நாங்குநேரி: ஓராள் அமைப்பின் பரிந்துரைகளும் தமிழ்நாட்டரசும்!
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர் சின்னதுரையும் அவர்
தங்கை சந்திராசெல்வியும் அப் பள்ளியில் உடன்படிக்கும் மூன்று
மாணவர்களால் கடந்த
ஆண்டு (2023) ஆகத்து
மாதத்தில் சாதிய
வெறுப்பு காரணமாகக் கொடிய முறையில் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்டனர். அந் நிகழ்ச்சி மாந்தத் தன்மையுள்ள எல்லாரின் மனத்தையும் உலுக்கியது.
தாக்கப்பட்ட இருவரும் தக்க மருத்துவம் பெறுவதற்கும் அக்குடும்பம் இழப்பீட்டுத் தொகை
பெறுவதற்கும் தமிழ்நாட்டரசு ஏற்பாடு செய்தது. மேலும் அவர்கள் குடும்பத்தை நெல்லைக்கு மாற்றி
அவர்கள் தாய்க்கு வேறொரு மழலையர் பள்ளி
ஊழியராகப் பணிசெய்ய மாறுதலும் தந்தது. அவர்களுக்கு நெல்லையில் ஒரு வீடும்
ஒதுக்கியது. அம் மாணவர் இருவரும் வேறொரு பள்ளியில் படிப்பைத் தொடர உதவியது.
நாங்குநேரியில் நிகழ்ந்தது போன்ற கொடிய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்குப் பள்ளி,
கல்லூரி மாணவரிடையே சாதி உணர்வு அடிப்படையிலான வன்முறையைத் தவிர்க்கவும் நல்லிணக்கத்தை உருவாக்கவும் வழிகாட்டும் பரிந்துரைகளை வழங்கத் தமிழ்நாட்டரசு,
மதிப்பார்ந்த முன்னாள் உயர்நயன்மன்ற நயனகர் கே.சந்துருவை ஓராள்
அமைப்பாக அமர்த்தியது.
அவர் ஒன்பது
மாதம் செயற்பட்டு ஆங்கிலத்தில் 610 பக்கங்கள் கொண்ட
“நாங்குநேரி ஒருபோதும்,,,எப்போதும் வேண்டா” – (“Nanguneri
Never…Ever”) என்னும் தலைப்பில் ஆங்கில அறிக்கையை
18.6.2024-இல் தமிழ்நாட்டரசுக்குத் தந்தார்.
அந்த
அறிக்கையின் பரிந்துரைகள் மட்டும் தமிழில் “நாங்குநேரி இன்றும் என்றும் வேண்டாம்” என்ற
தலைப்பில் ‘போதிவனம்’ வெளியீடாக இருபது
பக்கங்களில் உருவா
பத்து விலையில் வெளிவந்துள்ளது
அதில் இரண்டு
தலைப்புகளில் மொத்தம் இருபத்துநான்கு பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன.
‘இனியும் காத்திருக்க முடியாத சிக்கல்கள்’ என்ற
பெருந்தலைப்பில், சாதிப்பெயர்களைக் கைவிடுதல்,
அனைத்துப்பள்ளிகளும் ஒரே
குடையின்கீழ், ஆசிரியர்களும் அதிகாரிகளும் முதலிய
இருபத்தொரு தலைப்புகளில் பரிந்துரைகள் உள்ளன.
இரண்டாவதாகத் ‘தொலைநோக்கு இலக்குகள்’ என்ற
பெருந்தலைப்பில் மூன்று
தலைப்புகளில் பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன.
கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மிகப்
பெரும்பாலனவை உடனே
செயற்படுத்தப்பட வேண்டிய இன்றியமையாத் தேவையினவாகவே இருக்கின்றன.
அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்ட உடனேயே, இங்குள்ள மதவெறிக் கூட்டமும் சாதிய
அமைப்புகளும் அந்த
அரிய அறிக்கைக்கு எதிராகக் கூச்சலிட்டன. அரசு
அறிக்கையை வாங்கி
வைத்து அமைதி
காக்கின்றது.
குமுகநயன் நிலைநாட்டப்பட வேண்டுமென்தில் ஈடுபாடும்,
சமன்மை நிலைநிறுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியும் இருப்பது உண்மையென்பதை வெளிப்படுத்த அறிக்கையைச் செயற்படுத்தும் உடனடி
நடவடிக்கைகள் தேவை.
தமிழ்நாட்டரசு காலந்தாழ்த்தாது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமென ‘நற்றமிழ்’ வலியுறுத்துகின்றது.
-
த. ந.
சாதி ஒழித்திடல் ஒன்று -
நல்ல
தமிழ்வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால்
மற்றப் பாதி
துலங்குவதில்லை!
- பாவேந்தர்
----------------------------------------------------------------
புதுவை நற்றமிழ் சூலை-அகத்து 2024 இதழில் வந்தது
----------------------------------------------------------------