வெள்ளி, 14 ஜனவரி, 2011

வீரவணக்கம்!

விழுப்புரம் வி.ப.இளங்கோவனார்க்கு
வீரவணக்கம்!


இவரியா ரென்குவீ ராயி னிவரே
தவச்சிறி தாறுந் தனிநல முன்னா
ஓங்குறு தூய்தமி ழுணர்வின ரென்றும்
நீங்கா நல்லிசை நெடுந்தொண் டாற்றிய
பெறற்கரும் பெரியார் பெருந்தொண் டரெனும்
சிறப்புறு தகைசால் செவ்வியர் பரந்த
ஆழ்கட லன்ன அமைதியர் ஆன்றநற்
காழ்சேர் கொள்கைக் கடுந்தொண் டாற்றியார்!
அழுக்குடை மழியா அடர்தா டிமுகம்
விழும இயக்க வி.ப. இளங்கோ!

மிதிவண் டிக்கடை; மேவிடு நினைப்பெலா
மெதிலுமெப் போது மெந்தமிழ் தமிழர்
உயர்வுற லன்றி யொன்றுவே றில்லை!

நயநற் கருத்தை நாடொறும் பலகையில்
சாலையோ ரத்தே சலிப்பிலா தெழுதிப்
பாலை மனத்தும் பசுமை கிளர்த்தவர்!

புதுவைவா னொலியில் புரையுறுந் தமிழ்கண்
டிதுவிது தவறென எடுத்தவர்க் குரைத்தவர்!

ஈழக் கொடும்போ ரிழிவுகண் டதிர்ந்தே
வேழமென் றேழ்ந்தவர்! வெய்தென் றேபல
அறவழிப் போரில் அழிசிறை ஏகியார்!

திறநற் றமிழில் தெளிவுறத் தொடர்ந்து
கொடுத்த படியே தொடுத்தார் பாடல்!

எடுப்புற எழுதி இளம்பா வலர்க்களி
பரிசுமுந் நூறு பாங்கினில் பெற்றவர்!

சரிதவ றுணர்த்தித் தமிழோ சைக்கிவர்
எழுதிய மடல்கள் இவருணர் வுரைக்கும்!

பழுதிலாத் தொண்டால் பைந்தமிழ் காத்தவர்!
இருங்கடல் வையத் தருங்கட னாற்றிய
ஒருமறத் தமிழர் ஓய்வுற் றாரே!

தேரலர் எதிர்த்தே தீந்தமிழ் காத்த
வீரருக் கெங்கள் விறலுறு
வீரவ ணக்கம்! வீரவ ணக்கமே!
---------------------------------------------------------------