மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூடநம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 நவம்பர், 2008

முனைவர் கோவூர் பகுத்தறிவூட்டிய இலங்கையில் மூடநம்பிக்கை ஆட்சியாளர்கள்!

 
            உலகப்புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மாந்தநேய மன மருத்துவருமாகிய முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர் இந்தியாவிலுள்ள கேரளமாநிலத்தில் 1898இல் பிறந்தவர். கேரளாவில் பள்ளிப்படிப்பை முடித்தபின், கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அதன்பின் கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணிபுரிந்தபின், 1928இல் அருள்திரு பி.டி. கேசு அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்குச்சென்றார். 
           
     1928இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பணியில் சேர்ந்தார். 1943இல் இக் கல்லூரியினின்றும் விலகி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார். அதன்புறகு, கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி 1959இல் பணி நிறைவு செய்தார். 
    
     கல்லூரிப் பணி முடித்த பின்னர்,  ஆவிகள் ஆதன்களின் தொடர்பான விந்தை நிகழ்வுகள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொண்டு எழுதியும் பேசியும் வெளிப்படுத்தித் தெளிவுறுத்தி வந்தார். எஞ்சிய வாழ்நாள் மழுவதும், பகுத்தறிவூட்டும் பணிகளிலும் மாந்தநேய மன மருத்துவப்பணிகளிலும் ஈடுபட்டார்.
    
     இயல்பிகந்த(வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக் காரர்களாகவோ மன நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.
     
     அதற்காகவே, இயற்கையிகந்த வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா பரிசளிக்க அவர் அணியமாய் இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge) யாகக் கூறினார்.  தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். 
     
     ஏறத்தாழ 50ஆண்டுகள் இலங்கையில் வாழ்ந்து மூடநம்பிக்கையை ஒழிக்கப் பாடுபட்டார்.  இறுதியில்,  1978 செப்டம்பர் 18ஆம் நாள் தம் 80ஆவது அகவையில், கொழும்பில் காலமானார்.
     
     முனைவர் கோவூர், மக்களுக்குத் தெளிவூட்டி, மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்று, இலங்கை மண்ணில் இருந்து அயராது போரிட்டார். அந்த "இலங்கையை இன்று ஆளுகின்றவரும் இதற்குமுன்பு ஆட்சி செய்தவரும் போட்டி போட்டுக் கொண்டு இன்று பகுத்தறிவு சார்ந்த ஈனாயான புத்த மதத்தைப் புறக்கணித்து விட்டு, கணியர்களிடம் கருத்தறிந்து நடப்பதை இயல்பான வழக்க மாக்கிக் கொண்டிருக் கிறார்கள்.
       
     மலையாளத் தந்திரிகளான கணியர்களிடம் நம்பிக்கை தரும் சொற்களைக் கேட்டுப் பகற்கனா காண்பதையும், கழுவாய் தேட கோயில்களுக்கும் கடவுளராகக் கூறப்படுவாரின் இருப்பிடங்களுக்கும் துய்தச்செலவு மேற்கொள்வதையும் இவர்கள் இப்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் எம்.கே.நாராயணனையும் சந்திப்பதைப் போலவே இதையும் இவர்கள் செய்து வருகிறார்கள். தமிழர்களுக்கு எதிரானப் போரில் வெற்றி அடைவதற்கான எந்த ஒரு வழியையும் விட்டுவைக்கவில்லை"-என்று கருத்துரை (Opinion) இதழின் எழுத்தாளர் அம்பலம் எழுதுகிறார். 
     
     இந்த வகையில்,  இப்போது,  இலங்கை அரசுத் தலைவருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் போட்டி ஏற்பட்டுள்ளது.  இரனில் விக்கிரமசிங்கே கேரளாவிலுள்ள குருவாயூர் கோயிலின் நெடுநாளைய ஆர்வம் மிகுந்த பத்தராம்!அரசுத் தலைவர் தேர்தலில் இரனிலை எதிர்த்து வெற்றி பெற்ற பின், மகிந்தா இராசபக்சே 2006 சனவரியில் குருவாயூர் வந்து நெய்யளித்துத் 'துலாபாரம்' சடங்கு நடத்துவதை ஒரு நேர்த்திக்கடனாகவே செய்தார்.

      அண்மையில் இந்தியாவந்த இரனில்,  தில்லியில் அரசியற் காரர்களையும் அதிகாரிகளையும் பார்த்துப் பேசிய பிறகு, காரி(சனி)யி்னால் (!) ஏற்படும் இடர்களிலிருந்து விடுபடத் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப் பூண்டி வட்டத்தில் தொலைவிலுள்ள இடமான திருக்கோலிக்காட்டில் உள்ள கோயிலுக்கு துய்தச்செலவு மேற்கொண்டார்.
� � g a ` �3 :p> 
                          
கவனிக்கப்படாதிருந்த அந்தக் கோயிலும், அதிலுள்ள காரி(சனிபகவான்) திருமுன்னும் புதியதாக தொன்ம(புராண) காரணங்கள் கண்டுகாட்டிப் பலரும் அறியுமாறு செய்யப்பட்டிருந்தன. யாரோ கணியம் பார்ப்பவரின் (சோசியர்) அறிவுறுத்தலின் பேரில் இரனில் இந்தக் கோயிலுக்கு வந்திருக்கிறார். இரனிலின் வருகை தமிழ்நாட்டுக் காவல், உளவுத்துறையினரால் மிகக் கமுக்கமாக வைக்கப்பட்டிருந்தபோதிலும், ஊர் மக்களுக்கு எப்படியோ செய்தி தெரிந்து, அவர்கள் ஏழு இடங்களில் அவரை வழிமறித்துக் கொந்தளிப்பான கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
  
            
            கொரடாச்சேரி என்னுமிடத்தில் வண்டி மாடுகளைச் சாலையின் குறுக்கே நிறுத்திக் கிளர்ச்சி செய்தார்கள். இரனில் கோயிலை அடைந்த போது, அவர் ஐந்நூறுபேர் கொண்ட கும்பலை நேர்கொள்ள வேண்டியிருந்தது; அவர்களில் பெண்கள் பேரெண்ணிக்கையினராய் இருந்தனர். கும்பலைக் கட்டுப்படுத்தக் காவலர்கள் போதவில்லை.
           
     கோயிலிலிருந்து திரும்புகையில், தமிழர்கள் உரிமைபெற உதவுவதாகக் கூறிக்கொண்டே பதற்றத்துடன் தப்பிச்செல்ல வேண்டியதாயிற்று.

            அரசியல்காரர்களை எல்லாநேரங்களிலும் ஏமாளிகள் ஆக்குவது கணியர்கள் மட்டுமே, அல்லர். மக்கள் ஏமாளிகளாக இருப்பதால்,  உளவுத் துறையினரும் கொளகையற்ற அரசியல் காரரரும் கணியர்களைப் பயன்படுத்தித் தம்முடைய அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள, கணியத்தின் வழி உளத்தியல் தாக்கம் உண்டாக்கு கின்றனர். 

            தேர்தல் நேரங்களில் எழுதப்படும் கணியப் பலன்கள் அரசியல் நோக்கம் உடையவையே.

                                                            ------------------
நன்றியுரைப்பு:
Tamilnet.com  இணைய தளத்திற்கு!
      
  
****************************************************************
 **

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

வள்ளியா வந்தாள்?




 (ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ.கோவூர் ***  தமிழாக்கம் : தமிழநம்பி)  
            பத்தாண்டுகளுக்கு முன், அனுராதபுரத்திற்கு அருகிலுள்ள ஆலங்குளாமாவைச் சேர்ந்த பதின்பருவப் பெண்ணான சிவி, நோய்களைக் குணப்படுத்துவது, வருவதுரைப்பது ஆகிய 'தெய்விய' ஆற்றல்களைத் திடீரென்று பெற்றாள். 'வள்ளி' என்ற பெண்கடவுள், அவள் மூலமாக வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்து வந்தது. 

           
சிவி-யின் புகழ் நாடெங்கிலும் பரவியது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் தோறும் சிவியின் தோட்டத்திலுள்ள சிறு கோவிலில், நெடுந் தொலைவி லிருந்தும் ஆண்களும் பெண்களும் கூட்டமாகச் சேரத் தொடங்கினர். இந்நாட்களில், இரவு முழுமையும் உடுக்கையொலி பாட்டுகளுடன் பூசைகள் நடந்தன. பூசையின் போது, சிவி மருள் வந்து - மெய்ம்மறந்த நிலைக் குள்ளாகி -நோய்களைக் குணப்படுத்துவதும், வருவது உரைப்பதுமான வியத்தகு நிகழ்ச்சிகளைச் செய்தாள். 

           
மருத்துவர்களால் குணமாக்க முடியாதவர்கள் என்று கைவிடப்பட்ட நோயாளிகளை அவர்களின் உறவினர்கள் சிவியிடம் அழைத்து வந்தனர். சிவி என்ன செய்தாள்? அவளுடைய 'தெய்விய'க் கைகளை அந் நோயாளிகளின் தலையில் வெறுமனே வைத்து அவர்கள் நெற்றியில் ஒரு 'துய்ய' நெய்யைத் தடவுவாள். இவை அனைத்தும் எளிய கையுறையான 'பதினான்கு வெற்றிலையில் மடித்து வைக்கப் பட்ட இரண்டு உருவா'வுக்குத்தான்! இச் சிறு காணிக்கையும் தர இயலாதார்க்கு இலவய மருத்துவம் அளிக்கப்பட்டது.

           
நோயைக் குணப்படுத்துகிறவள் என்பதைவிட, குறி சொல்கிறவள் என்றே சிவியை நாடெங்கிலும் தெரிந்திருந்தது. இப் புகழே, தொலைவான இடங்களிலிருந்தும் கூட்டத்தை அவள் வீட்டுக்கு அழைத்து வந்தது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சிவியி்ன் கோயிலுக்குச் செல்லும் சந்துக்கு எதிரிலிருந்த தலைச்சாலையில் வரிசையாக மகிழுந்துகள் நிறுத்தப் பட்டிருக்கக் காணலாம். வரையறுக்கப் பட்ட கட்டணம் இரண்டு உருவாவாக இருந்த போதிலும், கொழும்பிலிருந்து வந்த பணக்காரப் புரவலர்கள் மிக அதிகம் செலுத்தினர். பலருக்கு, அத்தொகை கட்டணமாக இல்லாமல், பெண்கடவுள் வள்ளிக்குச் செலுத்தும் காணிக்கையாகவே பட்டது.

           
சிவியிடம் கணி கேட்ட பலர், அவர்களைக் கொள்ளை யடித்தவர்களைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் வந்தவர்கள். தாம் துணிந்து இறங்கிய புதிய முயற்சியின் வெற்றி தோல்வி பற்றி அறிய வந்தவர்கள் சிலர். தன் பத்தர்களின் கேள்விகளுக்கு விடையளிப்பதில் சிவி ஒருபோதும் தவறியதில்லை. சிவியின் தந்தை அவர்களின் காணிக்கையைத் தண்டுவதில் ஒருபோதும் தவறுவதில்லை!

           
சிவியிடம் கணி கேட்டவர்கள், அவள் வருவது உரைத்ததைப் பற்றியோ, அல்லது குணப் படுத்தியதைப் பற்றியோ குற்றங் குறை கூறி இரண்டாம் முறை ஒருபோதும் வந்தது இல்லை. மாற்றாக, அவர்கள் இன்னும் திறமையாகக் குறி சொல்லும் மற்றவர்களிடம் சென்றனர். 

           
தேர்தல் நேரங்களில், சிவியின் தோட்டம் எதிர்பார்க்கக் கூடிய அரசியல் வேட்பாளர்களின் கூட்டத்தால் நிரம்பியிருக்கும். வெற்றி வாய்ப்புள்ளவர்கள், இல்லாதவர்கள் ஆகிய இருநிலை வேட்பாளர்களும் வெற்றி பெறுதற்குச் சிவியின் வாழ்த்துக்களைப் பெற்றுச் சென்றனர்! தேர்தல்கள் முடிந்தபின், வெற்றிபெற்ற வேட்பாளர்கள், தம் 'தொண்டர்களு'டன் நன்றிக் காணிக்கைச் செலுத்தற்குச் சிவியிடம் மறுபடி வந்தனர். தோல்வியுற்றவர்களோ, அடுத்த தேர்தலுக்கு முன், இன்னும் நன்றாகக் குறி சொல்லுகிறவர்களை நாடிச் சென்றனர்.

           
சிவியின் தெய்விய ஊடகத்தொடர்பு, சிவியின் பெற்றோருக்குக் குருட்டடி நற்பேறாக அமைந்தது. பத்தாண்டுகளுக்கு முன், அவள் தெய்விய ஊடகமாக ஆன நாளிலிருந்து குடும்பத்தின் பொருளியல் நிலை மிகப்பெரிய அளவில் முன்னேறத் தொடங்கியது. பொருளியல் மூலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதும் கோயிலின் நிலையும் மேம்படத் தொடங்கியது. பல தலைகளையும் பல கைகால்களையு முடைய கடவுளர் படங்கள், மாந்த உடலும் விலங்கின் தலையுமுடைய சில படங்கள் எனப் பல்வேறு வகைப்பட்ட படங்கள் மேலும் மேலும் கோயிலின் சுவர்களை அணிசெய்யத் தொடங்கின.

           
இரவு முழுவதும் ஒளியூட்டுவதற்காக மங்களை (பித்தளை) விளக்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப் பட்டது. வள்ளிக்காக ஒரு சிறப்பு இருக்கை கட்டியமைக்கப்பட்டது. பூசையின் போது சிவி அணிவத்ற்காக, பலநிற சிறப்பாடை ஒன்று உருவாக்கப் பட்டது. உடுக்கை அடிப்பவர்களும், பாடகர்களும் அதிகமாக வாடகைக்கு அமர்த்தப் பட்டனர். பூசையின் போது ஒலிப்பதற்காகக் கோன்மணியும் ஊது சங்குகளும் வாங்கப்பட்டன. 

           
சூடம் கொளுத்த ஒரு தனி பலிமேடை கட்டியமைக்கப்பட்டது. கோயிலின் முன்பாகச் சூறைத் தேங்காய் உடைப்பதற்கெனப் பலகைக்கல் ஒன்று நடப்பட்டது. கடவுளர் படங்கள் மல்லிகை மலர் மாலைகள் அணிவிக்கப் பட்டன. நோயரின் தலையில் தடவுதற்காக ஒருவகை 'துய்ய' நெய் உருவாக்கப் பட்டது. பரந்தகன்ற சட்டமிடப்பட்ட வள்ளியின் படம் சிவியின் இருக்கைக்கு எதிரே வைக்கப் பட்டது. அளவுக்கதிகமாக மாலைகள் இடப்பட்ட இப் படத்தின் இருபுறங்களிலும் இரண்டு குத்துவிளக்குகள் எரிந்தன. பத்தர்கள் இப்படத்தின் முன்பாகப் பூச் சொரிந்தனர். 

            '
சா-எலா'வைச் சேர்ந்த இலங்கைப் பகுத்தறிவாளர் அமைப்பின் உறுப்பினரான திரு. ஈ.சி.எசு. பெர்னான்டோ சிவியின் பெற்றோர்களை அறிந்தவர். சிவியை 'மருள்' வந்தவளைப் போலும் நடந்து கொள்ளச் செய்தது வள்ளியோ அல்லது வேறு ஆவியோ இல்லை, ஒருவகை மனநோயே என்று சிவியும் அக் குடும்ப உறுப்பினர்களும் புரிந்துகொண்டு ஏற்கும்படி செய்வதில் அவர் வெற்றி கண்டார். 

           
சிவியின் பெற்றோரும் எண்ணற்ற பத்தர்களும் ஏமாற்றமடைய, 1964 ஏப்பிரல் 10 முதல், சிவி வள்ளியின் வேடமேற்க மறுத்துவிட்டாள். அவளுடைய பெற்றோரும் உடுக்கை அடிப்போரும் பாடுவோரும் ஒன்றிணைந்து திரும்பத் திரும்பக் கூறியும் சிவி பூசையில் கலந்து கொள்ள மறுத்து விட்டாள். தான் பிற பெண்களைப் போல் இருக்க விரும்புவதாகக் கூறி மறுத்தாள். 

நேர்காணல் 

           
1964 செப்டம்பர் 21 அன்று, இலங்கைப் பகுத்தறிவாளர் அமைப்பின் முன்னாள் செயலரான திரு. பெர்னான்டோ, தேர்வுகள் துறையில் பணிபுரியும் அவருடைய நண்பர் திரு. சோமதிலகேவுடன் உளத்தியல் மருத்துவத்திற் காகச் சிவியை என்னிடம் அழைத்து வருதற்கு நாள் உறுதி செய்ய வந்தார். 1964 செப்டம்பர் 26, காலை 9.30 மணிக்கு நேர்காணல் என்று முடிவு செய்யப்பட்டது. 

     திருவாளர்கள் பெர்னானடோவும் சோமதிலகேவும், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியையான சோமதிலகேயின் தாயாரும், ஆங்கிலப்பள்ளி ஆசிரியையான செல்வி கொடிக்காராவும், சிவியும், அவளுடைய தந்தைவழிப் பாட்டியும் கொண்ட குழு குறிப்பிட்ட நாளில் வந்து சேர்ந்தது. அக்குழுவினருடன் வருவார்களென்று எதிர்பார்க்கப்பட்ட சிவியின் பெற்றோர் அனுராதபுரத்தில் இருந்து குறித்த நேரத்தில் வந்து சேரத் தவறினர். 

     என்னுடைய புலனாய்வைச் சிவியின் பாட்டியிடம் தனிமையில் கேட்டுத் தெரிந்து கொள்வதின் வழித் தொடங்கினேன். செல்வி கொடிக்காரா மொழிபெயர்ப்பாளராக இருந்தார். அந்தப் பாட்டியிடமிருந்து கீழ்க்காணும் செய்திகளை என்னால் திரட்ட முடிந்தது.

     சிவியின் இப்போதைய அகவை இருபது. அவள் பத்தாண்டினளாக இருந்த போது ஒருநாள் பள்ளிக்கூடத்தில் நினைவிழந்தாள். பள்ளிக்கூடப் பொறுப்பாளர்கள் அவள் பெற்றோர்க்குச் சொல்லி யனுப்பினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அரசு மருத்துவரிடம் சிவி அழைத்துச் செல்லப்பட்டாள். அடிப்படையாக அவளிடம் எந்தப் பிழைபாடும் இல்லை எனவும், செரிமானமின்மையாலோ, வயிற்றின் மிகுநிறைவு காரணமாகவோ மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அம்மருத்துவர் கருதினார். 

     இரண்டு மாதங்களுக்குப் பின்னர், வயலில் இருந்தபோது, சிவி இரண்டாம் முறையாக மயக்கமுற்றாள். மறுபடியும் அவள் அம் மருத்துவரிடம் கொண்டு செல்லப் பட்டாள். இம்முறை, அவர் சிவியை வியன்னாக்காரரான நரப்பு-உளத்தியல் மருத்துவர் கிரில்மேயரிடம் காட்டும்படி அறிவுறுத்தினார். 

     கொழும்பு மருத்துவமனையில், மருத்துவர் கிரில்மேயர், சிவியின் மூளை அலைகளை மின்துகளிய மூளைவரைவி-யில் பதிவு செய்தார். அமைதிப்படுத்தும் மருந்துகள் சிலவற்றைக் குறித்துக் கொடுத்தார். அதன் பிறகு ஏதும் தொல்லை இல்லாதிருந்ததால் சிவி பள்ளிக்குச் செல்வதைத் தொடர்ந்தாள். 

சூழியம்
     சில மாதங்களுக்குப் பின், சிவி மறுபடியும் உணர்விழப்பு - மயக்கம் - அடைந்தாள். இம்முறை பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் தீய ஆவிகளே சிவிக்கு ஏற்பட்ட தாக்கத்திற்குக் காரணம் என்று முடிவு செய்தனர். மருத்துவர்களிடம் காட்டிக் "காலத்தை வீண்டிப்பதை"விடத் திறமையான மந்திரக்காரரிடம் காட்டுவதற்கு இதுவே நேரம் என்று அவர்களனைவரும் கருதினர். இப்படியாகச் சிவி ஒரு மந்திரக்காரனிடம் அழைத்துச் செல்லப் பட்டாள். 

     அம் மந்திரக்காரன், சிவியின் கடுந் துனபத்திற்குக் காரணம் ஒரு தீயஆவி என்று உறுதியாகக் கூறிப், பேயோட்டச் சடங்குச் செய்ய வேண்டு மெனக் கூறினான். அச் சடங்கின்போது, அப் பேயோட்டி, சிவியின் தோளில் ஒரு மந்திரித்த கயிற்றைக் கட்டினான். கழுத்தில் ஒரு பட்டுத் துணியைச் சுற்றினான். அந் நாளிலிருந்து, சிவி மயக்க மடைந்ததோடு, தொடர்பற்ற சொற்களை அவ்வப்போது முணுமுணுக்கத் தொடங்கினாள். சிவியின் பெற்றோர் அவளைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர். 

     அவளுடைய நிலை மேலும் மோசமடைந்தததால், சில நல்லெண்ணக் காரர்களின் அறிவுறுத்தலின்படி, புத்தாலம் மாவட்டம் பகலகாமாவில் கடவுளச்சி வள்ளிக்குக் காணிக்கை யாக்கப்பட்ட புகழ்மிக்கக் கோயிலுக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனர். இந்தக் கோயிலின் பூசாரி முழுக் கதையும் கேட்டான். ஆரவாரமான மந்திரிப்பிற்குப் பிறகு, சிவியின் பெற்றோரிடம், அவளைப் பிடித்திருக்கும் பேயை ஓட்ட, அடுத்தடுத்த மூன்று நாட்களில் மூன்று சிறப்புப் பூசைகள் நடத்த வேண்டுமென்றான். 

     அவர்கள் வீட்டிற்குச் செல்லலா மென்றும், ஒரு குறிப்பிட்ட நாளில் முதல் பூசையை நடத்த வர வேண்டுமென்றும் சொல்லப் பட்டனர். அந்தப் பூசாரி, அம்மூன்று பூசைகளையும் நடத்துவதற்காகக் கொண்டு வரவேண்டிய பொருள்களின் பட்டியலை முழுமையாகத் தந்தான். அவனால் குறித்துக் கொடுக்கப்பட்ட பொருள்களில் சிவியின் உயரத்தில் தூய தங்கத்தில் செய்யப்பட்ட தொடரி (chain)யும் ஒன்று. 

பூசைகள் 

     4அடி 10 விரற்கிடை நீளமுள்ள தங்கத் தொடரி உள்பட பல்வேறு பொருள்களைத் திரட்டுவதற்கே அடுத்த சில நாள்கள் சரியாயிருந்தன. ஒப்புக்கொண்ட பொருள்கள் அனைத்தையும் பெறுவதில் ஆன பெருஞ்செலவு அல்லாது, அப் பூசாரிக்கு மூன்று நாள்களும் உருவா 137, 147, 157எனப் பூசைக் கட்டணம் கொடுக்கப்பட வேண்டும். மூன்று நாட்களும் பூசையின் போது, சிவி மெய்ம்மறந்த நிலைக்கு ஆளாக்கப் பட்டு, அப் பூசாரியுடன் கூத்தாடினாள். 

     மூன்றாம் நாள் பெருங்களிப்புக் கூத்து நிலையில், சிவி, தன்னை வள்ளி என்று கூறிக் கூச்ச லிட்டாள். அந்தக் கோயில் முறையாக நல்ல நிலையில் பேணப் படாததால் வள்ளி இனிமேல் அங்கு வரமாட்டாள் என்றும், ஈடாக சிவியி்ன் வீட்டிற்கு வருவாள் என்றும் கூறினாள். பூசாரியின் எதிர்காலத் தொழிலுக்கு இது ஒரு பேரடி யாகியது. மூன்றாம் நாளுக்குப் பிறகு அக்கூட்டத்தினர் ஆலங்குளாமாவிற்குத் திரும்பி வந்தனர். 

     இப்போது சிவி அவளுடைய கழுத்திலும் கைகளிலும் நிறைய மந்திரிக்கப்பட்ட கயிற்றைக் கட்டியிருந்தாள். அந்தப் பூசாரி சிவிக்கு எந்தத் தொல்லையும் வராது என்று உறு்தி அளித்திருந்த போதிலும், அடுத்த நாள் சிவி ஆழ்ந்த நினைவிழந்த நிலைக் குள்ளானாள். அம் மெய்ம்மறந்த நிலையின் போது அவள் பூசை நடத்துவதற்காகத் தோட்டத்தில் ஒரு கோயில் வேண்டுமெனக் கேட்டாள். 

     இதனைக் கடவுளச்சி வள்ளியின் கட்டளையாக எண்ணிக் கொண்டு தந்தையார் பெருந் தொகையைச் செலவிட்டு, அவருடைய தோட்டத்தில் ஒரு கோயில் அமைத்தார். வாடகைக்கு உடுக்கை அடிப்போர் மற்றும் மந்திரக்காரர் உதவியுடன் நாள்தோறும் பூசைகள் புதிய கோயிலில் நடந்தன. 

     ஒவ்வொரு நாளும் உடுக்கை அடித்ததும் சிவி மெய்ம்மறந்த நிலைக்குள்ளானாள். பூசையின் போது கோயிலில் கூடிய அக்கம் பக்கத்தார் கடவுளச்சி வள்ளியே சிவியின் வழியாகப் பேசுவதாக உறுதி செய்து அவளை வழிபடத் தொடங்கினர். 

     இரவு பூசைகள் இரண்டு கிழமைகள் நடந்தன. ஒவ்வொருநாளும் 'மருள்' வந்து ஆடுவது சிவியைக் கடுஞ் சோர்வுக் குள்ளாக்குவதை அறிந்து, இரவு பூசைகள் செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே வைத்துக் கொள்ளத் தந்தையார் முடிவு செய்தார். 

     கடவுளச்சி வள்ளி சிவியின் உடலில் தோன்றுவதைப் பற்றிய செய்தி நாட்டி்ல் பரவத் தொடங்கியது. எண்ணற்ற மக்கள் வள்ளியின் அருளைப் பெறவும் அவர்களுடைய சிக்கல்கள் தீர்க்கப் பெறவும் அந்தப் புதிய கோயிலுக்கு வரத் தொடங்கினர். சிவியின் பெற்றோர் அவர்களுடைய மகளைப் பற்றிய கவலையை விட்டனர். 

     கடவுளச்சி வள்ளி சிவியி்ன் உடலில் வருவதை, அவள் சிவிக்கு அருளிச் செய்வதாகப் பெற்றோர் கருதினர். கடவுளரின் அருள் வாழ்த்தே அது என அவர்கள் கருதிக் கொண்டனர். பொருள் நிலையிலும் கூட அவர்கள் வளம் பெற்றனர். குடும்பத்திற்குப் பொருள் வரும்படியையும் எளிதில் நம்புகின்ற ஆயிரக்கணக்கான முட்டாள்களுக்குக் கற்பனை நலனையும் தந்த இந்த வளமான காலப்பகுதி பத்தாண்டுகளுக்குத் தொடர்ந்தது. 

     சிவியின் வேண்டுகோளின்படி, 1964 ஏப்பிரல் 10-இல் பூசைகள் நிறுத்தப் பட்டதால், அந்தக் கோயில் தகர்த் தழிக்கப்பட்டது. உடுக்கை அடிப்போரும் பாடகரும் அனுப்பிவிடப் பட்டனர். சிவி மருள் வரும் நிலையினின்றும் விடுதலையானாள். பூசைகள் நிறுத்தப் பட்டபின், நான்குமாத காலத்தில், சிவி இரண்டு முறை நினைவிழந்த நிலையுற்றாள். ஆனால், ஒருபோதும் வள்ளிபோல் நடந்து கொள்ளவோ பேசவோ இல்லை. 

     இந்தக் கட்டத்தில், சிவியின் பாட்டி கீழே அனுப்பப் பட்டாள். உசாவுதற்காக சிவி மேலே அழைக்கப் பட்டாள். செல்வி கொடிக்காரா மொழிபெயர்ப் பாளராக இருந்தார். சிவியின் சொந்த வாழ்க்கையைப் பற்றியும் நெருங்கிய உறவு பற்றியும் அவளுடைய உள்மன உணர்வுகளைப் பற்றியும் பேரளவிலான செய்திகளை என்னால் திரட்ட முடிந்தது. 

     சிவியை அறிதுயிலில் (hypnosis) இருத்தி, வள்ளி என்று எவருமே இருக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாத வள்ளியை அவளுடலில் மருளாகப் பெற முடியாது என்றும் அவள் புரிந்து கொள்ளும்படிச் செய்யப்பட்டாள். 

     சிவிக்குச் சிங்கள மொழியில் நன்றாக எழுதவும் படிக்கவும் தெரியும். அவள் படிப்பைத் தொடர வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். மணம் செய்து கொண்டு வாழ்வதை அவள் மனம் விழைந்தது. இனி எப்போதும் வள்ளி அவளுடலில் மருளாக வரமாட்டாள் என்று அவள் மனம் ஏற்கும்படி உரைத்ததும், அவள் முகம் மலர்ந்து ஒளிர்ந்தது. 

     அவர்கள் இருக்கும் இடமான நிகோம்போவிற்குச் சென்றதும் , முதல் வேலையாக ஆலங்குளாமாவில் உள்ள அவளுடைய தாய்க்கு, எல்லாத் தொல்லைகளி லிருந்தும் அவள் விடுதலை பெற்றதை எழுதப் போவதாக என்னிடம் கூறினாள். 

     என்னுடனும் என் துணைவியாருடனும் சிவியை திரு.சோமதிலகே ஒளிப்படங்கள் எடுத்த பிறகு, அக் குழுவினர் சென்றனர். 

பகுப்பாய்வு 

     முதலில், சிவி இசிப்பு நோயின் மென்மையான தாக்குதலுக் குள்ளானாள். மருத்துவர் கிரில் மேயரின் மருத்துவத்தைத் தொடர்ந் திருந்தால் விரைவிலேயே அவள் இயல்பு நிலை பெற்றிருக்கக்கூடும். அவளுடைய பெற்றோர் செய்த முதல் தவறு மந்திரக்காரனிடம் அறிவுரை கேட்டதே! தொடக்கநிலை மாந்தர் உடல் நோய்களுக்கும் மன நோய்களுக்கும் தீய ஆவிகளே காரணம் என்று நம்பினர். தொடக்க கால மாந்தனுக்கு எல்லா நோய்களுக்கும் மருந்து, சூழியக்கலை(witchcraft)யே! 

     மருத்துவ அறிவியலின் வேகமான வளர்ச்சியால், நாகரிக நாடுகளில் சூழியக்கலை மறைந்து மருத்துவ மனைகளும் தகுதி வாய்ந்த மருத்துவர்களும் இடம் பெற்றனர். அவப்பாடாக - போகூழாக - சூழியக் கலையானது, மாயமருத்துவம், வருவதுரைத்தல் முதலிய வடிவங்களில் இருப்பதால், இன்னுங்கூட பிற்பட்ட நாடுகளிலுள்ள அறியா மக்கள் நாடுவதாக உள்ளது. 

     சிவியின் துன்பம் தீய ஆவி பிடித்துக் கொண்டதின் காரணமாகவே என்று மந்திரக்காரன் கூறிய போது, அவளுடைய வலிவற்ற, கருத்துத் தூண்டுதலுக்கு உட்பட்ட அவளுடைய மனம் அவளைப் பேய்பிடித்தவள் போலப் பேசவும் நடந்து கொள்ளவும் செய்தது. 

     கோயிலிலும் கூட, கருத்துத் தூண்டுதலுக்கு உட்பட்ட தன்மையிலேயே, அவள் வள்ளியாகப் பேசி நடந்து கொண்டாள். பின்னர், வள்ளி பிடித்திருப்பதை மறுத்துத் திரு. பெர்னான்டோ பகுத்தறிவுக்கொப்ப எடுத்துரைத்ததைக் கேட்டதும், அவளுடைய உள்மனம் வள்ளியின் நினைவுகளில் இருந்து விடுதலை பெற்றது. திரு.பெர்னான்டோவின் விளக்கத்தின் விளைவே, அவள் ஏப்பிரல் 10-இலிருந்து பூசையில் பங்குபெற மறுத்தது. 

     என் அறிதுயில் கருத்துரைகள், அவள் மனத்தின் எண்ணத்தில் இருந்த வள்ளியை முழுமையாக அடியோடு அழிக்க உதவியது. இன்று, அவள் இயல்பாக வாழ்கிறாள். அவளுக்குத் திருமணம் நடைபெற விருக்கிறது என்று கேள்விப்பட்டேன்.


 ---------------------------------------------------------------------------------------------------------------------------------