ஞாயிறு, 15 ஜனவரி, 2012

அடிகளாசிரியர்க்கு இரங்கல்


அடிகளாசிரியர்க்கு இரங்கல்
                           
(விழுப்புரம் மாவட்டத்தில், சின்னசேலத்தை அடுத்த கூகையூர் என்னும் குகையூரில் குடத்திலிட்ட விளக்காய் வாழ்ந்த ஏற்றமிகு தமிழறிஞர், தொல்காப்பிய திருமந்திர ஆய்வாளர் அடிகளாசிரியர் கடந்த 8-1-2012இல் இயற்கை எய்திதினார். அப்பெரியாரின் நினைவேந்தும் பா இது)

உலகில்சீர் தொண்டாற்றி ஒளிசேர்த்தார் பலருள்ளும்
ஒப்பாய்க் கூறப்
பலகற்றும் ஆய்ந்தாழம் பற்பலநூல் விளக்கமுறப்
படைத்த ளித்தும்
இலகுறவே கூரையகம் ஏற்றதென கோரைப்பாய்
இருந்தே வாழ்ந்த
அலகில்லா எளிமைசேர் அடிகளாசி ரியருமைப்போல்
யாரே உண்டு?

மாறலிலாத் தமிழ்ப்பற்றில் மறைமலையார் நற்றொடர்பில்
மக்க ளுக்கே
தூறலற அழகழகாய்த் தூயதமிழ்ப் பெயரிட்டீர்!
தோய்ந்த ஆய்வுச்
சேறலுற செம்மொழியாம் செந்தமிழ்த்தொல் காப்பியத்தின்
சிறப்பு ரைக்கும்
சாறமுறு நூல்பலவும் சமைத்தளித்தீர்! ஐயமற
தமிழ்கற் பித்தீர்!

நூற்றியிரண் டாண்டகவை நுடங்காத வாழ்வினிலே
நுவன்றீர் தேர்ந்தே
தேற்றமுற ஆய்ந்தறிந்த தெளிவார்ந்த கருத்துக்கள்;
தேடி வந்த
ஏற்றமுறு சிறப்புகளோ எண்ணிலவாம்! இவைவிடுத்தே
எங்கே போனீர்?
ஆற்றல்சால் உம்நினைவை அகத்தேற்றோம்! வணங்குகிறோம்!
அடிகள் ஐயா!

(இலகுற எளிமையுற; தூறல் பழிச்சொல்லல், சேறல் எழுச்சி)

---------------------------------------------------------------