தமிழாக்கம் - உண்மை நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழாக்கம் - உண்மை நிகழ்ச்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஜூலை, 2008

வாழ்க்கையில் முதல்முறை!


(ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ. கோவூர்  *  தமிழாக்கம்: தமிழநம்பி) 

            ஐந்து தடவைகளில், முதல் தடவையாக மாரடைப்பால் நான் துன்புற்றபோது போது, 1959ஆம் ஆண்டில் கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். நான் இருந்த அறையில் மூன்று படுக்கைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் சிரீலங்காப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த திரு.குணசேகராவும், இன்னொன்றில் மொரட்டுவா பகுதியைச் சேர்ந்த கிறித்தவ மதத் தலைவரான அருள்திரு வும், மூன்றாவதில் பகுத்தறிவுத் தலைவரான நானும் இருந்தோம். நாங்கள் மூவருமே நெஞ்சுப்பைக் குருதித் திரைப்பு’ (Coronary thrombosis) நோயினால் தாக்கப்பட்டிருந்தோம்.
            ஒரு காரி(சனி)க்கிழமை மாலையில் பணிக்குழுச் செவிலி, அருட்டிரு வுக்கு கொழும்பு ஆயர் ஆரண்மனையிலிருந்து வந்த செய்தியை அவருக்குத் தெரிவித்தார். மறுநாள், நோயுற்றிருக்கும் அருள்திரு வின் நலத்திற்காகத் திருப்பலி வழிபாடு (Holy Mass) செய்வதற்காகக் கொழும்பு ஆயர் மருத்துவமனைக்கு வருகின்றார் என்பதே அச்செய்தி. அச்செய்தியைக் கேட்டவுடன் சமயக்குரு வுக்குப் பேரச்சம் ஏறபட்டது. தாம் விரைவில் இறந்துபோய்விடுவோம் என்பதற்காகத் தமக்கு இறுதி எண்ணெய்க்காப்பு (Last Unction) தருவதற்காகவே ஆயர் வருகிறாரென அவர் கருதிக் கொண்டார்.           மறுநாள், கொழும்பு ஆயர் பேரருள்திரு உரோலோ கிரகாமும் அவருடைய கருமியக்குரு அருள்திரு கேனன் பாசில் செயவர்த்தனாவும் குழுவினருடன் அறைக்குள் வந்தனர். அவர்கள் உள்ளே வரும்போதே, நான் ஒரு புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே, படிப்பதைப்போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.
            வழிபாட்டு நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் ஆயர் என்னிடம் வந்தார்; கருமியக்குரு குணசேகராவிடம் சென்றார்.
            என் கையிலிருந்த நூலின் பெயரைப் பார்த்து விட்டு,“கருத்து மாறுபாடு மிக்க நூலைப் படிக்கின்றீர்களே!என்றார் ஆயர். என் கையிலிருந்தது அறிஞர் கின்சே எழுதிய அமெரிக்க இளைஞரின் பாலியல் நடத்தைகள்என்ற புத்தகம்!
            உங்கள் கையிலுள்ள திருமறை(Bible) அளவிற்கு இந்நூலில் அதிக முரண்பாடு இல்லைஎன்றேன் நான். அறிஞர் கின்சேயும் அவருடைய மாணவர்களும் நடத்திய ஆய்வில் திரட்டிய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, கின்சே இந்நூலை எழுதியிருக்கின்றார். ஆனால், இத் திருமறையோ அராபிய இரவுகள்’, ‘கல்லிவர் செலவுகள்போலும் முழுக் கற்பனைக் கதைகளையே கொண்டதா யிருக்கின்றதுஎன்றும் கூறினேன்.
            நீர் நம்பிக்கையற்றவர் போல் தெரிகிறது! உங்களுக்கு என்ன உடல்நலக்குறை, உடன்பிறப்பே!என்று கேட்டார் ஆயர்.
            உங்கள் மொரட்டுவா அருள்தந்தைக்கு வந்துள்ள அதே நோய்தான்என்றேன்.
            நீங்கள் நலம்பெற இறைவனிடம் வேண்டிக் கொள்ளட்டுமா?” என்றார் ஆயர்.
            வேண்டவே வேண்டாம்! மருத்துவத்தினால் குணமடையவே நான் இங்கு வந்தேன். திறமைமிக்க மருத்துவக் கவனிப்பினால் குணமடைந்தும் வருகிறேன். என்னைக் குணப்படுத்திய பெருமையில் ஒரு பங்கை நீங்கள் பறித்துக் கொள்வதை நான் விரும்பவில்லை! உங்க            ள் வழிபாடுகள் பயனில்லாதவை என்பதை நீங்களே அறிவீர்கள்! வழிபாட்டினால் குணமாக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் அருள்தந்தையை மருத்துவ மனையில் சேர்த்திருக்க மாட்டீர்களல்லவா? இப்போது, அவர் உடல்நிலை தேறி வருகின்றார். அவரைக் குணமடையச் செய்த சிறப்பில் உங்களுக்குப் பங்கு உண்டு என்று காட்டிக் கொள்ளவே நீங்கள் வந்திருக்கின்றீர்கள்!
            என்னுடைய நேரிடையான, ஒளிவுமறைவற்ற குற்றச்சாட்டுகளைக் கேட்டு ஆயர் பின்வாங்கியபோது, கருமியக்குரு, அவரிடம் வந்து நான் யாரென்பதை அவர் காதருகில் கிசுகிசுத்தார்.
            அதன்பின்னர், “நான் நோயுற்ற ஒருவருக்காக இறைவனை வேண்டிக்கொள்வதாகக் கூறியும், அவர் அதை வேண்டாமென்று மறுத்துவிட்ட நிகழ்ச்சி என் வாழ்வில் இதுவே முதல் முறை!என்று கூறிவிட்டுச் சென்றார் அந்த நல்ல ஆயர். 
            சாவை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளின் மருத்துவமனை அறைகளும், தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சிறையாளிகளின் சிறை அறைகளும் மதகுருமார்களுக்கு மிகநல்ல வேட்டைக் காடுகளாக இருக்கின்றன! 

****************************************************************************************

வியாழன், 19 ஜூன், 2008

மூடநம்பிக்கைகள் இங்கும் அங்கும்!


                   ( ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ.கோவூர்   தமிழாக்கம் : தமிழநம்பி ) 


            1953ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில், கொழும்பில், ஓர் அமெரிக்கக் கணவன் மனைவி இணையை உணவுவிடுதி யொன்றில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தியாவில் ஒருமாதச் சுற்றுச் செலவிற்குப் பின் அவர்கள் சிரீலங்காவிற்கு வந்திருந்தனர்.
            நான் அவர்களிடம் இந்தியாவைப் பற்றிய அவர்களின் கருத்தைக் கேட்டேன். அந்த அம்மையார், ‘நல்ல நாடு; ஆணால், மக்கள் மூடநம்பிக்கை முட்டாள்களின் கூட்டம்என்று கூறினார்.
            அப்பெண்மணி அலகாபாத் பிரயாகையில் அந்த ஆண்டு கும்பமேளாவின் போது அவர்கள் பார்த்த கொடுமையான காட்சியை விளக்கிக் கூறினார்:            கங்கை, யமுனை மற்றும் வானத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாமல் கீழே ஓடிவருவதாக ஏமாளி மக்கள் நம்பும் கற்பனை ஆறான சரசுவதி ஆகிய மூன்றும் கூடுமிடத்தில் ஏறத்தாழ 60 இலக்கம் மக்கள் சேர்ந்திருந்தனர்.
            அந்த ஆறுகள் கூடுமிடத்தில் கும்பமேளாவின் நன்னிமித்த நேரத்தில் நீரில் மூழ்கி அவர்களுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்ளவே அங்கேக் கூடியிருந்தனர்.
            சங்கு ஊதியும் கோயில் மணிகளை ஒலித்தும் நன்னிமித்த நேரம் தெரிவிக்கப் படுகின்றது. இலக்கக் கணக்கான ஆண்களும் பெண்களும் அந்நேரத்தைத் தவறவிடக் கூடாது என்ற பேரார்வத்துடன், அதிகம் வழுக்கும் மண்ணில் விழுந்து விட்டவர்களைத் தூக்கிவிடுவதில் நேரத்தை வீணாக்காமல்(?) ஆற்றில் முழுக்குப்போட விரைகின்றனர்.
            அந்தத் தூயகுளிப்பு முடிந்தபோது, ஆயிரக் கணக்கான சேறுபூசிய பிணங்களை அவ்வாற்றங் கரைகளில் எடுத்துச் சேரக்கின்றார்கள். இவ்வகையில், பேரெண்ணிக்கையி லான மாந்தரின் சாவுகள் எவரையும் கவலைக் குள்ளாக்கினவாகத் தெரியவில்லை.
            அந்த ஏமாளிகளுக்கு அத்தகைய சாவு விரும்பத்தக்கதா யிருக்கின்றது. ஏனென்றால், அங்கு இறந்தவர்கள் துறக்கம் (சொர்க்கம்) செல்வார்கள் என்று - அல்லது மேலும் சிறப்பான நிலையில் மீண்டும் பிறப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறார்கள். ஆனால் அமெரிக்கர்களுக்கோ, அஃது ஓர் கொடிய காட்சியாக இருந்தது.
            தன்னுடைய பாவங்களைக் கழுவப் பிரயாகைக்கு வந்திருந்த இந்தியக் குடியரசு தலைவர் பர்.இராசேந்திர பிரசாத்தும் கூட அந்த ஏமாளி மடயர்களில் ஒருவராயிருந்த இழிவைக் குறிப்பிட்ட திருவாட்டி இராபர்ட்டு, ‘உங்கள் மக்களின் பேரளவிலான மூட நம்பிக்கைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது ஆழ்ந்து சிந்தித் திருக்கின்றீர்களா?’ என்று என்னிடம் கேட்டார்.
            ‘ஆம், எங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் உங்கள் மக்களின் மூட நம்பிக்கைகளைப் பற்றியும் மிக ஆழமாகச் சிந்தித் திருக்கின்றேன்என்றேன் நான்.
            எங்கள் மக்களும் கூட மூட நம்பிக்கைக்காரர்கள் என்று எண்ணுகிறீர்களா என்ன?’ என்றார் அவர்.
            ஆம், எங்கள் மத நூல்களும், குருமார்களும் கங்கையின் தூயநீரில் மூழ்குவதால் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை எங்கள் மக்கள் குருட்டுத்தனமாக நம்பி அப்படியே செய்கின்றனர். உங்கள் மதநூல்களும் உங்கள் குருமார்களும் மெய்யறிவுக் குளிப்பு’ (Baptism) என்ற புறக்கழுவல், அல்லது தெய்வ விருந்து’ (Holy communion) என்ற அகக்கழுவல் மூலம் பாவங்களைக் கழுவி விடலாம் என்று கூறுவதை நீங்கள் குருட்டுத்தனமாக ஒப்புக் கொள்கிறீர்கள்.
            ‘ மெய்யறிவுக் குளிப்புக்காகவோ தெய்வ விருந்திற்காகவோ நன்னிமித்த நேரம் என்று எதுவும் இல்லாத நல்வாய்ப்பு உங்களுக்கு இருப்பதால் கூட்ட நெருக்கடிக் குழப்பங்களும் அதனால் ஏற்படும் சாவுகளும் இல்லாமல் இருக்கின்றன! என்று விடை கூறினேன்.
            எங்கள் உரையாடலை முழுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த திரு.இராபர்ட்டிடம் ஐயா, எங்கள் சிந்தனைக்கு நிறைவான தீனி அளித்தீர்கள்என்று கூறினேன்.
            ஒருமுறை சிலோன் பெந்தகொசுதலியரின் தலைமை நிலையத்தினர் என்னை விருந்துக்கு அழைத்திருந்தனர். என் துணைவியாருடன் நான் சென்றிருந்தேன். அங்கு சென்ற பிறகே என்னை அழைத்ததன் முகன்மையான நோக்கத்தை அறிந்தேன். அய்ரோப்பிய பெந்தகொசுதலியர் உள்பட கிறித்துவ மதத்தில் பதவிகளிலுள்ள எல்லாத் தலைவர்களும் என்னுடன் தருக்கம் செய்ய அங்கே கூடியிருந்தனர்!
            நாக்கொடை’ (Glossolalia) என்ற நரம்புக் கோளாற்று நிலை பற்றி அறிவியல் சான்றுகளுடன் நான் விளக்கியும் கூட, ‘தூய ஆவியின் துணையால் ஏற்படும் திறமையென நம்பும் அவர்களை, அக்குருட்டு நம்பிக்கையினின்றும் மாற்ற முடியவில்லை.
            உணாமிசை (Dining table) க்குச் சென்றதும், திருத்தந்தை ஆல்வின்சு பக்கத்தில் எனக்கு இருக்கை அளித்தனர். விருந்தின் போதும் கலந்துரையாடல் தொடர்ந்தது. பெந்தகொசுதலியர், நோயுற்றாலும் மருந்துண்ணாமை பற்றிப் பேச்சு நடந்தது.
            ஒருவர் செய்த பாவத்திற்குத் தண்டனையாகவே அவருக்குக் கடவுள் நோயை உண்டாக்குகின்றார். நாம் கடவுளிடம் நோயைத் தீர்க்கும்படி முறையிடுகின்றோம். கடவுளின் கருத்தை வீழ்த்தும் வகையில் மாந்தன் மருந்துகளை ஏற்பது தவறாகும்என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.
            மாந்தன் மருத்துவ அறிவினால் கடவுளை, அவருடைய கருத்தை வீழ்த்த முடியுமென்றால், கடவுளைவிட மாந்தன் மிகுந்த ஆற்றல் உடையவன் என்று ஆகாதா? நீங்கள் மருந்தை ஏற்றுக் கொள்வதில்லை யென்றால், உணவை மட்டும் ஏற்றுக்கொள்வது ஏன்?’ என்றேன் நான்.
            உணவு மருந்தன்று; ஏசுவே உணவை உட்கொண்டிருக்கின்றார்என்றார் திருத்தந்தை ஆல்வின்சு.
            நீங்கள் சொல்வது தவறு! பசி என்ற நோய்க்கு உணவு ஒரு மருந்தாகும். விடாய் என்ற நோய்க்கு நீர் ஒரு மருந்தாகும்என்று கூறி முடித்தேன்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------