இரண்டகர்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரண்டகர்கள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 25 மே, 2009

இரண்டகர் இரண்டுபேர்!




ஓரிலக்கம் பேர்கொன்றான் ஈழ மண்ணில்!
    உடனிக்கால் மூன்றிலக்கம் மெல்லக் கொன்றே 
ஓரினத்தை உருத்தெரியா தழிக்கின் றானே 
    உரிமைநிலத் தடயமெலாம் ஒக்க நீக்கி!
பூரியனின் கொடுமைகட்குத் துணையாய் நிற்போர்
    பொய்ம்முகத்தி னித்தாலிப் பொல்லாப் பேயும் 
சீரியநல் லார்காறித் தூ !தூ ! வென்றே 
    சினந்துமிழும் தன்னலப்பேய்க் கலைஞன் தானும்!

            ----------------------------

திங்கள், 11 மே, 2009

இனங்கொல்லும் இரண்டகம்!



  
2002-ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை, அவ் வொப்பந்தம் உருவாக்கக் காரணமாயிருந்த நாடுகளுக்கும் தெரிவிக்காமல், இராசபக்சே அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென 2008 சனவரியில் முறித்துக்கொண்டது.

இனவெறித் தாக்குதலில், இலங்கை அரசின் முப்படைகளும் தமிழர்களை எவ்வகை வேறுபாடுங் கருதாது கொன்று குவித்து வருகின்றன. தங்கள் கொப்பூழ்க் கொடி உறவுகளின் இன்னல்களையும் உயிர் இழப்புகளையும் கண்டு, தமிழ்நாட்டின் எல்லாப்பிரிவு மக்களும் மனங் கலங்குகின்றனர். 

இக்கால் வன்னியில் தமிழ்மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது! நாள்தோறும் நூற்றுக்கணக்கில் ஏதுமறியாத் தமிழர்கள் கொல்லப் படுகின்றனர். இம் மாதம் 9, 10 ஆகிய இருநாட்களில் மட்டும் 3000 பேர் குண்டு வீச்சால் கொன்று குவிக்கப் பட்டுள்ளனர்.

கை கால் உறுப்பிழந்தும் நோயுற்றும் பசிக் கொடுமையிலும் நீரின்றியும் அவர்கள் படுந்துனபங்கள் விளக்க வியலாதன. வன்னிப் பகுதியினின்றும் வெளிவந்தோர் சிங்களக் கொடியோரால் படுந்துனபம் கேட்டாலே நடுங்கச் செய்வதாக உள்ளது.

இக் கொடுமைக்கு எதிராகப் பேரெழுச்சி கொண்டு தமிழ்நாட்டு மக்கள் கண்டனப் பேரணி, உண்ணாநோன்பு, மறியல், வேலைநிறுத்தம், கடைஅடைப்பு, உருவ எரிப்பு, முற்றுகை போன்ற அனைத்துவகைப் போராட்டங்களையும் ஊர்தோறும் நடத்தி, ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசையும், தில்லி நடுவண் அரசையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காகவே, தமிழகத்தில் முத்துக்குமார் முதலாகப் பதின்மூன்று பேர் தீக்குளித்து இறந்தன ரென்பதையும் அறிவோம். இந்திய அரசோ, இலங்கை அரசின் இனஅழிப்புப் போரைத் தடுத்து நிறுத்தாமல், அச் சிங்கள இனவெறி அரசுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வரும் போக்கே தொடர்கிறது.

இந்திய ஆளுங்கட்சியின் தலைமை, ஓர் உயிரின் இழப்பிற்குப் பழிவாங்க, ஓரினத்தையே அழித்தொழிக்கும் எண்ணத்தில், சிங்களரின் முயற்சிக்குத் துணை போகின்றதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. தொகை, பயிற்சி, கருவிகள், தொழினுட்பம், உளவு, ஆட்கள் முதலியவற்றை அளித்துப் பல்வேறு வகைகளிலும் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி வருகின்றது. தமிழர்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை; போராட்டத்தையும் பொருட்படுத்தவில்லை.

தமிழக முதல்வர் கருணாநிதி, ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நேரத்திற் கொன்றைப் பேசிக் குழப்பி வருவதையும், போலியான போராட்டங்களை அறிவித்து மக்களின் எழுச்சியை மழுங்கடிக்க முயல்வதையும் காண்கின்றோம்!

இச் சிக்கலில், இராசிவ்காந்திக்கு முன், பின் என்று பார்க்க வேண்டுமென்றார்; புலிகளின் 'உடன்பிறப்பா ருடனான போர், முற்றதிகாரப் போக்கு’ (சகோதர யுத்தம், சர்வாதிகாரம்) பற்றிப் பேசினார்; இந்திய அரசின் கொள்கையே தம் கொள்கை என்றார்; தில்லிக்குத் தொலைவரி தரும் போராட்டம் என்றார்; நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவிலகுவர் என்றார்; மாந்தத் தொடரிப் போராட்டம் என்றார்; ஓரளவுக்குத்தான் அந்நாட்டைக் கேட்டுக் கொள்ள முடியும் என்றார்; வேலைநிறுத்தம் என்றார்; மூன்றுமணி நேர உண்ணா நோன்பிருந்தார்; போர் நின்றுவிட்டது என்றார்; புலிகள் போரை நிறுத்த வேண்டுமென்றார்; பிரபாகரன் என் நண்பர் என்றார்; மறுநாளே மறுத்தார்; விடுதலையை நோக்கமாகக் கொண்டதே விடுதலைப் புலிகள் இயக்கம் என்றார்; பேராயக்கட்சி எதிர்த்துக் கருத்துரைத்ததும் அமைதியானார்.

அ.தி.மு.க.வின் தலைவி செயலலிதா, நாடாளு மன்றத் தேர்தல் பரப்புரையில், ஈழச் சிக்கலுக்குத் தீர்வு தனித்தமிழ் ஈழமே என்றும், தம் கூட்டணி வலிவாக வெற்றி பெற்றால், இந்திரா காந்தி வங்கதேச விடுதலைக்கு வழி செய்ததைப் போல், தானும், தன் கூட்டணியின் உதவியுடன் அமைய இருக்கும் புதிய இந்திய அரசு மூலம், ஈழம் விடுதலை அடையச் செய்வேன் என்றும் தமிழ்நாடெங்கும் தான் பேசிய பரப்புரைக் கூட்டங்களில் அறிவிப்புச் (பிரகடனம்) செய்தார்.

தமிழ்நாட்டு மக்கள் ஈழச் சிக்கலில் தம்பால் நம்பிக்கை இழந்து விட்ட நிலை தெளிவாகத் தெரிந்த பின்னர் முதல்வர் கருணாநிதி, திடுமெனத் தமிழ் ஈழம் அமையத் தானும் உதவுவதாகக் கூறினா ரென்றாலும், பேராயக்கட்சி அதை எதிர்த்துக் கருத்துக் கூறிய பின்னர் அமைதியானார். சென்னையில் பேராயக் கட்சித் தலைவி சோனியா காந்தியுடன் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அதைப்பற்றி வாயே திறக்க வில்லை.

தன் குடும்பத்தாரின் நலன்களையே முதன்மையாகக் கருதிப் பதவி, பொருள், அதிகாரங்களை அவற்றிற்காக மட்டுமே பயன்ப டுத்தும் கருணாநிதி, தமிழ்நாட்டு நலன்களையும் தமிழ்இன நலன்களையும் புறக்கணித்து வருவததோடு அதனை ஞாயப்படுத்தும் முயற்சியில் பல்வேறு வகையாக மாறிமாறிப் பேசி மக்களை ஏமாற்றிக் குழப்புகிறார் என்ற உண்மையைத் தமிழர்கள் உணர்ந்து கொண்டதை இக்கால் அறிய முடிகிறது.

-----------------------------------------------------------------

செவ்வாய், 5 மே, 2009

பாவேந்தர் இன்றிருந்தால்...!

(29-4-2009 அன்று பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பிறந்தநாள் விழாவில் "பாவேந்தர் இன்றிருந்தால்" என்ற தலைப்பில் பாடிய மண்டிலப் பாக்கள்)


பெரியோரே! அறிஞர்களே! பெற்றெடுத்த தாய்க்குலமே!
     பீடு சான்ற
அரிமாவின் குருளைகளே! அறிவார்ந்த பிள்ளைகளே!
     அனைவ ருக்கும்
பரிவார்ந்த வணக்கங்கள்! பாவேந்தர் விழாவினிலும்
     பதைப்பு நெஞ்சில்!
சொரிகின்ற குண்டுமழை சுட்டழிக்கும் ஈழத்தில்
     சொந்தம் மாய்க்கும்!

பாவேந்தர்:

நோவேற்றித் தாய்த்தமிழை நொய்வித்தார் நொட்டுரையை
     நொறுக்கி வீழ்த்தி
தாவாற்றி தலைநிமிர்த்தி தமிழ்த்தாயின் தளையறுத்து
     தழைக்கச் செய்யப்
பாவாற்ற லாற்றமிழின் பகைஒடுக்கிப் படர்நீக்கப்
     பாடு பட்ட
பாவேந்தை அறியாரைப் பலகற்றும் தமிழரெனப் 
     பகர லாமோ?

தன்னலத்தார்:

ஆர்த்தெழுந்த இளைஞர்களை அறிவார்ந்த காளைகளை
     அணையச் சேர்த்தே
நேர்த்தியுறு போர்த்திறத்தில் நேரொழுங்கில் பயிற்றியவர்
     நெடுமீ கத்தால்
கூர்த்தவினை முடித்தீழக் கொடியேற்றி ஆண்டாரைக்
     குலைத்த ழித்துத் 
தீர்த்தவழி தன்குடும்பம் திளைக்கவளம் தீக்கரவில்
     தேர்ந்தார் அந்தோ!

பாவேந்தர் இன்றிருந்தால்...

அமுதூட்டல் போல்நஞ்சை அகமகிழ ஊட்டுந்தாய்
     ஆனார் என்னே!
உமிழ்வாரே பாவேந்தர் உறுபழியர் முகத்திழித்தே
     உலறிச் சீறி!
இமிழுலகில் தமிழர்க்கே இன்துணையாய் இருவென்றே 
     இருத்தி வைத்தால்
தமிழீழ இனமழிக்கத் தகவிலர்க்குத் துணைபோனாய்!
     தாழ்ந்தாய் என்பார்!

பொங்குதமி ழர்க்ககின்னல் புரிவார்க்கே அழிவுறுதி
     புரியு மாறே
சங்குமுழக் கோடுலகில் சாற்றியதை மறப்போமா?
     சற்றுக் கூட
தங்குதயக் கின்றியந்தத் தகையறியாக் கொலைவெறியர்
     தருக்குஞ் சொல்லார்
சிங்களவர் வீழ்ச்சிக்கே சீறிஅறம் பாடிடுவார்
     சினத்தால் தீய்ப்பார்!

வேகுந்தீக் கிரையாகி வீணிலுயிர் இழப்பாரை
     விளித்த ழைத்துச்
சாகின்ற தமிழாநீ சாகச்செய் வார்சாகச்
     செய்வாய் என்பார்!
மாகுன்றத் தோளனுயர் மறத்திற்குப் பொருளானான்
     மண்ணிற் காணா
வாகறிவுப் பெருவீரன் வரிப்புலிக்குத் துணையிருப்பாய்
     வாழந்தே என்பார்!

உரஞ்செறிந்த எழுச்சியுடன் உலகிலுள்ள தமிழரெலாம்
     ஒன்றாய் நிற்பீர்!
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி
     நண்ணி யந்தக்
கரம்புமன இனக்கொலையர் கடுமொடுக்கு முறையெதிர்த்தே 
     கனல்க என்பார்!
வரம்பறியாக் கொடுமையற வாழ,தமிழ் மண்மீட்க
     வாழ்த்துச் சொல்வார்!

இரண்டகரை இனங்காண்பீர்! இழித்தொதுக்கி வைத்திடுவீர்!
     ஈழம் சாய்த்த
வறண்டமனத் தில்லியரை வலிமையுடன் எதிர்த்தினத்தை
     வாழ வைப்பீர்!
இரண்டுநிலை இந்தியனுந் தமிழனுமாய் இருக்காதீர்!
     இனிஎ ழுந்தே
திரண்டிடுவீர் தமிழரென! தேர்ந்திடுவீர் அடையாளம் 
     தெளிவாய் என்பார்!