புதன், 26 நவம்பர், 2008

அண்ணாவின் பெருமை!

       
பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள்
பெரிதாய்ப் போற்றும்
ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால்
உற்ற பேறே!
எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே
ஈந்த பெம்மான்
திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே
தெரிந்து கொள்வோம்!அறிஞருளும் அறிஞரவர் அரசியல்சீர் கற்றறிந்தார்
அவரின் பேச்சைப்
பொறிமடுத்தார் வயப்படுவர்; புரிந்தபிறர் வேட்டிருப்பர்;
புரியார் தம்மை
நெறிப்படுத்தும் குமுகாய நிலைதிருத்தும் பெரும்பணியர்
நெஞ்சக் கூட்டில்
வெறியன்பால் தமிழ்மக்கள் விருப்பத்தோ டடைத்துவைத்த
வெல்லுஞ் சொல்லார்!உலகினிலே முதன்முதலாய் உயர்ந்திருந்த ஓரினத்தை
ஒப்பே இல்லா
இலகுதமிழ் முதன்மொழியை ஏய்ப்பினிலே வீழ்த்திய
ரியத்தின் மாயை
துலக்கமுற விளக்கியவர் தோல்வியிலா எழுத்தாற்றல்
துணையி னாலே
இலங்குகதை கட்டுரைகள் ஏற்றமிகு மேடைதிரை
எல்லாம் வென்றார்!பொருநரென மேடையிலும் புத்தெழுத்து நடையினிலும்
பொலிவு சேர
அருந்தமிழ்க்கு அணிசேர்த்தார்! அயற்சொற்கள் தவிர்த்தெழுத
ஆவல் கொண்டார்!
இருந்தமிழ்க்கு மறுமலர்ச்சி இவராலே வந்ததெனில்,
இதுவே உண்மை!
பெருஞ்சிறப்பில் செந்தமிழ்க்கே பீடுறவே எடுத்தாரோர்
பெருமா நாடே!எழுத்தாளர் கல்கிமகிழ்ந் திவர்அறிஞர், தென்னாட்டின்
பெர்னாட் சாஎன்(று)
அழுத்தமுறப் புகழ்ந்துரைத்தார்! ஆங்கிலத்தில் அண்ணாவின்
ஆற்றல் பேச்சு
இழுத்ததந்த வாச்பேயி நேருவுட னெல்லாரின்
இனிய சிந்தை!
வழுத்திதமிழ் மக்களெல்லாம் வாய்மகிழ அண்ணனென
வழங்கி னாரே!இருபத்து மூன்றுதிங்கள் இவர்முதல்வ ராயிருந்தார்
இதற்குள் ளேயே
இருமொழியே போதுமென இந்திமறுத் தோர்சட்டம்
இயற்றித் தந்தார்!
பெருமகிழ்வில் தமிழ்நாடாய்ப் பெயர்மாற்றம் செய்திட்டார்!
பின்தன் மானத்
திருமணங்கள் செல்லுமெனுந் திருத்தத்தால் தமிழ்மானம்
திரும்ப மீட்டார்!இனக்கொலைகள் அன்றைக்கும் ஈழத்தில் ஐம்பத்தோ(டு)
இரண்டாண் டின்முன்
கனக்குமனத் தோடண்ணா கனிவற்ற தில்லியினைக்
கடிந்து ரைத்தார்!
மனக்குமுற லோ(டு)ஐநா மன்றிற்கும் எழுதிநிலை
மாற்றக் கேட்டார்!
இனக்காவல் மறவனவர் இருந்திருந்தால் இன்றிருக்கும்
ஈழ நாடே!அண்ணாவின் உரோம்செலவில் ஆற்றலுடை ஒருமறவர்
அடைப்பின் நீக்க
பண்ணவராம் போப்பவரும் அண்ணாவின் வேண்டுகைக்குப்
பரிந்தி சைந்தே
திண்ணமிகு இரானடேயை விடுவிக்கச் சிறைக்கதவும்
திறந்த தன்று!
எண்ணமெலாம் நன்னேயம் இயக்கமெலாம் நன்னெறியன்(று)
இலங்கி னாரே!பெரிதுபெரி தண்ணாவின் பெரும்பெருமை முடிந்திடுமோ
பேசு தற்கே!
அரியதமிழ் மீட்பிற்கு அண்ணாவே முன்னணியர்
அறியார் யாரே!
விரிந்ததவர் சிந்தனைகள் தளையறுத்துத் தமிழருயர்
விடிவைத் தேடி!
அரிதவரின் பெருமைசொலல் அவரவரும் தம்முணர்வால்
அறிந்து கொள்வீர்!

 -------------------------------------------------------------
        

   
   

முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையில் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!

 
            உலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் 1898இல் பிறந்தவர். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின் கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தபின், 1928இல் அருள்திரு பி.டி. கேசு அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்குச்சென்றார். 
           
     1928இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1943இல் இக் கல்லூரியினின்றும் விலகி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார். அதன்புறகு, கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி 1959இல் பணி நிறைவு செய்தார். 
    
     கல்லூரிப் பணி முடித்த பின்னர்,  ஆவிகள் ஆதன்களின் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியும் பேசியும் வெளிப்படுத்தித் தெளிவுறுத்தி வந்தார். எஞ்சிய வாழ்நாள் மழுவதும், பகுத்தறிவூட்டும் பணிகளிலும் மாந்தநேய மன மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார்.
    
     இயல்பிகந்த(வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக் காரர்களாகவோ மன நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.
     
     அதற்காகவே, இயற்கையிகந்த வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா பரிசளிக்க அவர் அணியமாய் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge) யாகக் கூறினார்.  தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். 
     
     ஏறத்தாழ 50ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து மூடநம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார்.  இறுதியில்,  1978 செப்டம்பர் 18ஆம் நாள் தம் 80ஆவது அகவையில், கொழும்பில் காலமானார்.
     
     முனைவர் கோவூர், மக்களுக்குத் தெளிவூட்டி, மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்று, இலங்கை மண்ணில் இருந்து அயராது போரிட்டார். அந்த "இலங்கையை இன்று ஆளுகின்றவரும் இதற்குமுன்பு ஆட்சி செய்தவரும் போட்டி போட்டுக் கொண்டு இன்று பகுத்தறிவு சார்ந்த ஈனாயான புத்த மதத்தைப் புறக்கணித்து விட்டு, கணியர்களிடம் கருத்தறிந்து நடப்பதை இயல்பான வழக்க மாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.
       
     மலையாளத் தந்திரிகளான கணியர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களைக் கேட்டுப் பகற்கனா காண்பதையும், கழுவாய் தேட கோயில்களுக்கும் கடவுளராகக் கூறப்படுவாரின் இருப்பிடங்களுக்கும் துய்தச்செலவு மேற்கொள்வதையும் இவர்கள் இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் எம்.கே.நாராயணனையும் சந்திப்பதைப் போலவே இதையும் இவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரானப் போரில் வெற்றி அடைவதற்கான எந்த ஒரு வழியையும் விட்டுவைக்கவில்லை"-என்று கருத்துரை (Opinion) இதழின் எழுத்தாளர் அம்பலம் எழுதுகிறார். 
     
     இந்த வகையில்,  இப்போது,  இலங்கை அரசுத் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.  இரனில் விக்கிரமசிங்கே கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலின் நெடுநாளைய ஆர்வம் மிகுந்த பத்தராம்!அரசுத் தலைவர் தேர்தலில் இரனிலை எதிர்த்து வெற்றி பெற்ற பின், மகிந்தா இராசபக்சே 2006 சனவரியில் குருவாயூர் வந்து நெய்யளித்துத் 'துலாபாரம்' சடங்கு நடத்துவதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்தார்.

      அண்மையில் இந்தியாவந்த இரனில்,  தில்லியில் அரசியற் காரர்களையும் அதிகாரிகளையும் பார்த்துப் பேசிய பிறகு, காரி(சனி)யி்னால் (!) ஏற்படும் இடர்களிலிருந்து விடுபடத் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் தொலைவிலுள்ள இடமான திருக்கோலிக்காட்டில் உள்ள கோயிலுக்கு துய்தச்செலவு மேற்கொண்டார்.
� � g a ` �3 :p> 
                          
கவனிக்கப்படாதிருந்த அந்தக் கோயிலும், அதிலுள்ள காரி(சனிபகவான்) திருமுன்னும் புதியதாக தொன்ம(புராண) காரணங்கள் கண்டுகாட்டிப் பலரும் அறியுமாறு செய்யப்பட்டிருந்தன. யாரோ கணியம் பார்ப்பவரின் (சோசியர்) அறிவுறுத்தலின் பேரில் இரனில் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். இரனிலின் வருகை தமிழ்நாட்டுக் காவல், உளவுத்துறையினரால் மிகக் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தபோதிலும், ஊர் மக்களுக்கு எப்படியோ செய்தி தெரிந்து, அவர்கள் ஏழு இடங்களில் அவரை வழிமறித்துக் கொந்தளிப்பான கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
  
            
            கொரடாச்சேரி என்னுமிடத்தில் வண்டி மாடுகளைச் சாலையின் குறுக்கே நிறுத்திக் கிளர்ச்சி செய்தார்கள். இரனில் கோயிலை அடைந்த போது, அவர் ஐந்நூறுபேர் கொண்ட கும்பலை நேர்கொள்ள வேண்டியிருந்தது; அவர்களில் பெண்கள் பேரெண்ணிக்கையினராய் இருந்தனர். கும்பலைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் போதவில்லை.
           
     கோயிலிலிருந்து திரும்புகையில், தமிழர்கள் உரிமைபெற உதவுவதாகக் கூறிக்கொண்டே பதற்றத்துடன் தப்பிச்செல்ல வேண்டியதாயிற்று.

            அரசியல்காரர்களை எல்லாநேரங்களிலும் ஏமாளிகள் ஆக்குவது கணியர்கள் மட்டுமே, அல்லர். மக்கள் ஏமாளிகளாக இருப்பதால்,  உளவுத் துறையினரும் கொளகையற்ற அரசியல் காரரரும் கணியர்களைப் பயன்படுத்தித் தம்முடைய அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, கணியத்தின் வழி உளத்தியல் தாக்கம் உண்டாக்கு கின்றனர். 

            தேர்தல் நேரங்களில் எழுதப்படும் கணியப் பலன்கள் அரசியல் நோக்கம் உடையவையே.

                                                            ------------------
நன்றியுரைப்பு:
Tamilnet.com  இணைய தளத்திற்கு!
      
  
****************************************************************
 **

ஞாயிறு, 23 நவம்பர், 2008

பாவலர் பாரதியார் நினைவேந்தி...!

(எண்சீர் மண்டிலம்: காய் – காய் – காய் – மா )


பாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்
            பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும்
தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித்
            தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை!
வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி
            விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள்
சீரழிந்தே அடிமையுற்ற சிறுமைநிலை போக்கச்
            சீறிஎழச் செய்தஇத ழாசிரியர் இவரே!
.
தொன்மையுடன் புதுப்புதுமை தோய்ந்தகருத் தெல்லாம்
            துளித்தயக்கு மில்லாது துணிவுடனே சொன்னார்!
முன்மையுறத் தாய்மொழியில் முறையாகக் கற்பீர்;
            முந்திடும்ஆங் கிலவழியோ முழுபேடிக் கல்வி!
வன்மையுடன் அதைத்தவிர்ப்போம்; வண்டமிழின் வழியே
            வழங்கிடுவோம் கல்வியென வழிவகையும் சொன்னார்!
மென்மையொடும் அன்போடும் மிகப்பரிந்து சொன்னார்
            மேனமையுறத் தாய்மொழியே மிக்கதுணை என்றே!
.
ஒருபக்கப் பாரதியே உருவாக்கிக் காட்டும்
            உதவாத போக்கிங்கே உள்ளதிது நன்றோ!
ஒருவிடுக அயற்சொல்லை ஒல்லும்வா யெல்லாம்
            ஓங்குகலை சேர்த்துதமிழ் உயர்த்திடுக என்றார்!
தெருளுறவே அவருரைத்த தேர்ந்தகருத் திதனைத்
            தெரிந்திருந்தும் பிறசொல்லைத் தீந்தமிழில் கலக்கும்
அருவருப்பை மாற்றிடுவோம் அறிவியலும் கலையும்
            அருந்தமிழில் வளர்த்திடுவோம்! அன்புணர்வில் வாழ்வோம்!
------------------------------------------------------------------------------------------------