அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஜூலை, 2009

நெஞ்சே வெடித்துவிடும்போல்…




     துவைத்த துணிகளை மாடியில் கட்டியிருந்த கொடியில் ஒவ்வொன்றாய் விரித்துக் காயப்போட்டேன். காற்றில் பறந்து சென்றுவிடாதிருக்கக் கவ்வியைப் பொருத்தமாகப் போட்டேன். அதற்குள் கீழிருந்து அரசியின் (என் இல்லத்தரசிதான்) குரல் அழைத்தது. நெடுங்குத்தாய் அமைந்திருந்த படிக்கட்டுகளில் பொறுமையாகவும் கவனத்தோடும் இறங்கத் தொடங்கினேன்.

     எங்கள் வீட்டுக்கு எதிர்வீடு செந்தில் வீடு. செந்தில் ஏழாம் வகுப்பில் படிக்கும் நல்ல பையன். செந்தில் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள வீடு, 'சிவப்புக் கிழவி' என்று எங்களுக்குள் (நானும் என் துணைவியும்) பெயரிட்டுப் பேசிக்கொள்ளும் அம்மையாரின் வீடு. அவரும் அவர் கணவரும் அவர்களின் இரண்டாம் மருமகளோடும் மூன்றாண்டு அகவையுடைய பேரக் குழந்தை செல்வியோடும் வசித்துவரும் வீடு.

     நான் படிகளில் இறங்கிக் கொண்டிருந்த போது, அந்தச் சிவப்புக் கிழவியின் மருமகள், அப்போது தான் குளித்து உடுத்துப் பளிச்சென்றிருந்த தோற்றத்துடன் செந்தில் வீட்டு வாயிலில் உள்ள இரண்டு படிகளையும் ஒரே தாவாகத் தாவித் தாண்டி மகிழ்வுத் துள்ளலில் உள்ளே சென்றுகொண்டிருந்ததைக் கண்டேன்.

     தாழ்வாரத்தில் நின்று கொண்டிருந்த செந்தில் வெளியே வந்தான். மாடிப் படிகளிலிருந்து கீழே இறங்கிய என்னிடம், "கல்லப்பட்டிலிருந்து தொலைபேசி அழைப்பு ; அதனால் தான்!" என்று நமுட்டுச் சிரிப்புடன் மெல்லக் கிசுகிசுத்தான்! அந்த மருமகள், தன் கணவருடன் தனிமையில் பேச வசதியாக பக்கத்துவீட்டுத் தொலைப்பேசியில் அழைக்கச்சொல்லிப் பேசுவது வழக்கம்.

     சிவப்புக் கிழவியின் முதல் மகனுக்கு உள்ளூரிலேயே கட்டட ஒப்பந்தகர் வேலை; நல்ல வருமானம் உடையவர். மனைவி குழந்தைகளுடன் அவர் உள்ளூரிலேயே இரண்டு தெரு தள்ளிச் சொந்த வீட்டில் வசதியாக இருக்கிறார் . இரண்டாவது மகன், 50 கல் தொலைவிலிருந்த கல்லப்பட்டுத் தனியார் கல்லூரி ஒன்றில் வேலை செய்து வந்தார்; வருமானம் குறைவு; கல்லப்பட்டிலேயே குடும்பத்துடன்தான் இருந்தார். வீட்டு வாடகையும் குழந்தை செல்விக்கு மழலையர் பள்ளிக் கட்டணமும் வருமானத்தில் பெரும் பகுதியை விழுங்கியதால், பற்றாக் குறையால் தொல்லைப் பட்டுக் கொண்டிருந்தார்.

     இதை அறிந்து, சிவப்புக்கிழவியும் அவர் கணவரும், மருமகளையும் பேத்தியையும் தங்களுடனே த்தங்கி இருக்க, விழுப்புரத்திற்கு அழைத்து வந்து விட்டார்கள். குழந்தையை வீட்டிற்கு அருகிலுள்ள மழலையர் பள்ளியில் சேர்த்து விட்டார்கள். குழந்தை செல்வியின் அப்பா, பணியாற்றி வந்த கல்லூரியின் விடுதியிலேயே தங்கிக் கொண்டார். கல்லப்பட்டிலிருந்து அவர் ஒவ்வொரு காரி(சனி)க்கிழமை மாலையும் விழுப்புரம் வந்துவிடுவார்; ஞாயிற்றுக்கிழமை இருந்து விட்டுத் திங்கள் கிழமை விடியற் காலையில் கிளம்பிக் கல்லபட்டுக்குச் செல்வார். இப்படியான நிலையிலேயே கடந்த ஆறுமாத காலத்தில் வாழ்க்கை அவர்களுக்குப் பழக்கமாகி விட்டது.

     நான் வீட்டிற்கு உள்ளே வந்ததும் அரசி கடுகடுத்தாள். "கண் ஆய்வு செய்துகொள்ள இன்றைக்குத் தவளக்குப்பம் போகவேண்டு மென்பது மறந்து விட்டதா? ம் ... ம்... கெளம்புங்க" என்று அலுத்துக் கொண்டாள்.

     ஆம்! அவளுக்குத் தையல் வேலையின் போதும் படிக்கும் பொழுதும் பார்வைத்தெளிவின்றித் தொல்லைப்பட்டதால், இன்று புதுவையை அடுத்தத் தவளக்குப்பம் கண் மருத்துவமனைக்குப் போக வேண்டுமெனத் திட்டமிட் டிருந்தோம். விரைந்து குளித்து விட்டு நானும் கிளம்பினேன்.

     நாங்கள் இருவரும் வீட்டைவிட்டுப் புறப்படும் போது
சிவப்புக்கிழவி வீட்டு வாயிலில் மகிழுந்து ஒன்று நின்று கொண்டிருந்ததைக் கவனித்தேன். யாரேனும் விருந்தினர் வந்திருக்கலாம் என்று நினைத்தேன்.

     நாங்கள் தவளக்குப்பம் சென்று அரசிக்குக் கண் ஆய்வு செய்து கொண்டு, அந்த மருத்துவமனைக் கடையிலேயே கண்ணாடியும் காத்திருந்து வாங்கிக் கொண்டோம். பிறகு, புதுச்சேரி வந்தோம். புதுவையில் கடைகளில் வாங்க வேண்டியிருந்த பொருள்களை வாங்கிக் கொண்டு, பேருந்தைப் பிடித்து வீட்டிற்கு வந்து சேர மாலை ஆறுமணியாகி விட்டது.

     வீட்டை நெருங்கும் போதே சிவப்புக்கிழவி வீட்டுக்கு வெளியே தெரு வாயிலில் பந்தல் போடப்பட்டிருந்ததைப் பார்த்தோம். பந்தலின் கீழே நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த சிலர் தமக்குள் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.

     வீட்டைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்த நிலையில், பின்னாலேயே ஓடிவந்த செந்தில், ‘குழந்தை செல்வியின் அப்பா செத்துப் போயிட்டார்! அவர் வேலை செய்த கல்லூரியில் தண்ணீர்த் தொட்டி இடிந்து விழுந்ததால் அடிபட்டு இறந்தாராம்! மருத்துவ ஆய்விற்குப்பின் உடலை வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரத்திற்கு முன்தான் வந்தார்கள்!என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.

     சற்றும் எதிர்பாராத பேரதிர்ச்சியாக இருந்தது! அரசி, உடை மாற்றிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக சிவப்புக்கிழவி வீட்டிற்குச் சென்றாள். நானும் சென்று பார்த்துப் பேசிவிட்டு வந்தேன். காலையில் குளிக்கப் போனபோது விடுதியின் நீர்த்தொட்டி இடிந்து வீழ்ந்ததில் அடிபட்டு அங்கேயே இறந்து விட்டிருக்கிறார்.

     ஆறேகால் மணிக்கெல்லாம் எடுப்பதென்று சொன்னார்கள். கைப்பாடை அணியமாயிற்று. சடங்குகள் செய்வதற்காக, வீட்டிற்கு எதிரில் தெருவில் விசுப்பலகையைக் கொண்டு வந்து போட்டனர். கண்ணாடிப் பெட்டியிலிருந்து உடல் வெளியே கொண்டுவரப்பட்டது. பின்னாலேயே பெண்கள் கூட்டமாக நெருக்கமாய் அழுதபடியே வந்தனர்.

     சிவப்புக் கிழவியின் இரண்டாம் மருமகளை இரண்டு பெண்கள் தாங்கியபடியே அழைத்து வந்தனர். தொய்ந்து துவண்டு வதங்கி வாடிய கீரைத்தண்டாக இருந்தாள். முகம் அடையாளமே தெரியவில்லை. அந்த அளவு துயரத்தேக்கம். காலையில் செந்தில் வீட்டிற்குத் துள்ளித் தாவிச்சென்ற உருவா இது? என் நெஞ்சைப்பிழிவது போன்ற ஓர் அழுத்தமான துன்ப உணர்விற்கு ஆளானேன்.

     எல்லாம் முடிந்தது. இடுகாட்டுக்குச் சென்றவர்கள் ஒவ்வொருவராய்த் திரும்பினர். நானும், அங்கு வீசிய நாற்றம் பொறுக்கமுடியாமல் சடங்குகள் முழுவதும் முடியும் முன்பாகவே திரும்பி விட்டேன். துயரம் நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது.

     வீட்டில், குளித்துவிட்டு தலையை உலர்த்திக் கொண்டு ஏதோ சிந்தனையாக இருந்தாள் அரசி. நானும் குளித்துவிட்டு வந்தேன். இருவரும் அந்தப் பெண், - சிவப்புக் கிழவியின் இரண்டாம் மருமகளின் துன்பத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம்.

     கொஞ்ச நேரத்தில், திடுமென எழுந்தாள் அரசி. இம்... ஒரு குடும்பத்தில் ஒருவரின் இழப்பால் எவ்வெவ் வகையிலெல்லாம் யார்யாருக்கெல்லாம் துன்பம் துயரமென மாயந்து மாய்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம்! அங்கே, ஈழமண்ணில் எத்தனையோ மனைவிகளும் எத்தனையோ கணவன்களும் துணையிழந்தும், குழந்தைகள் தாய்தந்தையரை இழந்து கதறிக் கலங்கிக்
கொண்டிருக்கின்றனர். எத்தனையோ முதியோர் கவனிப்பாரின்றி மனஞ் சிதைந்து போயுள்ளனர். அவர்களுக்கு உணவில்லை; மாற்று உடையில்லை; குடிக்க, குளிக்க நீரில்லை; காயம்பட்டோருக்கும் நோயுற்றோருக்கும் மருந்தில்லை. அவர்களின் துன்பம் எப்படிப்பட்டதென நாம் முழுமையாக உணரவே இல்லைஎன்றாள்!

     உண்மைதான்! அத்துன்பத்தின் பாரிய பெரும் பேரளவை இப்போதுதான் உணரமுடிகிறது! ஐயோ, நெஞ்சே வெடித்துவிடும்போல் இருக்கிறது!

     மாந்தத் தன்மையே அற்ற மாந்தராக உலக நாடுகளின் ஆட்சியாளர்கள் மாறிவருகின்றனர். அவரவரும் தத்தமது நன்மையை மட்டுமே இலக்காகக் கொண்டு இயங்குகிறார்கள். ஒன்றிய நாடுகள் அவையும் உதவாத அவையாகிப் போனது! அறம், மாந்தநேயம் என்பதெல்லாம் அவ்வப்போது பேசி ஏமாற்றும் சொற்களாகிவிட்டனஎன்று அரசிக்கு விடை கூறினேன்.

     மேற்கொண்டு எதுவும் பேசாது இருவரும் அமைதி யானோம்!

-------------------------------------------------------------------