திங்கள், 2 நவம்பர், 2009

நூலெனப்படுவது...!

    தமக்குத் தோன்றும் கருத்துக்களை விளக்கமாக வெளிப்படுத்தும் நோக்கில் சிலர் நூல் எழுதுகின்றனர். இன்னும் சிலர், சான்றடிப்படைச் செய்திகளோடும் படங்களோடும் பிறவற்றோடும் சொல்ல விரும்பி, அவற்றைப் பரந்த பாரிய வடிவில் தருவதற்கு நூல் எழுதுகின்றனர். பொழுது போக்குப் படிப்பிற்கு எழுத விரும்புவோரும், இலக்கியம் படைப்போரும், ஆய்வு செய்வாரும், மறுக்க விரும்புவாரும் நூல் எழுதுவதைப் பார்த்து வருகின்றோம். இன்னும், அறிவியல் கலை தொடர்பினவான பல புத்தகங்களையும் பலர் எழுதுகின்றனர்.
     எந்த வகை நூலாயினும் அது படிப்போர் விரும்பும் வகையிலும் வாசகரைக் கவரும் வகையிலும் இருக்க வேண்டுவதும் மக்களுக்குப் பயன் விளைக்குமாறு இருக்க வேண்டுவதும் முதன்மையாகும்.

நூலின் வகைகள்:
    
     நினைவுக் குறிப்புகளையும் ஒவ்வொரு நாளின் நிகழ்ச்சி நிரல்களையும் எழுதுவது குறிப்பேட்டுப் புத்தகம்.
     ஒரு துறையினருக்காக, அத்துறை நிகழ்ச்சிகள், அண்மைக்கால வளர்ச்சி நிலைகள், இடையூறுகள், எடுக்கப்படும் நடவடிக்கைகள், செயற்பாடுகள் பற்றிய செய்திகள் அடங்கிய விளக்கப் புத்தகம் செய்தி மடல்.
     உள்நாடு மற்றும் உலகளாவிய பல்வேறுவகை செய்திகளையும் குறிப்புகளையும் அடிப்படையான புள்ளி விளத்தங்களுடன் தொகுத்து ஆண்டுதோறும் வெளியிடும் நூல் ஆண்டு நூல்.
     சிற்றூர்கள், நகரங்கள், மாவட்டங்கள் முதலியவற்றைப் பட்டியலிட்டு அவ்வவ்விடங்களின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் முதலிய பல்வேறு செய்திகளைத் தொகுத்து அரசு வெளியிடும் நூல் அரசிதழ்.
     மாணவர்களுக்கான பாடநூல், வாய்பாடு, பயிற்சி நூல் போலும் பலதிறத்தன பள்ளி நூல்கள்.
     சிறந்த ஆசிரியர்களால் இலக்கிய நூல்கள் எழுதப் படுகின்றன. இவை, உரைநடை, பா வடிவிலான படைப்பிலக்கியம் மற்றும் கட்டுரை, திறனாய்வு போன்ற இலக்கிய நூல்கள்.
     சமயம் சார்ந்தவை வழிபாட்டு நூல், திருமறை நூல், திருப்பாடல் தொகுதி நூல்கள் போன்றவை.
     நாட்டு வரலாறு, உலக வரலாறு, சமய வரலாறு, மொழி வரலாறு, இன வரலாறு, இலக்கிய வரலாறு போன்றவை வரலாற்று நூல்கள். வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு போன்றவை மாந்த வரலாற்று நூல்கள்.
     சிறுகதை, குறும் புதினம், புதினம், காதற் புதினம், அறிவியற் புதினம் போன்றவை ஒரே வகைமை நூல்கள் ஆகும்.
     செயற்பாட்டு வழிகாட்டும் நூல்கள், குடும்ப அறிவு நூல்கள், ஊர்ச் செலவு வழிகாட்டு நூல்கள், சுற்றுச் செலவு கட்டுரை நூல்கள் போன்று நூல்கள் பல்வேறு வகையினவாம்.

நூலுக்குத் தொல்காப்பியம் தரும் விளக்கம் :

நூல் என்று கூறப்பெறுவது -
1. தொடக்கமும் முடிவும் பொருள் முரண் இன்றி இருக்கவேண்டும்.
2. தொகுத்தும் வகுத்தும் பொருள் காட்ட வேண்டும்.
3. விரிய உரைக்கும் வகையிலாகப் பொருத்தம் உடையவற்றைத் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும்.
4. நுண்ணிதாகப் பொருளை விளக்க வேண்டும்.

நூலுக்கு நன்னூல் கூறும் பெயர்க்காரணங்கள் இரண்டு :

  1. கைதேர்ந்த பெண் பஞ்சினால் நூல் நூற்றல் போல், புலவன் சொற்களால் நூலை இயற்றுகின்றான். பெண்ணின் கை போல புலவனின் வாயும் (எண்ணமும்) நூற்கும் கதிர் போல அறிவும் உதவுகின்றன.
  2. மரத்தின் வளைவை அறுத்து நேராக்க நூலைப் பயன் படுத்துவர்.  அதுபோல அறிவைப் பெருக்கித் தீமையை அழிக்க உதவும் நூல்களும் மக்களின் மனக்கோட்டத்தைத் தீர்த்துச் செவ்விதாக்கும்.

தொல்காப்பியம் கூறும் நூலின் வகைகள் :

மரபிலிருந்து திரியாது சிறப்பொடு கூடிய நூல்கள் முதல் நூல், வழிநூல் என்று இரண்டுவகையின.
   செய்வினைப் பயனை அடையாத, தூய்மையான அறிவினை உடைய முன்னோரால் செய்யப்பட்டது முதல்நூல்.
   முதல்நூல் வழியில் வருவது வழிநூல். வழிநூல் நான்கு வகைப்படும். தொகுத்து நூலாக்கல், விரித்து நூலாக்கல், தொகுத்தும் விரித்தும் நூலாக்கல், மொழிபெயர்த்தல் என நான்குவகை நூல்களும் வழக்கு வழிப்பட இயற்றல் வேண்டும். வழிநூல்கள் இலக்கணத்தில் மரபுகளில் மாறுபட்டால் சிதைந்த நூலாகும். தூய அறிவுடையோர் செய்த நூலில் சிதைவு இருக்காது.

தொல்காப்பியம் கூறும் நூலின் குற்றங்கள் :

  1. முன்பு கூறியதையே பின்பு கூறல்
  2. முன்பு கூறியதற்கு முரணாகப் பின்பு கூறல்
  3. முழுவதுங் கூறாமல் குறைவாகக் கூறல்
4. தேவைக்கு அதிகமாக மிகுதிப்படுத்திக் கூறல்
5. பொருள் தராதவற்றைக் கூறல்
6. படிப்போர் பொருள் மயக்கமடையும்படி கூறல்
7. கேட்போர்க்கு இனிமை யில்லாத நிலையில் கூறல்
8. பெரியோர் பழித்த சொல்லைப் பயன் படுத்தி தாழ்ந்த நிலையில் கூறல்
9. நூலின் கருத்தைக் கூறாது தன் கருத்தை மனத்துட் கொண்டு கூறல்
10. கேட்போர், படிப்போர் மனம் கொள்ளாத நிலையில் கூறல் - இவையும் இவை போன்றன பிறவும் நூலின் குற்றங்களாம்.

உத்தி :

உத்தியை எழுதும் திறன் என்றும் கூறலாம். நூலின் உத்தி என்பது, நூல் கூறும் வழக்கை உலக வழக்குடன் பொருத்திக் காட்டி, ஏற்ற இடமறிந்து, இந்த இடத்தில் இவ்வாறு கூற வேண்டுமென, தக்க முறையில் நிறைவுற எழுதி முடிக்கும் திறமையேயாகும்.

தொல்காப்பியம் கூறும் நூலின் உத்தி வகைகள் :

1. சொன்னதைத் தெளிவாக அறிதல்
2. அதிகாரங்களை முறையாக அமைத்தல்
3. இறுதியில் தொகுத்துக் கூறல்
4. கூறுபடுத்தி உண்மையை நிலைநாட்டல்
5. சொன்ன பொருளோடு ஒன்ற சொல்லாத பொருளை இடர்ப்பாடின்றி முடித்தல்
6. வராதனவற்றைக் கூறுவதால் ஏனைய வரும் என முடித்தல்
7. வந்ததைக் கொண்டு வராதனவற்றை உணர்த்தல்
8. முன்பு கூறியதைப் பினபு சிறிது பிறழக் கூறுதல்
9. பொருந்தும் வண்ணம் கூறல்
10. ஒரு பக்கத்தே சொல்லுதல்
11. தன் கொள்கையைக் கூறுதல்
12. நூலில் வைத்துள்ள முறை பிறழாதிருத்தல்
13. பிறர் உடம்பட்டதைத்  தானும் ஏற்றுக் கொள்ளுதல்
14. முற்கூறியவற்றைக் காத்தல்
15. பின்னர் வரும் நெறியைப் போற்றுதல்
16. தெளிவு படுத்திக் கூறுவோம் என்றல்
17. கூறியுள்ளோம் என்றல்
18. தான் புதிதாகக் குறியிடுதல்
19. ஒரு சார்பு இன்மை
20. முன்னோர் முடிபைக் காட்டல்
21. அமைத்துக் கொள்க என்று கூறல்
22. பல பொருள்கள் இருந்தாலும் நல்ல பொருளைக் கொள்ளுதல் 23. தொகுத்த மொழியான் வகுத்துக் கூறல்
24. எதிர்ப்போர் கருத்தை மறுத்துத் தன்கருத்தை  உரைத்தல்
25. பிறர் கொள்கைகளையும் சான்றாகக் கூறல்
26. பெரியோர் கருத்தை ஏற்றுக் கொண்டு தான் அதையே கூறல்
27. கருத்து விளக்கத்திற்கு வேறு பொருள்களையும் இடையே கூறுதல்
28. முரணான பொருள்களையும் உணர்த்தல்
29. சொல்லின் குறையை நிறைவு செய்து கூறுதல்
30. தேவைக்குத் தகத் தன் கருத்தைந் தந்து இணைத்து உரைத்தல் 31. நினைவு படுத்திக் கூறுதல்
32. கருத்தை உய்த்து உணரும்படி கூறல்.
இவற்றுடன் பிற உத்திகளையும் சேர்த்துக் கொண்டு சுருக்கமாக ஆனால் விளக்கமாத் தெளிவு படுத்த வேண்டும்.       

நன்னூல் கூறும் நூலின் இயல்புகள் :

1. பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் [இக்கால், முகவுரை அணிந்துரை எனலாம்] ஆகிய இருவகைப் பாயிரம் உடையதாக இருக்க
வேண்டும்.
2. முதல் வழி சார்பு என்னும் மூன்று நூல்வகையுள் ஒன்றாக இருக்க வேண்டும்.
3. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் அடையப் பயன்பட வேண்டும்.
4. ஏழு வகை எழுதும் கோட்பாடுகள் (மதம்) பெற்றிருக்க வேண்டும்.
5. பத்துவகைக் குற்றங்கள் இல்லாததாக இருக்க வேண்டும்.
6. பத்துவகை அழகு பொருந்தப் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.
7. 32 உத்திகளும் கொண்டு திறம்பட எழுதியிருக்க
வேண்டும்.
8. சூத்திரம் என்னும் மூலபாடமும் ஓத்து, படலம் (இயல், அதிகாரம்) என்னும் உறுப்புகளும் பெற்றிருக்க வேண்டும். [இலக்கண நூலகளுக்கு இந்த உறுப்புகள் கூறப்பட்டுள்ளன. ஏனைய நூல்களுக்கு ஏற்றவாறு உறுப்புகள் அமைந்திருக்க வேண்டும்]

நன்னூல் கூறும் நூலின் வகைகள் :
     
   முதல்நூல், வழிநூல், சார்பு நூல் என்று நூல்களை மூன்று வகையாகக் கூறுகிறது நன்னூல்.
   முதல்நூல், செய்வினைப் பயனை அடையாத, தூய்மையான அறிவினை உடைய முன்னோர் படைப்பதாகும்.
   முன்னோர் நூலின் முடிபுடன்  முழுவதும் ஒத்து, முதனூல் இருக்கவும் வழிநூல் வேறே செய்வதற்குக் காரணமாகிற வேறுபாடுகளைக் கூறி, மரபு சிதையாமல் படைப்பது வழிநூலாகும்.
   முதல்நூல் வழிநூல் இரண்டிற்கும் ஓரளவு ஒத்து, வேறுபட மாற்றிப் படைப்பது சார்புநூலாகும்.
   வழிநூல்கள் முன்னோர் நூலில் வரும் சொற்களையும் கருத்துக்களையும் பொன்னேபோல் போற்றிக் கொள்ள வேண்டும். வேறு நூல் செய்தாலும் முதனூலில் இருந்து சிலவற்றை மேற்கோளாக அப்படியே எடுத்தாள வேண்டும்.

நூலாசிரியர் பின்பற்ற வேண்டியனவாக நன்னூல் கூறும் ஏழு கோட்பாடுகள் :

  1. உடன்படல்
2. மறுத்தல்
3. பிறர் கோட்பாட்டை ஏற்குமளவு ஏற்று, மற்றவற்றை நீக்குதல்
4. தானொரு பொருளை எடுத்து நாட்டி அதனை வருமிடந்தோறும் இறுதிவரை நிலைநாட்டுதல்.
5. இருவர் கருத்து வேறுபடுமிடத்து, ஒருபக்கம் துணிதல்
6.பிறர் நூல்களிலுள்ள குற்றங்களை எடுத்துக்காட்டுதல்.
7. பிறர் கோட்பாட்டை ஏற்காது தன் கொள்கைப்படியே எழுதுதல்.

நன்னூல் கூறும் நூலின் குற்றங்கள் பத்து :

  1. குன்றக் கூறல்
2. மிகைபடக் கூறல்
3. கூறியதுகூறல்
4. மாறுகொளக் கூறல்
5. வழுச்சொற் கூறல்
6. மயங்க வைத்தல்
7. வெற்றெனத் தொடுத்தல்
8. மற்றொன்று விரித்தல்
9.சென்று தேய்ந்து இரிதல்
10. நின்று பயன் இன்மை.

நன்னூல் கூறும் நூலில் அமைய வேண்டிய பத்து வகை அழகு :

1. சுருங்கச் சொல்லல்
2. விளங்க வைத்தல்
3. படிப்போர்க்கு இனிமை
4. நல்ல சொற்களையே பயன்படுத்தல்
5. ஓசை இனிமை உடைமை
6. ஆழமுடைத்தாதல்
7. வைப்பு முறை
8. உலகம் மலைக்காதபடி (எளிமையாக) எழுதுதல்.
9. விழுமிய வற்றையே விளைவாகத் தரும்படி எழுதுதல்
10. விளங்கும் வண்ணம் எடுத்துக் காட்டுகள் உடையதாதல்.

நன்னூல் கூறும் 32 வகை உத்திகள் :

1. (இதனைச் சொல்லுவேன் என்று முதலில்) சொல்லித் தொடங்குதல்
2. இயல்களை யாதாயினும் ஓர் ஏற்ற முறைப்படி வைத்தல்
3. பலவற்றையும் திரட்டிச் சொல்லுதல்
4. தொகுத்ததை வெவ்வேறாக விரித்துக் கூறல்
5.தன் கருத்தை முடித்துக் காட்டல்
6. முடியுமிடம் முன்பே கூறுதல்
7. தானாக ஒன்றை எடுத்து மொழிதல்
8. பிறர் கருத்தை மேற்கோள் காட்டல்
9. சொல்லின் பொருள் விளங்கும்படி விரித்தல்
10. ஒன்றுக் கொன்று தொடர்புடைய சொற்களை  ஆளுதல்
11. இரட்டுற (இரு பொருள்பட) மொழிதல்
12. முன்பு காரணம் விளங்காததாகச் சொல்லப் பட்டதற்குக் காரணம் விளங்கக் காட்டி முடிவு செய்தல்
13. ஒப்புமை காட்டி முடித்தல்
14. ஒன்றற்குச் சொல்லப் பட்டதை அதனைப் பெறுதற்குரிய மற்றொன்றிற்கு மாட்டிச் சொல்லி நடத்தலாகிய மாட்டெறிந்து ஒழுகல்
15. வழக்கொழிந்ததை விலக்கல்
16. புதியனவற்றை ஏற்றல்
17. முன்னே ஓரிடத்தில் ஒன்றைச் சொல்லிப்பின் அதனை வேண்டுமிடந் தோறும் எடுத்தாளுதல்  
18. பின்பு அதை நிறுவுதல்
19. முன்னதினின்றும் வேறுபட முடித்தல்
20. வேறுபடாது முன்னதின் படி முடித்தல்
21. பின்னே சொல்லப் போவதை, முன்னே ஒரு காரணத்திற்காகச் சொல்ல வேண்டின், சுருக்கிச் சொல்லி, இதனைப் பின்னே சொல்வோம் என்றல்
22. பின்னே சொல்லப் படுவதை முன்னே ஒரு காரணத்திற்காகச் சொல்லப் பட்டதை, பின்னே சொல்ல வேண்டிய இடத்து, முன்னரே சொன்னோம் என்றல்
23. ஐயம் வந்துழி ஒருபக்கம் துணிதல்
24. எடுத்துக் காட்டி நிறுவுதல்
25. தான் தொடங்கிய சொல்லின்படி முடிவெய்த வைத்தல்
26. ஐயப்படுகின்ற இடத்து, இன்னது அன்று இது; இது வேறு என்று துணிந்து சொல்லுதல்
27. செல்லாது விடப் பட்டதையும் பொருந்த முடிவு பெறுமாறு சொல்லுதல்
28. பிறநூற் கருத்தைத் தானும் உடம்படுதல்
29.தான் புதுமையாகக் குறித்து வழங்குவதைப் பல இடங்களில் எடுத்துச் சொல்லுதல்
30. சொல் முடியுமிடத்தே பொருளும் முடியச் செய்தல்
31. இனமானவற்றை ஒருசேரக் கூறுதல்
32. மறைமுகமானவற்றை ஆராய்ந்தறியும்படி வைத்தல்.

இக்காலத்தில் எழுதப்படும் நூலின் பல்வேறு பகுதிகள் :

   நூல் எழுதுவார் தாம் தேவையென்று கருதுகின்றவாறும் தாம் விரும்புகின்றவாறும் நூலின் பகுதிகளை அமைக்கின்றனர். அமைப்பு முறையையும் தம் விருப்பத்திற்கேற்ப முன்பின்னாகவும் வைக்கின்றனர். எனினும் பொதுவான அமைப்பையும் பகுதிகளையும் காண்போம்.
  1. நூலில் முதலில் காண்பது நூலின் அட்டை
2. தலைப்புத் தாள் பக்கம் இதை அரைத் தலைப்புப் பக்கம் என்றும் கூறுவர்
3. தலைப்புப் பக்கம்
4. பதிப்புரிமை பக்கம் அல்லது நூற்குறிப்புப் பக்கம்
5. படையல் அல்லது உரிமையுரை
6. அணிந்துரை
7. முன்னுரை
8. அறிமுகம்
9. நன்றியுரை
10. பொருளடக்கம் 
11. படங்களின் பட்டியல்
12. நூல்
13. பின்னிணைப்பு
14. துணைநூற் பட்டியல்
15. பிழைதிருத்தம்
16. பின்அட்டை

நூலின் கட்டடமும் உறையும் :

   நூல் எளிதில் கிழிந்து விடாமல் இருக்கவும், வேறு வகையில் பழுதுபடா திருக்கவும், நூலிற்கு அழகு சேர்க்கவும் கட்டடம் (Binding)அமைக்கப் படுகிறது. தடித்த அட்டையைக் கொண்டும் மெல்லிய அட்டையைக் கொண்டும் கட்டடம் செய்யப் படுகின்றது.
   பருமனான பெரிய புத்தகங்கள் பெரும்பாலும் தடித்த அட்டையைக் கொண்டு கட்டடம் செய்யப் படுகின்றன. இவ்வாறு கட்டடம் செய்யப்பட்ட மேலட்டையின் மேல் சுற்றி அதனைக் காத்தவாறு அமையும் கொஞ்சம் தடிப்பான வண்ணத்தாள் மேலட்டை உறை ஆகும்.
   முன்னும் பின்னுமுள்ள மேலட்டைகளை மூடி உட்புறம் மடித்தவாறு விடப்படும் தாள் இரண்டிலும் நூலின் சிறப்பைக் கூறும் செய்திகள் இக்கால் அச்சிடப்படுகின்றன. 
   நூலாசிரியர் பெயர், அகவை, கல்வி, தொழில், பெற்ற பரிசுகள், வாழ்க்கைக் குறிப்பு போன்றவற்றை மேலுறையின் முன் மடிப்பிலும், நூல் கூறும் முகன்மைக் கருத்து, இயல் சிறப்புகள், முதன்மை முடிவுகள், நடைச்சிறப்பு போன்றவற்றைப் பின் மடிப்பிலும் அச்சிடுவதும் உண்டு.
   முன்பக்க மேலுறையில், புத்தகப்பெயரும் ஆசிரியர் பெயரும் பொருத்தமான ஓவியம் அல்லது ஒளிப்படம் இடம் பெறுகின்றன.
உறையின் முதுகு அல்லது நடுப்பகுதியில் மேலிருந்து கீழாகவோ, கீழிருந்து மேலாகவோ நூற்பெயரும் நூலாசிரியர் பெயரும் அச்சிடப் படுகின்றன.
   நூலை அறிமுகப்படுத்தி நூலின் பின் அட்டையில் சிறு குறிப்பு எழுதுவது நூல் வாங்க விரும்புவார்க்கு உதவியான செய்தியைத் தருவதாக அமையும்.   

மூத்த எழுத்தாளர் கூறும் வழிகாட்டும் நல்லுரைகள் :

     மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவது போலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு, இலக்கணம், பழவழக்கு, இலக்கியமும் ஆகியவை இன்றியமையாதவை ஆகின்றன. சான்றோர் மொழி ஆட்சிகளை மூலமாகக் கொண்டே பண்பாடும் உருப்பெறுகின்றது.
     கொச்சை மொழி, அயற்சொல் பயன்பாட்டிற்கு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
     பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் தன்னலத்தை இன்று எங்கும் காண்கிறோம்.
     பண்பட்ட இலக்கியமொழி -செம்மொழி- களுங்கூட மரபைப் போற்றியே வாழவேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற் கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழிவல்லுநர் துணையின்றிச் செய்யப்படுமானால் தவறுதான்.
     தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் கவிதைகள் எழுத முயல்வதைக்  காட்டிலும் எளிமையும் தூய்மையும் தனித்தன்மையும் இலங்க நான்கு வாக்கியங்கள் நன்றாகவும் அழகாகவும் எழுதிவிடுவது எவ்வளவோ சிறந்தது. பிழையில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம் -  இவ்வாறு எழுத்தாளர்க்கும் நூலாசிரியர்க்கும் வழிகாட்டி நெறிப்படுத்துவார் புகழ்பெற்ற மூத்த எழுத்தாளராகிய நா.பார்த்தசாரதி.

முடிவாக...
    
     மக்களுக்காக மக்களால் எழுதப்படுவனவே நூல்கள். அவற்றை, மக்கள் வாங்கிப் படிக்க அவர்களை ஈர்க்கும் வகையிலும், படித்தோரை நன்னெறிப் படுத்தி ஊக்கும் வகயிலும் அமைத்துத் தர வேண்டும். இவ்வாறு தருவதைத் தொடர்புடைய அனைவரும் இன்றியமையாக் கடமையாகக் கருத வேண்டும். ஈடுபாட்டோடு இதனைச் செய்வதே உயர்ந்த மக்கள் தொண்டாகும்.  

நன்றியுரைப்பு :
1.        தொல்காப்பியம் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் உரைகள்.
2.        நன்னூல் விசாகப்பெருமாளையர், சடகோபராமானுசாச்சாரியார் உரைகள்
3.        நன்னூல் எழுத்ததிகாரம் தமிழண்ணல் உரை
4.        மொழியின் வழியே - நா.பார்த்தசாரதி
5.        புத்தகக்கலை முனைவர் அ.விநாயகமூர்த்தி
அனைவர்க்கும் நன்றி.
----------------------------------------------------------------