வெள்ளி, 28 டிசம்பர், 2012

தங்கப்பா ஐயாவுக்கு இரண்டாம் முறையாக இந்திய இலக்கிய அமைப்பின் பரிசு


தங்கப்பா ஐயாவின், “Love stands alone” நூலுக்கு இந்திய அரசு இலக்கியக் கழகத்தின் (சாகித்திய அகாதமி) பரிசு!

          இந்திய அரசின் இலக்கிய அமைப்பு (சாகித்திய அகதமி) 2012ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான பரிசுக்குரிய நூலாக, நம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய வாழ்வியல் அறிஞர்,பாவலர் ம. இலெனின் தங்கப்பா ஐயா எழுதிய, “Love stands alone” என்னும் நூலைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

இந்நூல், தேர்ந்தெடுத்த கழக(சங்க) இலக்கியப் பாடல்களின் அரிய ஆங்கில மொழிபெயர்ப்பு நூலாகும். இந்நூலை உலகப்புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

இப்பரிசு, ஐம்பதாயிரம் உருபாவுக்கான காசோலையும், ஒரு செதுக்கப்பட்ட செப்புப் பட்டயமும் கொண்டதாகும். சென்ற ஆண்டு தங்கப்பா ஐயாவின் சிறுவர் இலக்கிய நூலான சோளக் கொல்லைப் பொம்மைக்கு இந்த இலக்கிய அமைப்பின் பரிசு கிடைத்ததை முன்பே அறிவோம்.
    
நம் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு தங்கப்பா ஐயாவின் தகுதிக்குரிய பரிசுகள் இன்னும் அளிக்கப்பட வேண்டும் என்ற விழைவையும் குறிப்பிட விரும்புகிறோம்.  தங்கப்பா ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து இன்னும் பல அரிய ஆக்கங்களைத் தரவேண்டுமென்ற நம் அவாவையும் பணிவுடன் அறிவிக்கின்றோம்.

------------------------------------------------------------------------

இரட்டை நினைவேந்தல் நிகழ்ச்சி


   இரட்டை நினைவேந்தல் நிகழ்ச்சி

      தூயதமிழ்த் திங்களிதழ் தென்மொழியைத் தொடங்கி, அதன் ஆசிரியராக இருந்து அவ்விதழை மொழி, இன, நாட்டு உரிமை மீட்பு இயக்கமாக நடத்தியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா ஆவார். அஞ்சா நெஞ்சினரான அவர், தமிழ் தமிழர் தமிழ்நாட்டு நலன்களுக்காகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்; பிறர் முன்னெடுத்த போராட்டங்களில் பங்கு கொண்டவர். அவை காரணமாகப் பலமுறை சிறைப்படுத்தப்பட்டவர். ஈடெடுப்பற்ற தூயதமிழ்ப் பாவலர்; தமிழறிஞர்; இணையற்ற எழுத்தாளர்; எவரையும் ஈர்க்கும் ஒப்பற்ற சொற்பொழிவாளர்; எதற்கும் எள்ளளவும் அஞ்சாத போராளி!
      அவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அவருடைய துணைவியாரும் இலக்கக் கணக்கான தமிழுள்ளங்களின் இணையற்ற அன்புத் தாயுமான தாமரை அம்மையார் தம் 77ஆம் அகவையில் தி.பி2043 நளி22 * 07-12-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
      தூயதமிழ் நெஞ்சங்கள் அனைவரும் நன்கு அறிந்தவரும், தமிழிலக்கணப் பெரும்புலவரும், சென்னை மேடவாக்கம் தமிழ்க்களத்தில் தமிழ் இலக்கணம் இலக்கியம் தொடர்பாக தொடர்ந்து நடந்த கூட்டங்களில் விளக்கமளித்து வந்தவரும், மறைமலையடிகளார், பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் வழியில் தொடர்ந்து தொண்டாற்றிவந்தவரும், இருபத்தொரு நூல்களின் ஆசிரியரும், இரண்டு தூயதமிழ் இதழ்களின் நிறுவுநரும் ஆசிரியருமாயிருந்து அரும்பணி யாற்றியவரும், சிறந்த பாவலருமாகிய திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் தம் 70ஆம் அகவையில் தி.பி 2043 நளி 8 23-11-2012 வெள்ளிக்கிழமையன்று மறைவுற்றார்.
      தி.பி 2043 சிலை(மார்கழி)7 * 22-12-2012 காரிக்கிழமை அன்று தாமரை அம்மையார், இறைக்குருவனார் ஐயா ஆகிய இருவரின் நினைவேந்தும் இரட்டை நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் அடையாறு இராசரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. 
     

தாமரை அம்மையார் தென்மொழி அன்பர் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவகையில் நன்கு அறிந்தவராவார். அவர்கள் அனைவரிடத்தும்
அன்பும் பாசமும் கொண்ட இணையற்ற தாயாவார். அவர்கள் ஒவ்வொருவரையும் காணுந்தொறும் உளமார்ந்த அன்பும் பாசமும் செறிந்த உசாவல்களால் திணறச் செய்யும் அன்னையாகத் திகழ்ந்தவராவார்.
      யான் தாமரையன்னையாரைக் கடந்த நாற்பத்தொன்பது ஆண்டுகளாக அறிவேன்! கடலூரிலிருந்து தென்மொழி இயங்கியபோது ஞாயிற்றுக்கிழமை தோறும் பாவலரேறு ஐயாவுடன் தென்மொழிக் குடும்பத்துடன் - இருந்திருக்கின்றேன். தென்மொழி சென்னையிலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்னர் அடிக்கடி சென்னை செல்ல இயலாவிட்டாலும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் ஐயாவையும் அம்மாவையும் கண்டு பேசி அவர்கள் அன்பில் திளைத்திருக்கிறேன்.
      புறநானூற்றில் அதியமான் நெடுமானஞ்சியைக் குறித்து ஒளவையார் பாடிய பாடல் ஒன்றின் முதல் மூன்று வரிகள் இவை:
ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பின்ன் மாதோ!
இவ்வரிகள் பாவலரேறு ஐயா, தாமரையம்மையாருக்கும் மிகவும் பொருந்துவனவாகும்.
      பாவலரேறு ஐயாவின் மறைவிற்குப்பின், சென்னைப் பாவலரேறு தமிழ்க்களத்தில் தி.பி.2033 சுறவம்6 * 19-1-2002 அன்றி நடைபெற்ற விழாவில், உலகப் பெருந்தமிழர் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழ்மொழி, இன, நாட்டு உரிமைநலச் செயற்பாடுகளுக்கு நலம் புரக்குநராகத் தொண்டுள்ளத்தோடு துணைநின்றமையைப் பாராட்டிச் சிறப்பித்து அம்மா அவர்கள் தம் கையால் எனக்குப் பாராட்டுப் பட்டயம் அளிக்க யான் பெற்றதை நினைவு கூர்கையில் கணகள் கலங்குகின்றன. தமிழ்நெஞ்சங் கொண்ட அன்பர்களை எந்த வேறுபாடுமின்றி நடத்தும் ஈடற்ற அன்புள்ளம் பெற்றவராக அம்மா இருந்தார்; இவ்வகையில் அவருக்கு இணை வேறெவருமிலர்.
      சென்ற ஆண்டு சென்னை மேடவாக்கம் தமிழ்க்களத்தில் நடைபெற்ற ஐயாவின் நினைவேந்தல் கூட்டத்தில், ஐயாவுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள என்னை அழைத்திருந்தனர். அங்கு ஐயாவைப் பற்றிய நினைவுகள் சிலவற்றைப் பற்றி அவர் எழுதிய பாடல்களுடன் உணர்வெழுச்சியுடன் குறிப்பிட்டு உரையாற்றினேன்.
அம்மா பழைய நினைவுகளில் ஆழ்ந்ததோடு, நான் பேசியபோது உணர்வுப் பெருக்கில் தட்டுத்தடுமாறிய நிலைகண்டு, என் உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டார்கள்.
      அம்மாவின் நல்லனபுப் பணபுகள் பற்றிப் பல செய்திகளைக் கூறலாம். பாவலரேறு சிறை சென்ற போதெல்லாம் குடும்பத்தையும் தென்மொழியையும் கட்டிக்காத்துவர அவர் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஐயாவின் போராட்டங்கள் பலவற்றுள் அம்மாவும் பங்கேற்றிருக்கிறார்கள்; சிறைக்கும் சென்றிருக்கிறார்கள். ஐயாவைப் பற்றி யான் எழுதும் நூல் முழுமையுற்று வெளிவருமாயின், அம்மாவைப் பற்றி மேலும் செய்திகளை நினைவுகூர்வேன். அம்மா மறைவுற்றபோது யான் எழுதிய கையறுநிலைப் பாடல் இது:   

அன்பின் அடையாளம்; அஃகலிலா பாசத்தின்
இன்னுருவம்; ஈடில்லா நற்றாயே!  என்றும்
தமிழ்நெஞ்சர் ஏற்றுகின்ற தாமரை அன்னாய்!
அமிழாப் புகழ்சேர் அருளே!  இமிழுலகின்
துன்பங்கள் போதுமெனத் தூங்கினிரோ? அன்றியின்றே
அன்பழைப்பு ஐயா விடுத்தாரா?  என்செய்வோம்
எங்களுக் கிங்கார் இனி?      

     


1965-ஆம் ஆண்டு. மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நேரம். சென்னையில், நடுவண் தொடர்வண்டி நிலையத்திற் கருகிலிருந்த ஒற்ற்றைவாடை அரங்கில் மறுநாள் நடக்க இருக்கும் தொடர்வண்டி மறியல் தொடர்பாக மாணவர்களின் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து கலந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு கல்வி நிலையம் சார்ந்த மாணவரும் உணர்வுக் கொதிப்போடு போராட்டத்தை அரசு அஞ்சித் திகைக்க மேலெடுத்துச் செல்வதைப்பற்றி உரையாற்றிச் செல்கின்றனர்.
      கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாணவர், அடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்துள்ள மாணவர் பேசுவார் என்று அறிவித்தார். மேடைக்கு வந்த அந்த நெடிய அடர்ந்த மீசை தாடியோடிருந்த மாணவர், பேசத்தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த குரலோடு உணர்வுப் பொறி பறக்கப் பேசிக்கொண்டிருந்த போது, அந்த ஒலிவாங்கிப் பழுதாகிக் கரமுர என ஒலி எழுப்பித் தொல்லை கொடுக்க, அதைத் தம் கையால் ஓங்கி அடித்துக் கீழே தள்ளிவிட்டு ஒலிவாங்கி இல்லாமலே ஓங்கி உயர்ந்த குரலெடுத்துப் பேசத் தலைப்பட்டார் அவர்! அவர் தாம் தமிழிலக்கணப் பெரும்புலவர், திருக்குறள்மணி ஐயா இறைக்குருவனார் அவர்கள். 
     அவரைப் பற்றிய பல செய்திகள் நினைவுக்கு வருகின்றன. அவர் மதுரையில் இருந்து இதழ்கள் நடத்தியமை, அவருக்கும் பாவலரேற்றின் மூத்த மகள் பொற்கொடியாருக்கும் திருமணம் நிகழ்த்த - பாவலரேறு ஐயா எனக்களித்த சிறுபணியை நான் ஐயா கூறியவாறே நிறைவேற்றி ஒரு சிறிய பங்காற்றியது, உலகத் தமிழ்க் கழகத்தில் அவர் ஈடுபாட்டோடு ஆற்றிய பணி, உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தில் அவருடை உழைப்பு போன்றவை பற்றியெல்லாம் நிறைய செய்திகள் உண்டு.
      தூய உணர்வாளரான அவர் இந்தி எதிர்ப்பு, மனு எதிர்ப்பு, ஈழ விடுதலை துணைதரவுப் போராட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டு சிறை
சென்றிருக்கிறார். தமிழுலகில் அவர் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
      இவ்விருவரின் சிறப்பைப் போற்றும் நிகழ்வாக நடந்த இரட்டை நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும், தமிழறிஞர்களும், ஆய்வாளரும் உரையாற்றினர். அரங்கில் தென்மொழி அன்பர்கள் உள்ளிட்ட தமிழுள்ளங்கள் நிறைந்திருந்தனர்.

----------------------------------------------------------------------
வியாழன், 13 டிசம்பர், 2012

சென்னைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

சென்னைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

(சென்னையில் 16-12-2012-இல் நடைபெறவிருக்கும் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு பற்றிப் புதுச்சேரியில் 5-12-2012 அன்று நடைபெற்ற விளக்கக் கூட்டத்தில் தமிழநம்பியின் உரை)

இந்த நிகழ்ச்சி, இந்நாட்டில் இக்கால் மொழிநிலையில் கணிப்பொறி கைப்பேசி போன்ற ஊடகங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி எதைச் செயற்படுத்த என்ன முயற்சி நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும், நாம் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெளிந்து செயற்பாட்டுக்கு முனைய வேண்டியதைக் கூறுகின்ற ஒரு நிகழ்ச்சியாகும்.

என்ன நடக்கிறது? இந்தியநாட்டின் ஆட்சி அதிகாரம் இந்தியை மட்டுமே வல்லாண்மையுடன் முழுமையான தனியொரு ஆட்சிமொழியாக ஆக்குவதில் முழுமுனைப்பாக மும்முரமாக உள்ளது. இதற்கெனக் கரவுத்தனமாகப் பல்வேறு பணிகள் நடக்கின்றன. இந்திக் கணிப்பொறிப் பயன்பாட்டுக்குத் தேவையான மென்பொருள்களையும் பிற வகை ஆக்கங்களையும் தடையின்றி பெரும் பொருட்செலவில் உருவாக்கி வரும் வேலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதை ஏன் செய்பகிறார்கள்? எக்காலத்திலும் இந்தியே முதன்மை மொழியாக வல்லாண்மை செலுத்தும் மொழியாக நிலைநாட்ட மிகக்கரவாக நுட்பமான காரறிவு வளப்பத்துடன் செயற்படுகின்றனர். இதனால் அரசியல் சட்டத்தின்    8-ஆவது அட்டவணையில் உள்ள மற்ற 22 மொழிகள் என்னாகும்? அடிமை மொழிகளாகிப் புறக்கணிக்கப்படும்; வளர்ச்சியற்று காலப்போக்கில் வழக்கொழிந்து அழியும்.

இன்னொன்று. கணிப்பொறியில் இடைமொழியாகப் பயன்படுத்த சமற்கிருதமே ஏற்றது; சமற்கிருத இலக்கண நூல் பாணினியமே கணிப்பொறி மொழியியலுக்கு அடிப்படையாக அமைவதற்கு ஏற்றது என்ற கருத்துரு மிகக் கரவுத்தனமாக வலிவுடன் நுழைக்கப்பட்டுள்ளது.
இதன்வழி, என்றென்றும் இந்தி, சமற்கிருத மொழிகளின் வல்லாண்மை நிலைக்க உறுதியான ஏற்பாட்டுக்கு அடிகோலும் முயற்சி தடையின்றி நடக்கின்றது.

சரி, இப்போது என்ன செய்ய வேண்டும்?
நம் தாய்மொழி தமிழ், முதல் தாய்மொழியாகவும் இயற்கை மொழியாகவும் உயர்தனிச் செம்மொழியாகவும் இருப்பதால்,கணிப்பொறி கைப்பேசி முதலியவற்றின் செயற்பாட்டுக்கு மிகப்பொருந்திய மொழி என்று வல்லுநர் கூறுகின்றனர். எத்துறை அறிவையும் ஏற்குமெந் தமிழே இனி உங்கள் பருப்பு வேகாது என்று பொருஞ்சித்திரனார் முழங்குவார்.  இருந்தும் என்ன?

தமிழ் ஆட்சிமொழியாக இல்லை, பயிற்றுமொழியாக இல்லை, வழிபாட்டு மொழியாக இல்லை, வணிக மொழியாக இல்லை, வழக்குமன்ற மொழியாகவும் இல்லை. இப்போது கணிப்பொறி போலும் ஊடகங்களின் மொழியாகவும் இல்லாது போகவிட்டால், பெருமை பேசிப் பயனில்லை, தமிழ் அழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க இயலாது.

என்ன செய்யவேண்டும்?
தமிழகத்தில் ஆறரைக்கோடி மக்களின்மொழி, உலகளவில் பத்தரை கோடிப்பேரின் தாய்மொழியாகிய தமிழ், இந்நாட்டின் ஆட்சி மொழியாக வேண்டும். இதற்காக, இம்மண்ணிலுள்ள அரசியல் கட்சிகள் முனைந்து முயலுமென்ற நம்பிக்கை நமக்கில்லை என்பதே உண்மை.

இந்நிலையில், நாம், தமிழில் கலைச்சொல்லாக்கம், அறிவியல் நூலாக்கங்கள் செய்தாக வேண்டும்; கணிப்பொறியில் பயன்பாட்டுக்குச் செயன்முறையாக்கி என்னும் சொல்லாளர், ஒளிவழி எழுத்துணரி, பேச்சு எழுத்து மாற்றி, எழுத்து - பேச்சு மாற்றி, பொறி மொழிபெயர்ப்பு போன்றவற்றிற்கெல்லாம் மென்பொருள்கள் உருவாக்க வேண்டும். கணிப்பொறி வழி என்னென்ன வேலைகளைச் செய்கின்றோமோ அவை அனைத்திற்கும் தேவையான மென்பொருட்களைத் தமிழில் உருவாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ள மக்கள் அரசுக்கு நெருக்கடி தரவேண்டும்.

கணிப்பொறித்தமிழ் வளர்ச்சியே எதிர்காலத் தமிழின் வளர்ச்சி என்பதால் அனைவரும் இதில் கருத்துச்செலுத்த வேண்டும். மக்களிடம் இவற்றைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய நிலையில்தான், திசம்பர் 16 மாநாடு நடக்கிறது.

மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நம் பாராட்டும் நன்றியும் கூறுவதோடு மாநாட்டின் வெற்றிக்கு உதவ்வேண்டும் என்றவேண்டுகோளுடன் என் உரையை முடிக்கின்றேன். வாய்ப்பளித்தோர்க்கு நன்றி.


திங்கள், 10 டிசம்பர், 2012

தாமரையம்மையார் மறைவு – கையறுநிலை!
தாமரையம்மையார் மறைவு கையறுநிலை! 

(குறிப்பு: பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயாவின் துணைவியாரும் பல்லாயிரக்கணக்கான மெய்த்தமிழ் நெஞ்சங்களின் ஈடிணையில்லா அன்பு அம்மாவுமாகிய தாமரையம்மையார்  7-12-2012 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இயற்கையெய்தினார்)

அன்பின் அடையாளம்; அஃகலிலா பாசத்தின்
இன்னுருவம்; ஈடில்லா நற்றாயே!  என்றும்
தமிழ்நெஞ்சர் ஏற்றுகின்ற தாமரை அன்னாய்!
அமிழாப் புகழ்சேர் அருளே!  இமிழுலகின்
துன்பங்கள் போதுமெனத் தூங்கினிரோ? அன்றியின்றே
அன்பழைப்பு ஐயா விடுத்தாரா? என்செய்வோம்
எங்களுக் கிங்கார் இனி?                                                            
--------------------------------------------------------------   

புதன், 14 நவம்பர், 2012

பெருஞ்சித்திரனார் பேசினால்…!


(14-11-2012 அறிவன்கிழமை மாலை விழுபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக விழாப் பாட்டரங்கில் கலந்து கொண்டு பாடியது)


பெருஞ்சித்திரனார் பேசினால்!

அன்பார் பெரியீர்! அறிஞர்காள்! பாட்டரங்கில்
பண்பார் பலபுலவர் பாடவந்த பாவலரே!
இன்னன்புத் தாய்க்குலமே! எந்தமிழ நல்லிளைஞீர்!
முன்வந்தே போட்டி முனைநிற்கும் மாணவர்காள்!
வல்ல செயலாற்றும் வாசகர் வட்டத்தீர்!
எல்லார்க்கும் என்றன் இனியவணக் கம்உரித்தே!

இன்றைய நூலக இன்விழாப் பாட்டரங்கில்
தன்னேரில் தூயதமிழ் வல்லரிமா வான 
பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால்... என்னும்
அருந்தலைப் பொன்றை அளித்துப்பா டென்றனரே!
யார்பெருஞ் சித்திரனார்? இங்கறியார்க் காகசில
பேர்விளக்கும் செய்திகளைப் பேசல் பொருத்தமுறும்!

நீண்டநெடுங் காலம் நெருக்கிப் பிறமொழிகள்
மூண்டுகலந் தேதமிழை முன்னழிக்குந் தீங்கிலிந்த 
நூற்றாண்டில் தூயதமிழ் நுட்பச் செழுமையுறும்
ஏற்றமிகு நூல்கள் எழுதியநற் பாவல்லார்!
மக்களிடம் தூயதமிழ் மன்னவே ஊன்றிய(து)
ஒக்க தமிழ்ப்பணியில் மிக்காரில் தொண்டர்!
செந்தமிழ் காக்கும் திண்வலிவுக் கேடயமாய்
வந்தபகை வீழ்த்தும்போர் வல்வாளாய் வாழ்ந்தவரே!
ஈடில் தமிழறிஞர்! எண்பிக்கும் ஆய்வாளர்!
கேடில் தமிழ்பொதுளும் கின்னரச்சொற் பெய்முகிலார்!
மூன்றிதழ்கள் செப்பமுற முன்முனைப்பில் நடத்தியவர்!
ஆன்ற திறஞ்சான்ற அச்சுத் தொழில்வல்லார்!

அச்சமிலா நெஞ்சர்; அடிமை விலங்கொடிக்க
உச்ச மறத்தில் ஒருமூன்று மாநாடு
வேட்பில் நடத்திய வெல்லும் வினைவல்லார்!
ஆட்டிப் படைக்கும் அடக்குமுறைக் கஞ்சாதே
முப்பத்தோ டைந்துமுறை மூடுசிறை ஏகியவர்!
எப்போதும் நாட்டுமொழி நன்மைக்கே தாமுழைத்தார்!
மெய்சொல்லும் செய்பணியும் மிக்கவொன்றி வாழ்ந்தவரே!
தொய்வில்லாத் தொண்டுதுரை மாணிக்கம் இன்னியற்பேர்!
தமிழ்த்தேசி யத்தின் தலைமைப்போ ராளி!
அமிழாச் சிறப்புபெருஞ் சித்திரனார் ஐயாவே!

அந்தநாள் முக்கழக அந்தமிழ்ப் பாநடையில்
செந்தமிழ்ச் செஞ்சுவைசேர் தீந்தமிழ்ப்பா தந்தார்!

இளைஞர் எழுச்சிக் கெழுதியவை பேராளம்!
வளஅரிமா நன்முழக்காய் மாணார் நடுங்க!

கெஞ்சுவ தில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவ தில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவ தில்லை எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவ தில்லை உலகில் எவரும் எதிர்நின்றே! 

ஆடினை ஆயிரம் பாடினை ஆயிரம்!
ஆர்ப்புற யாத்தனை விடுதலைப் பாயிரம்!
அசைத்ததா பகைவரை உன்றனின் வாயுரம்!
தமிழா! அட தமிழா நீ
அழன்றெழு! அரிமா நடையிடு! வினைமுடி!
அதுதான் செந்தமிழ்த் தாயுரம்!
எத்தனை ஆண்டுகள் புரிந்தனை போரே!
இற்றதா ஆரியப் பார்ப்பனர் வேரே!
இன்னுமுன் கட்டாரிக் குண்டடா கூரே!
தமிழா அட தமிழா நீ
இணைந்தெழு, இடியென முழங்கிடு! நூறிடு!
இலையெனில் தொலைந்ததுன் பேரே!

ஒற்றைத் தமிழ்மகன் உள்ளவரை உள்ளத்தே
அற்றைத் தமிழ்த்தாயிங் காட்சி புரியும்வரை
எற்றைக்கும் எந்நிலத்தும் எந்த நிலையினிலும்
மற்றை இனத்தார்க்கே மண்டியிடான் மண்டியிட்டால்
பெற்றவர்மேல் ஐயம் பிறப்பின்மேல் ஐயமெனச்
சற்றும் தயக்கமின்றிச் சாற்று.

தூங்கிக் கிடப்பதோ நெஞ்சம் துடிதுடித்தே
வேங்கைப் புலியே, வீறேலோ ரெம்பாவாய்!

இளைஞரை ஊக்க எத்தனைப் பாக்கள்!
இளைத்தவர் மேலெழ ஈடில்லாத் தூண்டல்!

உள்ளம் விழுந்ததா? தூக்கி நிறுத்தடா!
உடலம் சோர்ந்ததா? மேலும் வருத்தடா!
கள்ள மாந்தராம் கயவர் நடுவிலே
கடுமை உழைப்படா; மகிழ்ச்சி முடிவிலே!
ஒற்றை உழவிலும் கற்றை விளைவடா!

உலகெலாம் உரிமை முழக்கம் எழுந்தது
உணரந்திடு; விழி, எழு தமிழா!!
வெட்சிப் பூவணி, வேகப் படுநீ
வெற்றி முரசினை அதிர முழக்கு

நேற்றைய அடிக்குமேல் நெட்டடி இன்று வை
நேற்று நீ காற்றெனில் நீள்விசும்பு இன்று நீ

தமிழ்கொல்லும் தீயிதழ்கள் தாக்குறப் பாடி
இமிழ்கடல் வையத்(து) இனம்மொழி காப்பார்!

கல்லறை பிணத்தைத் தோண்டிக் கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச் செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்! செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேறும் மணிநாளும் விரைந்த தன்றே!

பொதுமை உணர்வுப் பொதுளலிற் பொங்கும்
இதுவரை கேளா எழிலுறும் பாக்களில்!

ஒருநலம் பெறுகையில் உலக நலம் நினை
வருநலம் யாவும் வகுத்துண்டு வாழ்வாய்!

பொதுமை உலகம் புதுக்கிடும்
புதுமை நினைவொடு புறப்படு இளைஞனே!

பொதுமை உலகம் வரல்வேண்டும் ஒரு
புதுமை விளைவு பெறல் வேண்டும்

உன்றன் குடும்பம், உன்றன் வாழ்க்கை,
உன்றன் நலன்கள், உன்றன் வளங்கள்
என்று மட்டும் நீ ஒதுங்கி
இருந்துவிடாதே! நீ
இறந்த பின்னும் உலகம் இருக்கும்
மறந்து விடாதே!
உனக்கு மட்டும் நீ உழைத்தால்
உலகம் உன்னை நினைக்குமா?
தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த
தனியன் வாழ்வை மதிக்குமா?

பொய்மை நிலைமாற்றப் புரட்சிக் குரல்கொடுக்கும்
மெய்யாய் உணர்ந்தே மிகக்கவன்ற மெய்யறிவர்!

சட்டங்கள் தீட்டினோம்; திட்டங்கள் காட்டினோம்;
சரிசமம் எனும்நிலை வாய்ந்ததா? பழஞ்
சாத்திரச் சேறும் காய்ந்ததா? பணக்
கொட்டங்கள் எத்தனை? கொள்ளைகள் எத்தனை?
கூச்சலிட்டோம் பயன் இல்லையே! ஒரு
கொடிய புரட்சிதான் எல்லையே!

சாதி ஒழிப்பிற்குச் சாட்டைச் சுழற்றிடுவார்!
ஏதிங்கே சாதியெதிர்த் தாரிவர்போல் வாழ்வினிலே!

சாதிப்புழுக்கள் நெளிந்திடுமோர் மொத்தைச்
சாணித்திரளையாய் வாழ்க்கையிலே நாம்
ஓதி யுணர்ந்திட்ட மக்களைப் போல்உல
கோருக்குரைக்கத் துடிக்கிறோம்!

பள்ளென்போம் பறையென்போம் நாட்டா ரென்போம்!
பழிதன்னை எண்ணாமல் வண்ணா ரென்போம்!
பிள்ளையென்போம் முதலியென்போம் நாய்க்கர் என்போம்!
பிழைநாணா தருந்ததியர் படையா ளென்போம்!
எள்ளல்செய் திழிக்கின்றோம்; தாழ்விக் கின்றோம்!
எண்ணுங்கள் நமைத்தமிழர் என்கின் றோமா?
குள்ளமனப் பான்மையிது தொலையு மட்டும்
கூசுங்கள் நாணுங்கள் தமிழ்நாட் டோரே!

மாந்தநே யப்பண்பு மண்ணில் நிலைத்திடவே
பாந்தம் உரைப்பார் பரிவன்புப் பாங்கில்!

நல்லவனோ, இல்லை பொல்லாதவனோ,
நாணம் விட்டே, உனை இரக்கின்றான் மானந்
துறக்கின்றான் தம்பி
இல்லையென் னாதே! தொல்லையென்னாதே!
இருப்பதில் ஒருதுளி எடுத்துக்கொடு இது
சரி; இது தவறெனும் ஆய்வை விடு!

உரைநடையில் சொற்பொழிவில் ஓங்கறிவுத் தீயாய்
திரையில்லா தேஒளிரும் தெள்ளியநற் கொள்கை!
பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால் என்ன
அருமுரைகள் ஆற்றிடுவார் அத்தனையும் இம்மேடை
வெளிப்படுத்த ஒல்லாதே! வேட்கையுளார் அன்னார்
ஒளிவீசும் நூல்படித்தே  ஓர்ந்துகொள வேண்டுகிறேன்!
நூற்றுக் கணக்கான நூல்கள் கனிச்சாறாய்ப்
போற்றும் இலக்கியங்கள் புத்தெழுத்தில் தந்துள்ளார்!
சிங்களரின் வெங்கொடுமை தீர்த்தீழ நாடமைக்கப்
பங்காய் முயற்சி பலநூறு மேற்கொண்டார்!
நந்தமிழ நன்னலனே நாடி எழுதினரே
அந்தஎழுத் தெல்லாமே ஆட்சியரால் இப்பொழுது
பாட்டும் உரையுமெனப் பல்லாயி ரம்பக்கம்
நாட்டுடைமை ஆக்கி நலம்புரியப் பட்டுளதே!

இன்றிருந்தால் என்னஇவர் பேசிடுவார் எனபதற்கே
பொன்றாப் புகழ்ப்பாடல் ஒன்றிதனைக் கேட்பீரே!

பெற்றுவிட வேண்டும் தமிழகம்
பெற்றுவிட வேண்டும் தன்னாட்சி
பெற்றுவிட வேண்டும்!
முற்றும் நினைந்தே உரைக்கும் உரையிது!
முழுமையாய் என்றைக்கும் மாற்றம் இலாதது!   (பெற்று)

நாளுக்கு நாள்ஏழை நலிவையே கண்டான்
நாடாளும் பதவிகள் பணக்காரன் கொண்டான்
தோளுக்குச் சுமைமேலும் மிகுகின்ற போதில்
தொந்திக்கு விருந்திசை கேட்கின்றோம் காதில்!   (பெற்று)

உழைப்பவர் வாழ்க்கையில் துயர்காணல் நன்றோ?
உயர்வான திட்டங்கள் செயலாதல் என்றோ?
பிழைப்பெல்லாம் செல்வர்க்கே பேச்சென்ன பேச்சோ?
பிறநாட்டில் கையேந்தும் வாழ்வென்ன வாழ்வோ?   (பெற்று)

இராப்பகல் உழைப்பவன் சாகின்றான் நாட்டில்
ஏய்ப்பவன் துய்க்கின்றான் உயர்மாடி வீட்டில்!
வராப்பயன் வந்ததாய் முழங்குகின் றீர்கள்!
வாய்ச்சொல்லால் முழக்கத்தால் என்னகண் டீர்கள்?

வெற்று நினைப்பினில் வாழ்ந்திட லாமோ?
விலகுதல் பகையெனப் பொருள்கொள்ள லாமோ? (பெற்று)

வாய்ப்பளித் தோர்க்கென் வணக்கமும் நன்றியும்
ஏய்வுற ஏற்க இயைந்து.
-----------------------------------------------------------

செவ்வாய், 23 அக்டோபர், 2012

கழக(சங்க)த்தமிழ் – ஒரு பார்வை!


கழக(சங்க)த்தமிழ் ஒரு பார்வை!


(21-10-2012இல் விழுப்புரம் தமிழ்ச்சங்கப் பத்தாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கில் பாடிய பாடல்)

விழுஎன்றால் சிறப்பாகும் விழுமியஊ ராமிந்த விழுப்பு ரத்தில்
தழுவலுறும் தமிழ்ப்பற்றால் தமிழ்ச்சங்கம் தனைத்தோற்றித் தனிய ராக
ஒழுகலுற ஓரேரு உழவரென உழைப்பெடுத்து ஓயா தின்றும்
பழுதறவே விழாவெடுக்கும் பாலதண்டா யுதமென்னும் பசுமை நெஞ்சே!

அன்பார்ந்த தாய்க்குலமே! அறிஞர்களே! பெரியோரே! ஆக்கம் தேட
முன்னிறகும் இளைஞர்களே! முன்சங்கத் தமிழ்ச்சிறப்பை மொத்த மாக
இன்னேயிங் கியம்பவந்த பாவலரே! எல்லோர்க்கும் இனிது ரைத்தேன்
என்வணக்கம்! அறிஞரேற்றும் இனியசங்கத் தமிழென்றால் என்ன காண்போம்!

ஏசுவுக்கும் முற்காலத் திருந்ததமிழ் இலக்கியத்துள் இன்று மிஞ்சும்
மாசில்எட் டுத்தொகையும் மதிப்புறுபத் துப்பாட்டும் மட்டும் தானே!
வீசுபுகழ் நூல்எட்டுச் சேர்ந்ததெட்டுத் தொகையெனவே விளங்கும் பேரால்!
பாசுதமிழ் நெடும்பாடல் பத்துச்சேர்த் தாரதன்பேர் பத்துப்பாட்டே!

மேற்சொன்ன பதினெட்டே மேற்கணக்காம் மேலுமதே மேன்மை மிக்க
மேற்குவட்டு விளக்கொளியாய் மின்னுசங்கத் தமிழாகும்! மிகவி ளங்க
ஆற்றலுற கூறுதமிழ் நாகரிக ஆவணமே! ஆழம் நுட்பம்
சாற்றுமுறை இனிமையுடன் பொருளமைதி வடிவுஉத்தி தலைமை என்பார்!

மாந்தயினத் தெல்லாரின் மனமீர்க்கும் அழகுணர்ச்சி மகிழ்ச்சிப் பூங்கா!
காந்தமெனக் கவர்கின்ற கலைநுட்பக் கருவூலம் கற்பார் தாமும்
சாந்துணையும் எண்ணஎண்ணச் சலிக்காமல் களிப்பூட்டும் சாற ஊற்று!
ஏந்துமிகும் அயல்நாட்டார் எண்ணுகிலார் இதனாய்வை எளிதில் நீங்க!

ஒப்பற்ற இலக்கணமும் உயர்வான இலக்கியமும் உலகோர் போற்றும்
துப்புறவு தோய்தூய பொருளிலக்க ணச்சிறப்பைச் சொல்லற் காமோ?
ஒப்புறவில் பொதுமையிலே உயர்சங்கத் தமிழ்ப்புகழே ஓங்கி நிற்கும்!
செப்பமென இயற்பெயரைத் தவிர்த்துபொதுப் பெயருரைக்கும் சீர்மை என்னே!

இத்தமிழ இனந்தன்னின் இருப்பிதுவே அடையாளம் என்றும் சொல்லும்!
முத்தமிழின் பெட்டகமாய் மொழிச்சிறப்பை காதலினை மொழியா நிற்கும்!
இத்தரையில் வாழ்வியலை நேராக மக்களுக்கே எடுத்துக்கூறும்!
அத்துடனா? போர்வீரம் கொடைமானம் ஆட்சிதிறன் அறைதல் காண்பீர்!

இன்சங்கத் தமிழ்ப்பாக்கள் இரண்டா யிரத்துமுன்னூற் றெண்பத் தொன்றாம்!
நன்கவற்றைப் பாடியவர் நானூற்று எழுபத்து மூவ ராவர்!
அன்னவருள் முப்பதுபேர் அரும்பெண்டிர்! முப்பத்தோர் அரசராவர்!
இன்னவகை குமுகத்துப் பலபடியார் புலவர்களாய் இருந்தா ரென்க!

பழம்போலும் சங்கப்பா படியென்பார் வ.சுப.மா. படிப்பார் தம்மின்
கிழம்போகும் கீழ்மையும்போம் என்பாரே! சிறப்புகளின் கெழுமல் சுட்டிக் 
கழிநுட்ப ஆய்வாளர் கமில்சுலபில் சியார்ச்சுகார்ட்டுங் காட்டு வாரே!
முழுமையுற ஆராய்ந்தே தக்ககசி நோம்சோம்கி மொழிகின் றாரே!

(வேறு யாப்பு)

செப்பிய எல்லாச் சிறப்பையும் காட்டத்
துப்புறைப் பாடல் தொகைமிக உண்டு!
காலத் தருமை கருதியொன் றிரண்டு
ஏலத் தந்தே ஏற்றம் காட்டுவம்!

அன்புதோய் காதலை அகத்திணை நூல்கள்
இன்புறை எழிலில் இனிமையில் இயம்ப
மறமும் கொடையும் மற்றுமெய் யறிவின்
திறமும் பாடும் புறத்திணை நூலே!

உலகத் திற்கே ஒப்பிலாக் காதல்
இலக்கணம் இலங்கிட இயம்பிய பாடல்
யாயும் ஞாயும் யாரா கியரோ...

காதல் எப்படிப் பட்டதாம்? காண்க:
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே

காதற் பிரிவில் கலங்குரை எப்படி?
முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?
ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்?...

இன்றும் அருகிருந்து இயம்புதல் போன்றே
என்றும் விளங்கும் எழிற்பா டல்கள்:
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே...!

நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்தநம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே!

இயற்கையை விளக்கும் இனிய பாக்கள்
வியப்பில் ஆழ்த்தும் நாடகக் காட்சிகள்!
ஆடமைக் குயின்ற... என்று தொடங்கும்
பாடல் காட்டும் ஆடரங்கு அழகு!

அற்றை உடைச்சிறப்ப பறிந்திடச் சான்று:
கொட்டை கரைய பட்டுடை

பாம்புரி யன்ன கலிங்கம்

ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்

அரவுரியன்ன அறுவை

வணிகத் தொன்மை கணித்திடச் சான்று:
...கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி...

வணிகம் நடந்த வகைக்கிது சான்று:
...நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகெடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டி...

மறவுரம் விளக்கும் மாட்சியைக் காண்க:
களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்டேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே

குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்...

மங்கையர் மறவுர மாண்புக்குச் சான்று:
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!

நற்பண் புக்கோர் நற்றிணைப் பாடல்:
விளையாடு ஆயமொடு வெண்மனல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான் முளை அகைய...

அறிவியல் அறிவு அறிந்திடச் சான்று:
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாள்மீன் விராய கோள்மீன் போல...

செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலையிய காயமும்...

கொடைப் பண்புரைக்கக் குவியும் சான்றுகள்:
உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே...!

இன்று செலினும் தருமே சிறுவரை
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யலனாகி...

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன்...
                             ...காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போல
கையகத் ததுவே பொய்யா காதே!

பொதுப் பண்பிற்கும் பொதுச் சார்பிற்கும்
இதுசான் றென்ன எத்தனை வரிகள்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்

இன்னாது அம்மஇவ் வுலகம்:
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

மெய்யியல் விளக்கம் மிளிரும் வரிகள்:
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப...

தீதும் நன்றும் பிறர்தர வாரா

சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

எடுத்தெடுத் துரைப்பின் எல்லா வரிகளும்
அடுத்தடுத் தோர்சிறப் அறிவிக் கும்மே! 
அவற்றை எல்லாம் அணிபெறப் பாட
இவண் வருகின்றனர் ஏற்ற பாவலர்
இத்துடன் என்பா முடித்தேன் அவைக்கு
மெத்த நன்றி நன்றியென் றுரைத்தே!
-------------------------------------------------