செவ்வாய், 24 மார்ச், 2009

உலகத் தீரே! உலகத் தீரே!

 

உலகத்தீரே! உலகத்தீரே! 

            (நேரிசை அகவல்)


உலகத் தீரே! உலகத் தீரே!
விலகாக் கொடுமை வெங்கோற் கொற்ற
ஒடுக்கு முறைக்கு மடக்கு முறைக்கும்
நெடுக்க நைந்தவர் நிமிர்ந்தேழ்ந் ததனால்
கொத்துக் குண்டுகள்! கொடுந்தீ எரிப்புகள்!
நித்த மோலங்கள்! நீக்கமில் லழிப்புகள்!
குழவியர் சூலியர் கிழவரோ டூனர்
அழிவுற உறுப்பற அறங்கொற் றாக்குதல்!
நெறிமறுப் பழிப்புகள்! எறிகணைப் பொழிவுகள்!
வெறிமிகுங் குதறலில் வீழ்பலி தாய்க்குலம்!

நீண்டபல் லாண்டாய் நெடும்பழிச் சிங்களர் 
கோண்மதிக் கொடுமையிற் குமைந்தழி உறவுகள்
காத்திடற் கார்த்தோம்! கடுங்குர லெழுப்பினோம்!
கோத்துகை நின்றோம்! மூத்தோ ரிளையோர்
பேரணி சென்றோம்! பெருவழி மறித்தோம்!
போரை நிறுத்தவும் புன்செய லறுக்கவும்
ஊர்தொறுங் கூடி உண்ணா திருந்தோம்!
தீர்த்திடு துயரெனத் தில்லியைக் கேட்டோம்!
பன்னிரு ஈகியர் பதைப்புற் றாற்றா
தின்னுயி ரெரிதழற் கீந்தும் வேண்டினோம்!

இந்திய அரசே! எடுநட வடிக்கை!
எந்தமிழ்ச் சொந்தம் ஈழத் தமிழரைக்
காத்திடென் றிறைஞ்சினோம்! கதறினோம்! கெஞ்சினோம்!
பூத்திடா அத்தியாய்ப் பொத்திய வாய
ரேதுங் கூறா திருந்தது மேனென
சூதரின் இரண்டகச் சூழ்ச்சிபின் சொலிற்று!
வெய்ய சிங்களர் வென்றிடற் கென்றே
பையவே அவர்க்குப் பல்வே றுதவிகள்
ஆய்தந் தொகையென அள்ளிக் கொடுத்தனர்!
போய்த்துணை செய்யப் போர்ப்படை வீரரைப்

புனைவி லனுப்பினர்! புலிகளின் வான்படை
தனைக்கண் டழித்திடத் தந்தனர் கதுவீ !
அரிய வுளவெலாந் தெரிந்தே சிங்களர்
புரிய வுரைத்தனர்! கரியவன் னெஞ்சொடு
பேரழி வின்பின் பிழைத்திருப் போர்க்கே
போரை முடித்தபின் போயங் குதவுவ
மென்றே வுரைத்து எல்லா வுதவியும்
குன்ற லின்றியக் கொடியவர்க் களிப்பர்!
இங்கிங் ஙனமே இழிநிலை யிருக்க
பொங்கிய உணர்வின் புலம்பெயர் தமிழர்

அங்கங் கவர்கள் தங்கிய நாட்டினில்
மங்கா ஊக்கொடு மக்களைத் திரட்டிக்
கவனம் ஈர்த்திடக் கடும்பனி மழையினில்
துவளா தார்ப்பொடு தூத ரகங்களில்
முற்றுகை செய்தனர்; முறையீ டிட்டனர்!
சற்றுந் தயக்கிலா முற்றிய உணர்வினர்
மூவ ரவர்களின் முழுவுடற் றீயில்
வேவுறக் குளித்தனர்! வெந்து மாண்டனர்!
தெள்ளத் தெரிந்தும் தீங்கினை யறிந்தும்
உள்ளம் உருகிடா உலகத் தீரே!

கிழக்குத் தைமூர் வழக்குதீர்த் திட்டீர்!
குழப்பறத் தெளிவுற கொசாவா விடுதலை
ஒப்பினீர்! காசா உறுதாக் குதல்கள்
தப்பெனக் கடிவீர்! தயங்கா தாப்கான்
அமைதிக் கெனவே ஆவன செய்வீர்!
குமைவிலா நோக்கிலக் கொள்கை போற்றுவம்!
ஆனா லீழத் தழிக்கப் படுமெம்
மானவர் கொடுந்துயர் மாற்றிடத் தயக்கேன்?
வல்லர செல்லாம் பொல்லார்க் குதவவோ?
அல்லவைக் காக்கம் அறமோ? எண்ணுவீர்!

கொஞ்சமும் கருதிடாக் கொடுமை தொடர்வதா?
நெஞ்சுதொட் டுரைப்பீர், நேர்மையோ? மாந்த
நேயமு மற்றதோ? நீளின அழிப்பு
ஞாயமோ? உலகீர், நல்லறங் கருதுக!
அடிமை நிலையெதிர்ப் பதுபெருங் கேடா?
கடிதீர் வெனவினம் முடிய அழிப்பதா?
மாந்தத் தகவொடும் மன்பதை அருளொடும்
பாந்தநல் லுணர்வில் ஏந்து நயன்மையில்
புலம்பிருள் நீக்க, புலர
உலகீ ரெழுவீர், உடனடி வினைக்கே!

-----------------------------------------

சனி, 21 மார்ச், 2009

வேண்டுகோள்!


வேண்டுகோள்!

[congress.jpg] 

'காங்கிரசு'க் கட்சி என்று அழைக்கப் படுகின்ற -
இந்தியத் தேசியப் பேராயக் கட்சி
(Indian national congress party) -

*
கொடிய இனவெறியரான சிங்களரின் ஈழத் தமிழின அழிப்பு வினைக்கு முழுத் துணையாகவும் முதன்மைக் கலந்துரைஞராகவும் உள்ளது.

*
குழந்தைகள், சிறுவர்கள் உள்பட பல்லாயிரக் கணக்கான ஏதுமறியாத் தமிழர் கொல்லப்படவும் காயமுறவும் உடலுறுப்புகளை இழந்து சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாகவும் முதன்மைப் பொறுப்பாளராக உள்ளது.

*
நானூறுக்கும் அதிகமான தமிழ்நாட்டு மீனவர்களைச் சிங்கள இனவெறிக் கடற் படையினர் கொன்றுள்ளனர்; தமிழக மீனவரின் படகுகளையும் வலைகளையும் நாசப் படுத்தி யுள்ளனர். அவர்களின் மீன்களையும் பிறவற்றையும் கொள்ளையடித் துள்ளனர். இதுவரை ஒருமுறை கூடப் பேராயக் கட்சியின் தலைமையிலான இந்திய அரசு, சிங்கள அரசுக்குச் சிறு கண்டனம் தெரிவிக்க வில்லை.

*
தமிழகமே கொதித் தெழுந்து ஈழத் தமிழரையும் தமிழக மீனவரையும் காப்பாற்றக் கோரிப் பல்வேறு வகையிலும் போராட்டங்கள் நடத்தியும், தமிழர்கள் 11 பேர் இதற்காகத் தங்கள் உடலைத் தீக்கிரையாக்கிக் கொண்டு உயிர் ஈகம் செய்தும், தமிழ்நாட்டுச் சட்டமன்றமே ஒருங்கிணைந் தெழுந்து ஈழப்போரைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அரசும் 'காங்கிரசு'க் கட்சியும் கொஞ்சம் கூடப் பொருட் படுத்தவில்லை.

*
எனவே, 'காங்கிரசு'க்கு யாரும் ஒப்போலை (வாக்கு) அளிக்காதீர்கள்!
மாந்தநேயம் அறவே இல்லாதவர்கள் பதவியில் அமர வாய்ப்பு அளிக்காதீர்கள்!

'
காங்கிரசை'த் தோற்றோடச் செய்யங்கள்!

 

செவ்வாய், 17 மார்ச், 2009

காசி.ஆனந்தனார் உரையிலிருந்து சில குறிப்புகள்!


28-02-2009 அன்று புதுவையில் மீனவ விடுதலை வேங்கைகள் நடத்திய போர் நிறுத்தக் கோரிக்கை மாநாட்டில் பாவலர் காசி.ஆனந்தனார் ஆற்றிய உணர்வுரையிலிருந்து தொகுத்த சில குறிப்புகள்: 

* ஓர் அரசியல் ஆய்வாளனாக இருந்து கூறுகிறேன்! உலகில் சில நாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்திருந்தாலும் இலங்கையில் ஈழச்சிக்கலை, விடுதலைப் புலிகளைப் புறக்கணித்துத் தீர்க்க முடியாது.           எடுத்துக்காட்டாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இலாரி கிளின்டன், விடுதலைப்புலிகள் 'தீவிரவாதிகள் அல்லர்; அவர்கள் ஒடுக்குமுறை எதிர்ப்பாளர்கள்' என்று முன்னர் கூறியதையும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்சி, விடுதலைப்புலிகள் அறிவித்துள்ள போர்நிறுத்த அறிவிப்பை ஏற்று, இலங்கை அரசும் போர்நிறுத்தம் அறிவித்து, தமிழர்களை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறியுள்ளதையும் கருத்தில் கொள்க.

* 1963 சூன்6 நாளிட்ட 'தி இந்து' நாளிதழில் காலஞ்சென்ற இராசாசியார் எழுதிய கட்டுரையில், 'சிலோன் தமிழர்கள் குடியேறியவர்கள் அல்லர்; அவர்கள் அத்தீவின் பழங்குடிகள்' (ceylon Tamils are not settlers; they are the aborigines of that island) என்று ஈழத் தமிழர்களைக் குறிப்பிட்டுள்ளார்.

*  ஈழத்தில் சிங்களமொழித் திணிப்பால் தமிழ் அழிப்பு நடைபெற்று வருகிறது. 'சிங்களம் மட்டுமே' என்ற சட்டத்தைச் சிங்கள ஆட்சியாளர் நிறைவேற்றி தமிழ் அழிப்பு செய்து வருகின்றனர்.
          இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது தமிழ்மக்கள் 10 சதுர கற்கள் பரப்பளவிலும் சிங்களர் 15 கற்கள் பரப்பளவிலும் இருந்து வந்தனர். ஆங்கிலேயர் 04-02-1948இல் இலங்கையை விட்டு நீங்கியபோது, தமிழர்கள் 8 சதுர கற்கள் பரப்பிலும் சிங்களர் 17 சதுர கற்கள் பரப்பிலுமாக இருந்தனர்.
          தமிழர் பகுதிகளிஈல் சிங்களக் குடியேற்றத்தினால் தமிழர் வாழிடம் சுருங்கி வருகிறது.

* ஆங்கிலேயர் சிங்களரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த போது 1948இல், தமிழர்களின் மக்கள்தொகை 35 இலக்கம்; சிங்களர் 65 இலக்கம். இப்போது, சிங்களர் தொகை ஒன்றரை கோடி. தமிழர்களோ அதே 35 இலக்கம்.           தமிழ்த் தாய்மார்கள் யாரும் கருவுறாமல் இருந்து விட்டார்கள் என்று கருதல் வேண்டா! சிங்கள இனவெறியர்களால் தமிழர்கள் நாடோறும் அழிக்கப்பட்டு வந்ததை இக் கணக்கே கூறும்.
          எனவே, மொழி அழிப்பு, வாழிடப் பறிப்பு, இன அழிப்பு என்ற கூறுகளால் தமிழ்த் தேசிய இனஅழிப்பு இலங்கையில் நடைபெறுகின்றதை உலகம் புரிந்து கொள்ள வேண்டும்.       இதற்குத தீர்வு, தமிழீழ விடுதலையே என்பதையும் உலகம் புரிந்து கொள்ள வேண்டும். உணர்வாளர்கள் இவற்றையே முழங்க வேண்டும்.   

*  இந்திய விடுதலைப்போரில் இறந்தோர் தொகை ஏறத்தாழ 10,000 பேர். ஈழ விடுதலைப் போரில் இதுவரை இறந்துள்ள ஏதுமறியாத் தமிழர்கள் ஒன்றரை இலக்கம் பேர். போராளிகள் 30,000 பேர்.
          இவற்றோடு, தமிழர்களின் இரண்டரை இலக்கம் வீடுகள் அழித்துத் தரைமட்ட மாக்கப் பட்டுள்ளன.
          கடந்த ஈராண்டுகளில் ஊடகத் துறையினர் 70 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

* ஈழத் தமிழர்கள் அறப் போராட்ட வழியில், 28 ஆண்டுகள் சம உரிமைக்காகப் போராடினர். அப் போராட்டங்களால் கொஞ்சமும் பயன் கிடைக்கவில்லை என்பதோடு மேன்மேலும் தமிழர்கள் தாக்குதலுக் குள்ளாயினர். பின்னரே, கடந்த 32 ஆண்டுகளாகக் கருவியேந்திய அறவழிப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

* 1983ஆம் ஆண்டு ஆகத்து 15இல், அப்போதைய இந்தியத் தலைமை அமைச்சர் திருவாட்டி இந்திரா காந்தியார் தில்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய போது, 'இலங்கையில் இனஅழிப்பு நடைபெறுகிறது; நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம்' (genocide is going on at Srilanka; we will not stay as spectators) என்று முழக்கம் செய்தார்.

வியாழன், 12 மார்ச், 2009

எச்சரிக்கை வேண்டுகோள்!
     இலங்கையின் முல்லைத்தீவில் முழுப் பேரழிவில் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களைக் கொன்றழிக்க சூழ்ச்சி நடைபெறுகின்றது. சிங்களக் கொலைவெறிப் படையின் கொடுங்கொடிய தாக்குதலுக்கு அஞ்சித் தம் சொந்த வீடு வாசல் நிலபுலங்களைத் துறந்திழந்து சென்ற வடக்கிலங்கைத் தமிழர்கள் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்டோர், பலமுறை இடம் பெயர்ந்து இப்போது முல்லைத்தீவில் அடைக்கலமாகி உள்ளனர்.
    
     ஆனால், இலங்கையின் சிங்கள அரசும் இந்திய அரசும் முல்லைத்தீவில் அடைக்கலம் புகுந்துள்ள ஏதுமறியாத் தமிழர்களின் எண்ணிக்கையை எழுபதாயிரம் என்றும், எண்பதாயிரம் என்றும், அறுபத்தையாயிரம் மட்டுமே என்றும் இக்கால் மாற்றி மாற்றிக் கூறி வருகின்றனர், இந்த எண்ணிக்கை மோசடியின் பின்னே உலகே அதிர்ச்சி அடையக்கூடிய ஒரு கொடும் பேரழிவிற்கு அடிகோலும் சூழ்ச்சி இருப்பதாக மாந்த உரிமை ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

     இலங்கை அரசு ஏதுமறியாத் தமிழர்களை வந்துவிடும்படி வற்புறுத்தும் பாதுகாப்பு வளையத்திற்குள் வரும் பெண்கள் நாசமாக்கப்பட்டுக் கொல்லப்படுகின்ற நிலைமையும் ஆண்களில் இளைஞகள் தனியே பிரிக்கப்பட்டுக் கொண்டுசென்ற பின், அவர்களின் பிணங்கள் கடலில் மிதக்கும் நிலைமையுமே நிலவுவதாலும் முல்லைத்தீவில் இப்போது குவிந்துள்ள தமிழர்கள் பாதுகாப்பு வளையங்களுக்குள் வர அஞ்சுகிறார்கள்.

     இந்நிலையில், பாதுகாப்பு வளையத்திற்குள் வராதவர்களை,  அவ்வாறு வராததையே காரணமாக்கி அவர்களைப் 'போரிடுவோர்' (combatant) எனக்கூறிவிட்டு குண்டுமழை பொழிந்து அந்த இலக்கக்கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்துப் பெரும் பேரழிவு நடத்த சூழ்ச்சி நடைபெறுகிறது.

     நெஞ்சப் பதைப்புடன் எச்சரிக்கின்றோம்! தமிழக அரசே! தமிழர்களே! நடுவண் அரசில் மாந்த நேயமும் நயன்மையுணர்வும் அற்றுப்போகாதவர்களே! இந்தக் கடைசி நேரத்திலாவது உடனடியாகச் செயல்படுங்கள்! முழுப்பேரழிவு நடக்காமல் தடுத்து நிறுத்துங்கள்! சிங்கள இனவெறியாளரிடமிருந்து அத் தமிழர்களைக் காப்பாற்றுங்கள்!

(மக்கள் தொலைக்காட்சியின் 'சங்கப் பலகை'ச் (8-3-2009)செய்தியைக் கேட்டு மனங்கசிந்து வேண்டிய வேண்டுகோள்!)