ஞாயிறு, 31 அக்டோபர், 2010

எண்ணிக் கொதித்தெழு தம்பி!

கொதித்தெழடா!

எண்ணிக்  கொதித் தெழடா! தம்பி
ஏதும் முறையிலா இழிநிலை மாற்றிட  ..  ..  ..  .. (எண்ணிக்)

உயர்வென்றும் தாழ்வென்றும் பிறப்பினிலே பொய்
உரைத்துப் பழித்தே இழித்திடுவார்!
அயர்வின்றி உழைப்பவர் தாழ்ந்தவரா இந்த
அடாப்பழி தொடர விடுவதுவா?  ..  ..  ..  ..  ..  ..  (எண்ணிக்)

சாதி சமயத்தின் பேராலே நாட்டில்
சண்டை கொடுமைகள் உயிர்க்கொலைகள்!
ஆதி எதுவென ஆராய்ந்தால் அது
அரசியற் காரரின் தூண்டுதலே!  ..  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

ஊழல் சுரண்டல் பதுக்குதல்கள் தன்
உறவுக்கு முறைமீறி ஒதுக்குதல்கள்!
ஏழைகள் மென்மேலும் ஏழையராய் இங்கு
எல்லா மிழந்தே வாழ்நிலைகள்!  ..  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

பள்ளிக் குழந்தைகள் படித்திடவும் பணம்
பறிகொள்ளைக் கொடுமையைப் பார்த்திருந்தும்
கள்ளத் தனமாகத் துணைபோவார்! இதைக்
காறி உமிழ்ந்து திருத்திடவே  ..  ..  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

செல்வர்க்கே உதவிடும் சட்டதிட்டம் பொருள்
சேர்ந்து குவிந்திடும் அவர்க்குமட்டும்!
சொல்லும் திறத்தாலே ஏமாற்றி மக்கள்
சொந்த உணர்வை மழுங்கடித்தார்!  ..  ..  ..  ..  ..  .. (எண்ணிக்)

சொந்த இனங்கொலத் துணைபோனார்! வந்த
'சோனி'க்கும் சொத்தைக்கும் நாயானார்!
இந்த இழிவினில் தம்குடும்பம்  பதவி
எலும்புபெறக் காட்டிக் கொடுத்ததெலாம்  ..  ..  ..  ..  (எண்ணிக்)

ஞாயம் நயன்மைகள் சொல்பவரைச் சொந்த
நாட்டில் சிறைக்குள்ளே பூட்டுவதோ?
தேயத்தில் கொள்ளை அடிப்பவர்கள் என்றும்
திளைத்துக் கொழுத்துத் திரிவதுவோ?  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

அச்சம் துடைத்தெறி, ஆர்த்தெழுவாய்! அவர்
அழிவினை முடிவுசெய், அதர்ந்தெழுவாய்!
எச்சில் உமிழ்வாழ்க்கை ஏனினியும் அட,
இரண்டிலொன் றாகட்டும் என்றேநீ  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

-------------------------------------------------------------

வெள்ளி, 1 அக்டோபர், 2010

இனிக்கும் கழக இலக்கியம்!

கழக இலக்கியக் கணிக்கருஞ் சால்பு!
                   
சங்கத் தமிழின் சால்புஎனுந் தலைப்பில்
இங்குவந் தெங்கள் இன்னவை தன்னில்
நன்கொரு பாட்டினை நல்குவிர் என்றே
அன்பொடு பொதும்பர்” அமைப்பினர் கேட்க
அவ்வவை தந்ததை அறிவுறு இணையச்
செவ்வையர் படித்திட இவ்விடந் தீட்டினென்!

              -------------

அன்பும் மதிப்பும் அணிசெயுந் தலைவ!
நன்புரைப் பாவலீர்! நல்லவை அமர்ந்த
அறிஞரீர்! பெரியீர்! அன்புசால் தாய்க்குலச்
செறிதமிழ் உணர்வீர்! செயல்வல் இளமையீர்!
தோழமை சான்ற தூயநல் லுளத்தீர்!
ஆழன் போடே அவையினை வணங்கினேன்!

சங்கத் தமிழின் சால்புறு காலம்
மங்காத் தமிழின் மதிப்பொளிர் காலம்
முக்கழ கத்தே முற்றறி வோடே
எக்கா லத்தும் ஈடில் சிறப்பொளிர்
செந்தமிழ்ச் செவ்வியல் செப்பிடு மிலக்கியம்
எந்தமிழ் மொழியில் இயற்றிய காலம்!

தொன்மை செம்மை தூய்மை யதனுடன்
தன்தனித் தன்மையும் தகைசால் பொதுமையும்
செம்மொழிக் கிலக்கணம் செப்பினர் அறிவர்!
எம்மொழி யேஅவ் எல்லாச் சிறப்பையும்
உயர்வுறக் கொண்டதென் றுலகம் உரைக்கும்!
மயர்வற ஆய்ந்தே மாட்சியை விளக்கும்!

பொதுமை உணர்வைப் போற்றிய மொழிதமிழ்!
இதுமிகைக் கூற்றிலைஇன்றமிழ் இலக்கியம்
உலகம் உவப்ப’, ‘உலகம் யாவையும்’,
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு’ என்றும்,
வையகம் பனிப்ப வாழ்த்தித் தொடங்கலும்,
பொய்யில் புலவர் முதற்றே உலகு
எனக்குறிப் பிடலும் இனும்பிறி தொன்று
நனந்தலை உலகுஎன நனிதொடங் கிடலும்
பொதுமை உணர்வுப் பொதிந்துள துரைக்கும்!
இதுதவிர்த் தின்னும் சான்றுக ளுண்டே!

உலக இலக்கியம் உரைப்பதோ மாந்தரின்
இலகிடும் இயற்பெயர்! எந்தமிழ் மொழியிலோ
மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார்
என்ற நெறியினில் இயற்பெயர் தவிர்த்தே
நன்றாம் பொதுப்பெயர் நாடிக் குறிக்கும்!

இயற்கையை விளக்கும் இனியநற் பாக்கள்
வியப்பி லாழ்த்தும் நாடகக் காட்சிகள்!
ஆடமைக் குயின்ற... அகநா னூற்றுப்
பாடல் காட்டும் ஆடரங் கழகே!
பிரிவால் வருந்தும் பேதைத் தலைவி
அருந்துயர் தன்னில் அரற்றலைக் கேளீர்!
முட்டு வேன்கொல்தாக்கு வேன்கொல்?
ஆஅ! ஒல்எனக் கூவு வேன்கொல்?
அலமரல் அசைவழி அலைப்ப என்
உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே!
ஒப்பிலா துரைத்தயிவ் ஓங்கிய அவலம்
செப்பிய திறத்தின் சீர்சிறப் பறிக!

அகவன் மகளேஅகவன் மகளே!
மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்
அகவன் மகளே பாடுக பாட்டே!
இன்றரு கிருந்து இயம்பிடற் போன்றே
என்றும் ஒளிர்ந்திடும் எழிற்றமிழ்ப் பாடல்!

மாபெருஞ் செல்வன்மருத நிலத்தான்
தாவும் அலையுறு தாழ்நிலப் பரதவர்
பெண்ணை விரும்பினன்பேரறி வோடே
எண்ணிடுந் தோழி இயம்பிடும் பாடலே
செம்மீன்” தகழியார் தீட்டிடச் செய்ததோ?

அம்மம் மா,ஓ! அகத்தினிக் கின்ற
செந்தமிழ்ச் சீருறைச் செவ்வியல் பாக்கள்!
எந்தநாட் டறிஞரும் ஏற்றிடும் இலக்கியம்!  

உலகத் திற்கே ஒப்பிலாக் காதல்
இலக்கணம் இலங்கிட இயம்பிய பாடல்
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!

வாடிய பயிர்கண்டு வாடிய தாக
ஈடிலா வள்ளலார் இயம்பிய தறிவோம்!
பயிர்களும் மரஞ்செடி படர்கொடி வகைகளும்
உயிருடை யனவே உணர்ந்துளோம்உண்மை.
தன்தாய் வித்தித் தழைத்த மரத்தை
இன்தமக் கையிவள் என்றே நாணி
காதலற் சேரவோர் கரவிடம் தேடிய
காதலி கூற்றைக் கனித்தமிழ்க் கழக
நற்றிணைப் பாடல் நமக்குக் கூறிடும்!
எற்றைக் கும்இது ஈடிலாப் பாடல்!

அன்புதோய் காதலை அகத்திணை நூல்கள்
என்பும் ஈர்க்கும் இனிமையிற் கூற
மறமும் கொடையும் மற்றுமெய் யறிவின்
திறமும் உரைக்கும் புறநா னூறு!

செந்நா அவ்வை அந்நா ளதியமான்
மன்னன் மறத்தைச் சொன்ன திறமிது:
களம்புகல் ஓம்புமின்தெவ்விர்! போரெதிர்ந்து
எம்முளும் உளனொரு பொருநன்வைகல்
எண்தேர் செய்யும் தச்சன்
திங்கள் வலித்த காலன் னோனே!

மங்கையர் மறவுர மாட்சி விளக்கும்
பொங்கிடு முணர்வு பொற்பா பலவே!
சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்...
எற்றைக்கும் மறக்க இயலாப் பாடல்!

காரி பாரியோ டோரி குமணன்
வாரி வழங்கிய வண்மை விளக்கும்
சீருறு பாக்கள் செழிப்புறக் காண்கிறோம்!

ஒருதலை யாக உலகிற் குரைக்கும்
ஒருவரி கணியன் உளத்தெழுந் துரைத்தது
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதெலாம் அறுக்கும் தேர்வுரை இதற்கிணை
எங்குள தென்றே யாவரும் வியப்பர்!
மங்காப் பெரும்புகழ் தங்கிடும் தமிழ்ப்பா!

ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி த்தும்ப...
தண்டமிழ்ப் புறப்பா கண்டுகேட் டிருப்பீர்!

உண்டா லம்மயிவ் வுலகம் எனும்பா
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்னும்!
இன்னொரு பாடல் இயம்பிடும் இன்னெறி
பொன்றா உலகிற் பின்றிடாப் பொன்னெறி!
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்” என்பதே!

எடுத்தெடுத் துரைப்பின் எல்லாப் பாவையும்
அடுத்தடுத் திங்கே அடுக்கிட நேரும்!

கழக இலக்கியக் கவினுறு சால்பு
பழகிப் படித்துப் பயனுற வேண்டும்!
நம்மிருப் பென்னநாம்யார்அறிந்தே
செம்மாப்பு உணர்வில் செறிவுற வேண்டும்!
செழுந்தமிழ்ச் சிறப்பில் அழுந்த மூழ்கி
எழுச்சியும் உணர்ச்சியும் எய்திட
இனிக்கும் கழக இலக்கியம் பயில்வோம்!

-------------------------------------------