தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்!
சென்னையில் சவுக்கார்பேட்டை என்ற பகுதி உள்ளதைப் பலரும் அறிவர். இங்கே ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்தே மார்வாரி, குசராத்தி குமுகத்தினர் குடியேறத் தொடங்கினர். இப்போது, மார்வாரி, குசராத்தி குமுகத்தினருடன் இராசத்தானி, செயின், அகர்வால் முதலிய வடஇந்திய வாணிகக் குடும்பங்கள் சேர்ந்துகொண்டன. இன்று தென்னிந்தியாவிலேயே மிகப் பெரிய மார்வாரி குமுகம் இங்கேதான் உள்ளது. பலர் (குறிப்பாகப் பெரியவர்கள்) இந்தி, இராசத்தானி, குசராத்தி பேசுகின்றனர். தமிழ் பேசப்படாத இடங்களும், குறைவாகப் பேசப்படும் இடங்களும் இங்குண்டு.
வடமாநிலத்தாரின் மிகப்பெரும்பான்மை காரணமாகவே சவுக்கார்பேட்டை “சிறு வடஇந்தியா” (Little North India) என்று அழைக்கப்படுகிறது. சவுக்கார் என்ற பெயர் சாகுகார் (Sahukar = வாணிகர் / கடன் கொடுப்பவர்) என்பதிலிருந்து வந்தது. இவர்கள் சவளி, நகை, மாழைப் பொருள்களின் மொத்த / சில்லறை வாணிகத்தில் ஆளுமையுடன் உள்ளனர்.
வட்டிக்குப்பணம் கொடுக்கும் தொழிலில் தொடங்கி இன்றைக்கு மொத்தவிற்பனை (Wholesale) வாணிகத்தில் இவர்கள் தனிஆளுமை செலுத்துகின்றனர். வாணிக அடிப்படையில் இவர்கள் ஒரு வலுவான அமைப்பை (Community) வைத்திருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வது, தங்களுக்குள் வாணிகம் செய்வது போன்ற காரணங்களால் அது ஒரு மூடிய குமுகமாகவே (Closed Community) தெரிகிறது. சுருக்கமாகச் சொன்னால், சவுக்கார்பேட்டை என்பது வடமாநிலத்தவர்களின் வாணிகக்கோட்டை.
வடஇந்திய குமுகத்தினரின் வாணிக வலையமைப்பில் வேறெவரும் ஊடுருவ முடிவதில்லை. அவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அங்குள்ள வாணிகமுறைகள், வாழ்க்கைமுறைகள் அவர்களின் நடைமுறையிலேயே அமைந்துள்ளன.
அடகு, வயிரம், நகை, துணி, பட்டு, பலசரக்கு, தங்கம், உசிலை (மசாலா), கடன்வாணிகம் முதலியவை பெரும்பாலும் மார்வாரி / குசராத்தி குடும்பங்களின் வலிய பிடியின்கீழ் உள்ளதால், அவர்களே எல்லாம் முடிவுசெய்யும் நிலை இருக்கிறது. ஆண்டுக்கு ஆயிரம் கோடிகளுக்கு மேல் விற்றுமுதல் நடப்பதாகவும் கூறப்படுகின்றது.
குடியிருப்புப் பகுதிகளில் வடஇந்தியர்களின் வல்லாண்மை மிக அதிகம். கடைகளுக்கு மேல்
அவர்களின் வீடுகள் உள்ளன. சொந்த குமுக வலைப்பின்னல் (community network) உள்ளது. சில குடியிருப்புகளில், குறிப்பிட்ட குமுகங்களுக்கு மட்டும் வாடகைக்குவிடும் / விற்பனை செய்யும் போக்கு உண்டு. (இது சட்டத்திற்கு எதிரானது). பல கடைகளில் தமிழ்பேசுவதில் சிக்கல் இருக்கிறது.
சொந்தக் கோவில்கள் (Swaminarayan, Jain temples) கோலி, இரக்குசா பந்தன் (Holi / Raksha Bandhan) கொண்டாட்டங்கள் வடஇந்திய குமுகாய உணர்வை வெளிப்படுத்துகின்றன. இவை தமிழர்க்கு எதிரானவையாகச் சிலபோது அமைந்துவிடுவதும் உண்டு. இவை குறித்துக் குமுகஊடகங்களில் (Quora, social media) உறழாடல்கள் நடப்பதுண்டு. இந்தப் பகுதியில் மார்வாரி, குசராத்தி மொழிகள், உணவுவகைகள், பண்பாட்டுக் கூறுகள் ஆளுமை இருப்பது உண்மை.
இங்குள்ள பல கடைகளில் வேலை செய்பவர்களாகவும், சரக்குந்துப் பணியாளர்களாகவும், சிறுபான்மை சரக்குந்து உரிமையாளர்களாகவும், சுமைதூக்கும் கூலித்தொழிலாளர்களாகவுமே தமிழர்கள் சிலர் உள்ளனர். பட்டறைகள், நகைவேலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் அமர்த்தப்படுகின்றனர். சில சமையம் உழைப்புச் சுரண்டல், குழந்தைத் தொழிலாளர் பற்றிய செய்திகளும் வருகின்றன.
காலப்போக்கில் வடவர்க்கு இடநெருக்கடி ஏற்படவே கூடுதல் தொகை கொடுத்து அடுத்துள்ள வீட்டை / இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியதால், அந்தக் கூடுதல் பணத்தால் ஈர்க்கப்பட்ட தமிழர்கள் பலரும் சொந்த இடத்தை விற்றுவிட்டு வேறு இடங்களுக்குக் (அண்ணா நகர், தியாகராயர் நகர் போன்ற பகுதிகளுக்குக்) குடிபெயர்ந்தனர்.
இப்படியாகச் சவுக்கார்பேட்டைக்குள் புகுந்தால் ஏதோ வட இந்தியாவுக்குள் நுழைந்தது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகின்ற நிலை இருப்பது உண்மை. பெயர்ப்பலகைகள் இந்தியில் இருப்பது, அங்குள்ள உணவகங்களிலும் தெருக்களிலும் காணப்படும் நெருக்கடி, அப்பகுதி ஒருவகையில் தனிநாடு போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன. இந்தப் பண்பாட்டு வேறுபாடுகள், அப்பகுதியை அயலகமாக உணரச் செய்வதுடன் அதனை ஒரு தனிப் பண்பாட்டுத் தீவாக (Cultural Pocket) மாற்றி உள்ளன.
அங்குக் காணும் பண்பாட்டு வேறுபாடு, மொழித்தடை நிலையைத் ‘தங்கள் குமுகத்தினரோடு ஒன்றாக இணைந்து வாழும் தன்மை’ (community cohesion) என்று பொதுவாகக் கூறுகின்றனர். மும்பை போன்ற வடஇந்திய நகரங்களில் தொகுப்பாக வாழும் தமிழர் நிலையை எண்ணிப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை. சேறும் நீருமாயுள்ள தூய்மையற்ற பகுதிகளில் நெருக்கமாகத் தகரக் குடிசைகளிலும் மரத்தடுப்புகளிலும் வாழும் மாந்தப் பிறவிகளாகத்தான் அவர்கள் இருக்கின்றனர்.
சென்னை சவுக்கார் பேட்டையில் தமிழ்நாடு அரசு உதவிபெறும் பள்ளிகள் 28-க்கும் மேல் உள்ளன. அந்தப் பள்ளிகள் வடநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே உள்ளவை அல்ல. அந்த வட்டாரத்தில் இருக்கும் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்குமானவை. ஆனால், நடைமுறையில் அப் பள்ளிகள் முழுக்கமுழுக்க வடநாட்டுக்காரர்களுக்காக மட்டுமே இயங்கும் தனியார்பள்ளிகள் போல் இயங்குகின்றன என்பது அதிர்ச்சியானதாகும்.
இப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர், அலுவலகப் பணியர் அனைவரும் வடநாட்டினர். 20 ஆண்டுகளுக்கும் முன் பணியமர்த்தப்பட்ட ஓரிரு தமிழக ஆசிரியர்கள் அங்கு உள்ளனர். அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அங்கே எந்தப் பள்ளியிலும் தமிழ் பயிற்றுவிப்பதும் இல்லை. தமிழ்மாணவர்களைச் சேர்ப்பதுமில்லை. தமிழ்மாணவர்களைச் சேர்க்கச் சென்றால் அவர்கள் சொல்வது, ‘அவர்களைச் சேர்த்தால் எங்கள் பள்ளியில் வீண் சிக்கல் ஏற்படும்’ என்பதாகும். மேலும் ஓரிரு ஆசிரியர்களைத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்தாலும் அவர்கள் பார்ப்பனராகவே இருக்கின்றனர். பார்ப்பனராக இருந்தாலும் இந்தி தெரிந்தவராக இருக்க வேண்டுமென்கின்றனர். இங்கு மட்டும் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தி லிருந்து இப்பள்ளிக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் தே.த.அ. (RSS) பள்ளிகளாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. சென்னையின் நடுப்பகுதியான சவுக்கார்பேட்டையில் தமிழ்மொழிக்கும், தமிழ்மாணவர்களுக்கும் வஞ்சகம் செய்து கொண்டிருக்கும் இவ்வகையான பள்ளிகள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
குசராத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகக் கூறித் தமிழ்வழிப் பள்ளியை மூடவேண்டும் என அண்மையில் குசராத்துஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இங்கே சவுக்கார்பேட்டையில் உள்ள 28-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில வழியில் வகுப்பு நடத்துவதற்குத் தமிழகஅரசு கோடிக்கணக்கில் நிதி வழங்கிக் கொண்டுள்ளது. தமிழிலேயே சொல்லித்தராத இந்தப் பள்ளிகளுக்குத்தாம் கோடிக்கணக்கில் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இங்கு நிரப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர் பணியிடங்களுக்கு வட இந்தியாவிலிருந்து வெறும் இளங்கலை பட்டம் பெற்றவர்களை அழைத்து வந்து பணிஅமர்த்துகிறார்கள். தமிழ்நாட்டில், அதுவும் தலைநகரமான சென்னையில் தமிழ்நாட்டவருக்கோ, அவர்களின் தாய்மொழியான தமிழுக்கோ தொடர்பு இல்லாமல் இந்தப் பள்ளிகள் தமிழ்நாடு அரசின் நிதி உதவியோடு எப்படி நடக்க முடிகிறது என்பது வியப்பூட்டுகிற செய்திதான்.
மொத்த வாணிகங்கள் (Whole Sale) அனைத்தும் வடஇந்தியர் கையில்! அவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது - அவர்களின் ஒப்போலைகள் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும் தீங்கு இருப்பதை பொருட்படுத்தாமல் இருக்கமுடியாது. தமிழகஅரசியலர் இதில் கவனம் கொள்ளவேண்டியது இன்றியமையாததாகும். அண்மைக்காலமாக வடநாட்டிலிருந்து வேலை தேடிவருவோர் தமிழ்நாட்டில் குவிவது தொடர்கிறது.
சென்னை சவுக்கார்பேட்டையைப் போலவே, தமிழகம் முழுவதும் பெரிய வாணிகத் தொழில்கள் வடமாநிலத்தவர் கைகளில் இருக்கின்ற நிலையே உள்ளது. தமிழ்நாட்டின் பல முதன்மை நகரங்களில் குசராத்திகள், மார்வாரிகள் தங்களின் தனித்தன்மையான பண்பாடு, வாணிகத்துடன் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சவளி, நிதித் (Finance) துறைகளில் முன்னணியில் உள்ளனர்.
கோயம்புத்தூரில் வடஇந்திய குமுகத்தினர் மிக அதிக அளவில் செழிப்பாக வாழ்கின்றனர். ஏறத்தாழ 120 ஆண்டுகளுக்கும் மேலாக இராசத்தானி, குசராத்தி குமுகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இரத்தினசபாபதிபுரம், சாய்பாபா குடியிருப்பு (Sai Baba Colony), குதிரைப்பந்தயச் (Race Course) சாலை, நகரமண்டபம் (Town Hall) முதலிய இடங்களில் வசதியான வீடுகள், சொத்துகளுடன் வாழ்கின்றனர். இரங்கை கவுடர் வீதி (Rangai Gowder Street), ஒப்பணக்கார வீதி, பெரியகடைவீதி பகுதிகளில் இவர்களது மொத்த வாணிக நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன.
சென்னையில் சவுக்கார்பேட்டை போல கோயம்புத்தூரின் இரத்தினசபாபதிபுரம் பகுதி ஒரு சிறிய வடஇந்தியா போல் உள்ளது. பருத்தி வாணிகம், சவளி ஆலைகள், நகை வாணிகத்தில் இவர்கள் பெரும் ஆளுமை செலுத்துகின்றனர். இங்குள்ள மார்வாடி குமுகத்தினருக்கெனத் தனியே சமணக் கோவில்களும் உள்ளன.
கோயம்புத்தூர் – சுக்ரவார் பேட்டை (Sukrawarpet) என்பது நகரின் மிகப் பழமையான வாணிகப் பகுதிகளில் ஒன்று. “சுக்ரவார்” என்றால் இந்தியில் வெள்ளிக்கிழமை என்று பொருள்; பல வடஇந்திய நகரங்களில் “சுக்ரவார் கடைத்தெரு” (Friday market) என்ற பெயர் வழக்கில் உள்ளது. அதுபோலவே இந்தப் பகுதியும் ஒரு வாணிகத் தெருவாக – சந்தையாக உள்ளது. மார்வாரி, குசராத்தி, இராசத்தானி, செயின் போன்ற வடஇந்திய வாணிகக் குமுகங்கள் பல தலைமுறைகளாக இங்கு வளமாக வாழ்கின்றன.
மதுரையில் குசராத்தி, மார்வாரி குமுகத்தினர் நீண்ட காலமாக வாணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகச் சவளி மற்றும் நகை வாணிகத்தில் இவர்கள் முன்னிலையில் உள்ளனர். மதுரையின் தெற்கு மாசி வீதி (South Masi Street), அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இவர்கள் குடியிருப்புகள், கடைகள் மிகுதியாகும். மதுரையில் உள்ள ‘சவுராட்டிரா’ குமுகத்தினரும் பழங்காலத்தில் குசராத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது. திருமலை நாயக்கர் காலத்தில் மதுரைக்கு வந்த இவர்கள், மதுரையின் சவளித் தொழிலின் முதுகெலும்பாக விளங்குகின்றனர். இவர்களுக்குச் சொந்தமான பல கல்வி நிறுவனங்கள், வாணிக வளாகங்கள் மதுரையில் உள்ளன.
திருச்சியில் தலைக் காவல் வாயில் (Main Guard Gate), பெரிய கடைவீதி, சிறிய கடைவீதி பகுதிகளில் வடஇந்திய வாணிகர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். தில்லை நகர், குடியிருப்புப் (cantonment) பகுதிகளில் மார்வாரி, குசராத்தி குமுகங்கள் புத்தம்புது வசதிகளுடன் கூடிய வீடுகளில் வாழ்ந்து வருகின்றன. திருச்சியில் சவுராட்டிரா மக்களும் வாழ்ந்து வருகின்றனர்.
உள்ளொட்டி (பனியன்), அணியப்பாட்டு (readymade) ஆடைத்தொழிலுக்குப் பெயர்பெற்ற திருப்பூரில், இராசத்தான், குசராத்தைச் சேர்ந்த பல முதலாளிகள் பெரியஅளவில் முதலீடுசெய்து அங்கேயே நிலையாகக் குடியேறியுள்ளனர். தாராபுரம் சாலையையும், அவிநாசி சாலையையும் ஒட்டியுள்ள பகுதிகளில் இவர்கள் சொத்துகளுடன் வாழ்கின்றனர்.
ஈரோட்டில் ‘கனி அங்காடி’யில் உள்ள சவளிச் சந்தை காரணமாக மார்வாரி குமுகத்தினர் நகரின் முதன்மைப்பகுதிகளில் வசதியாக வாழ்ந்து வருகின்றனர்.
சேலத்தின் ‘இலீ கடைத்தெரு’, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் வடஇந்திய வாணிகர்கள் அதிகஅளவில் காணப்படுகின்றனர். வெள்ளி அணிகலன் தொழில் மற்றும் சவளித் தொழிலில் வடமாநிலத்தவர் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். சேலத்தின் முதன்மையான வாணிக வீதிகளில் மார்வாரி குமுகத்தினரின் கடைகளும், வீடுகளும் அதிக அளவில் இருப்பதைக் காணலாம்.
தஞ்சாவூரில், ‘தஞ்சாவூர் மராத்தியர்’, சில குசராத்தி குடும்பங்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலத்திலிருந்தே இவர்கள் இங்கு நிலைபெற்றுவிட்டனர்.
சவுக்கார்பேட்டை போலவே இந்த ஊர்களிலும் இவர்களின் பகுதிகளில் வடநாட்டு உணவகங்கள், இனிப்புக் கடைகள் மற்றும் சமணக் கோயில்கள் அதிகம் இருப்பதைக் காணலாம். இவர்கள் வாழும் பெரும்பாலான இடங்களில் பளிங்குக் கற்களால் ஆன அழகான சமணக் கோவில்கள் அல்லது கிருட்டினர் கோவில்களைக் கட்டியுள்ளனர். இக் குமுகத்தினர் பல நகரங்களில் அறக்கட்டளைகள் மூலம் சொந்தமாகப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை நடத்தி வருகின்றனர்.
பொதுவாகத் தமிழ்நாட்டின் எல்லா மாவட்ட, வட்டத் தலைநகரங்களிலும் மார்வாரி, குசராத்தி மக்கள் வளமாக வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சொன்னால், தமிழ்நாட்டின் சிற்றூர்களில் கூட இவர்களின் அடகுக்கடைகளைப் பார்க்கலாம். தங்களின் சொந்த மாநிலத்தின் உணவு முறையையும், பண்பாட்டையும் கடைப்பிடிக்கும் இவர்கள், வாழ்வதற்காகக் கலப்புத்தமிழையும் தடையின்றிப் பேசுகின்றனர்.
முன்பே கூறியவாறு, அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டிற்கு வேலைதேடிவரும் வடமாநிலத்தார் பெருந்தொகையினராக உள்ளனர். அதிகாரஅடிப்படையில் பதிவு செய்யப்பட்டவர்கள் மட்டும் 12.17 இலக்கம் பேர். ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகம். ஏறத்தாழ 70 இலக்கம் பேர் தமிழ்நாட்டில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பதிவு செய்தல் கட்டாயமில்லை என்பதால், பெரும்பாலானோர் பதிவு செய்வதில்லை. இவர்களில் பாதிப்பேர் குடும்பத்துடன் வந்துள்ளனர். இவர்களால் தமிழ்நாட்டில் உள்ளூர்த் தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுகிறது.
ஒடிசா, பீகார், சார்கண்டு, மேற்கு வங்காளம், அசாம், உத்தரப் பிரதேசம், இராசத்தான், வடகிழக்கு மாநிலங்களிலிருந்தே இவர்கள் கூட்டம்கூட்டமாக வருகின்றனர். இவர்களில் ஒடிசா, பீகார், சார்கண்டு, மேற்கு வங்காளத்திலிருந்து வந்தவர் மிகுந்த எண்ணிக்கையினராவர். இவர்கள் திருப்பூர், காஞ்சிபுரம் (திருப்பெரும்புதூர், ஒரகடம்), கோயம்புத்தூர், சென்னை, திருவள்ளூர், ஈரோடு, சேலம் முதலிய இடங்களில் வேலைசெய்கின்றனர். இவர்கள் தத்தம் தகுதிக்கேற்ப கட்டுமானத்தொழில், உருவாக்கத்தொழில், வேளாண்மைத்தொழில், சவளித்தொழில் முதலியவற்றிலும், உணவகங்களிலும், காவற்காரர்- களாகவும், தூய்மைப்பணியாளராகவும் வேலை செய்கின்றனர்.
வடமாநிலங்களைவிடத் தமிழகத்தில் கூலி, மாதச்சம்பளம் அதிகமாகக் கிடைப்பதனாலும், பிற மாநிலங்களை விடத் தமிழகத்தில் நிலவும் பாதுகாப்பான அமைதிச்சூழல் கருதியும், இங்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதாலும் இவர்கள் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் இப்போது நகர்ப்பகுதிகளில் மட்டுமின்றித் தமிழ்நாட்டுச் சிற்றூர்ப் பகுதிகளிலும் வேலைசெய்து வருகின்றனர்.
தமிழர்களைப் பொறுத்தவரை, இப்போதைக்குக் குறைவான கூலிக்கு அடக்கமாக வேலைசெய்வதால் வடஇந்திய கூலிக்காரர்களை பெரும் அளவில் வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டரசு வடமாநிலத் தொழிலாளர்களின் நலனுக்காகத் தனி நலவாரியங்களை உருவாக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் இணையதளம் மூலம் மேற்கொண்டு வருகிறது.
திருப்பூரில் மட்டும் ஆடை உருவாக்கத்துறையில் உள்ள ஏறத்தாழ 6 இலக்கம் தொழிலாளர்களில் பாதிப்பேர் வடமாநிலத்தவர் கள் ஆவர். திருப்பூரில் பின்னலாடைத் தொழிலுக்காக வந்த இவர்கள், இப்போது மீச்சிறு (Micro), சிறு தொழிற்சாலைகளின் உரிமையாளர்களாக (Entrepreneurial Owners) உயர்ந்துள்ளனர். இவர்கள் அங்கேயே சொந்தமாக வீடுகளை வாங்கித் தங்கிவிட்டனர்.
இவர்கள் அடிக்கடி தங்களுக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொள்வது, அடிதடி, குத்துவெட்டு, திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை, பாலியல் வன்முறை, கஞ்சங்குல்லை (கஞ்சா) முதலிய வெறிமயக்கப்பொருள் விற்பனை முதலிய குற்றச்செயல்களில் ஈடுபட்டுத் தமிழ்நாட்டு மக்களுக்குத் தொல்லை தருவதையும் சட்டம்- ஒழுங்குச் சிக்கல்களை உருவாக்குவதையும் கண்டுவருகின்றோம்.
வடஇந்தியர் வளமாக இருந்துகொண்டு வல்லாளுமை செலுத்துவது பற்றி முற்பகுதியில் கூறப்பட்ட போக்கும், பிற்பகுதியில் குறிப்பிட்ட, இலக்கக் கணக்கில் வேலைதேடி வந்து குடியேறிக் கொண்டிருக்கும் வசதிக்குறைவான வடஇந்தியர் குவியும் போக்கும் தொடர்வது தமிழர் நலனுக்கு எந்த வகையும் நன்மை பயக்காது என்பதுடன் தமிழர்க்குப் பெருங்கெடுதலாகும் என்பதைத் தமிழ்நாட்டு அரசியலர் உணரவேண்டும்.
தம்முடைய தன்னலம் ஒன்றையே கருத்தில் கொள்ளாது, தக்க காப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவேண்டும்.
தமிழ்நாட்டு அறிஞர்களும் தமிழநலன் பற்றி உண்மையாகக் கவலைப்படுவோரும் நிலைஉணர்ந்து கருத்துச்செலுத்த வேண்டுமென நற்றமிழ் வலியுறுத்துகின்றது.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். குறள் - 435.
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். குறள் - 429
--------------------------------------------------------------------------------------------------------
புதுவை 'நற்றமிழ்' கும்பம் திபி2057 ஆசிரியவுரை
--------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக