வியாழன், 29 ஜூன், 2017

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கக.



முதுமுனைவர்
இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கக.
============================================================


தமிழா,

நாட்டு விடுதலைக்கு முன்னது மொழி விடுதலை.
அதனைப் பெற  நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர் எண்ணவில்லை!
மாநில மொழிகள் அனைத்தும் மைய மொழியாக வேண்டும் என்று குரலெழுப்பவில்லை.

பாவாணர் எழுதினார்!
மாநிலப்பிரிவின் போதே செய்தாக வேண்டும் என்றார்!

அரசு - முடியரசு கூடச்சான்றோர் சொல்லை மதித்து நடந்தது!
குடியரசு ஆன பின்னரோ சான்றோர் உரையைக்கேட்கும் அரசாக எதுவும் வரவில்லை!

ஏய்ப்பரும் மேய்ப்பரும் ஆகியவர்க்குச் சால்பாவது, சான்றோர் உரையாவது ஏறுமா?

தமிழா, பூச்சால் நடைபெறாது!
புனைந்து பாடுதலால் வராது!

போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத்
தேரோட்டம் இல்லை தெளி
என்னும் மாணிக்கவுரை என்றும் மாணிக்க உரையே!

தாய்மொழிக்கு எல்லா வழிகளும் முதன்மை தராத நாடு, தாய்நாடு என ஆகுமா?
தாய் பெற்ற பிள்ளை ஆளும் நாடாகுமா?
ஆக்கத் தந்நலச் சூழ்ச்சியர் விடுவரா?

ஒன்றிய நாடுகள் உலகில் இல்லையா?
அவரவர் மொழியுரிமை காத்துப் பொதுமை  பேணும் நாடு இல்லையா?

மலையகம் சிங்கையில் உள்ள மொழியொன்றியம் இந்தியம் கொள்ளாதது ஏன்?

உனக்கு ஆக்கமாம் அரசா இந்திய அரசு? அழிவாம் அரசு!
உணர்ந்தால்.,

இந்தியக் கொத்தடிமையை ஒழிக்காமல் கிடப்பாகக் கிடப்பாயா?

ஏக  இந்தியம் என வாய் வருமா?      

*           *           *           *           *           *           *           *           *           *           *           *
(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,22,23 ., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006)
---------------------------------------------------------------------------

செவ்வாய், 27 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல் - ௰



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல் -
-------------------------------------------------
 
தமிழா,

கூத்து எவரோ பரதர் வகுத்தாராம்!
பரதர் வகுத்தது எப்போது? தமிழ் தோன்றியது எப்போது?

அவன் அப்பனுக்கு அப்பன் ஆயிர அப்பனுக்கு முந்தியது அல்லவா பரதம்!

ஆடுநர்க்கழியும் உலகம் (புறநானூறு)

கூத்தாட் டவைக்குழாம் (திருக்குறள்)

இவற்றுக்கு முன்னதா - பரதன் கூத்து?

வேல் திரித்தாடும் வெற்றிக்கூத்து தொல்காப்பியர் சொல்வது அல்லவா?

முழுமுதல் இறையே தாண்டவன் என்றும் நடவரசன் என்றும் கூத்தரசன் என்றும் சொல்லி வணங்கும் நீ, கோமாளியாக இருந்தால் அல்லாமல் கூத்துக்கலை அயல் வழியது என்பாயா?

கோயில்களில் கூத்தராக எத்தனை எத்தனைபேர்கள் திருத்தளிப் பெண்டு என்று இருந்தனர்.
அவர்கள் கோயில் வளாகத்திலே குடியிருந்து கோயில்பணி செய்தவர் என்பதை அறிவாயா?

ஆடல் கலையில் நூற்றெட்டுக் கரணங்கள், எத்தனை கோயில்களில் கற்சிலையாக்க் கோயில் சுற்றில் வெட்டப்பட்டிருக்கவும்  அதனைக் காணவும் மாட்டாமல் கணகெட்டுப் பரதக்கூத்து என்கிறாயே!

வடநாட்டுக் கோயில்களில் நூற்றெட்டுக் கரணங்கள் காட்டும் சிற்பம் எங்காவது உண்டா?  


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,12,13 ., 2017., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006)

திங்கள், 26 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௯.



முதுமுனைவர்                                                                                            இரா. இளங்குமரனார்  ஐயாவின் குரல்!௯.
-----------------------------------------------------------------------------------------------------------

தமிழா,
இதோ  பார்,

தியாகராசர் பாடினார், தெலுங்கிசை; தெலுங்கு அவர் தாய்மொழி.

வடமொழியில் பாடியவர், சியாமா சாத்திரி   அவர் தாய்மொழி அது.

நீ உன் தாய்மொழியில் பாடுவாயா?
உனக்குத் தாயே இல்லை,
தாய் மொழியே இல்லை,
தாய்மொழியில் இசையே இல்லை
எல்லாமும் இல்லை என எவர் சொன்னாலும் நீ என்ன செய்ய வேண்டும்?

என்னிசையைக் கேள் என்றல்லவா சொல்லிக் கிளர்ந்திருக்க வேண்டும்?

இசை என்ற சொல் புதுவதா?
முத்தமிழே இயல், இசை, கூத்து அல்லவா!

முத்தமிழ் என்ற பாடப் பிரிவிலேயே இல்லை என்னும் முழு மறைப்பாளனை மூடமாக ஒப்புக்கொள்கிறாநா?

மேடையிலேயே தமிழிசை, தமிழ்க்கூத்து இல்லாமல் ஆக்கினாயே;
இது, கோடி கோடி எனச்செல்வம் உடையானைத் தெருக்கோடிப்  பிச்சைக்காரன் என்பது போலில்லையா?

(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,12,13 ., 2017., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை    625006)
----------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 22 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – அ.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! அ.
-----------------------------------------------------------------------------------


 தமிழா,
உன் தாய்மொழியிலுள்ள இசைப்பாக்கள் எவைஎவை எனத் தெரியுமா?

பெருந்தேவபாணி, தேவபாணி, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, பாவைப்பா, பள்ளி எழுச்சி, வரிப்பா வகை, வண்ணவகை, சிந்துப்பா-
இவ்வளவு மட்டுமா?

உன் இசையெல்லாம் ஒருங்குசேர்த்தாலும் ஒரு பகுதிதானும் ஒட்டாத நால்வகைப்பா:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா மட்டுமா?

தாலாட்டு, கும்மி, ஒயில், ஒப்பாரி என எத்தனை எத்தனை வகை!

இதனை இசை இல்லையென்று இதனைமறைக்க, ஒழிக்க எவரோ இட்டுக்கட்டிச் சொன்னால் நீ ஒப்புவது,,,,
உன்னினத்தையே பெற்ற இசைத்தாயை மலடி என்று பழிப்பது போலல்லவா?

(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,12., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006)
------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 19 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – எ.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! எ.
--------------------------------------------------------------------------------
 
தமிழா,

சப்பானியப் பொறிஞன் தமிழகம் வருகிறானே!
மொழிபெயர்ப்பாளிகளோடு வருகிறானே!
மொழிச்சிக்கல் அவனுக்கு இல்லையே!

போகின்றவனுக்கும் சிக்கல் இல்லையே!

உன்னைக் கொத்தடிமையாய்க் கொண்டு ஆட்சி செய்யும் நடுவணரசில் உன் மொழிக்கு ஒத்த உரிமை உண்டா?

இந்திக்காரனுக்கு மட்டும் இந்தியா பட்டாபோட்டுத் தரப்பட்டு விட்டதா?

எந்த நாட்டில் மொழியுரிமை இல்லையோ, அந்த நாட்டில் வாழ்வது...
அடிமை வாழ்வேதான்!


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,22., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

-------------------------------------------------------------------------------------------------------

சனி, 17 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௬.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ௬.
------------------------------------------------------------------------------------

தமிழா,

ஆள்பவன் ஒப்புகை இல்லாமல், அயலவன் அணுவுலை உன்நாட்டில் ஏற்படுமா?

அண்டை மாநிலத்தான் ஏற்காத அணுவுலையை,
அன்றே மண்ணின் மைந்தர் எதிர்த்தும்,
இந்நாள்வரை எதிர்த்துக்கொண்டிருந்தும்,
மேலும் மேலும் விரிவாக்கத்திற்கு முனைவது என்ன?

அயல் மாநிலத்தான் துணவு அணுவும் இல்லாக்
கோழைத் தன்னல அயலவரே இங்கு ஆள்வது தானே?


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,8., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)
 ------------------------------------------------------------------------------------------------

வியாழன், 15 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ரு.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ரு.
------------------------------------------------------------------------------------

தமிழா,

ஒருநாடு பன்மொழி பல இன நாடு என்றால் என்னசெய்ய வேண்டும்?

பல இனங்களுக்கும் பல மொழிகளுக்கும் ஒப்புரிமை ஆளுமை வேண்டும் அல்லவா?

வல்லாண்மையால் இந்தி மட்டும் ஆட்சிமொழி என்று ஆனால் அது...,
ஒரு கண்ணில் வெண்ணெயும் மற்றொரு கண்ணில்  சுண்ணாம்பும் தடவுவது இல்லையா?

உன் மாநில ஆட்சி,
உன்மாநில முறைமன்றம்,
உன் மாநிலமொழிக் கல்வி உனக்கு இல்லை என்றால்,

இது விடுதலை நாடா?
கெடுதலை நாடா?

(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,7., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

செவ்வாய், 13 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௪



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! ௪.
------------------------------------------------------------------------------------
 
தமிழா,

உலகின் மூத்த குடிநீ                                                     உலகின் மூத்த மொழி உன்னுடையது.

பல்லாயிரம் ஆண்டுகளின் முன்னே, குமரியொடு வடவிமயம் வரை வாழ்ந்தவன். ஆணை செலுத்தியவன்.

நீ சுற்றாத கடலில்லை. 
வெல்லாத நாடில்லை.

ஆனால், உனக்காக ஒரு நாடு உலகில் உள்ளதா?

உன் உயர்மொழி உலகமன்றம் ஏறுகிறதா?

உன் பிறந்த மண்ணிலேயே சாகடிக்கத் துணிந்த நீ, எங்கே அதனை ஆள வைப்பாய்?-

எப்படி வாழவைப்பாய்?


(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,7., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

------------------------------------------------------------------------------------------------------------

சனி, 10 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – ௩.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! .
------------------------------------------------------------------------------------
தமிழா,

உன் தாய்மொழி ஒரு நூற்றாண்டுக்குள் செத்தமொழியாகிவிடும் என்று உலகம் அறிவிக்கிறதே!

உணர்ந்தாயா?

எந்தமொழி ஆட்சிமொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி கல்விமொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி வழிபாட்டு மொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி இசை மொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி சடங்கு மொழியாக இல்லையோ, அந்த மொழி...
எந்தமொழி வீட்டு மொழியாக இல்லையோ, அந்த மொழி...
நூற்றாண்டில் அழியும் என்கிறதே உலகப் புள்ளி விளக்கம்!

அதனை உணராத நீ உண்மையில் உயிரோடும் உணர்வோடும் இருக்கத்தான் செய்கிறாயா?


(‘தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,3., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை – 625006.)

--------------------------------------------------------------

புதன், 7 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! – உ.



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்! .
----------------------------------------------------

தமிழா,

உன்மொழி உயர்மொழி; தனிமொழி; செம்மொழி.
அதைப்படைத்தவன் அறிவியல் நுண்ணியன்.

அதனை அறியும் அறிவு உனக்கு உண்டா?
அதனை உணர்ந்து வளர்க்கும் திறன் உனக்கு உண்டா?

அதனை அழிக்கின்றவன் கயவன் என்று என்றாவது எண்ணியது உண்டா?
அழிப்பான் அழிப்புக்கு நீ இடமதராமல் இருந்தாயா?
அழிக்க நீதானே முந்து நின்றாய்!

நீ, நீயாக என்றாவது இருந்தாயா?
எவனெவனையெல்லாம் தூக்கிச் சுமந்தாய்!

இருப்பவரை ஏறிட்டுப் பாராமல் செத்தாரைத் தேடித் தூக்கிச் சுமக்கும் நீ, என்று திருந்துவாய்?

உன்னை உணராத நீயா உலகை உணர்வாய்?  


(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம் 2,3.,  2016., திருவள்ளுவர் நிலையம்,  7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006.)

-----------------------------------------------------------------------

திங்கள், 5 ஜூன், 2017

முதுமுனைவர் இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்!



முதுமுனைவர்
இரா. இளங்குமரனார் ஐயாவின் குரல்!
------------------------------------------------


தமிழா,

மூவாயிர ஆண்டு ஆரியத்தமிழனாய் கெட்டாய்;
அவனினும் கெடுப்பவன் ஆனாய்!

ஆங்கிலத் தமிழனாய் முந்நூறு ஆண்டுகள் ஆனாய்!
அவனினும் தமிழைக் கெடுத்தாய்;

இதுகால் திரவிடத் தமிழனானாய்,
இல்லாத பெயரை இட்டுக்கொண்டு ஏமாற்றலே வாழ்வானாய்!

நீ தமிழனாக தமிழ்த் தமிழனாக ஆவது எப்போது?

அப்போதே நீ உருப்படுவாய்!


(தமிழா! தமிழா!! இரா.இளங்குமரனார், பக்கம் 1,2., 2016., திருவள்ளுவர் நிலையம், 7,இராமன் தெரு, திருநகர், மதுரை 625006.)
-------------------------------------------------------------