இது தகுமா? இது முறையா? இது அறம்தானா?
தமிழ்நாடு முழுவதும் கல்லூரிகளுக்குள் கருத்தரங்கப் புனைவில் புகுந்து ஆள் பிடித்து மாணவரிடையே பிளவுண்டாக்கி சாதி மத வெறி பிடிக்கவைக்கும் வேலையை நுட்பமாகச் செய்வதே இந்த அமைப்பின் வேலை. இந்த மதவெறி அமைப்புடன் சேர்ந்துகொண்டு அத்துடன் வெளிப்படையாக ஒத்துழைத்து கெடுவினை செய்ய முன்வந்திருக்கிறது கோவைக் ‘கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி’.
தமிழ்நாட்டரசின் நிதியில் இயங்கும் அரசு உதவிபெறும் கல்லூரியான இதற்கு வெளிப்படையாக மதவெறி அமைப்போடு கைகோத்துச் செயல்படும் துணிச்சல் எப்படி வந்தது? உயர்கல்வித் துறை இக்கல்லூரி மீதும், நச்சுவிதை தூவும் தொடர்புடைய ஆசிரியர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்காதது ஏன்? இளைய தலைமுறையை மதவெறிப் பிடிக்குள் சிக்காமல் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை அன்றோ! அறிவாளர் கடமை அன்றோ!
கருத்தரங்கம் நடத்துவது தமிழ்த்துறை! கட்டுரையைத் தமிழில் மட்டுமல்ல இந்தியிலும் சங்கதத்திலும் கூட எழுதலாம் என்கிறது அறிக்கை! இவர்களைப் புரிந்துகொள்ள இந்த ஒருவரி போதாதா?
சிந்துசமவெளி நாகரிகத்தைச் 'சிந்து சரசுவதி நாகரிகம்' என வரலாற்றைத் திரிக்கும் மோசடிக்குப் பெயர் ஆய்வுக்கருத்தரங்கா? அதற்குத் துணைபோவது பிழை என்பதை அறியாதவர்களா ஆசிரியர்கள்? தமிழ்நாட்டரசின் உயர்கல்வித்துறை உறங்குகிறதா? உயர்கல்வித்துறை அமைச்சருக்குத் தெரிந்தே இக்கொடுமை நடக்கிறதா?
கல்லூரிகளை மதவெறியர் பிடிக்குள் கொண்டுசெல்லும் இதுபோன்ற அழிவு முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டாமா? கல்வித்துறையைக் காவிவயமாக்கக் கைகொடுப்போரை அடையாளம் கண்டு அப்புறப்படுத்த வேண்டாமா?
இக் கருத்தரங்கில் கலந்து கொள்ள தங்கள் பெயரை இந்த அறிக்கையில் போட ஒப்பியவர்கள் எந்த நெருக்கடியால் இப்படிச் செய்தார்கள் என்பதை அரசு கண்டறிய வேண்டாமா?
மாந்த நேயம் காப்பாற்றப்பட மதவெறி முயற்சிகளைக் களையெடுப்பது மிக முகன்மைப் பணியன்றோ? மதவெறியை மறைமுகமாகத் தூண்டும் அமைப்புகள், கல்லூரிகளுக்குள் நுழைய விடாமல் தடுக்க வேண்டாமா?
நஞ்சுக்கு இனிப்புத் தடவி நீர்வளப் பாதுகாப்பு போன்ற முகமூடிகளோடு வருவது அவர்களின் வழக்கம். முகமூடியைக் கிழித்துக் காட்டி மதவெறிக் கொடுமுகத்தை அடையாளம் காட்டும் கடமை, அறிவு வளர்ச்சியை விரும்பும் அனைவரின் கடமை.எனினும் அரசு விழிப்படைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
கோவைக் கல்லூரியில் திசம்பர் 12, 13-ஆம் நாள்களில் நிகழவுள்ள இந்தக் அழிவுச்செயலை நிகழாமல் தடுப்பது உடனடித் தேவையன்றோ? இக்கருத்தரங்க ஆய்வுக் கருப்பொருள்களில் ஒன்றாகத் ‘திராவிட சித்தாந்தங்களின் சிதைவுகள்’ என்பதுவும் இருப்பதை அறிந்துணர வேண்டாமா?
எனவே, இக்கருத்தரங்கு நடத்த இசைவளித்த தமிழ்நாட்டரசைக் கேட்கின்றோம் –இது தகுமா? இது முறையா? இது அறம்தானா?
(முகநூலில் செய்தி அறிவித்த அன்பும் மதிப்புமார்ந்த செந்தலை கவுதமன் ஐயாவிற்கு நன்றி!)
(இந்நிகழ்வு திசம்பர் 12, 13ஆம் நாள்களில் நடக்கவில்லை. நிகழ்வை நிறுத்திவைத்திருப்பதாகச் செய்திகள் கூறின. ஆனால், அதே ‘கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி’யில் இருநாள் மாநாட்டில் தமிழ்நாட்டு ஆளுநர் 19-12-2025 வெள்ளிக்கிழமை கலந்துகொண்டு பேசியிருப்பதாக 20-12-2025 ‘தைம்சு ஆப்பு இந்தியா’ நாளிதழில் ஆறாம்பக்கத்தில் சிறிய அளவில் வந்த செய்தி கூறுகிறது)