புதன், 26 அக்டோபர், 2016

பாட்டரங்கத் தலைமையேற்றுப் பாடிய பாடல்23-10-2016 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற
விழுப்புரம் தமிழ்ச்சங்கம் 14-ஆம் ஆண்டுவிழாவில் நடைபெற்ற பாட்டரங்கத் தலைமையேற்றுப் பாடிய பாடல்:
பாட்டரங்கத் தலைப்பு : பாவேந்தர் படைப்புகளில்... குடும்பவிளக்கு, தமிழியக்கம், புரட்சிக்கவி.
-------------------------------------------------------------------------------------------------

அன்பார்ந்த தாய்க்குலமே! அறிவார்ந்த பெரியோரே! ஆக்கம் சேர்க்கும்
தென்பார்ந்த இளையோரே! தீந்தமிழ்ப்பா வேந்தரவர் திறத்தில் யாத்த
நன்னூல்கள் மூன்றையிங்கே நனிவிளக்கிப் பாடவந்த நற்பா வல்லீர்!
என்னினிய நல்வணக்கம் எல்லார்க்கும் பணிவுடனே இயம்பு கின்றேன்!

விழு என்றால் சிறந்தஎன்பர், விழுமியவூ ராமிந்த விழுப்பு ரத்தில்
தழுவலுறும் தமிழ்ப்பற்றில் தமிழ்ச்சங்கம் தனைத்தொடக்கித் தக்க வாறே
ஒழுங்கெனவே தனிஓரேர் உழவரென உழைப்பெடுத்தே ஓயா தின்றும்
பழுதறவே விழாநடத்தும் பாலதண்டா யுதமென்னும் பசுமை நெஞ்சம்!

உலகிலுள மொழியறிஞர் உயர்தனிச்செம் மொழிதமிழென் றுரைக்கின் றார்கள்!
பலவகையும் சிறப்புயர்வுப் பாங்குகளை எடுத்துரைத்துப் பராவு கின்றார்!
நிலவுகின்ற நம்நிலையோ நித்தமும்இப் பெருமைகளை நீளப் பேசி
வலம்வருவ தல்லாமல் வண்டமிழைக் காப்பாற்றி வளர்ப்ப(து) எண்ணோம்!

தாய்மொழியே படிக்காமல் தமிழ்நாட்டில் கற்குநிலை தணியாத் துன்பம்!
ஏய்த்தநிலை இங்கன்றி எங்குமிலை! ஆட்சிமொழி ஏட்டில் மட்டும்!
வாய்த்ததிருக் கோயிலிலே வழிபாட்டில் தமிழில்லை! வழக்கு மன்றில்
போய்ப்பேச வாய்ப்பில்லை பூந்தமிழ்க்கே! எங்கெங்கும் புறக்க ணிப்பே!

செய்தித்தாள் இதழ்களிலே செறிவற்ற நூல்களிலே சீர்மை அற்றே
மொய்த்தெழுதும் சொற்களிலே முறையற்ற மொழிக்கலப்பு முடுக்க மாக!
நெய்வண்ண மினுக்கலிலே நிமிர்த்தெழுதும் கடைப்பெயர்கள் நிலைமை என்ன?
துய்யதமிழ் தொலைத்துபிற தொடர்பற்ற மொழிகளிலே துலங்கல் அன்றோ?

ஊடகத்தில் தொலைக்காட்சி உரையாட்டில் நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாக்
கேடுவிளை நாடகத்தில் கிளர்ச்சியுறு கூத்தாட்டக் கீழ்மை தம்மில்
ஈடுசொல முடியாத இழிவான தமிழ்க்கொலைகள்! இன்னு மிங்கே
பாடாகப் படுத்துதிரை பழியெனவே தமிழழிக்கும்! பார்க்கின் றோமே!

இத்தகைய நிலைஎதிர்த்தே இனியதமிழ் காப்பதற்கே இளைஞர் தம்மை
எத்தகைய இழப்பினையும் எதிர்கொண்டு தமிழ்காக்க எழுச்சி யூட்டும்
பற்றியெரி நெருப்புணர்வுப் பாடல்கள் எழுதியவர் பாவேந் தர்தாம்!
முற்றுமவர் உயிருடலும் முழுமையாய்த் தமிழ்கலக்க முழக்க மிட்டார்!

அஞ்சாத நெஞ்சுறுதி அரிமாவின் நோக்குநடை அருந்த மிழ்க்கே
கொஞ்சங்கே டென்றாலும் கொதித்தெழுந்தே முழங்குகின்ற கூர்மை, காப்பு!
விஞ்சுகின்ற பாவாற்றல் வீழ்தலிலாச் சொல்லாற்றல் வீச்சு கொண்டே
எஞ்ஞான்றும் தமிழ்தமிழர் தமிழ்நாட்டு நலன்காக்க ஏழ்ந்து நின்றார்!
                            
பாவேந்தர் நூல்களிலே பாராட்டித் தமிழறிஞர் பலரும் போற்றும்
மேவலுறும் குடும்பவிளக்(கு) ஒன்றாகும்! இன்னொன்று மேன்மை கூட்டும்
தாவறுநம் தமிழ்காக்கும் தமிழியக்கம், இவையிரண்டும் தவிர மேலும்
பாவேந்தர் தமைப்புரட்சிப் பாவலரென் றழைக்கவைத்த பாநூல் ஒன்றாம்!
                             
துலக்கமுற புரட்சிக்குத் தூண்டுபுரட் சிக்கவிநூல் துய்க்க இன்பம்!
பிலகணிய மென்னுமொரு பிறமொழிநூல் தழுவியதாய்ப் பெருஞ் சிறப்பில்
இலகுதமிழ் மொழிப்பற்றும் இனப்பற்றும் இணைத்துமிக எழுச்சி கூட்டும்!
உலகிலுள மக்களிலே உழைப்பாளர் சிறப்புரைக்கும், உயர்வு சொல்லும்!

நல்லதொரு குடும்பத்தின் நலன்களையும் கடமையையும் நவிலும் நூலாம்
வல்லவகை வகுத்தளித்த குடும்பவிளக் கென்னும்நூல் வாழ்க்கை தன்னை
எல்லார்க்கும் சுவைசேர எளியவகை விளக்கமுற எடுத்துக் கூறும்
நில்லும்நூல் குடும்பத்தில் நிலைமகிழ்வு அனைவர்க்கும் நிறுத்தும் நூலே!

மண்ணிலுள மாந்தரிடை மாண்குடும்ப விளக்குஆக மதித்துப் போற்றிப்
பெண்மக்கள் சிறப்புரைக்கும் பெண்கல்வி வலியுறுத்தும் பெற்றி யோடே
பெண்ணுரிமை நிலையெல்லாம் பேசுமிது குடும்பத்தின் பெருமை கூறி
வண்ணமுற முதியோரின் வாடாத காதலையும் வழங்கும் நூலாம்!

எங்கெங்கும் தமிழழிந்த இழிநிலைகள் எல்லாமும் எண்ணி எண்ணி
அங்கங்கும் தமிழ்விளங்க ஆர்த்தெழுந்து போராட அழைத்த நூல்தான்
பொங்குணர்வு இளைஞரிடை பூத்தெழவே தூண்டுகின்ற புதுமை யான
தங்குசிறப் பில்முழங்கும் தமிழியக்கம் என்கின்ற தகைசால் நூலாம்!
 
காரிருள்சூழ் தாழ்நிலையில் கனித்தமிழின் வீழ்ச்சியினைக் காட்டி நம்மின்
ஊரிலுள தமிழிளைஞர் உடனெழுந்து தமிழியக்க உழைப்பிற்(கு) ஏக
தேரியபல் நிலைகளிலே திறத்துடனே ஈடுபடத் தெரிந்து ரைக்கும்
ஓரிரவில் எழுதியநூல் உணர்வூட்டி எழுச்சிகொள உந்தும் நூலே!

பாவேந்தின் இம்மூன்று பாநூற்கள் சிறப்பெல்லாம் பகுத்த றிந்தே
பூவேந்துந் தேன்சுவைசேர் புத்துணர்வுப் பாக்களிலே புரியும் வண்ணம்
நாவேந்து முதன்மொழியாம் நற்றமிழில் பாடிநலம் நயங்காட் டற்கே!
பாவேந்தி வந்துள்ளார் பாவலர்கள் மூவரிவர் பாடல் கேட்போம்!!  
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------