வியாழன், 7 ஜூலை, 2016

சொல்விளக்கம்: ஐயன்சொல்விளக்கம்:
ஐயன்:

ஐ என்பது தலைவனைக் குறிக்கும் பெயர்.
என் ஐ முன் நில்லன்மின் என்பது குறள்.

தலைவன் எனினும் பெரியோன் எனினும் ஒக்கும்.
அரசன் ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன் என ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்க்கெல்லாம் ஐ என்பது பொதுப்பெயர்.
தாயைக் குறிக்கும்போது அது ஆய் என்று திரியும்.
ஐ என்பது அன் ஈறு பெரின் ஐயன் என்றாகும்.
ஐயன் என்பதற்கு ஐயை என்பது பெண்பால்.
அண்ணனைக் குறிக்கும்போது ஐ, ஐயன் என்னும் சொற்கள் தன்னை, தமையன் எனத் தன் தம் என்னும்முன்னொட்டுப் பெறும்.

தமிழருட் பலவகுப்பார், அவருள்ளும் சிறப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தந்தையை ஐயன் அல்லது ஐயா (விளிவடிவம்) என்றே அழைக்கின்றனர். ஆசிரியர் எவ் வகுப்பாராயிருப்பினும், அவரை ஐயர் என்றழைப்பது வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தார் வழக்கு.

பெரியோரை எல்லாம் ஐயா என்று குறிப்பதும் விளிப்பதும் தொன்றுதொட்டுத் தமிழர் வழக்கம். மக்களுட் பெரியார் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ் நூன்மரபு.

ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்பது தொல்காப்பியம்.

பிங்கல நிகண்டில் முனிவரைப் பற்றிய 3ஆம் பகுதி ஐயர் வகை எனப் பெயர் பெற்றுளது.

முனிவரிலும் பெரியவர் தெய்வங்க ளாதலின், தெய்வங்கட்கும் கடவுகட்கும் ஐயன் என்னும் பெயர் விளங்கும்.
ஐயன் = சாத்தன் (ஐயனார்), கடவுள்.
ஐயை = காளி, மலைமகள்.
இங்ஙன மெல்லாம் தொன்றுதொட்டு வழங்கும் ஐயன் என்னும் தென்சொல்லை, ஆர்ய என்னும் வடசொற் சிதைவென்பர் வடவர்.

(பாவாணருக்கு நன்றி! தமிழியற் கட்டுரைகள் பக்கம்-11. தமிழ்மண், சென்னை)

--------------------------------------------------------------