திங்கள், 29 ஆகஸ்ட், 2016

சிதைத்துப் பொருள் கூறப்படும் தமிழ்ச்சொற்கள் – உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமியார் விளக்குகிறார்!சிதைத்துப் பொருள் கூறப்படும் தமிழ்ச்சொற்கள் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமியார் விளக்குகிறார்!
--------------------------------------------------------------------


     நாடாளும் வேந்தர்க்கு அடுத்த நிலையில் வணிகரை வைத்துச் சிறப்பிப்பது தமிழ்மரபு. அரசர் வணிகர் வேளாளர் என நிறுத்தி, இம் மூவருள்ளும் துறவு பூண்டோர் அந்தணர் நிலையில் அடங்குவது பற்றி, அந்தணர்களை இறுதியில் வைப்பர்.

     பார்ப்பாருள் துறவு மேற்கொண்டோர் வருணம், ஆசிரம்ம் என்ற வரம்பிறந்து அந்தணருள் அடங்குதலால், ஏனையோர் பார்ப்பனர் என வழங்கப்பட்டனர். அந்தணர் என்போர் அறவோர் என்ற தமிழ் மறையைப் புறக்கணித்து, வேத நூலின் அந்தத்தை அணவுவோர் அந்தணர் எனத் தாந்தாம் வேண்டியவாறு பொருள்கூறிக்கொள்வா ராயினர்.

     இவ்வாறே, எத்துணையோ தமிழ்ச்சொற்கள் உண்மைக்கு மாறான நிலையில் சிதைத்துப் பொருள் கூறப்பட்டுள்ளன. சொற்களுக்கு வரலாறு காணும் ஆராய்ச்சி தலையெடுக்குமாயின் மேலே காட்டப்பட்டது போலும் உண்மைகள் பல வெளிப்படும்...

     இந்திமொழி பேசும் மக்களுக்கிருக்கும் மொழிப்பற்றில் நூற்றில் ஒரு கூறுதானும் தமிழர்க்கு அமையுமாயின் எத்துணையோ நலங்கள் தமிழ்த்துறையில் தோன்றிவிடும்; இன்னும் அது தோன்றவில்லை.

     அரசர் வணிகர் என்ற பிரிவுகள் சாதிப்பிரிவுகள் அல்ல; அவரவர் மேற்கொண்ட தொழிலகளுள் தலைமை பற்றியும் பன்மை பற்றியும் வந்தனவாகும். வணிகர் வாணிகமே பெரிதும் செய்தனர்; ஆயினும், போர்ப்பயிற்சியும் பெற்று அதனையும் வேண்டுமிடத்து ஆற்றிவந்தனர்.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, சைவ இலக்கிய வரலாறு பக்கம் 427,428., இனியமுது பதிப்பகம், சென்னை-17)
----------------------------------------------------------------------