சனி, 31 டிசம்பர், 2011

நூலகம்


நூலகம்

(அண்மையில் நடைபெற்ற நூலக விழாவில் பாடியது)

அனைவர்க்கு மென்றன் அன்பு வணக்கம்!
முனைதமிழ் மொழியில் நினைவறா வழக்குறும்

ஆலகம் என்பது ஆலடி நிழலாம்!
ஏலகம் என்பது எளிதிலொப் புளமாம்!
ஓலகம் என்பது ஒலிசெயும் கடலாம்!
காலகம் என்பது காற்றுசேர் நீராம்!

கீலகம் என்பது கேடுசெய் தந்திரம்!
கூலகம் என்பது குதிர்க ளஞ்சியம்!
சாலகம் என்பது சாளரம் பலகணி!
சூலகம் என்பது சூலுறு கருப்பை!
சேலகம் என்பது செறிகயல் சேரிடம்!
தாலகம் என்பது தாலாட்டு நா,வாய்!

கோலகம் என்பது குழகழகு வீடாம்!
தோலகம் என்பது தோற்பொருட் கடையாம்!
நீலகம் என்பது நெடுங்காழ் இருளாம்!
நோலகம் என்பது நோன்பிரு இடமாம்!

பேலகம் என்பது பெரும்புணை தெப்பம்!
போலகம் என்பது புகலுமகத் துவமை!
மேலகம் என்பது மேலுள்ள இல்லம்!
வாலகம் என்பது வயங்கொளி மாடம்!
மாலகம் என்பது மருந்தெனும் வேம்பாம்!
மூலகம் என்பது முழுத்தனி அணுவாம்!

நூலகம் என்பதோ நுவன்றிடின் பற்பல
சாலத் திரட்டிய நூலுள அகமாம்!

அறிவுக் கருவூலம், அறிவியல் திரட்டு,
செறிமொழி காக்கும் சிறந்த காப்பகம்!
இலக்கியப் பெட்டகம், துலக்க விளக்கமாய்ப்
பலவர லாறுகள் பாங்குறக் கூறகம்!

உளத்தியல் சமயம் உருளுகோள் கணியம்
புலன்கவர் விளக்கப் புத்தாய் வுரைகள்!
நெறியுற மாந்தனை நேர்பண் புறுத்தி
அறிவுத்திறனைச் செறிவுற அளிக்கும்!
நலவள உடலும் ஞானமும் முயன்றால்
செலவில் லாமல் சேர்ந்திட உதவிடும்!

மருத்துவ நூல்கள் மருந்துகள் இன்னும்
திருத்தமாய்க் கட்டுரை தேர்ந்த படங்கள்
விளக்கக் காணொளி துளக்கறும் காட்சிகள்!
துலக்க விளக்கமாய் அறுவை மருத்துவம்!

குழந்தைகள் அறிவைக் கூட்டி வளர்த்திடும்
கழிபெருந் திரட்சி! கல்விசேர் மாந்தனை
மாந்த னாகவும் மீமாந்த னாகவும்
ஏழ்ந்திட மாறி வாழ்ந்திட வழிதரும்!

இத்தகை நூலகம் ஏறிப் படித்தே
முத்தென ஒளிர்ந்தோர் எத்தனை யோபேர்!

கல்வெட் டெழுதியும் பல்வகை ஓவியம்
கல்லில் பாறையில் கவினுறத் தீட்டியும்
பதிவுசெய் தனர்நம் பழந்தமிழ் மக்கள்!

இதுநாம் அறிந்ததே! புதிதாய்க் குழைத்த
களிமண் தட்டினில் தெளிவுற எழுதி
வளிகுறை சூளையில் வகையுறச் சுட்டு
தனித்தனி ஏட்டைத் தகுதுறை பிரித்தே
இனிதுறுங் கோயிலில், நனிகாப் பரசிலில்
வைத்துப் போற்றி வந்தனர் அந்நாள்
மொய்ப்புகழ் மொசப்பத் தோமியோ மக்கள்!

நூலகத் தோற்ற நுனைமுன் முயற்சியிஞ்
ஞாலத் திவையென ஏல உரைக்கலாம்!

திறப்பீர் சிறந்தவோர் நூலகந் தன்னை!
திடமுடன் மூடுவீர் சிறைஒரு நூற்றினை!
என்ப தறிஞர் இயம்பிய பொன்மொழி!
என்றும் மாறா இலக்கணப் புதுமொழி!

நூறா யிரம்நூல் நூலக மொன்று
தீராச் சிறப்பின் தெற்கா சியாவில்
பெரிதென யாழ்நகர் பிறங்கி யிருந்ததைச்
சிறியர் சிங்களர் தீயிட் டழித்த
நெறியற் றசெயல் நீளுல கறிந்து
வெறிய ரவறின் வறிதறி விகழ்ந்தது!

புதிது பிதிதாய்ப் பொலிவுற வீடுகள்
இதுயெமக் குரியதென் றெழுச்சியில் கட்டுவோம்!
எதுஎதற் கெலாமோ எழிலுற அறைகள்
புதுவீட் டினிலே புழங்க அமைக்கிறோம்!
படித்தற் கென்றோர் படிப்பறை நூலகம்
எடுப்புற அமைக்க ஏனோ மறக்கிறோம்!

இக்கால் நூலகம் இனிது திரட்டிடும்
எக்கா லும்கெடா ஒலிஒளிப் பேழைகள்!
குறுவட் டுடன்நுண் படலந் தன்னில்
சிறுபெரு படங்கள் சிறப்பா வணங்கள்!

ஒலிநூ லகமொன் றுண்டமரிக் காவில்!
ஒலிஓ ரிலக்கம் ஒப்பிலாப் பதிவில்
இசையமைப் பாளர் இயைபில் பதிந்தவை
இசையும் பல்வேறு இயக்க ஒலிகளும்!

இணையநூ லகத்தினில் எண்மிய ஊடகம்
இணையிலா தியங்கும், எடுக்கலாம் பதிவுகள்!
எல்லாச் செய்தியும் இருக்கிற திங்கே
பொல்லாப் பழுதுறா தெல்லாக் காப்புடன்!
அரிய காட்சிகள் அழகுப் படங்கள்
உரிய ஓசைகள் உண்டே பிறவும்!

இறுதியாய், இளைஞரே, இங்குமக் கொருசொல்
உறுதியாய் ஏற்க உமைவேண் டிடுவேன்!
நூலகம் செல்லுதல் சாலவும் நன்று!
மேலும் வளர்க்கும் ஏலும் வகையெலாம்!
அதனாற் பயனுற அழைக்கிறேன்
எதனா லுயரலாம் எனவேங் கிளையரே!



தங்கப்பா ஐயா


தங்கப்பா ஐயா

தமிழ்கொரு தீங்கெனின் புடைத்தெழும் எம்தோள்!
தமிழ்நலம் காக்கத் தாவும்எம் கால்கள்!
தமிழ்க்குடி புரக்கத் தணலும்எம் நரம்பே
ஆதலின், ஊறுங் குருதியும் தமிழெனின் மிகுமே,
வாழ்தலுந் தமிழ்க்கென வாழ்ந்து
காதல்எந் தமிழ்க்குச் சாதலெங் கடனே!
      பரந்துபட்ட மணற்பரப்பின்மீது அலை எழுப்பாமல் அமைதியாய் நடக்கும் ஆறு போன்றது என் வாழ்க்கை என்று தம் வாழ்க்கையைக் குறிப்பிடும் நம் தங்கப்பா ஐயாவின் பாடல் வரிகளே இவை. 
      தொடக்கத்தில், தென்றல், வானம்பாடி போன்ற இதழ்களில் ஐயாவின் படைப்புகள் வந்தன.
      ஈடெடுப்பற்ற பாவலராகவும், ஒப்பற்ற தமிழ் உணர்வாளராகவும், எடுத்துக்காட்டான தமிழ் உரிமைப் போராளியாகவும், உணர்வு கொளுத்தும் தமிழுணர்வுக் கட்டுரையாளராகவுமே இவர் தென்மொழி, நற்றமிழ், தெளிதமிழ் இதழ்களின் வழி அன்பர்களால் முதலில் அறிந்து கொள்ளப்பட்டார். இவருடைய தமிழாக்கத்தில் பாவலர் இரசூல் கம்சதேவ் முதலான பாவலர்களின் மொழிமீட்சி, விடுதலை உணர்வுப் பாடல்கள், மெய்த்தமிழ் அன்பர்களுக்கு ஈர்ப்பாக விளங்கினவெனலாம்.
      அவருடைய வாழ்வியல் கட்டுரைகளும் அவருடைய மொழிபெயர்ப்புப் பணிகளும் இதுவரை அறிவுலகம் காணாத அருமை சான்றவை எனில் மிகையன்று.
      அன்பியக்கமே வாழ்வியக்கம் என்றும் அன்பை முதன்மையாகக் கொண்டே மாந்தரின் பிற எல்லாச் செயல்களும் அமைய வேண்டுமென்றும் கூறுவார். உள்ளத்துக்குள் அன்பின் பசை சிறிதுமின்றி வெறும் அறிவாளியாக அல்லது படிப்பாளியாக இயங்குவோரைத் தம்மால் மதிக்க முடிவதில்லை என்பார்.
      குழந்தைப் பருவத்திலிருந்து வாழ்க்கைமீது அன்பு கொண்டிருந்ததைப் போலவே தமிழ்மீதும் அன்பு கொண்டிருந்த தாகவும் இளமையிலேயே தமிழ் தம்முட் புகுந்து தம்மை ஆட்கொண்டதெனவும் குறிப்பிடுவார்.
      ஐயாவின் தந்தையார் தென்காசி வட்டம் குறும்பலாப்பேரிப் புலவர் மதனபாண்டியன் என்னும் பெயருடைய தமிழாசிரியர் ஆவார். அவருடைய குடும்பத்தில் தமிழ் பரவிப் பரந்திருந்தது. நெருங்கிய உறவினர் பலரும் தமிழ்ப் புலவர்களாகவும் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ் எழுத்தாளராகவும் இருந்தனர். எனவே, தமிழ் அவர் குருதியில் ஊறியுள்ளமை இயல்பான ஒன்றே எனலாம்.
      தமிழைப்போலவே கல்லூரியில் ஆங்கிலத்தைக் கற்றார். தமிழ்நூல்களைவிடவும் ஆங்கில நூல்களை மிகுதியாகப் படித்திருக்கிறார். அவர் படைப்பாற்றலை ஆங்கில மொழியில் செலுத்தியிருந்தால், ஆங்கிலத்தில் உலகறிந்த ஓர் எழுத்தாளராகவோ படைப்பாளராகவோ ஆகியிருக்க முடியும்.
      கல்லூரிக் காலத்திலேயே தமிழ் இலக்கியங்களையும் ஆங்கில இலக்கியங்களையும் படித்து, அவற்றில் மூழ்கித் திளைத் திருக்கிறார். அப்பொழுது அவர் எழுதிய ஆங்கிலமொழிப் பாடல்களும் தமிழ்ப் பாடல்களும் நண்பர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றவை.  
                ஐயா, பாளையங்கோட்டைக் கல்லூரியில் வரலாறு, ஏரணம் அடங்கிய இடைநிலைக் கல்வியும், பொருளியல் வரலாறு அரசியல் அடங்கிய இளங்கலையும் படித்தார்.
      உயர்நிலைப்பள்ளிக் காலத்திலேயே அவரிடம் பகுத்தறிவு, சாதிமறுப்பு எண்ணங்கள் தோன்றி பாவேந்தர் பாடல்கள் படித்ததால் செழித்திருந்தன. அக்கால், தமிழிலும் ஆங்கலத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறார்; தமிழாக்கமும் செய்திருக்கிறார்.
      இளங்கலை தேறியதும் பாளையில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியரானார். அப்போது, தமிழாசிரியரிடம் இரண்டே மணித்துளியில் வெண்பா இலக்கணம் கற்று எழுதிய முதல் பாவிற்கே தென்றல் இதழின் பரிசு கிடைத்திருக்கிறது.  
                தமிழும் தமிழிலக்கியமும் சார்ந்த வாழ்வில் தமக்குத் துணைநின்றவருள் முதன்மையானவர் பாவலர் த.கோவேந்தன் என்று குறிப்பிடுகிறார். பல்லாற்றானும் பல நேரங்களிலும் தமக்கு உதவிய அன்பராக அவரைக் கூறுகிறார். கழக இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அவர் ஊக்கியதைக் குறிப்பிடுகிறார்.
      கோவேந்தன் வழி அறிமுகமான சிறந்த வரலாற்றாய்வரும் சிறந்த மொழிபெயர்ப்பாளரும் நூற்பதிப்பாளரும் ஆகிய முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி ஐயா செய்த கழகப்பாடல்களின் மொழிபெயர்ப்பைப் பார்த்து மகிழ்ந்து சில திருத்தங்களையும் கூறியுள்ளார். ஐயாவின் உழைப்பில், கழகப்பாடல்களின் ஆங்கிலவாக்கம் பெங்குவின் பதிப்பாக வந்ததற்கு சலபதி விடாமுயற்சி எடுத்ததை நினைவுகூர்கிறார்.
      தம் தமிழுணர்வு தனித்தமிழ் உணர்வாக மாறுதற்கும் இலக்கிய உணர்வு மேலும் ஆழம் அடைவதற்கும் வழிகாட்டியவராக தென்மொழி பெருஞ்சித்திரனாரைக் குறிப்பிடுகிறார். அவரின் ஆற்றல்களைப் போற்றிடும் ஐயா, தமிழுரிமை வேட்கையில் இருவரும் ஒரு கோட்டிலேயே நின்றதாக்க் கூறுகிறார். தம்பார்வையில் ஏதேனும் மங்கல் படிந்திருக்குமானால் அதை நீக்கித் தெளிவுபடுத்தியவ ரென்றும், பாட்டுணர்வை ஆழப்படுத்தியவ ரென்றும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரைக் குறிப்பிடுகிறார்.
      1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சிறைப்படுத்தப் பட்டபோது, தங்கப்பா ஐயா தென்மொழி ஆசிரியராக இருந்து எழுதிய ஓர் அட்டைப் படப் பாடல் இது: 
அரியேற்றைச் சிறைபுகுத்தின் அதன்முழக்கம் அடங்கிடுமோ   
                                          அண்ட மெல்லாம்
எரியேற்றும் பெரும்பிழம்பைச் சிறுநீர்தான் அவித்திடுமா
                                          அறமில் சூழ்ச்சி
நரியேய்க்கும் சிறுமனத்தீர்! நல்லுணர்வைப் புன்சிறையால்
                                          தெறநி னைத்தீர்!
விரைவேற்ற லானீர்நும் வீழ்ச்சிக்கே! தமிழகத்தின்
                                          விடுதலைக்கே!
தென்மொழி அன்பர்களின் நினைவில் நிலைத்த பாடல் இது.
     தென்மொழியோடு சில ஆண்டுக் காலம் சேர்ந்திருந்ததன்பின், அதைவிட்டு விலகி வந்ததற்கு ஐயா தந்துள்ள விளக்கும் தெளிவானதாகும். 
                "குறிக்கோளுக்கு முதன்மை வழங்கித் தம் பணியினை ஒரு வேள்வியாகவே நடத்தியவர் பெருஞ்சித்திரனார். வேள்வி நெருப்புச் சீறி எழுந்து கொழுந்துவிட்டெரிதல் வேண்டும். அதற்கு எதையும் எரிபொருளாகப் பயன்படுத்தலாம் என்ற எண்ணம் கொண்டவர் அவர். நான் வாழ்க்கையை அன்பு வெள்ளமாகக் கருதினேன். வேள்வியாகக் கருதியவன் அல்லேன். ஒரு நலனுக்காக இன்னொன்று அழிந்துவிடுதல் கூடாது என்ற எண்ணம் கொண்டவன் நான். ஒருபுள்ளியில் நில்லாமல் எல்லாவற்றிலும் என்னைப் பரப்பிக் கொள்பவனாக நான் இருந்தேன்" என்று அவர் மிகத் தெளிவாக விளக்குகிறார்.
      ஆசிரியராகப் பணியாற்றுகையில், வகுப்பறைப் பாடங்களுடன் தமிழ் விழிப்புணர்வு, இயற்கை ஈடுபாடு, சுற்றுச் சூழல் விழிப்புணர்வு, வாழ்வியல் அறிவு ஆகியவற்றையும் மாணவர் உள்ளத்தில் பதித்திருக்கிறார்.
      புதுவை அரசின் 2000ஆம் ஆண்டுக்கான தமிழ்மாமணிப் பட்டம் இரா.திருமுருகன் அவர்கட்கும், இயற்றமிழ்க்கான கலைமாமணிப் பட்டம் தங்கப்பா ஐயாவுக்கும் தரப்பட்டன. பட்டங்களை வழங்கிய அரசை மதிக்கும் வகையில் அவற்றை ஏற்றுக்கொண்டாலும், அரசு அலுவலர்கள் தமிழிலேயே கையொப்பமிடல் வேண்டும் என்ற அரசு ஆணையை நடைமுறைப்படுத்த அரசுக்கு ஒருமாத கால இடைவெளி வழங்கி அதற்குள் ஆணை செயல்படாவிடின், பட்டங்களை அரசின்பால் திருப்பிக்கொடுப்பதாக இருவரும் அறிவித்தனர்.
      அவ்வாறு அரசின் ஆணை செயல்படுத்தப் படாததால், 10-4-2001 அன்று இருவரும் ஊர்வலமாகச் சென்று கலை பணபாட்டுத்துறை இயக்குநரிடம் பட்டங்களையும் உரிய தொகையினையும் திருப்பிக்கொடுத்தனர்.
     
      தமிழ், தமிழர் உரிமை என்று பேசுவதும் செயற்படுவதும் உலகப் பொதுவான மாந்தர் முன்னேற்றத்துக்குத் தடையாக இல்லை என்பதை ஐயா தெளிவுறுத்துவார்.
      தமிழ் மட்டுந்தான் நமக்கு வேண்டும் என்றால் அது குறுகிய நோக்கமே, நாம் அப்படிச் சொல்லவில்லை. தமிழ் சொந்த மண்ணிலேயே உரிமையிழந்து நிற்கின்றது. அவ்வுரிமையை அதற்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும். இது மிகத்தேவையான பணி. உலக முன்னேற்றத்திற்காக உழைக்கிறவர்கள் உலகம் எல்லாவற்றையும் ஒன்றாய் இழுத்துப்போட்டுக்கொண்டு பாடுபடத் தேவையில்லை. தம் பணிக்குத்தம்மால் முடிந்த ஓர் எல்லையை வகுத்துக்கொள்ளலாம். தமிழர் மாந்த இனத்தின் ஒருபகுதி. காலிலோ கையிலோ காயம்பட்டால் அதை ஆற்றித்தானே ஆக வேண்டும் அதை ஆற்றாமல் உடம்பின் பொதுநலம்தான் முதன்மையானது. கை காலுக்கு அவ்வளவு முதன்மை கொடுக்கத் தேவையில்லை என்று கூறமுடியுமா என்பார். 
      இந்தியத் தேசியம் என்ற விரிவான நோக்கத்தோடு நீங்கள் ஏன் பாடுபடக்கூடாது? அதில் தமிழர் நலனும் அடங்குமே என்பார்க்கு ஐயா எளிதில் புரியும்படி ஐயா விடையிறுக்கிறார்.
      இந்தியத் தேசியத்தில் தமிழர் நலன் அடங்கினால் சரி. அடகவில்லையே! இது மிக வெளிப்படையான, மறுக்கமுடியாத உண்மை. இந்தியத் தேசியம் பொய்த் தேசியம். போலித் தேசியம். தமிழர்களை அழிக்கும் தேசியமாக இருக்கின்றதே. தனது நாட்டின் குற்றம் செய்யாக் குடிமக்களை மற்றொரு நாட்டான் சுட்டுக் கொல்வதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது என்ன தேசியம்? உலகிலேயே இதுவரை காணப்படாத, இழிந்த தேசியம் அது.
      குற்றம் இழைக்காத தமிழ் மீனவர்களைத் தொடர்ந்து பலாண்டுகளாகச் சிங்கள இனவெறி அரசு துன்புறுத்தியும் கொன்றும் வருகிறது. கண்ணையும் வாயையும் மூடிக் கொண்டிருக்கிறதே இந்திய அரசு! சீ என்று அதன் முகத்தில் காறி உமிழத் தேவையில்லையா? இதற்குத் தேசியம் என்று பெயர் சொல்வதைவிட நான்று கொண்டு சாகலாமே! என்றும் இன்னும் இவை தொடர்பாக விளக்கமாகப் பல செய்திகளையும் ஐயா எழுதிய நானும் என் தமிழும் என்ற நூலில் காணலாம். இந்நூல், கோவை ஞானி அவர்களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும்.
      தமிழனுக்குக் கிடைக்கவேண்டிய காவிரி நீரை, முல்லைப்பெரியாற்று நீரை, பாலாற்று நீரைப் பெற்றுத்தர முடியாத இந்திய ஒருமைப்பாடு எவ்வளவு போலியானது! இதைத் தாங்கிக்கொண்டு நாமும் சும்மாவிருக்கிறோம் என்று எழுதுவார். 
      நாற்பத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை ஐயா எழுதியுள்ளார். இவற்றுள் தமிழ் நூல்களும் ஆங்கில நூல்களும், மொழிபெயர்ப்பு நூல்களும் பா நூல்களும், கட்டுரை நூல்களும், குழந்தைகளுக்கான பாடல்களும், வாழ்வியற் சிந்தனைகளும், இயற்கை யீடுபாட்டு எழுத்துக்களும் உண்டு. ஐயாவின் எழுத்துக்கள் 15க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களிலும் பத்திற்கும் மேற்பட்ட ஆங்கில இதழ்களிலும் வந்துள்ளன.
      ஐயாவின் உயிர்ப்பின் அதிர்வுகள் என்ற பா நூல் சிற்பி இலக்கியப் பரிசைப் பெற்றது. இந்நூலில் புதுப்பா வகையிலமைந்தவையும் உள்ளன. கள்ளும் மொந்தையும் தனி நூலாக வந்தபோது, அதற்கு ஐயா எழுதிய முன்னுரை அரியதொரு அறிவுக் கருவூலம்; படைப்பு, படைப்பாளி, மரபுப்பா, புதுப்பா என்பவற்றிற்கு இதுவரை எவரும் அளித்திரா தெளிவு விளக்கம் உள்ளதைப் படிப்பார் உணரலாம்.
      ஐயா தம் கல்லூரி நாட்களிலேயே மொழிபெயர்ப்பில் சிறந்து விளங்கினார். தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழிற்கும் ஐயா பல மொழியாக்கங்களைச் செய்திருக்கிறார். கழக இலக்கியப் பாடல்களின் ஆங்கில ஆக்க நூலான ‘Love Stands Alone’, முத்தொள்ளாயிரத்தின் ஆங்கில ஆக்க நூலான ‘Red lilies and Frightened Birds’ ஆகிய இரண்டும் உலகப் புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன. இந்நூல்கள் ஆங்கில தமிழ் அறிஞர்களாலும் மிகச் சிறந்தவை எனப் பாராட்டப்படுகின்றன.    
      இவை தவிர, அவார் மொழிப்பாவலன் இரசூல் கம்சதேவ் பாடல்களையும் பிரெஞ்சுப் படைப்பாளர் ஆந்திரே ழீது கட்டுரைகளையும் தமிழாக்கம் செய்திருக்கிறார். வள்ளலார், சித்தர் பாடல்கள், முத்தொள்ளாயிரம், அற நூல்கள், பாரதி, பாவேந்தர் பாடல்களையும் தமிழாக்கம் செய்துள்ளார். சில கதைகளையும் கூட ஆங்கில ஆக்கம் செய்துள்ளார்.
      மொழிபெயர்ப்புலகில் ம.இலெ.தங்கப்பா என்னும் தேவமைந்தனார் கட்டுரையும், இலக்கணச்சுடர் முனைவர் திருமுருகனார், பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பேராசிரியர் பரமசிவம் போன்ற பிற அறிஞர்களின் உரைகளும் உயரவுக்குச் சாற்றுரைக்கின்றன.
வள்ளலாரின் பாடல் ஒன்று.
இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் என்கோவே துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.   
இப்பாடலின் தங்கப்பா ஐயா மொழிபெயர்ப்பு இது:
Will it be today, or will it be tomorrow?
When will it be at all, the one event of my life…
My discarding of all this ignorance and reaching beyond
The immeasurable within the immeasurable…
To come at last into the quiet bliss of inaction?
எவ்வளவு எளிமை! எண்ணிப் பாருங்கள்.
      காலச்சுவடு இதழ் ஐயாவை அறிமுகப்படுத்திய போது இவ்வாறு எழுதியது: இயற்கையும் அன்பும் தங்கப்பாவின் வலிமையான இரண்டு அடிப்படைகள். இயற்கையின் நேசர் அவர் என்று சொல்வது குறைத்துச் சொல்வதாகிவிடும். அவரது வீட்டின் பெயர் வானகம். குழந்தைகள் செங்கதிர், இளம்பிறை, விண்மீன், மின்னல்.
      சிறுவர், சிறுமியரை ஏரி, காடு, வயல், மலை, ஆற்றுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று செடி, கொடி, மரம், பறவை ஆகியவற்றைச் சிறப்புத் செய்திகளுடன் அறிமுகப்படுத்தி வைப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம். சிற்றூர் வாழ்க்கை அறிவும் இயற்கையைப் பேசிய கழக(சங்க) இலக்கியப் பயிற்சியும் கொண்ட தங்கப்பா போன்றவர்களே இத்தகைய இயற்கை அறிமுகத்தைச் செய்ய முடியும். இவ்வகைத் தமிழ் மரபின் கடைசிக் கண்ணிகளுள் தங்கப்பா ஒருவர்.
      அன்புதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது, பல சமூக, மொழிப் போராட்டங்களில் கலந்துகொண்ட தங்கப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை. தங்கப்பாவின் வலிமைகளுள் மற்றொன்று அவரது தமிழ் நடை. பாடலிலும் சரி, உரையிலும் சரி கலப்பு நீங்கிய தெளிவுமிக்கது.
            அரசின் பல விருதுகள், சிற்பி பரிசு எனப் பல பாராட்டுகள் தங்கப்பாவை அடைந்தாலும் அவை அவரை ஒன்றும் செய்யவில்லை. கல்லுப் பிள்ளையார் போல எதற்கும் அவர் அசைந்து கொடுத்ததாகத் தெரியவில்லை
      எது வாழ்க்கைஎன்னும் உங்கள் நூலில் வெளிப்படுத்திய வாழ்க்கை பற்றிய பார்வையை எவ்வளவு தூரம் உங்கள் சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்க முடிந்தது? என்ற வினாவிற்கு ஐயா தந்த விடை:
      புறவுலகச் சீர்கேட்டுக்கு இயற்கையழிவு காரணமாக இருப்பதுபோல் அகவுலகச் சீர்கேட்டுக்கு அன்பின்மை காரணமாக இருக்கின்றது. அன்பென்பது பிறர்மீது ஈடுபாடு. கோடிக்கணக்கான மக்கள் - உயிரினங்கள் -கூடி வாழும் இவ்வுலகில் பிறர்மீது ஈடுபாடு கொள்வது -அன்பு செலுத்துவது இன்றியமையாதது. பிறரோடு நல்லுறவு கொள்வதுதான் உலகுக்கும் சொந்த வாழ்க்கைக்கும் நன்மை பயக்கும். அன்பு, உணர்ச்சியின் பாற்பட்ட ஒரு கொள்கையன்று, அது அறிவியல் மெய்ம்மை. மீறக் கூடாத இயற்கைச் சட்டம்.
      என் திருமணமும் என் பிள்ளைகளின் திருமணங்களும் சாதி மறுப்புத் திருமணங்களே. எந்த மதத்தையும் வழிபாட்டு முறையையும் நாங்கள் பின்பற்றுவதில்லை. கொடுத்தல்தான் வாழ்க்கை, பெறுதல் அன்று என எங்கள் பிள்ளைகட்கு நாங்கள் கற்றுக் கொடுத்திருக்கின்றோம். ஆயினும் வாழ்க்கை பல்வேறுபட்ட தன்மையோருடனும்  பின்னிப் பிணைக்கப்பட்டிருப்பதால் சில நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். எனினும் குறைகள் மூடிமறைக்கப்படுவதில்லை. மேற்பூச்சுகளும் மூடிமறைத்தலும் இல்லாமல் திறந்த புத்தகமாகவே எங்கள் வாழ்க்கை அமைகின்றது
      தங்கப்பா ஐயா அவர்கள் களப் போராளியாகவும் திகழ்கின்றவராவார். தமிழ் நலத்திற்கெனவும் தமிழுரிமை மீட்சிக்கெனவும் நடக்கும் போராட்டங்களிலும் ஈழத் தமிழர் இன்னல் தீர்க்க விழைந்த போராட்டங்களிலும் புதுவையில் மட்டுமின்றி தமிழ்நாடெங்கிலும் நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கின்றார்.
சுருங்கக்கூறின், தங்கப்பா ஐயா...
எடுத்துக்காட்டான மாந்தர்;
தலைசிறந்த பாவலர்;
சீரிய கட்டுரையாளர்;
அன்பையும் இயறகையோடியைந்த வாழ்வையும் வலியுறுத்தும் வாழ்வியற் சிந்தனையாளர்;
ஒப்பற்ற தமிழ் உணர்வாளர்;
உண்மையான போராளி;
எப்போதும் அமைதியாக இருப்பவர்; எல்லாப் போதும் தமிழ் தமிழர் நலத்திற்கெனக் குமுறி வெடிக்கும் எரிமலை!
அவரைப் பாராட்டி மகிழ்வதோடு, அவருடைய அறிவார்ந்த கருத்துக்களை ஏற்று நடப்பதே நம்மை உயர்த்திக் கொள்ளும் செயலாக அமைவதாகும்.

---------------------------------------------------------------------
எழுத உதவியவை:
  1. நானும் என் தமிழும் ம.இலெ.தங்கப்பா. இதனுடன் ஐயாவின் பிற எழுத்துக்களும்.
  2. காலச்சுவடு இதழ்
  3. பேராசிரியர் அ.பசுபதி என்னும் தேவமைந்தனாரின் தமிழ்க்காவல் கட்டுரைகளும், திண்ணை கட்டுரைகளும்.
  4. பேராசிரியர் பெஞ்சமின் லெபோவின் இணையக்கட்டுரை.
உதவியோர்க்கு நன்றி.
------------------------------------------------------------------
.