியப்பன் 28-10-2025 நாளிட்ட ‘தினமணி’ நாளிதழில் ‘தமிழில்மட்டுமே பேசுவோம்’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில், ‘தமிழ் தெரிந்தவர்களோடு தமிழிலே பேசுங்கள்’ என்றும், ‘தமிழைப் பிறசொற்கள் கலப்பின்றிப் பேசுங்கள், தமிழில் எழுதிப் பழகுங்கள், படியுங்கள்’ என்றும் மாணவர்களிடம் வலியுறுத்தியதைக் கூறியிருந்தார். மேலும், தாம் பேசுவது தமிழாக இல்லை என்று கூட அறியாமலே தமிழர்கள் பலமொழிச் சொற்களைக் கலந்து பேசிவரும் இரங்கத்தக்க நிலையையும் கூறி, ‘இணக்கம் செய்து கொள்கிறோம், நல்லவர்களாக நடந்து கொள்கிறோம்’ என்று நம் மொழியை விட்டுக்கொடுத்து, பிற மொழியைப் பயன்படுத்துகிறபோது நம்மொழி அழிவதைத் தடுக்க இயலாது என்ற உண்மையையும் எழுதியிருந்தார்.



அவரே, 21-11-2025 நாளிட்ட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில், ‘தமிழைக் காக்க வேண்டாமா, தமிழர்களே?’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தமிழே படிக்காமல் கல்வி கற்ற தமிழர்களைப் பற்றியும், சில பள்ளிகளில் தமிழில் பேசக்கூடாது என்ற நிலையிருப்பது பற்றியும் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத்திலேயே பேசுவது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். மாணவர்களின் பெயர்கள் தமிழில் இல்லாத நிலையையும், மகிழுந்து ஓட்டுநர் ஒருவருக்கு இடப்பக்கம் வலப்பக்கம் என்றால் புரியவில்லை; ‘லெப்டு’, ‘ரைட்டு’ என்றால்தான் புரிகிறது என்றும் வருந்தியிருந்தார். ஊடகங்களில் பல மொழிச் சொற்களையும் தமிழில் கலந்துபேசும் நிலையை எடுத்துக்காட்டுடன் எழுதியிருந்தார். இன்றைய தமிழின் நிலையைக் கூறுவனவாக அவர் கட்டுரைகள் இருந்தன.



ஒரு தலைமுறைக்கு முன்னர், ஒரு தமிழாசிரியர் தம் பாட்டாலும் பேச்சாலும் தமிழ்உணர்வூட்டிப் பெரும்புரட்சி செய்தார். அந்தப் பாவேந்தர் உழைப்பின் பயனை இத் தமிழகம் கண்டது. ஆனால் இன்றோ பெரும் பின்னடைவில் உழல்கிறது. இன்றைக்கும் பல தமிழாசிரியர்களும் தமிழ்ப் பேராசிரியர்களும் இல்லாமல் போய்விடவில்லை, விளைச்சல்தான் இல்லை!

தமிழர் பலர் தமிழே படிக்காமல் உயர்கல்விவரை படித்து முடித்து விடுகின்றனர். இந்தவகைத் தலைமுறை வளர்ந்து வருகிறது. பல தமிழ்க் குடும்பங்களில் வீட்டிலும் தமிழ்பேசும் நிலை இல்லை. இந்தப் போக்கு நாளுக்குநாள் அதிகமாகிவருகின்றது. இப்படிப்பட்ட குடும்பங்கள் பெருகி வருகின்றன.



பெயரில் தமிழ் இல்லை; தலைப்பெழுத்தையும் தமிழில் எழுதுவதில்லை; கல்வியில் தமிழில்லை; தமிழ்வழியில் கல்வியில்லை; வீட்டுச் சடங்குகளில், நிகழ்வுகளில், விழாக்களில் தமிழ் இல்லை; வழிபாட்டில் தமிழ் இல்லை; வழக்காடல் தமிழில் இல்லை; தமிழில் கையொப்பம் இடுவதில்லை; பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை; பேச்சில் தமிழில்லை; எழுத்தில் தமிழ் இல்லை; ஊடகங்களில் தமிழ் இல்லை; பெற்றோரை அம்மா, அப்பா என அழைப்பதில்லை; அலுவலக நடைமுறைகள், நிகழ்வுகள் தமிழில் இல்லை. இப்படியெல்லாம் தாய்த் தமிழைப் புறக்கணித்தால் தமிழ் அழியாமல் இருக்குமா? இவற்றிற்கு இந்தித்திணிப்பு வெறியும் ஆரியப் பார்ப்பனியமும் நேரடிக் காரணங்களாகக் கூற முடியுமா?

இந் நிலைகளால்தான் இந்தத் தமிழினத்தைத் தன்னைத்தானே அழித்துக் கொள்கின்ற ஓரினம் என்னும் உண்மையைத் தொடக்கத்தில் பெயர் குறிப்பிடாமல் தெரிவித்திருந்தோம். இது, மிகைக்கூற்று இல்லை என்பதை உணர்ந்தும் தாய்மொழிகாக்க முனையாத தமிழர்களுக்காக இரங்கவேண்டிய நிலையிலேயே இருக்கின்றோம்.

இந்நிலையிலுள்ள தமிழர்களை நோக்கியே மனங்குமுறிய ஒருவர் பாடிய பாடல், இது:

ஆரியர்க்குப் பாய்விரித்தாய்! ஆங்கிலர்க்குக் கற்பிழந்தாய்!

பூரியர்செய் இந்திக்குப் பொற்பிழந்தாய்! – யார்யார்க்குத்

தாள்பிடிக்கக் காத்திருக்கின் றாயோ தமிழ்மகனே,

வாள்பிடிக்குங் கையால் வணங்கியே! – கேளினிமேல்

மீசை மழித்துவிடு; முன்குடுமி வைத்துக்கொள்!

காசைப் பெரிதாய்க் கருத்தில்வை! - கூசுகிலா

மானம் அறக்கழற்று! மாண்பை உதறியெறி!

ஏனோ உனக்கு மனைவிமக்கள்? – ஊனுடலை

நன்றாய் வளர்ப்பதுவே நல்வாழ்க்கை! நாள்முழுதும்

தின்று கொழுத்துத் திரி!     
                          - பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

- த.ந.