புதன், 2 டிசம்பர், 2015

அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!

அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!   

     தமழ்நாட்டில் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் இக்கால் இயல்பிகந்த நிலையில் மக்கள் பெருந்துன்பத்திற் காளாகியுள்ளனர். இந்நிலைக்குக் காரணமானவர்கள் யார் யார்? எவரெவருக்கு எவ்வளவு பங்கு? என்ற ஆய்வுகளும் கருத்தாடல்களும் இப்பொழுது, இந்த நேரத்தில் எண்ணவோ பேசவோ கூடாதவை மட்டுமல்ல, இந்த நேர மீட்சிப் பணிக்குக் கேடு விளைவிப்பவை; நேரத்தை வீண்டிப்பவை.
    
     இக்கால் உடனடித் தேவை மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவதும் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் தந்து ஆறுதல் அளிப்பதுமே ஆகும். இந்த நோக்கத்திலேயே அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். இவையே இக்கால் இன்றியமையாது தேவைப்படுவனவாம்..
    
     இவற்றையே கருத்தில் கொண்டு எவ்வகை வேற்றுமையும் கருதாது ஒவ்வொருவரும் இயங்க வேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறேன். எவ்வெவ் வகையில் உதவ முடியுமோ அவ்வவ் வகையில் அவரவரும் இடர்ப்பாட்டி லுள்ளோருக்கு உதவுதல் இந்த நேரத் தேவையாக உள்ளது.
    
     மீட்புப் பணியிலுள்ளோரைப் பாராட்டுவோம்; மக்களுக்கு உதவுவோர்க்கு நன்றி சொல்வோம். பிறவனைத்தும் பிறகு பேசலாம்!
     செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
     செய்யாமை யானும் கெடும்.

-----------------------------------------------------------------------  

ஞாயிறு, 29 நவம்பர், 2015

பெண்!...

பெண்!...
(மும்மொழி வல்லார் உரைவேந்தர் ஒளவை.துரைசாமி விளக்குகிறார்)

க. மனு நூலில்!
      “ஒருவன் ஒழுக்கமும் நற்பண்பும் எத்துணைச் சிறிதும் இலனாயினும், பொல்லாத காமுகனாயினும் அவன் மனைவி அவனையே தெய்வமாகக் கருதி பணிபுரிய வேண்டும் என்றும்,
     மகளிர்க்கெனத் தனித்த முறையில் வேள்வியோ தவமோ விரதமோ இல்லையாகலான், கணவனுக்குச் செய்யும் தொண்டும் பணியுமே மகளிர்க்கு மேலுலக இன்ப வாழ்வு பெறுதற்கு வாயிலாம் என்றும்,
     மணமான ஒருத்தி தன் பெற்றோர் மனையில் இருந்துகொண்டு தன் கணவனுக்குப் பணிந்து அவன் விருப்பிற்கேற்ப நடவாளாயின், நாடாளும் வேந்தன், சான்றோர் கூடிய பேரவையில் அவளை நிறுத்தி, வேட்டை நாய்கள் கடித்துத் துன்புறுத்துமாறு அவளை அந்நாய்களுக்கு இரையாக்க வேண்டுமென்றும்,
     தன்கணவன் நற்குண நன்மாண்புகளை இழந்து பொல்லாக் குடியனாயும் நோயுற்றவனாயும் மாறியது காரணமாக அவனை வெறுத்துப் புறக்கணிப்பாளாயின், அவள் மூன்று திங்களுக்கு உயரிய ஆடை அணிகலனின்றி வேறோர் தனியிடத்தே ஒதுக்கப்பட வேண்டுமென்றும் மனுநூல் கூறுகிறது.

உ. யாகஞவல்கியும், அத்திரியும், வாசிட்ட நூலும், ஆங்கீரசரும் கூறுவதென்ன?
      கணவன் சொல்வழி யடங்கி யொடுங்கி ஒழுகுவதே மகளிர் கடன்; அதுவே அவர்கட்கு உயர்ந்த அறமாம்என யாகஞவல்கியர் இயம்புகின்றார்.
     கணவன் உயிரோடு இருக்கும்போதே தான் பேறு விரதம் மேற்கோடலும் வேள்வி செய்தலும் உடையளாயின், அவள் தன் கணவன் தலையை வெட்டினவளாகின்றாள் எனவும், புண்ணிய நீராடும் ஒருத்தி, தன் கணவனுடைய அனிகளையோ உடல் முழுதுமோ நீராட்டி அந்நீரையே உட்கொள்பவள் புத்தேளிர் வாழும் உலகில் பெருஞ்சிறப்புப் பெறுவாள்எனவும் அத்திரி என்பார் அறிவிக்கின்றார்.
.
     மறுமையில் கணவன் எய்தும் கதியினும் மேற்கதியை மனைவியாவாள் பெறுவதில்லை யாகலான், கணவனுக்கு அடங்கா தொழுகுபவள் இறந்தால் இன்ப உலகு எய்தாள்; எனவே, அவள் என்றும் தன் கணவன் மனம் நோக நடவாளாதல் வேண்டும்என்று வாசிட்ட நூல் வற்புறுத்துகின்றது.
     கணவற்கு அடங்காது ஒழுகுபவள் கையில் எவரும் உணவு தரப் பெறுதல் கூடாது; அவள் காமி எனக் கருதப்படுவாள்என ஆங்கீரசர் கடிகின்றார்.

{நன்றி! செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 160, 161.}

பெண்!...(தொடர்ச்சி)
(உரைவேந்தர் ஒளவை துரைசாமியார் விளக்கம்)
பெண்மக்கட்குரிய நலம் கூறப்புக்க தொல்காப்பியர், ”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலன” என்று தெரிவிக்கின்றார்.
கல்வி கேள்விகளால் உண்டாகும் திண்ணிய அறிவுஒழுக்கம் கற்புஎன்று தமிழ்ச் சான்றோரால் குறிக்கப்படும்.
ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்ற வேந்தனது நலம் கூறப்புகுந்த சான்றோர், ‘உலகம் தோன்றிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை’ என்றும்,வேதங்களைக் குறிக்கக் கருதிய சான்றோர் அவற்றை ‘எழுதாக் கற்பு’ என்றும் குறிப்பதே இப் பொருண்மைக்கு ஏற்ற சான்றாகும்.
மகளிர்க்கு கல்வியறிவின் திணிநிலை ஒழுக்கத்தைக் கற்பென வாளா ஓதாமல், ‘செயிர்தீர் காட்சிக் கற்பு’ என்று தொல்காப்பியர் சிறப்பித்துக் கூறியருளுகின்றார். கற்பென்னும் திண்மையுண்டாவது மகளிர்க்குரிய தகுதிகளுள் பெருமை வாய்ந்தது என்று பண்டைத் தமிழர் பணித்துள்ளனர்.
மகளிர் மகப்பெறுதல் என்பது இயற்கையறம்; அதனால் உடற்கூறு வேறுபட்டதன்றி, ஆணுக்கு அடிமையாய்த் தனக்கென உரிமையும் செயலுமற் றிருத்தற்கன்று என்பது தமிழ் மரபு. ஆண்டவன் படைத்தளித்த இவ்வுலகில் ஆணைப்போலப் பெண்ணும் வாழப் பிறந்தமையின், ஆணுக்கு உரிமைதந்து பெண் அடிமையாய்க் கிடந்து மடிய வேண்டுமென்பது அறமாகாது.
ஆண்மக்களைப் போலாது பெண்மகள் ஒருத்தி மனையின்கண் செறிப்புண்டிருந்த போது உரிமை வேட்கையால் உந்தப் பெற்றமையின்,
“விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது
இளையோர் இல்லிடத்து இன்செறிந் திருத்தல்
அறனும் அன்று ஆக்கமும் தேய்ம்”
என்று கூறுவது இங்கே நினைவுகூரத் தக்கதாகும்.
ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் வாழ்க்கைத் துணையாவன. வாழ்க்கை இருபாலார்க்கும் பொது.; இருவரும் கூடியே அதனைச்செய்தல் இயற்கையாதலால் இருவர்க்கிடையே வேற்றுமை கண்டு புகுத்துவது, இயற்கை வாழ்க்கையை இடையூற்றுக் குள்ளாக்கும் என்பது கண்டே பண்டைச் சான்றோர் மனைவியை வாழ்க்கைத் துணை என்று வழங்கின்ர். அவளது துணையின் சிறப்புணர்ந்து தேற்கொண்ட கணவனைக் கொண்டான் என்று குறித்தனர்.
{நன்றி! ‘செம்மொழிப் புதையல்’ - ஒளவை துரைசாமி, மணிவாசகர் பதிப்பகம் 2006, பக்கம் 163, 164.}
-----------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 6 நவம்பர், 2015

அரணமுறுவலார் !


அரணமுறுவல்!

         இன்று (6.11.2015) காலை அன்பிற்கினிய முனைவர் தோழர் ந.அரணமுறுவல் மீளாத்துயில் ஆழ்ந்த செய்தியை ஐயா செந்தலை கவுதமனார் முகநூல் குறிப்பின் வழி அறிந்து அதிர்ச்சியடைந்தேன்  பெரு வருத்தத்திற் கிடையே பழைய நினைவுகள் நிழலாடின.

           1960ஆம் ஆண்டுகளின் இறுதியில், 1970ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தேவநேயச்சித்திரன், பொதியவெற்பன், கு.அண்டிரன், அரணமுறுவல் ஆகியோர் அடங்கிய  அக்காலத் தென்மொழி அன்பர் குழு தமிழம் என்னும் தலைப்பில் தனி இதழ் தொடங்க முயன்றதும் அம்முயற்சி செயலாகும் முன்னரே ஐயா செம்பியன் பன்னீர்ச்செலவம் தமிழம் இதழைத் தொடங்கி நடத்தியதும் நினைவுக்கு வருகின்றது.

        1974ஆம் ஆண்டளவில் நான் திருக்கோவலூரில் பணியில் இருந்தபோது, சந்தைப்பேட்டையில் நான் குடியிருந்த வீட்டிற்கு வந்து பல செய்திகளைப் பேசிக்கொண்டிருந்ததும், போகும்போது நான் வைத்திருந்த நூல்கள் பாவாணரின் வடமொழி வரலாறு, தமிழர் மதம் மற்றும் இரண்டு நூல்களை வாங்கிச் சென்றதும் நினைவில் உள்ளன.

         கடலூரில், தென்மொழி அலுவலக/அக-த்தில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா நடத்தி வைத்த அரணமுறுவலின் திருமண நிகழ்வும் அதையொட்டி நடந்த சிறு விருந்தும் மறக்க முடியாதவை.

         பின்னர், அவர் சென்னை சென்றதும் தொடர்ந்து படித்ததும் முனைவரானதும் பல்வேறு தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டதும் அவரை அவ்வப்போது பார்க்கும்போது அவரே கூறவும் அவருடைய நெருங்கிய உறவினர் கு.அண்டிரன் ஐயா வழியும் அறிந்த செய்திகள்.

         அவர் தமிழியக்கம் இதழ் தொடங்கி நடத்திய போது, அவருக்கு இதழ் தொடர்பாக எழுதிய மடலும், அவர் உலகத் தமிழ்க் கழகத்தை மீண்டும் செயற்பட வைக்க எடுத்த பெருமுயற்சியும், அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டதும் முகன்மையாகக் குறிப்பிடவேண்டிய செய்திகளாகும்.

                    “முதன்மொழி இதழைச் சிறப்பாகக் கொண்டுவந்த வினைப்பாடும் பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை எதிர்த்து வீழ்த்த நடந்த பெரும் பணியில் உ.த.க. சார்பில் அவர் பங்கு குறிப்பிடத் தக்கதாகும். குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை காப்புக்காக அவரும் மா.செ.தமிழ்மணியும் பிறரும் எடுத்த முயற்சிகள நினைவுக்கு வருகின்றன.

         கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு நிலைகளில் தமிழ், தமிழர் நலன் காக்கும் பணிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அவர் மறைவை, இன்று ஈடு செய்ய இயலாப் பேரிழப்பாகவே உணர்கின்றேன். அந்தத் தென்மொழி அன்பர்க்கு, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாசறையில் உருவெடுத்த தமிழ்ப்படை மறவருக்கு, அஞ்சா நெஞ்சுடன் களப்பணியாற்றிய வல்லவர்க்கு வீரவணக்கம் செலுத்துவோம்!
  
வீரவணக்கம்! வீரவணக்கம்! அரணமுறுவலுக்கு வீரவணக்கம்!
------------------------------------------------------------------------

செவ்வாய், 3 நவம்பர், 2015

குறள். 1107

   தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. குறள். 1107

      இது, காமத்துப்பாலில், புணர்ச்சிமகிழ்தல் அதிகாரத்தில் ஏழாம் குறளாகும். இக்குறளின் பொருள் : அழகும் ஒளிறும் மாநிறமும் பெற்ற அருமை நிறைந்த காதலியொடு கொள்ளும் புணர்ச்சித் தழுவல்,  தமக்குச் சொந்தமான உரிமை இல்லத்தில் இருந்துகொண்டு,  தம்முடைய சொந்த முயற்சியால் முறையாக ஈட்டிய வருவாயைக்கொண்டு சமைத்து உருவாக்கப்பட்ட உணவைத்,  தாமும் விருந்தினருமாக,  நிறைவாரப் பகுத்துஉண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட, மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் இணையானது என்பதாகும்.      

      ஈண்டுத் திருவள்ளுவப் பெருந்தகை வேறுசில இடங்களில் கூறியிருக்கும் கீழ்க்காணும் கருத்துக்களும் ஒப்புநோக்கத்தக்கன:                

முயற்சிசெய்து ஈட்டியபொருள் முழுவதும் தகுதியுடையார்க்கு உதவி செய்வதற்கே ஆகும்  (கு.212)
முறையான முயற்சியால் கிடைத்தது தெளிந்த நீர் போன்ற கூழே ஆயினும் அதனை உண்பதைவிட இனிமையானது வேறில்லை – (கு.1065)       எப்போதும் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்னும் தீயநோய் அணுகாது. – (கு.227)                                       கிடைத்த உணவை இயன்றவரைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டுப் பலவகை உயிர்களையும் பாதுகாத்தல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையான அறமாகும். – (கு.322) 
           
      இவற்றுடன், ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரேஎன்னும் புறநானூற்று வரியும் (பு.17),  மணிமேகலை வரியும் (மணி.1255) ஒப்புநோக்கத் தக்கனவாம். மாந்தர் வாழ்வில் மிகஉயர்ந்த இனிமையை, இன்பநிலையைப் பகுத்துண்டு மகிழும்போது ஏற்படும் உரிமையும் பெருமிதச் செம்மாப்பும் கொண்ட,  மனம் நிறைந்தெழும் இன்பநிலைக்கு நேர் எனக் குறள் கூறுகிறது.
இக்குறளைப் படித்தறியும்போது, ஈடிணையற்ற நாகரிகம் பண்பாடு கொண்ட சான்றாண்மையராக முன்னோர் இருந்திருக்கின்றனர் என்ற எண்ணத்தால் நெஞ்சம் பெருமையால் இருமாந்து பூரிக்கும். ஆனால், அதேபோழ்தில், இன்றுள்ள தமிழரோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், ஆற்றொணாக் கவலைகள் நெஞ்சை அழுத்தும். இவை அடிக்கடி நிகழும்.


பொருத்தமான எதுகையும், முதலடியில் பொழிப்பு மோனையும் இரண்டாமடியில் இணை மோனையும் அமைந்து இனிய ஒழுகிசைச் செப்பலோசையுடன் குறள் படிக்க இன்பம் தருகிறது.                               

புதன், 28 அக்டோபர், 2015

புதுவை நல்லன்பர் ‘திருநாவு’ என்னும் திருநாவுக்கரசு ஐயா

புதுவை நல்லன்பர் திருநாவு என்னும் திருநாவுக்கரசு ஐயா நினைவுநாள் அக்தோபர் 27ஆம் நாள் ஆகும். அவர் மறைவின் போது  நடைபெற்ற இரங்கல் நிகழ்வில் படித்த பா இது:
          -----------------
     
கேட்டா ரதிரக் கிளையர் செயலறக்
கோட்டியாய் மற்றவர் குழுமிக் குமுற
தனித்தமிழ்க் கழகத் தனிச்சிறப் பாளர்
நனிநற் பண்பின் இனிய ரொப்பிலா
திருநா விறந்த செய்தி வந்ததே!
உருகினர் ஏங்கினர் உற்றார் தவித்தனர்!
ஆற்றல் சான்றவர் அருளுள் ளத்தர்
ஆற்றிடு அருவினை அறிவியா துதவுநர்!
இன்னோர்க் கென்னாது எல்லார்க்கு முதவிய
செந்நோக் கினரச் சிறப்புறு செம்மல்!
இன்னின் னார்க்கே இன்னலென் றறிந்தே
இன்முகத் தோடவர் எழுவா ருதவ!
எந்நே ரத்திலும் எவர்க்கும் உதவ
முந்தி முனையும் முனைப்பினர் உண்மை!
நட்பினர் குடும்ப நல்லது கெட்டதில்
நுட்பமாய் அறிந்தே ஒட்பத் துதவுநர்! 
எதிர்பா ராத இடுக்கண் எழுகையில்
மதிநுட் போடிவர் மாற்றிய கதைபல!
எவருரைப் பாரோ, இவரறிந் திடுவார்
கவலறுத் திடவே கடியவந் திடுவார்!
செந்தமிழ் நிகழ்வில் முந்தி நின்றிவர்
வந்து கனிந்து வருகவென் றழைக்கும்
ஒப்பருங் காட்சி உளத்தில் நிலைக்கும்!
செப்பருஞ் சிறப்பின் சீருக் குரியவர்!
ஆசாகு அய்யா தேசிகன் உயிரை
கூசாது நேர்ச்சி கொள்ளை கொண்டதே!
இழப்பு, இழப்பு, இழப்புபே ரிழப்பே!
உழப்புற லகற்றியவ் வுயர்ந்தோர்
சிறப்புறு செயல்கள் சிந்தையில் கொள்வமே!


----------------------------------------------

திங்கள், 26 அக்டோபர், 2015

தமிழர் நிலை!


    தமிழர் நிலை!
மூத்த தமிழே முதற்றாய் மொழியாம்
           
முடிவைச் சொல்கின்றார்!
ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்
           
எவர்க்கும் முதலென்றார்!
காத்தல் பேணல் கருதாத் தமிழர்
           
கடைகெட் டழிகின்றார்!
ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால்
           
உலகில் இழிகின்றார்!

செவ்வாய், 20 அக்டோபர், 2015

காடு!

காடு!

தாய்மொழியில் பேசினால் தண்டனை பள்ளியிலே!
தாய்தந்தை பேரும் தமிழில்லை! போய்வணங்கச்
சொற்றமிழ்க் கில்லையிடம்! சொல்லுகநா டில்லையிது
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

அழகார் தமிழில் அயன்மொழிச் சொற்கள்
புழங்கக் கலந்தெழுதல் புன்மை! வழக்கமென
நற்றமிழ்க்(கு) ஊறுறுத்த நாடி எழுதுலகு
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

(கல் தைக்கும் முள் தைக்கும் காடு > கற்றைக்கு முட்டைக்குங் காடு)

புதுவை தெளிதமிழ் இதழில் வெளிவந்தவை.

ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ம.பொ.சி.

எல்லைக் காவலர் சிலம்புச்செல்வர் ம.பொ.சி.யார்!

செந்தமிழ்நாட் டெல்லைபறி போகாமல் காத்தயிவர்
சிறைக்குச் சென்று
நந்தமிழின் சிலம்பாய்ந்தார்; நாவன்மை எழுத்தாற்றல்
நனிவாய்ந் தாரே!
இந்தியநா டுந்தமிழும் எனக்கிரண்டு கண்களென
இயம்பி வந்தார்!
பந்தமுறும் பெருமீசை பார்த்திருப்பீர் ம.பொ.சி.
படத்தில், தாளில்!

கடற்கரைசீர் வாய்ந்தநகர் கவின்சென்னை எளியகுடி
களிக்கத்தோன்றி
கடமையென மூவாண்டுக் கல்வியுடன் நெசவுசெயக்
கடுகிச் சென்றார்!
அடக்கமுறா வறுமையெதிர்த் தச்சகத்தில் கோப்பாளர்
ஆனார் பின்னர்த்
திடஞ்சான்ற மனத்தோடே தேசவிடு தலைக்குழைக்கத்
தேர்ந்து சென்றார்!

தேர்ந்தகட்சிப் பேராயம் சேர்ந்துப்புப் போர்மற்றும்
திமிர்கொள் ஆட்சிச்
சார்பறுக்கும் சட்டமறுப் பியக்கத்தும் பங்கேற்றார்;
சற்றும் சோரா(து)
ஆர்வமுற சிறைப்பட்டார்ஆறுமுறை; எழுநூற்றுக்
கதிக நாட்கள்!
சீர்மையுற சிறையடைப்பில் சிலம்புபடித் தாய்வுசெய்தார்!
சிறப்ப றிந்தார்!

தமிழ்தமிழர் உணர்விலவர் தமிழரசுக் கழகத்தைத்
தனியே தோற்றி
இமிழிந்தி யாமொழியால் இன்னின்ன மாநிலமென்
றியற்றுங் காலைத்
தமிழர்க்குக் குடியரசு தனியமைக்க வேண்டுமென்றார்
தனிய ராக!
துமித்துபெறக் கருதவிலை! தொடர்ந்திந்தி யாவிலொரு
தொகுதி என்றே!

செப்பமுற மாற்றுகபேர்! சிறப்புறவே தமிழ்நாடாய்ச்
செய்வீர் இன்னே!
ஒப்புறவே கல்விமொழி ஒண்டமிழே எனவாக்கி
உயர்வைச் செய்வீர்!
தப்பறவே ஆட்சிமொழி தமிழென்றே ஆக்கிடுவீர்!
தகைமை காப்பீர்!
இப்படியாய்க் குரல்கொடுத்தே இவற்றைவலி யுறுத்திவந்தார்
எழுதி பேசி!  

இவர்பணியில் முன்னிற்கும் எல்லைகளைக் காத்தபணி
இணையி லாதாய்!
இவறலுற ஆந்திரத்தர் எழிற்சென்னை நகர்கேட்டு
ஏழ்ந்த போது
சுவரெனவே நின்றுசிலர் துணையோடே இவர்காத்தார்!
சொல்வ துண்மை!
திவளலற இவரியங்கித் திருவேங்க டம்மீட்கச்
சிறையுஞ் சென்றார்!

பெரும்பிழையாய்த் திராவிடத்தைப் பேசிடுவோர் சறுக்கிவிட
பெரிய மீசை
திருத்தணியை மீட்டெடுத்தார்! சித்தூர்புத் தூர்பகுதி
சிலவும் மீட்டார்!
திருப்பதியாம் வேங்கடமும் செந்தமிழ்சேர் பகுதிகளும்
சென்ற போதும்
ஒருதனியர் பெருமுயல்வில் ஓரளவு வடவெல்லை
ஓம்பக் கண்டோம்!

பொற்புறுசீர் குமரியொடு தேவிகுளம் பீர்மேடு
பொலிசெங் கோட்டை
தெற்கெல்லை காத்திடும்போர் திடத்தலைவர் நேசமணி
திறத்தில் மூண்டு
பெற்றியிலார் சிறையிலிட இவரறிந்து விரைந்தங்கே
பீடிற் சென்றே
சற்றும்போ ராட்டத்தைச் சரியாதே மேல்நடத்தச்
சார்பு தந்தார்!

நூற்றுக்கும் மேற்பட்ட நூலெழுதித் தந்துள்ளார்
நுட்ப மாக!
ஏற்றமுற வரலாற்றை எடுத்தியம்பி பலவிளக்கம்
எடுப்பாய்ச் சொல்வார்!
சாற்றியபல் கூற்றிருக்கத் திராவிடத்தார் சார்ந்ததிவர்  
சறுக்கல் ஆகும்!
ஆற்றியநற் பணிகளையும் அரியசெயல் செய்த்தையும்
அகத்தில் கொள்வோம்!


(14-8-2011 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற விழுப்புரம் தமிழ்ச்சங்க ஒன்பதாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கத்தில் பாடிய அறுசீர் மண்டிலப் பாக்கள்)

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

‘தாழி’யின் அழகிய அரியதொரு நாள்காட்டி.


 தாழியின் அழகிய அரியதொரு நாள்காட்டி.

     'அன்னை அருள்' வெளியீடான தாழி ஆய்வு நடுவத் திட்டத்தின் நாள்காட்டி கிடைக்கப் பெற்றேன். அதைப்பற்றி எழுத விரும்பியிருந்தும் பல காரணங்களால் காலந்தாழ்ந்தது. அந் நாட்காட்டியைப் பற்றிக் காலந்தாழ்ந்தாலும் எழுதவேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் இருந்தது.
     நாள்காட்டி 17 அகலமும் 24.5 அகலமுமாகப் பெரிய அளவில் எடுப்பாகத் தோன்றுகிறது. நாள்காட்டியின் முதல் தாளின் முதற் பக்கத்தில் ஆரியர் நாவலந்தீவு வருகையையும் பரவலையும் காட்டும் நாட்டுப்படம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், மொழியறிஞர் கிலபர்ட்டு சிலேட்டரின் தமிழ், தமிழர் தொடர்பான கருத்துக்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
     கீழே, சிந்துசமவெளி பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியுமான செய்திகள் தரப்பட்டுள்ளன. மேலும், தமிழக ஊர்ப்பெயர்கள் சமற்கிருதம் ஆக்கப்பட்டதைக் குறிப்பிடுவதோடு, தமிழர் தம் அடையாளங்களைக் காக்க வேண்டுமென்ற வலியுறுத்தம் இடம்பெறுகின்றது. தெய்வம் குறித்த சித்தர் சிவ்வாக்கியர், பாரதியார், பாவேந்தர், திருமூலர் பாடல் வரிகள் தரப்பட்டுள்ளன.
     முதல் தாளின் இரண்டாம் பக்கத்தில், தென்னக வடவகக் கோயில்களின் அமைப்புகள் வரைபடத்துடனும் கலைச் சொற்களுடனும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. தஞ்சைப் பெருவுடையார் கோயில் அமைப்பும் கலைச்சொற்களுடன் காட்டப்பட்டுள்ளது. நாட்காட்டியின் பெயரே கோயில்களின் தாய்நிலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. செய்திகள் தூய தமிழில் எழுதப்பட்டுள்ளன.
     அடுத்து, நாள்காட்டியின் 12 மாதங்களிலும் 12 அழகிய தமிழகக் கோயில்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், மதுரைக் கூடலழகர் கோயில், காஞ்சி ஓராடையுடையார் கோயில், திருச்சி அரங்கநம்பி கோயில், தில்லை நடவரசர் கோயில், திருவைகுண்டம் திருமாற்பெருமாள் கோயில், மாமல்லை கடற்கரைக் கோயில், உத்திரமேரூர் திருவழகுடை வரந்தருபெருமாள் கோயில், நெல்லை காந்திமதி-நெல்லையப்பர் கோயில், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்-அழகர் கோயில், மதுரை அங்கயற்கண்ணி-அழகுடையார் கோயில், காஞ்சி வரந்தருங் கோப்பெருமாள் கோயில் ஆகியனவாகும்.
     ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சுருக்கக் குறிப்பும், சிறப்பும் தரப்பட்டுள்ளன. கோயிற் படங்கள் மிக அழகாக அருமையாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாள்காட்டியில், தமிழ் பிரெஞ்சு ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாத கிழமைப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
     அன்னை அருள் மறுதோன்றி அச்சகமும் தாழி ஆய்வு நடுவமும் மிகவும் சிறந்த நாள்காட்டியைத் தந்துள்ளனர். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.