ஞாயிறு, 29 நவம்பர், 2015

பெண்!...

பெண்!...
(மும்மொழி வல்லார் உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்)

க. மனு நூலில்!
      “ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் சிறிதும் இலனாயினும், பொல்லாத காமுகனாயினும் அவன் மனைவி அவனையே தெய்வமாகக் கருதி பணிபுரிய வேண்டும் என்றும்,
     மகளிர்க்கெனத் தனித்த முறையில் வேள்வியோ தவமோ விரதமோ இல்லையாகலான், கணவனுக்குச் செய்யும் தொண்டும் பணியுமே மகளிர்க்கு மேலுலக இன்ப வாழ்வு பெறுதற்கு வாயிலாம் என்றும்,
     மணமான ஒருத்தி தன் பெற்றோர் மனையில் இருந்துகொண்டு தன் கணவனுக்குப் பணிந்து அவன் விருப்பிற்கேற்ப நடவாளாயின், நாடாளும் வேந்தன், சான்றோர் கூடிய பேரவையில் அவளை நிறுத்தி, வேட்டை நாய்கள் கடித்துத் துன்புறுத்துமாறு அவளை அந்நாய்களுக்கு இரையாக்க வேண்டுமென்றும்,
     தன்கணவன் நற்குண நன்மாண்புகளை இழந்து பொல்லாக் குடியனாயும் நோயுற்றவனாயும் மாறியது காரணமாக அவனை வெறுத்துப் புறக்கணிப்பாளாயின், அவள் மூன்று திங்களுக்கு உயரிய ஆடை அணிகலனின்றி வேறோர் தனியிடத்தே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மனுநூல் கூறுகிறது.

உ. யாகஞவல்கியும், அத்திரியும், வாசிட்ட நூலும், ஆங்கீரசரும் கூறுவதென்ன?
      கணவன் சொல்வழி யடங்கி யொடுங்கி ஒழுகுவதே மகளிர் கடன்; அதுவே அவர்கட்கு உயர்ந்த அறமாம்என யாகஞவல்கியர் இயம்புகின்றார்.
     கணவன் உயிரோடு இருக்கும்போதே தான் பேறு விரதம் மேற்கோடலும் வேள்வி செய்தலும் உடையளாயின், அவள் தன் கணவன் தலையை வெட்டினவளாகின்றாள் எனவும், புண்ணிய நீராடும் ஒருத்தி, தன் கணவனுடைய அனிகளையோ உடல் முழுதுமோ நீராட்டி அந்நீரையே உட்கொள்பவள் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ்சிறப்புப் பெறுவாள்எனவும் அத்திரி என்பார் அறிவிக்கின்றார்.
.
     மறுமையில் கணவன் எய்தும் கதியினும் மேற்கதியை மனைவியாவாள் பெறுவதில்லை யாகலான், கணவனுக்கு அடங்கா தொழுகுபவள் இறந்தால் இன்ப உலகு எய்தாள்; எனவே, அவள் என்றும் தன் கணவன் மனம் நோக நடவாளாதல் வேண்டும்என்று வாசிட்ட நூல் வற்புறுத்துகின்றது.
     கணவற்கு அடங்காது ஒழுகுபவள் கையில் எவரும் உணவு தரப் பெறுதல் கூடாது; அவள் காமி எனக் கருதப்படுவாள்என ஆங்கீரசர் கடிகின்றார்.

{நன்றி! செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 160, 161.}

பெண்!...(தொடர்ச்சி)
(உரைவேந்தர் ஒளவை துரைசாமியார் விளக்கம்)
பெண்மக்கட்குரிய நலம் கூறப்புக்க தொல்காப்பியர், ”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலன” என்று தெரிவிக்கின்றார்.
கல்வி கேள்விகளால் உண்டாகும் திண்ணிய அறிவுஒழுக்கம் கற்புஎன்று தமிழ்ச் சான்றோரால் குறிக்கப்படும்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற வேந்தனது நலம் கூறப்புகுந்த சான்றோர், ‘உலகம் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை’ என்றும்,வேதங்களைக் குறிக்கக் கருதிய சான்றோர் அவற்றை ‘எழுதாக் கற்பு’ என்றும் குறிப்பதே இப் பொருண்மைக்கு ஏற்ற சான்றாகும்.
மகளிர்க்கு கல்வியறிவின் திணிநிலை ஒழுக்கத்தைக் கற்பென வாளா ஓதாமல், ‘செயிர்தீர் காட்சிக் கற்பு’ என்று தொல்காப்பியர் சிறப்பித்துக் கூறியருளுகின்றார். கற்பென்னும் திண்மையுண்டாவது மகளிர்க்குரிய தகுதிகளுள் பெருமை வாய்ந்தது என்று பண்டைத் தமிழர் பணித்துள்ளனர்.
மகளிர் மகப்பெறுதல் என்பது இயற்கையறம்; அதனால் உடற்கூறு வேறுபட்டதன்றி, ஆணுக்கு அடிமையாய்த் தனக்கென உரிமையும் செயலுமற் றிருத்தற்கன்று என்பது தமிழ் மரபு. ஆண்டவன் படைத்தளித்த இவ்வுலகில் ஆணைப்போலப் பெண்ணும் வாழப் பிறந்தமையின், ஆணுக்கு உரிமைதந்து பெண் அடிமையாய்க் கிடந்து மடிய வேண்டுமென்பது அறமாகாது.
ஆண்மக்களைப் போலாது பெண்மகள் ஒருத்தி மனையின்கண் செறிப்புண்டிருந்த போது உரிமை வேட்கையால் உந்தப் பெற்றமையின்,
“விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இன்செறிந் திருத்தல்
அறனும் அன்று ஆக்கமும் தேய்ம்”
என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கைத் துணையாவன. வாழ்க்கை இருபாலார்க்கும் பொது.; இருவரும் கூடியே அதனைச்செய்தல் இயற்கையாதலால் இருவர்க்கிடையே வேற்றுமை கண்டு புகுத்துவது, இயற்கை வாழ்க்கையை இடையூற்றுக் குள்ளாக்கும் என்பது கண்டே பண்டைச் சான்றோர் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வழங்கின்ர். அவளது துணையின் சிறப்புணர்ந்து தேற்கொண்ட கணவனைக் கொண்டான் என்று குறித்தனர்.
{நன்றி! ‘செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 163, 164.}
-----------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 6 நவம்பர், 2015

அரணமுறுவலார் !


அரணமுறுவல்!

         இன்று (6.11.2015) காலை அன்பிற்கினிய முனைவர் தோழர் ந.அரணமுறுவல் மீளாத்துயில் ஆழ்ந்த செய்தியை ஐயா செந்தலை கவுதமனார் முகநூல் குறிப்பின் வழி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்  பெரு வருத்தத்திற் கிடையே பழைய நினைவுகள் நிழலாடின.

           1960ஆம் ஆண்டுகளின் இறுதியில், 1970ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தேவநேயச்சித்திரன், பொதியவெற்பன், கு.அண்டிரன், அரணமுறுவல் ஆகியோர் அடங்கிய  அக்காலத் தென்மொழி அன்பர் குழு தமிழம் என்னும் தலைப்பில் தனி இதழ் தொடங்க முயன்றதும் அம்முயற்சி செயலாகும் முன்னரே ஐயா செம்பியன் பன்னீர்ச்செலவம் தமிழம் இதழைத் தொடங்கி நடத்தியதும் நினைவுக்கு வருகின்றது.

        1974ஆம் ஆண்டளவில் நான் திருக்கோவலூரில் பணியில் இருந்தபோது, சந்தைப்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டிற்கு வந்து பல செய்திகளைப் பேசிக்கொண்டிருந்ததும், போகும்போது நான் வைத்திருந்த நூல்கள் பாவாணரின் வடமொழி வரலாறு, தமிழர் மதம் மற்றும் இரண்டு நூல்களை வாங்கிச் சென்றதும் நினைவில் உள்ளன.

         கடலூரில், தென்மொழி அலுவலக/அக-த்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா நடத்தி வைத்த அரணமுறுவலின் திருமண நிகழ்வும் அதையொட்டி நடந்த சிறு விருந்தும் மறக்க முடியாதவை.

         பின்னர், அவர் சென்னை சென்றதும் தொடர்ந்து படித்ததும் முனைவரானதும் பல்வேறு தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டதும் அவரை அவ்வப்போது பார்க்கும்போது அவரே கூறவும் அவருடைய நெருங்கிய உறவினர் கு.அண்டிரன் ஐயா வழியும் அறிந்த செய்திகள்.

         அவர் தமிழியக்கம் இதழ் தொடங்கி நடத்திய போது, அவருக்கு இதழ் தொடர்பாக எழுதிய மடலும், அவர் உலகத் தமிழ்க் கழகத்தை மீண்டும் செயற்பட வைக்க எடுத்த பெருமுயற்சியும், அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டதும் முகன்மையாகக் குறிப்பிடவேண்டிய செய்திகளாகும்.

                    “முதன்மொழி இதழைச் சிறப்பாகக் கொண்டுவந்த வினைப்பாடும் பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை எதிர்த்து வீழ்த்த நடந்த பெரும் பணியில் உ.த.க. சார்பில் அவர் பங்கு குறிப்பிடத் தக்கதாகும். குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை காப்புக்காக அவரும் மா.செ.தமிழ்மணியும் பிறரும் எடுத்த முயற்சிகள நினைவுக்கு வருகின்றன.

         கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு நிலைகளில் தமிழ், தமிழர் நலன் காக்கும் பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அவர் மறைவை, இன்று ஈடு செய்ய இயலாப் பேரிழப்பாகவே உணர்கின்றேன். அந்தத் தென்மொழி அன்பர்க்கு, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாசறையில் உருவெடுத்த தமிழ்ப்படை மறவருக்கு, அஞ்சா நெஞ்சுடன் களப்பணியாற்றிய வல்லவர்க்கு வீரவணக்கம் செலுத்துவோம்!
  
வீரவணக்கம்! வீரவணக்கம்! அரணமுறுவலுக்கு வீரவணக்கம்!
------------------------------------------------------------------------

செவ்வாய், 3 நவம்பர், 2015

குறள். 1107

   தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. குறள். 1107

      இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித் தழுவல்,  தமக்குச் சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு,  தம்முடைய சொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத்,  தாமும் விருந்தினருமாக,  நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது என்பதாகும்.      

      ஈண்டுத் திருவள்ளுவப் பெருந்தகை வேறுசில இடங்களில் கூறியிருக்கும் கீழ்க்காணும் கருத்துக்களும் ஒப்புநோக்கத்தக்கன:                

முயற்சிசெய்து ஈட்டியபொருள் முழுவதும் தகுதியுடையார்க்கு உதவி செய்வதற்கே ஆகும்  (கு.212)
முறையான முயற்சியால் கிடைத்தது தெளிந்த நீர் போன்ற கூழே ஆயினும் அதனை உண்பதைவிட இனிமையானது வேறில்லை – (கு.1065)       எப்போதும் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீயநோய் அணுகாது. – (கு.227)                                       கிடைத்த உணவை இயன்றவரைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டுப் பலவகை உயிர்களையும் பாதுகாத்தல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையான அறமாகும். – (கு.322) 
           
      இவற்றுடன், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்னும் புறநானூற்று வரியும் (பு.17),  மணிமேகலை வரியும் (மணி.1255) ஒப்புநோக்கத் தக்கனவாம். மாந்தர் வாழ்வில் மிகஉயர்ந்த இனிமையை, இன்பநிலையைப் பகுத்துண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட,  மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் எனக் குறள் கூறுகிறது.
இக்குறளைப் படித்தறியும்போது, ஈடிணையற்ற நாகரிகம் பண்பாடு கொண்ட சான்றாண்மையராக முன்னோர் இருந்திருக்கின்றனர் என்ற எண்ணத்தால் நெஞ்சம் பெருமையால் இருமாந்து பூரிக்கும். ஆனால், அதேபோழ்தில், இன்றுள்ள தமிழரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆற்றொணாக் கவலைகள் நெஞ்சை அழுத்தும். இவை அடிக்கடி நிகழும்.


பொருத்தமான எதுகையும், முதலடியில் பொழிப்பு மோனையும் இரண்டாமடியில் இணை மோனையும் அமைந்து இனிய ஒழுகிசைச் செப்பலோசையுடன் குறள் படிக்க இன்பம் தருகிறது.