மொழி மரபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி மரபு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

நா.பார்த்தசாரதியின் "மொழியின் வழியே"


       நா.பார்த்தசாரதியின் மொழியின் வழியே


தமிழ் வாசகர்களால் புதின ஆசிரியராகப் பரவலாக அறியப்பட்டவர்  நா.பார்த்தசாரதி. தமிழ்த் தாளிகை உலகில் 1960, 70ஆம் ஆண்டுகளில் முதன்மையான புதின எழுத்தாளராகத் திகழ்ந்தவர் இவர்.  தமிழ் படித்துத் தமிழாசிரியராக வேலை செய்தவர்! கல்கி இதழின் துணையாசிரியராகப் பணி செய்தவர். தீபம் என்ற இதழைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் 23 ஆண்டுகள் நடத்தியவர். தினமணிக் கதிர் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

நா.பா., ஏறத்தாழ பதினைந்து புதினங்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள், குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், சமுதாய வீதியிலே போன்றவை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட புதினங்கள் எனலாம். புதினங்கள் மட்டுமின்றிக் கட்டுரை நாடகம் பாடல்களும் கூட இவர் எழுதியிருந்தாலும், புதின ஆசிரியராகவே பரவலாக அறியப்பட்டுப் பெயர் பெற்றார். 

மொழியின் வழியே
மொழியின் வழியே என்ற தலைப்பைக் கொண்ட இவருடைய கட்டுரை நூல், 1961இல் முதற் பதிப்பாகவும் 2002இல் இரண்டாம் பதிப்பாகவம் வந்தது. 144 பக்கங்களைக் கொண்ட இந்நூல், நம் தாய்மொழியாகிய தமிழ் தொடர்பான  பல்வேறு கூறுகளைக் கூறும் 21 தலைப்புகளில் எழுதப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டதாகும். கட்டுரை நூலாகையால் இது பரவலாக அறியப்படவில்லை. இந்நூலில் காணப்படும் சில கருத்துக்கள், புதின ஆசிரியராக இவரைப் படித்தவர்களுக்கு வியப்பளிக்கக் கூடியவையாக இருக்கக் கூடும்!
இந்நூலில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. தலைப்பையும் அத் தலைப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஒரு சோற்றுப் பதனாக மிகச் சுருக்கமாகவும் கீழே காண்போம்.

மொழியும் பணபாடும்
      மரபும் இலக்கணமும் தூய்மைக்கும், வழக்கும் இலக்கியமும் பண்பாட்டிற்கும் காரணமாக நிற்கின்றன எனகிறார் நா.பா. காற்றையும் நீரையும் பெற்று வளர்ந்து கிளைத்து வளமடைந்த பழுமரம் ஒன்றிற் கனியும் கனியைப்போல, மரபையும் இலக்கணத்தையும் போற்றி ஒழுகும் மொழியில் பண்பாடு கனியும்.
      மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவது போலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு, இலக்கணம், பழவழக்கு, இலக்கியமும் ஆகியவை இன்றியமையாதவை ஆகின்றன.
சான்றோர் மொழி ஆட்சிகளை மூலமாகக் கொண்டே மொழியின் பண்பாடும் உருப்பெறுகின்றது.
மொழியின் முன்னேற்றம்
     பழமையும் பண்பாடும் பொருந்திய எந்த மொழியும் தனது மரபிலிருந்து விலகியபின் முன்னேற இயலாது. மரபுடன் கைகோத்து நடவாத மொழி தனது கட்டுக்குலைந்து சீரழிவது ஒருதலை.  
பண்பட்ட இலக்கிய மொழி(செம்மொழி)களுங்கூட மரபைப் போற்றியே வாழவேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற் கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழிவல்லுநர் துணையின்றிச் செய்யப்படுமானால் தவறுதான்.  
      ஒரு மொழி முன்னேற வேண்டுமானால், மொழியை ஆர்வத்தோடு பேணுகின்ற பெருமக்கள் மிகுதியாக இருக்கின்ற நாடாக அம்மொழி பயிலும் நாடு இருக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு முதற் காரணம்.
      மொழியை எழுதுவதிலும் பேசுவதிலும் மிகுதியான கவனம் கொள்ள வேண்டும். முழுமுதலாகிய இறைவனிடம் பக்தி செலுத்துவது போல் மொழியின் மேல் பயபக்தி ஏற்படவேண்டும். கடவுளைப்போல் முதன்மை வாய்ந்தது ஆகும் மொழி. மொழியுணர்ச்சியற்ற மக்கள் வாழ்கின்ற நாடு நாகரிகத்திலோ, அறிவு வளர்ச்சியிலோ பண்படவே முடியாது. மொழிப் பற்ற்றின்றி விழிப்பற்றுக் கிடக்கும் மக்கள் விலங்குகளினும் இழிந்தவர். தாய்மொழியை ஏற்றமுறவும் முன்னேற்றவும் மறந்துவிடுகின்ற சமுதாயம் வாழத் தகுதியற்றது.  
பிழையற எழுதுதல், பிழையறப் பேசுதல், மரபு குலையாது நூலியற்றல், தான்தோன்றிகளாகாது, ஆன்றோர் சென்ற நெறியைப் பாதுகாத்தல், புதிய முறையைப் பழைய முறைக்குக் கேடின்றி ஏற்றுக் கொள்ளுதல் முதலிய செயல்களாலல்லவா ஒரு மொழி முன்னேற முடியும்?
      எந்த ஒரு மொழியும் அரசியலோடு இசையாதவரை தனித்து முன்னேற முடியாது என்கிறார்.

மொழியும் வரலாறும்       
      போர் பூசல்களையும் அரசாட்சிக்கு இருவேறு வேந்தர் போட்டி யிடுதலையும் ஒழுக்க வரையறை கடந்த அரசியற் சூழ்ச்சிகளையுமே பெரும்பாலும் உலக வரலாறுகள் பரக்க விரித்துப் பேசுகின்றன.
தமிழகத்து வரலாற்றில் இவற்றிற்கு ஒரு சிறிதும் இடமில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவை மிகக் குறைவான அளவிலும், ஒழுக்கத்தையும் அறவுணர்ச்சியையும் வற்புறுத்தும் உண்மைகள் நிறைந்த அளவிலும், தமிழகத்து வரலாற்றில் விளங்கும்.
ஒழுக்கமும், அறமும், அவையிரண்டுங் கலந்த பண்பாடும் உலகின் எந்த வரலாற்றிலும் இவ்வளவு கலந்ததுங் கூட இல்லை. போரிலும் கூட, வடக்கிருந்து மானம் காக்க உயிர்விடும் அரசர்களையும், பகைவன் கை நீர் பருக நாணி உயிர் துறந்த கணைக்கால் இரும்பொறைகளையுமே நாம் காண்கிறோம்.
கால முற்பாடு பிற்பாட்டிற்குரிய அடையாளமாக, அடிமை முத்திரையான கி.மு கி.பி.யைத் தவிர்த்து தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) என்றும் தொ.மு. (தொல்காப்பியருக்கு முன்) தொ.பி. (தொல்காப்பியருக்குப் பின்) என்று எழுதினால் என்ன?

மொழியும் கற்பிக்கையும் (போதனையும்)
     தமிழுக்கு அந்த(கல்வி மொழி)த் தகுதிஇல்லை. அதை உண்டாக்குவதும் அருமை. என்று கூறுவது அறியாமையால் நேரும் பிழைபட்ட முடிவு; பொருந்தாத துணிவு; இந்த முடிவால் தமிழ் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
      (இந்த வகையில் பாரதியாரின் தமிழ் உள்ளம் குமுறியதை அவரின் சொல்லவுங் கூடுவதில்லை அவை.... என்ற பாரதியின் பாடலை எடுத்துக் காட்டி எழுதுகிறார்)
      தமிழில் கலைகளை கற்பிக்கலாம்; கலைச் சொற்கள் உள்ளன; இன்றியமையா நிலையில் கலைச் சொற்களை உண்டாக்கிக் கொள்ளலாம்.  தமிழ் மொழியைப் போல எல்லாக் கலைகளுக்கும்  இடங்கொடுக்கும் பரந்த இயல்புடைய மொழி மற்றொன்று காண்பதரிது.

மொழியும் இசையும்
     இசைக் கலையைப் பகுதி பகுதியாகப் பிரித்து நுண்ணிதாக ஆராய்ந்து இவை குணம், இவை குற்றம், இவை இலக்கணம், இவை வழு என அக் கலைக்கு நிலையான வரையறைகள் கண்ட பெருந்திறன் பழந் தமிழர்க்கு இருந்துள்ளது.
      (இசை மரபு என்னும் பழந்தமிழ் இசைநூல் குறித்தும் உள்ளாளப் பாடல் முறை குறித்தும் விளக்குகிறார்)

மொழியும் பாட்டும் (கவியும்)
     பாட்டைச் சுவைக்கிறவர்கள் பண்பட்டு உயரவேண்டும் என்பதைப் பாடுகின்றவன் நோக்கமாகக் கொள்ளவேண்டும். உலகின் உயர்நிலை இழிநிலைக் காட்சிகளை மற்றவர்கள் காணாத ஒரு புதிய நோக்குடன் கண்டு தனக்கே உரிய சிந்தனைக் கலவையோடு அணிசெய்து படிப்போர்க்குக் கவர்ச்சி நிறைந்து தோன்றும்படி கூறும் தகுதி வாய்ந்தவன் எவனோ, அவன் பாட வேண்டும்.
      (தொல்காப்பியம் கூறும் பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல்... என்ற பாட்டிலக்கண மரபை எடுத்துக்காட்டுகிறார்)
      பொது(சாதாரண) நடையில் பொது(சாதாரண)க் கருத்தை உரைபோலச் சொல்லுகின்ற ஒருவகைப் பாட்டு மேல்புலத்தார் வழக்கில் உண்டு. இக் காலத்தில் தமிழ் வழக்கிலும் அது பரவி வருகிறது. நடைச்செய்யுள் என்பர் அதனை. உயரிய பொருட்பாடு அமையாவிட்டால் இவ்வகைச் செய்யுள்களும் பயனற்றவையே எனகிறார்.

மொழியும் செவிப்பயனும் என்ற கட்டுரையில் கேள்விச்செல்வம் குறித்து திருக்குறளை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

      
மொழியும் மரபும்
                அறிபுலனுக்கும் நுகர்புலனுக்கும் அவை பிறக்கும் மனத்திற்கும் ஆகிய இம் மூன்றோடும் தொடர்புபடும் இலக்கியம், மரபை விலக்கிய முறையிலே தோற்றுவிக்கப் படுமானால் சமுதாயத்தோடு இயைபு இழப்பது உறுதி. இலக்கியங்களைச் சமூகத்தோடு இணைக்கும் பொறுப்புடையதே மரபு.
(மரபு வழுக்களையும் வழுவமைதிபற்றியும் விளக்குகிறார்.)
பாட்டு, உரை, எழுத்து, பேச்சு ஆகிய எல்லாத் துறைகளிலும் மரபை எதிர்ப்பது, மீறுவது என்பது ஒரு பொழுது போக்கு விளையாட்டாகிவிட்டது இப்போது. மரபின் சிதைவு மொழியையும் சிதைக்கத் தொடங்காது என்பதற்கு என்ன உறுதி?

மொழியும் மனத்தத்துவமும் என்ற தலைப்பில் அப்பனைப் போல் மகன் என்ற கூற்றைச் சரியென்று நிறுவ முயலும் நா.பா.வின் முயற்சி இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையில் ஏற்றுக் கொள்ளுமாறு இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

இரண்டு மணிமொழிகள் கட்டுரையில் இரு குறள்களின் சிறப்பை விளக்குகிறார்.

மொழியில் ஒப்புநயம் என்ற கட்டுரையில் திருக்குறளில் ஒரே உவமை, ஒன்றில் நிலையாத தொடர்பின்மையையும் மற்றொன்றில் நிலைத்த தொடர்பையும் பொதுத் தன்மைகளாகப் பொருத்திக் கூறப்பட்டிருக்கும் நயத்திற்காக வள்ளுவரைப் பாராட்டுகிறார்.

தென்னிந்திய மொழிகள், மொழியும் நாடகமும் கட்டுரைகளில் தலைப்புக் கொத்த பல செய்திகளைக் கூறுகிறார்.

மொழியும் சிறுகதைகளும்
எழுத்தாளர்களே! இன்றைய வளர்ச்சியின் வேகத்தில் உங்களுக்கிருக்கும்
பொறுப்பைத் தவற விட்டுவிடாதீர்கள்.
      தமிழ் மரபும், தமிழ்ப் பண்பும், தமிழ் மக்கள் இனமும் என்றும் எதற்காகவும் பொறுப்பின்மைக்குத் தொடர்ந்து ஆதரவளித்தது இல்லை.


மொழியும் புதின வளர்ச்சியும் கட்டுரை, தமிழ்ப்புதின வரலாற்றை வளர்ச்சியைக் கூறுகின்றது.

தாளிகை(பத்திரிகை)களும் மொழிநடையும்
     நாளிதழிலிருந்து மாத இதழ்கள் வரை பெரும்பாலானவற்றின் மொழி நடையில் காணும் பிழைகளைக் களைய வேண்டும்.
சந்திப் பிழையும், மரபுப் பிழையும், பொருட் பிழையும் மலியப் பெரும்பாலான பிறமொழிச் சொற்களைக் கலந்து ஆசிரியருரை எழுதுவதும் தவறாக மொழி பெயர்ப்பதும் அச்சுக்கோப்பில் தவறு செய்வதும் இதழின் மொழிநடையைக் கெடுக்கும்.
கொச்சை மொழி, அயற்சொல் பயன்பாட்டிற்கு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுங்கும், மரபும், இலக்கணமும் இல்லாத மொழிநடையில் கருத்துக்கள் தங்குமா? தங்கத்தான் முடியுமா?
இறுதியாக, மொழியைப் பாதுகாக்க முடியாவிட்டாலும் அதன் தூய்மையைக் கெடுத்துக் கறைப்படுத்தும் பணியை அல்லது பழியை நீங்கள் செய்ய வேண்டாம்.

மொழியும் உரைநடையும் 
     சொற்களின் வகையும் பொருள்நிலையும் தெரிந்து பயன்படுத்த வேண்டும். மொழியை எளிமையாகவும், தூய்மையாகவும், தெளிவாகவும் பயன்படுத்துகிறவர்களைப் போற்ற வேண்டும்.
      பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் தன்னலத்தை இன்று எங்கும் காண்கிறோம்.
      தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் கவிதைகள் எழுத முயல்வதைக்  காட்டிலும் எளிமையும் தூய்மையும் தனித்தன்மையும் இலங்க நான்கு வாக்கியங்கள் நன்றாகவும் அழகாகவும் எழுதிவிடுவது எவ்வளவோ சிறந்தது. பிழையில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம்
      தெளிவுக்குச் சுருக்கம் தேவை. சுருக்கத்தில் அழகு அதிகம். தெளிவும் சுருக்கமும் இருந்தால் முறையும் இருக்கும்.

மொழியும் சுவையும்
     நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எண்வகை மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் வரிசைப் படுத்தியமைக்குக் காரணங்களை விளக்குகிறார். ஏனைச்சுவைகளுக் குள்ளது போல, சமனிலைச் சுவைக்கு மெய்யின் கண் நிகழும் வேறுபாடு இன்மையின் ஆசிரியர் தொல்காப்பியர் அதனைக் கூறாராயினர் என்னும் பேராசிரியர் கருத்தை எடுத்துக் காட்டுகிறார்.

மொழியும் புதிய விளைவுகளும்
     பிறமொழி பயிற்சி காரணமாக தமிழ் மொழி மரபுக்கு ஏலாத சொல்லிய அமைப்புகளை எடுத்துக் காட்டுகிறார். இடம் போட்டு வைத்தல், பங்கெடுத்துக்கொள்ளல், முயற்சிக்கிறேன், ஒருநூறு, மோசமானவராக இருக்கிறீர்கள் போன்ற தவறான ஆட்சிகளை விளக்குகிறார்,
      இருமொழி இணைந்து பிரியாது  ஒரு தொடராய் நிற்கும் பிறமொழிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது நல்லதாகாது என்கிறார்.
      தமிழ் புதிய வளர்ச்சியைப் பெறுவதற்குப் பழமையின் ஆசியும் அறிவுரையும் வேண்டும். புதுமையின் உழைப்பும் வேண்டும் என்று கூறுகிறார்.

மொழியும் பொறுப்புணர்ச்சியும்          
இலக்கியத்தில் படைப்போர் படிப்பொர் ஆகிய இருபாலார்க்கும் பொறுப்புணர்ச்சி குன்றும் போது தம் நிலையினின்று தாழ்கின்றனர். பொலிவு குன்றுகின்றனர். பண்பிழக்கின்றனர்.
யார் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்தல் தவறு. உரையாடலாகப் பேசும் பேச்சிலும், சொற் பொழிவிலும் செய்யப்படும் தவறுகள் காற்றோடு போய்விடும். எழுத்தில் செய்யப்படும் பிழைகளோ செய்தவரின் பொறுப்பின்மைக்கு நிலைத்த சான்றாக என்றும் இருந்துவிடக்கூடியவை.
(எழுத்தாளர்களைப் பழைய இலக்கியங்களையும், இலக்கண வம்புகளையும், மரபுகளையும் புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். முந்தைத் தலைமுறையின் அறிவைப் போற்றவும்,மதிக்கவும் தெரியாவிட்டால் பிந்தைத் தலைமுறையின் போற்றுதலும் மதிப்பும் உங்களுக்கு எய்தாது என்று கூறுகிறார்.)

மொழியும் அறநூல்களும்
                நல்லவற்றை விரும்பவும் தீயவற்றை வெறுக்கவும் கற்றுக் கொடுத்த பண்பை நமக்கு அளித்தது எது? இந்த நாளிலும் கூட நமக்கு அறத்திலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை பய்விடவில்லையே! இதற்குக் காரணம் நமது பழமையான அறநூல்களே எனபதில் ஐயமில்லை.
அறநூல்கள் விதை நெல்லைப் போன்றவை. வாழ்வை ஒழுங்குப் படுத்தும் உண்மைகளை நாம் அவற்றிலிருந்துதான் பயர் செய்து வளர்க்க வேண்டும். சமய நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள், காவியங்கள் என்ற மற்றைய துறைகள் எல்லாம் அறநூல்கள் என்ற விதை நெல்லிலிருந்து பயிர் செய்யப்பட்டவைதாம்.

முன்னுரையில் நா.பா.
     மனம் நடக்கிற வழியில் கால்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்தது. என்னுடைய மனம் நடக்கின்ற வழி எப்போதுமே தமிழ்வழி. உலகத்துச் சிந்தனைகளை எல்லாம் சிந்தித்தாலும் அவற்றைத் தமிழ்நாட்டு மனத்தோடு தமிழனாக இருந்து  தமிழின் வழியே சிந்திக்க வேண்டும் என்பது என் குறிக்கோள்.
      தமிழ்வழியில் நடக்காதவர்களுக்கு அருகே என்னுடைய கால்கள் நடக்க நேரும்போதும் கூட மனம் தமிழ் வழியிலேயே நடந்துகொண்டிருக்கும். கால்கள் எந்தெந்த வழிகளில் நடக்க நேர்ந்தாலும் மனம் ஒரே வழியில் நடக்கும்படி பழக்கிக் கொள்வதைத்தான் தவம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்தத் தவத்தைத் தமிழ்த் தவமாகச் செய்து கொண்டு வருகின்றேன்.
      இந்தத் தமிழ்வழி நடையில் வாசகர்களை எல்லாம் என்னோடு அழைத்துச் செல்ல ஆசைப் படுகிறேன். அந்த ஆசை காரணமாகத்தான் இந்த நூலுக்கு மொழியின் வழியே என்ற பெயரையும் சூட்டினேன்.
      இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே வங்காளிகளுக்கு ஏற்பட்டிருக்கிற தாய்மொழியுணர்ச்சி நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்பதை நினைக்கும் போது சிற்சில சந்தர்ப்பங்களில் நான் மனம் புழுங்கியது உண்டு. தமிழ் நன்றாகத் தெரிந்த தமிழர்களே தங்கள் தாய் மொழியில் உரையாடுவதற்கு வெட்கப்படுகிறார்களே!
      இந்த நிலைகள் யாவும் மாறி நாட்டுணர்ச்சி பெருக வேண்டும். அப்படிப் பெருகுவதற்கு எதைச் சிந்தித்தாலும் நம்முடைய மொழியின் வழியே சிந்திக்கப் பழக வேண்டும். மாசுகோவிலோ, அமெரிக்காவிலோ, லண்டனிலோ உங்கள் கால்கள் எந்த நாட்டின் வழியில் நடந்தாலும் மனம் தமிழ் வழியில் நடக்கட்டுமே! இது என் வேண்டுகோள். - இவை நா.பா. முன்னுரையில் எழுதியிருந்ததின் பகுதிகளாகும்.

      நா.பார்த்தசாரதி அவர்கள் தனித்தமிழ் இயக்கஞ் சார்ந்தவரல்லர். தனித்தமிழ்க் கொள்கையாளரும் அல்லர். அவருடைய எழுத்தாக்கங்கள் வடசொற் கலந்தே எழுதப் பட்டுள்ளன. ஆனால், இந்நூலில் காணப்படும் கட்டுரைகளில் பல இடங்களில் மரபு, தூய்மை, வழக்கு, இலக்கணம் பேணப்பட வேண்டும் என்று பலவாறு வலியுறுத்துவதைக் காண்கின்றோம். அறிவுரையாகவும் வேண்டுகோளாகவும் இவற்றையே அழுத்தமாகக் கூறுகிறார்.
அவர் வலியுறுத்தும்  இக் கருத்துக்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் காப்பளித்து நலன் சேர்க்கும் கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை.  இந்நூலை அவர் தம்முடைய ஏனைய நூல்களைப் போலன்றி நடையில் செறிவோடு எழுதியிருப்பதைப் பல இடங்களில் காணலாம்.

*****************************************************************