செவ்வாய், 23 அக்டோபர், 2012

கழக(சங்க)த்தமிழ் – ஒரு பார்வை!


கழக(சங்க)த்தமிழ் ஒரு பார்வை!


(21-10-2012இல் விழுப்புரம் தமிழ்ச்சங்கப் பத்தாம் ஆண்டுவிழாப் பாட்டரங்கில் பாடிய பாடல்)

விழுஎன்றால் சிறப்பாகும் விழுமியஊ ராமிந்த விழுப்பு ரத்தில்
தழுவலுறும் தமிழ்ப்பற்றால் தமிழ்ச்சங்கம் தனைத்தோற்றித் தனிய ராக
ஒழுகலுற ஓரேரு உழவரென உழைப்பெடுத்து ஓயா தின்றும்
பழுதறவே விழாவெடுக்கும் பாலதண்டா யுதமென்னும் பசுமை நெஞ்சே!

அன்பார்ந்த தாய்க்குலமே! அறிஞர்களே! பெரியோரே! ஆக்கம் தேட
முன்னிறகும் இளைஞர்களே! முன்சங்கத் தமிழ்ச்சிறப்பை மொத்த மாக
இன்னேயிங் கியம்பவந்த பாவலரே! எல்லோர்க்கும் இனிது ரைத்தேன்
என்வணக்கம்! அறிஞரேற்றும் இனியசங்கத் தமிழென்றால் என்ன காண்போம்!

ஏசுவுக்கும் முற்காலத் திருந்ததமிழ் இலக்கியத்துள் இன்று மிஞ்சும்
மாசில்எட் டுத்தொகையும் மதிப்புறுபத் துப்பாட்டும் மட்டும் தானே!
வீசுபுகழ் நூல்எட்டுச் சேர்ந்ததெட்டுத் தொகையெனவே விளங்கும் பேரால்!
பாசுதமிழ் நெடும்பாடல் பத்துச்சேர்த் தாரதன்பேர் பத்துப்பாட்டே!

மேற்சொன்ன பதினெட்டே மேற்கணக்காம் மேலுமதே மேன்மை மிக்க
மேற்குவட்டு விளக்கொளியாய் மின்னுசங்கத் தமிழாகும்! மிகவி ளங்க
ஆற்றலுற கூறுதமிழ் நாகரிக ஆவணமே! ஆழம் நுட்பம்
சாற்றுமுறை இனிமையுடன் பொருளமைதி வடிவுஉத்தி தலைமை என்பார்!

மாந்தயினத் தெல்லாரின் மனமீர்க்கும் அழகுணர்ச்சி மகிழ்ச்சிப் பூங்கா!
காந்தமெனக் கவர்கின்ற கலைநுட்பக் கருவூலம் கற்பார் தாமும்
சாந்துணையும் எண்ணஎண்ணச் சலிக்காமல் களிப்பூட்டும் சாற ஊற்று!
ஏந்துமிகும் அயல்நாட்டார் எண்ணுகிலார் இதனாய்வை எளிதில் நீங்க!

ஒப்பற்ற இலக்கணமும் உயர்வான இலக்கியமும் உலகோர் போற்றும்
துப்புறவு தோய்தூய பொருளிலக்க ணச்சிறப்பைச் சொல்லற் காமோ?
ஒப்புறவில் பொதுமையிலே உயர்சங்கத் தமிழ்ப்புகழே ஓங்கி நிற்கும்!
செப்பமென இயற்பெயரைத் தவிர்த்துபொதுப் பெயருரைக்கும் சீர்மை என்னே!

இத்தமிழ இனந்தன்னின் இருப்பிதுவே அடையாளம் என்றும் சொல்லும்!
முத்தமிழின் பெட்டகமாய் மொழிச்சிறப்பை காதலினை மொழியா நிற்கும்!
இத்தரையில் வாழ்வியலை நேராக மக்களுக்கே எடுத்துக்கூறும்!
அத்துடனா? போர்வீரம் கொடைமானம் ஆட்சிதிறன் அறைதல் காண்பீர்!

இன்சங்கத் தமிழ்ப்பாக்கள் இரண்டா யிரத்துமுன்னூற் றெண்பத் தொன்றாம்!
நன்கவற்றைப் பாடியவர் நானூற்று எழுபத்து மூவ ராவர்!
அன்னவருள் முப்பதுபேர் அரும்பெண்டிர்! முப்பத்தோர் அரசராவர்!
இன்னவகை குமுகத்துப் பலபடியார் புலவர்களாய் இருந்தா ரென்க!

பழம்போலும் சங்கப்பா படியென்பார் வ.சுப.மா. படிப்பார் தம்மின்
கிழம்போகும் கீழ்மையும்போம் என்பாரே! சிறப்புகளின் கெழுமல் சுட்டிக் 
கழிநுட்ப ஆய்வாளர் கமில்சுலபில் சியார்ச்சுகார்ட்டுங் காட்டு வாரே!
முழுமையுற ஆராய்ந்தே தக்ககசி நோம்சோம்கி மொழிகின் றாரே!

(வேறு யாப்பு)

செப்பிய எல்லாச் சிறப்பையும் காட்டத்
துப்புறைப் பாடல் தொகைமிக உண்டு!
காலத் தருமை கருதியொன் றிரண்டு
ஏலத் தந்தே ஏற்றம் காட்டுவம்!

அன்புதோய் காதலை அகத்திணை நூல்கள்
இன்புறை எழிலில் இனிமையில் இயம்ப
மறமும் கொடையும் மற்றுமெய் யறிவின்
திறமும் பாடும் புறத்திணை நூலே!

உலகத் திற்கே ஒப்பிலாக் காதல்
இலக்கணம் இலங்கிட இயம்பிய பாடல்
யாயும் ஞாயும் யாரா கியரோ...

காதல் எப்படிப் பட்டதாம்? காண்க:
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே

காதற் பிரிவில் கலங்குரை எப்படி?
முட்டு வேன்கொல்? தாக்கு வேன்கொல்?
ஓரேன் யானும்ஓர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்?...

இன்றும் அருகிருந்து இயம்புதல் போன்றே
என்றும் விளங்கும் எழிற்பா டல்கள்:
அகவன் மகளே! அகவன் மகளே!
மனவுக் கோப்பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே! பாடுக பாட்டே...!

நோம்என் நெஞ்சே! நோம்என் நெஞ்சே!
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற்கு அமைந்தநம் காதலர்
அமைவிலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே!

இயற்கையை விளக்கும் இனிய பாக்கள்
வியப்பில் ஆழ்த்தும் நாடகக் காட்சிகள்!
ஆடமைக் குயின்ற... என்று தொடங்கும்
பாடல் காட்டும் ஆடரங்கு அழகு!

அற்றை உடைச்சிறப்ப பறிந்திடச் சான்று:
கொட்டை கரைய பட்டுடை

பாம்புரி யன்ன கலிங்கம்

ஆவி யன்ன அவிர்நூற் கலிங்கம்

அரவுரியன்ன அறுவை

வணிகத் தொன்மை கணித்திடச் சான்று:
...கள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம்கெழு முசிறி...

வணிகம் நடந்த வகைக்கிது சான்று:
...நெடுநுகத்துப் பகல்போல
நடுவுநின்ற நல்நெஞ்சினோர்
வடுஅஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடிக்
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகெடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும் தொல்கொண்டி...

மறவுரம் விளக்கும் மாட்சியைக் காண்க:
களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்! போர்எதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்; வைகல்
எண்டேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே

குழவி இறப்பினும் ஊன்றடி பிறப்பினும்
ஆளன் றென்று வாளில் தப்பார்...

மங்கையர் மறவுர மாண்புக்குச் சான்று:
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினும் அறியேன்; ஓரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே!

நற்பண் புக்கோர் நற்றிணைப் பாடல்:
விளையாடு ஆயமொடு வெண்மனல் அழுத்தி
மறந்தனம் துறந்த கான் முளை அகைய...

அறிவியல் அறிவு அறிந்திடச் சான்று:
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரும்
நாள்மீன் விராய கோள்மீன் போல...

செஞ்ஞா யிற்றுச் செலவும்அஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலையிய காயமும்...

கொடைப் பண்புரைக்கக் குவியும் சான்றுகள்:
உண்டா லம்மஇவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும், இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே...!

இன்று செலினும் தருமே சிறுவரை
நின்று செலினும் தருமே பின்னும்
முன்னே தந்தனென் என்னாது துன்னி
வைகலுஞ் செலினும் பொய்யலனாகி...

ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன்...
                             ...காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போல
கையகத் ததுவே பொய்யா காதே!

பொதுப் பண்பிற்கும் பொதுச் சார்பிற்கும்
இதுசான் றென்ன எத்தனை வரிகள்!
யாதும் ஊரே யாவரும் கேளிர்

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்

இன்னாது அம்மஇவ் வுலகம்:
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே

நல்லது செய்தல் ஆற்றீராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்

மெய்யியல் விளக்கம் மிளிரும் வரிகள்:
ஓரில் நெய்தல் கறங்க ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப...

தீதும் நன்றும் பிறர்தர வாரா

சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே

பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

எடுத்தெடுத் துரைப்பின் எல்லா வரிகளும்
அடுத்தடுத் தோர்சிறப் அறிவிக் கும்மே! 
அவற்றை எல்லாம் அணிபெறப் பாட
இவண் வருகின்றனர் ஏற்ற பாவலர்
இத்துடன் என்பா முடித்தேன் அவைக்கு
மெத்த நன்றி நன்றியென் றுரைத்தே!
-------------------------------------------------


வியாழன், 11 அக்டோபர், 2012

நாகசாமியாரின் நயன்கெட்ட நூல்!


நாகசாமியாரின் நயன்கெட்ட நூல்!
                                                                                                    
மிழ்நாட்டரசின் தொல்லியல்துறையில் இயக்குநராகப் பணியாற்றிய முனைவர் இரா.நாகசாமி எழுதியுள்ள “Mirror of Tamil and Sanskrit” என்கின்ற ஆங்கில நூல் இவ்வாண்டின் (2012) தொடக்கத்தில் தமிழ்க் கலைக் கழகப் பதிப்பாக வெளிவந்துள்ளது. அந்நூலைப் பற்றிய அறிமுகம் தி இந்து நாளிதழிலும் வந்தது. அந்நூலின் உள்ளடக்கக் கருத்துக்கள் பற்றி நூலாசிரியர் முன்னுரைப் பகுதியில் நாகசாமி எழுதிள்ள பகுதிகளின் தமிழாக்கத்தைக் கீழே காண்க:
     
தமிழ், வேத சமற்கிருத மரபுகளை ஏற்று குறிப்பாக உருவாக்க நிலையில் பிராமணர்கள் உதவியுடன் செம்மொழி நிலையை அடைந்துள்ளது என்று பழந்தமிழ் இலக்கியங்களையும், தொன்மையான தமிழ் இலக்கணத்தையும் விரிவாகப் பார்த்து, முதன்முறையாக இந்நூல் நிலைநாட்டுகிறது. தமிழ், அதன் வரலாறு தெரிந்த காலந்தொட்டே சமற்கிருத்தினின்று கடன் பெற்றுக் கொண்டதனால் விரைவாக முன்னேற்றமடைந்தது என்று இந்நூல் தெளிவாக விளக்குகிறது.
பண்டைத் தமிழர்கள் வழிபட்ட கடவுள்கள் சிவன், விட்டுணு, கிருட்டிணன், பலராமன், இராமன், குமரன்(முருகன்), இந்திரன் துர்க்கை, காளியும் மற்றையோரும் வேதக்கடவுள்களாக உள்ளமை தெளிவானதாகும்.
அக் குமுகாயம் சாதி அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வய்சியர், சூத்திரர் மற்றும் கலப்புச்சாதியினர் என்று பிளவுபட்டிருந்தது. வாழ்க்கையின் ஒவ்வொரு பரப்பிலும் வேத மத்ததின் பயன்நிறைவைப் பெரும்பாலான தமிழர்கள் நம்பினர். வேதச் செழுமையில் கூறியுள்ள பழக்கவழக்கங்களால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர். குடும்ப வாழ்க்கையில் வேத வேள்விகளை நடத்தினர். வேதப் பிராமணர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட முறைகளை அவர்கள் பின்பற்றினர்.
சேர சோழ பாண்டியர் வேளிர்தலைவர் போலும் எல்லா மன்னர்களும் மேற்குடி என்று அழைக்கப்பட்ட ஒரு பிரிவு வேளாளர் உட்பட பெரும்பான்மைப் பொதுமக்களும் வேதம் கற்று அவற்றிற் கூறியவாறு வழிபாடு நடத்தினர்.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்னும் தமிழரின் நான்கு வகை வாழ்க்கைப் பிரிவு பரத நாட்டிய நூலில் காக்சியாப் பிரிவு எனக் குறிக்கப்பட்டுள்ளது.
வேத முனிவர்களான யாக்கினவால்கியர், வசிட்டர், நாரதர், மனு, பிரகத்பதி, பராசரர் மற்றும் பிறர் தொகுத்த தரும நூல் நெறிமுறைகளின் அடிப்படையில் நயனாள் முறை இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட படிநிகராளிகளைக் கொண்ட ஊர் அவையான வேத சபைகளின்படி குடிமை ஆட்சி அமைக்கப்பட்டது.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள தமிழ் யாப்பியல் சமற்கிருத மூலத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. தமிழ் பேச்சொலியியல், உவமம் போன்ற அணிகள் முதலியவை எடுத்துக்காட்டாகும். மேலும், படிக்கக்கூடிய பழமையான எழுத்து பிராமி பிராமணர்களால் அசோகர் காலத்தில் சரசுவதி பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்டது; அவர்கள் பெயரால் பிராமி என்று அழைக்கப்பட்டது.........
இறந்தவர்களை அடக்கஞ் செய்தல், இறுதிச் சடங்குகள், நினைவுக்கல் நடுதல், முதலியன சமற்கிருத ஆகம இலக்கியங்களில் வரையறுத்தவாறு இருந்தன.   பழந்தமிழ்நாட்டுக் கோயில் வழிபாடு ஆகமச் சடங்குப் பொருளுரைகளைப் பின்பற்றியது. இசை நாட்டியம் இலக்கியங்களின் அழகியல் பரதநாட்டிய நூலை அடிப்படையாகக் கொண்டது; சுவைத்துணர்தலும் அவ்வாறே இருந்தது.
தொல்காப்பிய இலக்கணம் வேதமரபையும் பரத நாட்டிய மரபையும் வேராகக்கொண்டுள்ளது. செய்யுளின் அகம் புறம் பிரிவு நாட்டிய மரபு அகச்சுட்டு புறச்சுட்டு என்னும் இருவகை நாட்டியங்கள் ஆகும்.
இந்தியாவின் மற்றெல்லாப் பகுதிகளும் அவற்றிற்குரிய வட்டார மொழிகளைக் கொண்டிருந்ததைப் போன்றே தமிழும்கூட அதற்குரிய வட்டார மொழியைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. உள்வரும் கருத்துக்களை விரைந்து தன்னியலாக்கக்கூடிய முறபோக்கான வட்டார மொழியாக இருந்து, தமிழ் அழகிய செம்மொழியாக மலர்ந்ததே வேறுபாடாகும்.
காலகவியல் அறிவியலில் தமிழர்கள் வேதமரபைத் தமதாக ஏற்றுக் கொண்டதைக் காட்ட மறுக்கவியலாச் சான்றுகள் உள்ளன.....
இவ்வாறு, மொழிப்புலம், இலக்கணம், யாப்பு, இலக்கியம், கலை, கட்டடக்கலை, இசை, நாட்டியம், அரசாட்சி, நயனாட்சி, குமுக நடைமுறைகள், வானியல், மெய்மவியல், சமயத்திலும் பழந்தமிழர்கள் வேதமரபைப் பின்பற்றினர்; பெருமளவில் வடநாட்டு முறைகளினால் தாக்குரவுற்றனர்.
தொல்காப்பியத்தையும், கழக இலக்கியங்களையும் புறக்கணித்து விலக்கக் கூடியவராலேயே இக்கொள்கையை மறுக்க முடியும். தமிழ் வரலாற்றின் எக்காலத்திலும், தமிழ்க்கல்வியை அடக்கி ஒடுக்கும் எந்த ஒரு முயற்சியும் இடம்பெறவில்லை. இந்நூல், உண்மையில் தமிழ் சமற்கிருத ஊடாட்டத்தை முறையான வரலாற்றில், காலவரிசை முறையில் வைக்கும் புதுவழிகண்டு விளக்கிக் காட்டும் இயலுருக் காட்சியாகும்.........
     
      நாகசாமியாரின் இந்நூலில் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான கருத்துக்கள் முன்னரே தக்க சான்றுகளுடன் வீழ்த்தப்பட்டவையே. மீண்டும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு பிற நாட்டினரைக் குழப்பும்  முயற்சியை நாம் மீண்டும் வீழ்த்தியாக வேண்டியிருக்கின்றது. பேராசிரியர் சியார்ச்சு கார்ட்டும் இந்நூற் கருத்துக்களை மறுத்திருக்கிறார்.
     
      27-7-2012இல் சென்னையில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டமொன்றில் முன்னாள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பொற்கோ, ம.இராசேந்திரன், இளங்கோவும் முனைவர்கள் மறைமலை இலக்குவனார், இரா.மதிவாணன், பூங்குன்றன், அரசேந்திரன் போன்றோரும் தொல்பொருள் ஆய்வுத்துறை முன்னாள் இயக்குநர் நடன.காசிநாதன், கோவைஞானி, பெ.மணியரசன் முதலான பலரும் கலந்து கொண்டு நாகசாமியாரின் நூலை மறுத்தும் கண்டித்தும் பேசியிருக்கின்றனர்.        
     
      21-8-2012இல் மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழறிஞர் தமிழண்ணல் தக்க விளக்கங்கள் கூறி நாகசாமியார் நூலுக்குக் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றார். அவர் உரையின் சில பகுதிகளைக் கீழே காண்க:
     
      உலகிற்கே உழவைக் கற்பித்த தமிழருக்கு உழவு தெரியாது, வங்காளத்தாரே உழவு கற்றுக்கொடுத்தார்கள் என்கிறார் நாகசாமி. தொல்காப்பியம் இலக்கணநூல் இல்லை; நடனநூல் என்கிறார். சிலப்பதிகாரத்தைப் பொய்யாகப் புனைந்த நூல் என எட்டாம் இயலில் கூறிவிட்டு அவரே பத்தொன்பதாம் இயலில் வரலாற்றுச் சான்றுக்குக் குறிப்பிட்டுள்ளார். அவர் கருத்தில் அவரே முரண்பட்டுவிட்டு நூலை சான்றுகளுடன் மறுக்க யாரேனும் உண்டா? என்று தமிழர்களைப் பார்த்து அறைகூவுகிறார்.
      நாகசாமி சமற்கிருதமும் பரதமுனிவரின் நடனநூல் மட்டுமே படித்துள்ளார். வேறு இலக்கியங்களைப் படிக்கவில்லை. தொல்காப்பியத்தையும் சரியாகப் படிக்காமல் நுனிப்புல் மேய்ந்துள்ளார். தொல்காப்பியத்தில் 100 கொள்கைகள் உண்டு. அகம் புறம் என்பதே வடசொல் என்கிறார். இப்படி முழு முட்டாள்தனமாக எழுதிவிட்டு முதன் முறையாக நானே எழுதியுள்ளேன் என்று மார் தட்டுகிறார்.
      4ஆம் நூற்றாண்டு காலத்தில் சமற்கிருதத்தில் அணிநலன்கள் இல்லை. 7ஆம் நூற்றாண்டில்தான் சமற்கிருதத்தில் அணிநலன்கள் வந்தன. உவமை என்ற தமிழ்ச்சொல்லைத் திருடி சமற்கிருதத்தில் உவமா என்றனர். தீ என்னும் தமிழ்ச்சொல்லைத் திருடி தீவகம் என்றனர். இயைபுதான் யமகம் என்று சொல்லாமல் யமகம் இயைபு ஆனது என்கிறார்.  
     
      29-9-2012இல் எழுத்தாளர் துரை.இரவிக்குமாரின் மணற்கேணி அமைப்பு புதுச்சேரியில் நடத்திய தமிழும் சமற்கிருதமும் என்ற தலைப்பிலான ஆய்வரங்கில் கலந்து கொண்டவர்களில் நடன.காசிநாதன், அ.மணவாளன், சு.இராசவேலு, மாதையன் போன்றோர் நாகசாமியாரின் நூலுக்கு மறுப்பும் கண்டனமும் தெரிவித்தனர். நடன.காசிநாதனாரின் உரையின் சில பகுதிகளைக் கீழே காண்க:
     
பொருந்தல் அகழாய்வு தொன்மைத் தமிழ் எழுத்துக்கள் நிறைமுடுக்க நிரலளவி (ஏ.எம்.எசு) காலக்கணிப்பு கி.மு.490, ஆதிச்சநல்லூர் முதுமக்கள்தாழி தொல்தமிழ் எழுத்துக்கள் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்கும் முந்தியது. அனுராதபுரம் பானையோட்டுப் பொறிப்பு கி.மு.600-370, மாங்குளம் பாறைக் கல்வெட்டின் காலம் கி.மு.5ஆம் நூற்றாண்டு, பட்டிப்புரோலு கற்சிமிழ்க் கல்வெட்டுக் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு, புலிமான் கோம்பை தொல்தமிழ்க் கல்வெட்டுக் காலம் கிமு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு. அழகன்குளம் பானையோட்டுப் பொறிப்பு இரா.நாகசாமி கருத்து கி.மு.360 ஆகும்.
      முனைவர் கே.வி.இரமேசு கருத்துப்படி, தமிலி (தமிழ்) எழுத்து அசோகன் காலத்துக்கு முன்பாகவே தமிழகத்தில் அழியக்கூடிய பனையோலையிலும் மற்றுமிருந்த பொருட்கள் மீதும் எழுதப்பெற்று வந்தது. இவ்வெழுத்து முதலில் தமிழ்-பொலிந்தி எழுத்தாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டுப் பின்பு தமிழ் அங்கிருந்து பட்டிப்புரோலு வழியாக மகாசுதான்(வங்காளம்), சோகவுரா, பிப்பிரவா (கிழக்கு உ.பி.), பட்டிலி (இராசசுத்தான்) ஆகிய இடங்களில் பரவி இறுதியாகக் கி.மு. 3ஆம் நூற்றாண்டளவில் மேலும் சில புதிய வளர்ச்சி ஏற்பட்டு அசோகனால் பயன்படுத்தப்பட்டது. நாகசாமி தாம் ஒரு தொல்லியலறிஞர் என்று புலப்படுத்திக் கொள்வதைவிட சமற்கிருதத்தின் முனைப்பான பற்றாளர் என்று காட்டிக் கொள்வதிலேயே பெரும் ஆர்வம் கொண்டுள்ளார்.
     
இங்கொன்றும் அங்கொன்றுமாக இரண்டு மூன்று கூட்டங்களில் மறுப்பு அறிவித்தல் போதுமானதன்று. பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், அறிஞர் அண்ணா, தந்தைபெரியார் இல்லாத இக்காலத்தில் நாகசாமியாரின் உண்மைக்கு மாறான நயன் கெட்ட கருத்துக்களை வரிக்குவரி மறுத்து ஆங்கில நூல் இன்னும் வராதது தமிழர் நாணத்தகு நிலையாகும்.
தன்மானச்சூடும், தமிழிலக்கிய அறிவும், தொல்லியல் ஆய்வறிவும், உண்மையை வெளிப்படுத்தும் நேர்மை உள்ளமும் கொண்ட தமிழாய்வறிஞர் இனியும் காலந்தாழ்த்தாது இவ்வினையில் ஈடுபடுமாறு 'நற்றமிழ்' பணிவுடன் கேட்டுக்கொள்கின்றது. மற்றவர்கள், ஆரியப் புரட்டை விளக்கிப் பரப்புரை செய்து விழிப்பேற்படுத்த முயல்வோம்.

இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.    
(குறிப்பு :'நற்றமிழ்'  இதழில் எழுதியது - த.ந.)                       
------------------------------------------------------------------------