சனி, 27 ஏப்ரல், 2024

தடையின்றி நடக்கும் இந்தித்திணிப்பு!


 

தடையின்றி நடக்கும் இந்தித்திணிப்பு!

=======================================

இப்படித்தான் நடக்கிறது இந்தித்திணீப்பு!

ஒன்றிய அரசு திட்டப்பெயர்களை இந்தியில் மட்டுமே எழுதுகிறது! விளம்பரப்படுத்துகிறது!

பலமுறை தமிழறிஞர்கள் வேண்டுகோள் விடுத்தும் ஒன்றிய அரசின் திட்டப்பெயர்களைத் தமிழ்நாட்டரசு தமிழில் மாற்றித்தர மறுக்கிறது!

செய்தித்தாள்களும் ஒளிஊடகங்களும் அப்படியே இந்தி / சங்கதப் பெயர்களை வாந்தி எடுக்கின்றன!

இப்படியே தொடர்ந்து இந்த்தித்திணிப்பு நடக்கிறது!

யார் எப்போது என்றைக்கு எதிர்ப்பது?

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

7.2.24 புத்தகவிழா உரை

 

7-2-2024 மாலையில் விழுப்புரம் புத்தகவிழா அரங்கில் தமிழநம்பி ஆற்றிய உரை:

===================================================

மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கும் பெரியோரே! மாவட்ட நூலகர் அவர்களே! அரசு அலுவலர்களே! தாய்க்குலமே! மாணவர்களே! அனைவர்க்கும் வணக்கம்.

 

அவையோரே, தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆய்வறிஞர்கள் தொல்காப்பியம் 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரையறுத்துக் கூறுகின்றனர். தொல்காப்பியத்திற்கும் முன்னதாகப் பல இலக்கணநூல்கள், இலக்கிய நூல்கள் கலைநூல்கள் இருந்ததற்கான சான்றுகள் அந்நூலிலேயே உள்ளன. 

எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதைப்போல் இலக்கியங்களிலிருந்துதான் இலக்கணங்கள் உருவாக்கப்பட்டன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இலக்கண நூலன தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட நூல்களெல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை. 

மயிலை சீனி வேங்கடசாமி என்னும் ஆய்வறிஞர், ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்ற அவருடைய ஆய்வு நூலில் 200 நூல்கள் மறைந்துபோனதாகச் சான்றுகளுடன் குறிப்பிடுகிறார். மேலும் பல நூல்கள் மறைந்து போனதை ஆய்ந்தறிந்து சொல்வேன் என்று எழுதியிருந்தார். ஆனால் அதற்குள் அவர் வாழ்நாள் முடிந்துவிட்டது. 

பழந்தமிழ் நூல்கள் மறைந்ததற்குச் சீனி வேங்கடசாமி ஐயா கூறும் காரணங்கள்: கடற்கோள்கள், சமயப்பகைமை, மூடநம்பிக்கையால் ஏடுகளை அதாவது எழுதப்பட்டிருந்த பனைஓலைகளை தீயிலும், ஆற்றுநீரிலும் போட்டு அழித்தமை, கறையான் அரிக்க விட்டமை, ,அயலார் படையெடுப்பால் அழிந்தமை ஆகியனவாகும். 

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பலநூல்களும் மறைந்ததற்குக் கூறிய காரணங்களை இதற்குமுன் இரண்டொரு கூட்டங்களில் கூறியுள்ளேன். பாவாணர், இடைக் காலத் தமிழரின் பேதைமையால் பாழான மண்ணுக்கும், படையான சிதலுக்கும், படியாதார் நெருப்பிற்கும், பதினெட்டாம் பெருக்கிற்கும், பற்பல பூச்சிக்கும், பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலை நூல்கள் எத்தனையெத்தனையோ எனக் கலங்கிக் கூறுவார். 

சூரியநாராயண சாத்திரி என்ற தம் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்ட அறிஞர், அவருடைய ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்ற நூலில் தமி.ழ்நூல்களை அழித்த பகைவர் யாரென்றும் ஏன் அழித்தனர் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

இப்போது, நமக்குக் கிடைத்திருக்கும் பழந்தமிழ் நூல்கள், சங்க இலக்கியங்கள் என்ற பெயரில் குறிப்பிடப்பெறும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற பெயரிலான பதினெண் மேற்கணக்கு நூல்களுடன் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆகும். இவற்றிலும் பத்துப்பாட்டும் எட்டுத்தொதகையும் மட்டுமே சங்க இலக்கியங்களாகும் என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும். 

சங்க இலக்கியங்களின் பெருமையை, சிறப்பை சியார்ச்சு ஆர்ட்டு போன்ற அயலக அறிஞர்கள் பலரும் போற்றிப் புகழ்கின்றனர். தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் காரணங்கள் கேட்டதற்காக அவர்கள் தம் வியப்பைத் தெரிவித்தனர். 

சரி, சங்க இலக்கியங்களில் இருப்பவைதாம் என்னென்ன? அவற்றில், தமிழரின் தொன்மை, நாகரிகம், பண்பாடு மேம்பட்ட வாழ்க்கைமுறை, நுட்மான மாந்தநேயக்கூறுகள், நுட்பமான அறிவுக் கூறுகள், பொதுமை உணர்வு, இயற்கை மொழியின் வளர்ச்சிக்கூறுகள், அறிவியல் வானியல் கூறுகள் முதலிய அரியபல செய்திகளைக் காண்கிறோம். 

அகப்பாடல்களில் காதலின் நுண்ணுணர்வுகள் மிகச்சிறப்பாக விளக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். புறப்பாடல்களில் அக்காலத் தமிழரின் வீரம், கொடை, அரசனின் கடமைகள், கல்வியின் சிறப்பு, உலகியல், அறிவியல், மருத்துவக்கூறுகள் முதலியவற்றை எல்லாம் நுணுக்கமாகக் கூறியிருப்பதைக் காண்கிறோம். 

உலகமே வியக்கும் அன்புணர்ச்சி வெளிப்பாடான மதம் சாதி உணர்வறியாத உண்மைக் காதல் பாட்டொன்றை நினைவூட்டுகிறேன். 

யாயும் ஞாயும் யாரா கியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.   

- இந்தக் குறுந்தொகைப் பாடலை அறியாதார் யார்? 

     ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – என்னும் மாந்தநேயப் பொதுமை கூறும் புறநானூற்றுப் பாடலின் முதலடியைப் போற்றாதார் யார்? புகழாதார் யார்? 

கூறிக்கொண்டே இருக்கலாம், நேரமில்லை. 

அறிவார்ந்த அவையோரே, மறைந்த அறிஞர் வ.சுப.மாணிக்கம் ஐயா, ‘மாணிக்கக் குறள்’ என்றொரு நூல் எழுதினார். அந்நூலில் பழந்தமிழ் இலக்கியச்சிறப்பை ஒரு குறளில் கூறியுள்ளார் அக்குறள் இதுதான்:

பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால்

கிழம்போகும் கீழ்மையும் போம்.

சங்க இலக்கிய நூல்களைப் படித்தால், முதுமை போய்விடுமாம்! கீழான எண்ணங்களும் கீழான செயல்களும் போய்விடுமாம்! 

அன்பர்களே! விழுப்புரத்தில் புலவர் தமிழரசு முன்னின்று நடத்திய ‘சங்க இலக்கியப் பொதும்பர்’ எனும் சிறப்பான இலக்கிய அமைப்பொன்று இருந்தது. அவர்கள் அதே பெயரில் மும்மாத இதழொன்றையும் நடத்தினர், அவ்விதழில் ஒருமுறை ‘சங்கப் பனுவல் படி’ என ஈற்றடி கொடுத்து வெணபா எழுதும்படி கேட்டனர். அப்போது எழுதிய வெண்பா. 

இங்கிவ் வுலகில்நீ யாரென் றறிந்துணர

மங்காப் புகழ்ப்பண்பின் மாண்பறிய – கங்குலாய்த்

தங்கியுள இற்றையிழி தாழ்வகற்ற எந்தமிழா

சங்கப் பனுவல் படி.             

– என்பதே அந்த வெண்பா. 

அன்பார்ந்த அவையோரே! இத்தனை சிறப்பு வாய்ந்த அந்தச் சங்க இலக்கிய நூல்கள் எனிமையாக எழுதப்பட்ட உரைகளுடன் இப்புத்தகத் திருவிழாவில் பெரும்பாலான கடைகளில் இருக்கின்றன. வாங்கிப் படிக்க வேண்டும். விலை கொடுத்து வாங்க இயலாதார் நூலகங்களை நாடிச்சென்று படிக்க வேண்டும். நூலகங்களில் படித்து முன்னேறி உயர்ந்தோர் பலராவர். 

விழுப்புரம் மாவட்ட தலைமை நூலகத்தில் ஒருமுறை நடந்த நூலகவிழாப் பாட்டரங்கத்தில் ‘நூலகம்’ என்ற தலைப்பில் படித்த பாட்டொன்றின் சிறு பகுதியைப் படித்துக் காட்டி என் உரையை முடிக்க வி.ரும்புகின்றேன். 

ஆலகம் என்பது ஆலடி நிழலாம்!

ஏலகம் என்பது எளிதிலொப் புளமாம்!

ஓலகம் என்பது ஒலிசெய் கடலாம்!

காலகம் என்பது காற்றுசேர் நீராம்!

 

கீலகம் என்பது கேடுசெய் தந்திரம்!

கூலகம் என்பது குதிர்க ளஞ்சியம்!

சாலகம் என்பது சாளரம் பலகணி!

சூலகம் என்பது சூலுறு கருப்பை!

சேலகம் என்பது செறிகயல் சேரிடம்!

தாலகம் என்பது தாலாட்டு நா,வாய்!

 

கோலகம் என்பது குழகழகு வீடே!

தோலகம் என்பது தோற்பொருட் கடையே!

நீலகம் என்பது நெடுங்காழ் இருளே!

நோலகம் என்பது நோன்பிரு இடமே!

 

பேலகம் என்பது பெரும்புணை தெப்பம்!

போலகம் என்பது புகலுமகத் துவமை!

மேலகம் என்பது மேலுள்ள இல்லம்!

வாலகம் என்பது வயங்கொளி மாடம்!

மாலகம் என்பது மருந்தெனும் வேம்பு!

மூலகம் என்பது முழுத்தனி அணுவாம்!

நூலகம் என்பதோ அறிவின் தொகுப்பாம்!

 

நூலகம் செல்லுதல் சாலவும் நன்று!

மேலும் வளர்க்கும் ஏலும் வகையெலாம்!

அதனாற் பயனுற அழைக்கிறேன்

எதனா லுயரலாம் எனவேங் கிளையரே!

 

வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து முடிக்கின்றேன்.

நன்றி! வணக்கம்.

-------------------------------------------------------------------------

ஞாயிறு, 7 மே, 2023

31-3-2023 வெள்ளிக்கிழமை மாலை 05-30 மனியளவில் விழுப்புரம் புத்தகக்காட்சி அரங்கில் தமிழநம்பி ஆற்றிய உரை:

 

31-3-2023 வெள்ளிக்கிழமை மாலை 05-30 மனியளவில் விழுப்புரம் புத்தகக்காட்சி அரங்கில் தமிழநம்பி ஆற்றிய உரை:

===========================================================

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பெரியோர்களே! அறிஞர்களே! தாய்க்குலமே! பல்வேறு அரசு அதிகாரிகளே! நூலகத்துறை சார்ந்தோரே! நிகழ்ச்சியை நடத்தும் புத்தக வெளியீட்டுக் குழுமத்தாரே! அவையிலுள்ள ஏனைய நல்லுள்ளங்களே! அனைவர்க்கும் வணக்கம். மூன்று பகுதிகளில் என் உரையைச் சுருக்கமாக முடிக்க விரும்புகிறேன்.

 

முதலில், வாழ்த்துரை:

       நெடுநாட்களாக விழுப்புரத்தில் புத்தகக் காட்சி வராதா? என்று ஏங்கி எதிர்பார்த்திருந்தோம். புத்தகத் திருவிழாவாகவே வருவதாக அறிந்தோம்; பருத்தி பொன்னாகக் காய்க்கப்போவதாக மகிழ்ந்தோம். ஆனால், உள்ளூர் எழுத்தாளர்களை, இந்த மாவட்ட எழுத்தாளர்களை அடியோடு புறக்கணிக்கும் விழாவாக அது அமைந்துவிடக்கூடாது என்ற ஆற்றாமையால், மாவட்ட மேலாண்மைக்கு, எழுத்தாளர் சோதி நரசிம்மனும் எழுத்தாளர் செகுட்டுவனும் நேரிலும் எழுத்துவழியாகவும் கோரிக்கை வைத்தனர்.

 

        அவை கண்டு கொள்ளப்படாமல் சுணங்கிய நிலையிலுள்ளதை அறிந்தோம். விழாத் தொடக்க நாளுக்கு முந்தைய நாள் மாவட்ட எழுத்தாளர்கள் விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் கலந்துபேசினோம். முடிவாகத் துண்டறிக்கை வெளிவந்தது. ஆனால், அடுத்தநாள் காலை மாவட்ட ஆட்சியர் நேரில்வந்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகக் கூறியபோது மனம் நெகிழ்ந்து போனோம்.

 

         இந்த விழுப்புரம் புத்தகத்திருவிழாவில் ஓரிரு குறைகளிருந்தாலும் பொதுவாகச் சிறப்பாகவும் பாராட்டத் தக்கதாகவும் நடந்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டு முதலமைச்சர் முதல் இங்குப் பணிசெய்யும் கடைநிலைத் தொழிலாளர் ஈறாக அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர், நூலகர் உள்ளிட்ட அதிகாரிகள், விழா நடத்தும் பதிப்பு நிறுவனத்தார் இன்னும் தொடர்புடைய அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

இரண்டாம் பகுதி: தமிழும் புத்தகங்களும், உலக அறிஞர் கருத்துகளும்:

 

உலகமுதன்மொழியில்,

முதல்தாய்மொழியில்,

ஆப்பிரிக்கா மடகாசுகரையும் ஆத்திரேலிய கண்டத்தையும் இன்றைய குமரிமுனையையும் இணைத்திருந்த பெருநிலப்பரப்பான குமரிநாட்டுத் தமிழ் மாந்தனின் மொழியில்,

வண்புகழ் மூவராகிய சேரசோழ பாண்டியரின் தண்பொழில் வரைப்பில் பேசிய தமிழ் மொழியில்,

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி - ஆகிய தமிழ்க்குடி பேசிய தமிழ்மொழியில்…

 

     இன்று தமிழர்க்குக் கிடைத்துள்ள பழமையன நூலான தொல்காப்பியத்திற்கு முன் புத்தகங்கள், நூல்கள் இருந்தனவா? அவை என்னாயின? என்ற ஐயம் பலருக்கும் இருக்கும்.

அன்பார்ந்த அறிஞர்களே, அவையோரே!

 

         இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்களின் உயர்ந்த பல இலக்கிய நூல்கள் இருந்தன! இகலக்கண நூல்கள் இருந்தன! கலைநூல்கள, நுண்கலை நூல்கள் இருந்தன. இது, வீண் பெருமைக்காகக் கூறும் கூற்று இல்லை.

         சங்க இலக்கியத்தில் ஒருவன், ‘வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்; மெய் கூறுவல்!’ என்று கூறுவான். அதைப்போல் எதற்காகவும் பொய்யாக இதைக் கூறவில்லை! மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே சுவடியில் அல்லது வேறு வடிவில் நூல்கள் புத்தகங்கள் இருந்தமை உண்மைதான் என்பதை எளிதில் மெய்ப்பிக்க முடியும்.

 

         முன்பே கூறியவாறு, தமிழர்க்குக் கிடைத்துள்ள பழமையான நூல் தொல்காப்பியம். அதற்கும் முந்தைய நூல் எதுவும் கிடைக்கவில்லை. தொல்காப்பியத்தின் காலம் இன்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்நூலுக்கு, முன்னுரையாகப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பார், ‘முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்தோனே’ என்று தொல்காப்பியரைக் குறிப்பிட்டு எழுதி இருக்கின்றார்.

        இதற்குப்பொருள்….. தொல்காப்பியர் அவருக்கு முன்தோன்றிய நூல்களை ஆராய்ந்து முறைப்பட எண்ணி தொல்காப்பியத்தை எழுதியிருக்கின்றார் என்பதுதான்.

மேலும், தொல்காப்பியத்தில், முதல் சூத்திரத்தில், முதல் நூற்பா விலேயே ‘எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப’ என்று கூறுகிறார்.

         இவ்வாறு என்ப, மொழிப, என்மனார், என்மனார் புலவர், மொழிமனார் புலவர், சொல்லினர் புலவர், வகுத்துரைத்தனரே எனப் பல்வேறு இடங்களில் பலமுறை தொல்காப்பியர் எழுதி யுள்ளார்.

         இவைமட்டுமல்ல அவையோரே, தொன்றுதொட்டு உயர்ந்தோர் அறிஞர் பின்பற்றி வரும் முறைமையை மரபு என்கிறோம். இதையே முன்னோர் மொழியைப் பொன்னேபோற் போற்றிக் கொள்ளும் தன்மை என்றும் சொல்வார்கள்.

தொல்காப்பியர், நூல்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு என்றவாறு இயல்களுக்குத் தலைப்பிட்டிருக்கிறார். இவையுந்தவிர மரபியல் என்றே ஓரியலுக்குத் தலைப்பிட்டிருக்கின்றார். மரபு என்னும் சொல்லைத் தம் நூலில் 60 இடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தியிருக்கின்றார். இவையெல்லாம் தொல்காப்பியத்திற்கு முன்னரே பல நூல்கள் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா?

        சரி, இனி அந்த நூல்களல்லாம் எங்கு போயின? மொழியறிஞர் தேவநேயப்பாவாணர் கவலையோடு எழுதிய செய்தி இதற்கு விடையாக உள்ளது . “தமிழரின் பேதைமையால், பாழான மண்ணுக்கும் படையான சிதலுக்கும் படியாதார் நெருப்புக்கும் பதினெட்டாம் பெருக்கிற்கும் பற்பல பூச்சிக்கும் பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்தனை எத்தனையோ” என்று பாவாணர் எழுதுவார்.

        பகைவரின் சூழ்ச்சிக்கும் என்று எழுதியிருக்கின்றாரே, யாரந்தப் பகைவர்? அந்தச் சூழ்ச்சி என்ன? என்ற கேள்விகளுக்குச் சூரிய நாராயண சாத்திரி என்ற தம் பெயரைத் தனித்தமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்ட நல்லறிஞர் விடை தருகிறார்.

         பரிதிமாற் கலைஞர் ‘தமிழ்மொழி வரலாறு என்னும் அவருடைய நூலில் பக்கம்.27-இல், ‘பிராமணர்கள் தமிழரசர்களிடம் அமைச்சர்களாகவும் மேலதிகாரம் மிக்க பிரபுக்களாகவும் அமர்ந்து கொண்டனர். தமிழரிடமிருந்த பல அரிய செய்திகளை மொழிபெயர்த்துக் கொண்டுத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும் வடமொழியிலிருந்து அவை வந்தன போலவும் காட்டினர்’ என்று எழுதுகிறார்.

 

        இவையிருக்க, பாறை ஓவியங்களும் சித்திர எழுத்துக்களும் புத்தகத்தின் தொன்மையான வடிவங்களாக இருந்தன. சீனர்கள் முதலில் மரப்பலகைகளையும் மரப் பட்டைகளையும் எழுதப் பயன்படுத்தினர். பிறகு பட்டுத் துணிகளில் எழுதத் தொடங்கினர். தமிழர்கள் பனையோலைகளை நூல் எழுதப் பயன்படுத்தினர்.

 

    சரி, இனி, உலக அறிஞர்கள் புத்தகம் பற்றி என்ன சொல்லி யிருக்கின்றார்கள் என்று ஒருசிறு பார்வை:

 

      1.“புத்தகம் இல்லாத வீடு உயிரில்லாத உடலுக்கு ஒப்பானதுˮ என்கிறார் சிசரோ. 2.“மனிதனுடைய மிகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள் தான்ˮ என்கின்றார் ஆல்பர்ட் ஐன்சுடீன். 3.பழங்காலத்துப் பெரியோரை நேரில்கண்டு உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…–என்கிறார் மாசேதுங் 4.‘போதும் போதும் என்று நொந்துபோய்ப் புதுவாழ்க்கையைத் தேடுகிறாயா, ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குக’ என்கிறார் இங்கர்சால். 5.புரட்சிப் பாதையில் துமுக்கிகளைவிட பெரிய ஆய்தங்கள் புத்தகங்களே! என்கிறார் விளாடிமிர் இலியச் லெனின்.

        க) உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை வழங்கும் ஒரே இடம் நூலகமே எனக் கூறியுள்ளார். உ)உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனத்துக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! என்கிறார் சிக்மண்ட் பிராய்டு.            1.நூலை உண்டாக்கியவருடைய உயிராற்றல் போலவே நூலும் உயிராற்றல் உடையதாகும். - மில்டன் 2...நல்ல புத்தகமே என்றும் தலை சிறந்த நண்பன். - மார்டின் டப்பர்[1] 3.என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன் என்றார் மாஜினி 4.எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் புத்தகம். புத்தகத்திற்காகப் பணம் செலவழிப்பதில் நான் வீண்செலவாளி என்ற பட்டத்தையும் பெறத் தயார் என்றார் நேரு. 5.எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் வாங்குவேன்; பணம் மிச்சமிருந்தால், உணவும் துணிகளும் வாங்குவேன். என்றார் எராசுமசு. 6.புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத அறை போன்றது - எச்மான். 7.“மண்புழுக்கள் மண்ணைவளமாக்கும், புத்தகப்புழுக்கள் மனத்தை வளமாக்குவர். என்றார் ஓர் அறிஞர். 8..உன்னை அதிகமாய்ச் சிந்திக்கச் செய்யும் புத்தகங்களே உனக்கு அதிகமாக உதவக்கூடியவை. - தியோடோர் பார்க்கர் 9.கற்பதற்குத் தகுதியான நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும். கற்றபின் அத் தகுதிக்குத் தக்கபடி நடக்கவேண்டும் – திருவள்ளுவர்

 

       உலகின் பெரும்பேரறிஞர்கள் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. 1.கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு நஞ்சுகுடித்து உயிர்நீக்கும் தண்டனை தரப்பட்டது. நஞ்சு அவருக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். 2.இலிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளர் தூக்குக் கயிற்றை அவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். 3. இலண்டன் நூலகத்தில் இருபதுஆண்டுக் காலம் படித்து ஆய்வுசெய்த கார்ல் மார்க்சே பின்னாளில் பொதுவுடைமைத் கொள்கையின் தந்தையாக விளங்கினார். 4.நேரு தான் மறைந்தபின் தமது உடலின் மீது மலர் மாலைகள் வைக்காது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். 5.பேரறிஞர் அண்ணா படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைப் படித்து முடிக்கச் சில பக்கங்கள் மீதி இருந்ததால் அதை முடிக்கும் வரை உயிர்காக்கும் அறுவை மருத்துவத்தைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.

        நல்ல நூல்கள் நம்முள் நல்ல குணங்களை வளர்க்கின்றன. . நம்மைத் தூங்க விடாமல் அறிவு விழிப்பை ஏற்படுத்துவனவாகச் சிறந்த புத்தகங்கள் இருக்கின்றன. இவ்வளவு சிறப்புகளை உடைய புத்தகங்களை விரும்பாதார் யார்? விருப்பத்தோடு விலைக்கு வாங்காதார் யார்? என்ற கேள்விகளுடன் இப்பகுதியை முடிக்கின்றேன்.

 

மூன்றாம்பகுதி: என் எழுத்துப்பணி:

        நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அறிவியற் கட்டுரை ஒன்றை அப்போது கடலூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'தென்மொழி' என்ற மாத இதழுக்கு அனுப்பினேன். அதில் வெளிவந்தது. உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே தனித்தமிழ் ஈடுபாட்டாளனாக அறிவியற் கட்டுரைகள் எழுதுதலிலும், கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வந்தேன்.

தென்மொழியில் வந்த என் கட்டுரையில், செய்திருந்த கலைச்சொல்லாக்கத்தைப் பாவாணரே ஒரு மாநாட்டில் பாராட்டிப் பேசினார்.

          என்நூல்களில் மூன்றே இதுவரை அச்சேறி வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று விடுகதைப் பாடல் நூல். பெயர் விடுகதைப்பா நூறு. தீங்கற்ற பொழுது போக்கு விளையாட்டு விடுகதை விளையாட்டாகும். ஒவ்வொரு விடுகதையும் ஒரு எண்சீர் மண்டிலப் பாடலாக உள்ளது. இரண்டு முறை இந்திய இலக்கியக் கழகமான 'சாகித்திய அகாதமி' பரிசு பெற்ற காலஞ்சென்ற ம.இலெ.தங்கப்பா ஐயா பாராட்டி அணிந்துரை எழுதியிருக்கின்றார்.

          இன்னொன்று, ஒரு மொழியாக்க நூலாகும். உளத்தியல் அறிஞரும் பகுத்தறிவாளருமான ஆமிரகாம் கோவூரின் நிகழ்வு ஆய்வுகள் பற்றியதாகும். அவருடைய ஆங்கில நூல்களான Begone Godmen, Gods, Demons and Spirits ஆகிய இரண்டு நூல்களிலும் அவர் நேரடியாக ஆய்வு செய்து அறிவியல் முறையில் தீர்வு செய்த பதுமையான, மூடநம்பிக்கைமிக்க, இயல்பு கடந்த நிகழ்ச்சி என்று கருதப்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வுகளாகும். அனைத்துமே உண்மையில் நடந்த நிகழ்வுகளாகும்.

          மூன்றாவது புத்தகம் நறுக்குத் தறித்தாற்போன்ற கருத்துகளைக் கொண்ட சொற்செப்பமும் சொல்லழகுமுடைய மும்மூன்று வரிகள் கொண்ட நூல்.

        கடைசியாக, ஒரு வேண்டுகோளோடு என் உரையை முடிக்கவிரும்புகிறேன். நீங்கள் அவ்வேண்டுகோளை ஏற்றாலும் சரி, தவிர்த்தாலும் சரி, அதைக் கூறவேண்டியதை என் கடமையாகக் கருதுகிறேன்.

         என் வேண்டுகோள் இதுதான் இப் புத்தகத் திருவிழாவில் பெரும்பங்கேற்று நடத்திவரும் வாயில் நுழையாத ஓர் ஆங்கிலப் பெயரைக் கொண்ட பதிப்பக நிறுவனத்தின் அறிவிப்பாளர்களும், நிகழ்வுகளை அறிமுகம் செய்வாரும் ஒருங்கிணைப்பாளரும் தமிழை இசைப்பாங்கோடு ஏற்ற இறக்கத்தோடும் நீட்டிக் குறுக்கியும் அருமையாகவும் சிறப்பாகவும் பேசினர். அது பாராட்டுக்குரியதாகும். ஆனால், ஓரோர் சமையத்தில் ஆங்கிலம் உள்ளிட்ட அயற்சொல் கலந்து பேசும்போது அது அழகிய முகத்தில் மருவாகத் தெரிகிறது. அதனைத் தவிர்க்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

வாய்பளித்தமைக்கு நன்றி கூறி முடித்துக் கொள்கின்றேன்.

--------------------------------------------------------------------------------------------------------------

சனி, 29 ஜனவரி, 2022


வித்தியதும் ஆகாதே வீண்!

=========================

 தன் இன்னுயிர் ஈவதற்குமுன்…

வரலாறு காணாத…

ஒப்புயர்வற்ற…

ஒருதனிச் சிறப்பார்ந்த…

அறிக்கை வெளியிட்டு உணர்வு கொளுத்திய…

ஈடற்ற ஈகி…

முத்துக்குமார் நினைவைப்போற்றுவம்!

கடமை உணர்வோம்!

====================================

வித்தியதும் ஆகாதே வீண்!

======================================

(வெள்ளொத் தாழிசை)

இறப்பில் எழுச்சிதந்த எங்கள் குமரா!

மறத்திற்கே நல்லுருநீ; மாத்தமிழர் மானத்

திறத்தை விளக்கும் திரு.

 

தன்னேரில் ஆவணத்தால் தந்தவுயி ரீகத்தால்

தன்னலத்தார் அஞ்ச தமிழிளைஞர் ஏழ்ச்சிகொள 

நன்முத்தே இட்டாயே வித்து.

 

முத்துக் குமாரேயெம் மூத்த பெருமுரசே

செத்தெழுச்சி தந்ததனிச் சீரா! திருவிளக்கே!

வித்தியதும் ஆகாதே வீண்.

====================================================

சனி, 15 ஜனவரி, 2022

தமிழ் வாழ...!

 

தமிழ் வாழ…!

 

பட்டிமன்றம் வைப்பதிலும் தமிழ்வா ழாது;

பாட்டரங்கம் கேட்பதிலும் தமிழ்வா ழாது;

எட்டி நின்றே இலக்கியத்தில் இரண்டோர் பாட்டை

எடுத்துரைத்துச் சுவைபடவே முழக்கி னாலும்,

தட்டி, சுவர் , தொடர்வண்டி, உந்துவண்டி

தம்மிலெல்லாம் “தமிழ் தமிழ்’ என்றெழுதி வைத்தே

முட்டிநின்று, தலையுடைத்து முழங்கி னாலும்

மூடர்களே, தமிழ்வாழப் போவதில்லை !

 

தண்டமிழில் பிறமொழியைக் கலந்து பேசுந்

தரங்குறைந்த தமிழ் வழக்கை நீக்கல் வேண்டும் !

தொண்டரெலாந் தெருக்களிலே கடைகள் தோறும்

தொங்கு கின்ற பலகைகளை மாற்றச் சொல்லிக்

கண்டு நிகர் தமிழ்ப் பெயர்ப்பால் புதுக்கல் வேண்டும் !

கற்கின்ற சுவடிகளில், செய்தித் தாளில்,

விண்டுரைக்கா அறிவியலில், கலையில் எல்லாம்

விதைத்திடுதல் வேண்டும் தமிழ்; வாழும் அன்றே !

 

-      --- பாவலரேறு ‘தென்மொழி’ பெருஞ்சித்திரனார்.

புதன், 15 டிசம்பர், 2021

மொழியும் மரபும் தமிழரும்

                             மொழியும் மரபும் தமிழரும்


இக்கால் தமிழரக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம். அந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களையும் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் ஒவ்வொன்பது இயல்களென இருபத்தேழு இயல்களையும் கொண்டுள்ளது. தமிழின் இலக்கிய இலக்கண மரபை விளக்குவதில் இந்நூல் தலைசிறந்ததாக விளங்குகிறது.

     தொல்காப்பிய ஆசிரியர் இலக்கண இலக்கிய வாழ்வியல் கூறுகளைக் கூறுகையில் பெரும்பாலான இடங்களில் அவருடைய தற்கூற்றாகக் கூறாமல், அவர்க்கு முந்தைய இலக்கண இலக்கிய அசிரியர்கள் கூறுவதாகவே தெளிவுபடக் கூறியுள்ளார்.

     ‘வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே’ என்ற தொல்காப்பியக் கூற்றின்படி கல்விகேள்விகளாலும் குடிப்பண்பாலும் உயர்ந்தவர் மெற்கொண்டு வந்த தொன்னெறி விளக்கப்படுகிறது.

     என்மனார் (என்று சொல்வார்கள்) என்ற சொல்லாட்சி மட்டுமே 74 இடங்களில் தொல்காப்பியரால் பயிலப்பட்டுள்ளது. அதனைப்போன்றே, ‘என்ப’ என்ற சொல்லைத் தொல்காப்பியர் 144 இடங்களில் கையாண்டிருக்கின்றார். ‘மரபு’ என்ற சொல்லை அவர் அறுபதிற்கும் மேற்பட்ட இடங்களில் பயன்படுத்தியிருக்கின்றார்.  இவற்றுடன், எழுத்ததிகாரத்தில் மூன்று இயல்களின் பெயர்கள் நூல்மரபு, மொழிமரபு, தொகைமரபு என அமைக்கப்பட்டுள்ளன. சொல்லதிகாரத்தில் ஓர் இயலின் பெயர் விளிமரபு. இவற்றோடு, ‘மரபியல்’ என்றே ஓர்இயல் பொருளதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

இவற்றையெல்லாம் கூர்ந்து நோக்கினால், மரபைப் போற்றுதலின் இன்றியமையாமை ஒருவாறு விளங்கக்கூடும். வேலையற்றுப்போய் வீணுக்கு இவ்வளவு முகன்மை தந்துவிட்டதாகக் கருதுகிறவர்கள், மரபைப் போற்றாது இலக்கண வரம்பைக் கைவிட்டு, கண்டமண்டலமாகத் தமிழில் பிறமொழி கலக்க விட்டதனால்தான் ‘மலையாளம்’ என்ற மொழி உருவாகி அம்மொழி பேசுவோர் தம்மை வேற்றாராகக் கருதித் தமிழர்க்கு எதிராக இயங்கக்கூடியநிலை உருவாகியதையும் நுட்ப உணர்வாளர் அறிவர். மரபு நிலை திரியின் மொழிச்சிதைவு ஏற்பட்டு மொழிஅழிவுக்கு வழிவகுக்கும் என்ற உண்மையை உணரமறுப்பது அறிவுடைமையாமா?

இனி, மொழிக்கு முதலில் வரா எழுத்துக்களை இலக்கணம் வரையறுத்திருக்கின்றது. அதில் இரண்டு எழுத்துக்களுக்கு மட்டும் விலக்களிக்கலாம் என ஒருவர்கூற, இன்னொருவர் நான்கைந்து எழுத்துக்களுக்கு விலக்களிக்கலாம் என வலியுறுத்த, நாளை ஒரு வெங்கியோ சங்கியோ மெய்யெழுத்துகளையும் மொழிக்கு முதல் எழுத்துகளாக எழுத வேண்டுமென அடம்பிடிக்கமாட்டார் என்று சொல்லமுடியுமா? இப்போதே, ‘க்ருசாங்கிணி’ என்று கிறுக்கர் எழுதுகின்றாரே!

இவையிருக்க புது மொழியறிவாளி ஒருவர், மொழித்தூய்மையாளரே மொழி அழிவுக்கு வழிவகுக்கின்றனரென்று உண்மைக்குத் தொடர்பில்லா அவருடைய ஆய்வறிவால் உளறுவதைக் காண்கின்றோம். ஐம்பதாண்டுகளுக்கு முன்னர்த் தமிழ்நடை எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறதென கொஞ்சம் முயன்று பார்த்தால்தான் மொழித்தூய்மையாளரின் உழைப்பும் அவர்கள் பட்ட தொல்லை துன்பங்களும் இழிவு அவமானங்களும் பயன்தந்திருப்பதை - முழுமையாக இல்லாவிட்டாலும் பெரியஅளவு தமிழ் மீட்கப்பட்டிருப்பதை உணரமுடியும்.

காலந்தொறும் தமிழ் அழிப்பு முயற்சி வெவேறு உருவங்களில் வெவ்வேறு வகைகளில் இருந்துகொண்டுதானிருக்கின்றது. தமிழ் தன் கட்டுக்கோப்பால் தனைத்தானே காலந்தொறும் காத்துக்கொண்டு வருகின்றது. அந்தக் கட்டுக்கோப்பை சிதைக்க முயல்வார் எவரும் தமிழழிப்பு முயற்சியாளராகவே கருதப்படுவர்.

==============================================================================