தமிழ்காக்க நடவடிக்கை எடுப்பீர்!
முதுகலைப்பட்டந்தாங்கி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கணிப்பயிற்றுநர்கள் போன்ற
பணிகளுக்குத் தேர்வுபெறத் தமிழ்மொழித் தேர்வில் வெற்றிபெறுவது கட்டாயத் தேவை என்று
2022-இல் தமிழ்நாட்டு அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கான 1996 முதுகலை ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புவதற்காகப் போட்டித்தேர்வை தமிழ்நாட்டு ஆசிரியர் தேர்வு வாரியம்
12.10.2025
அன்று
நடத்தியது.
இதில் தேர்ச்சி பெற, தமிழ்மொழித் தேர்வில் 40% மதிப்பெண்கள்
பெற்வேண்டியது கட்டாயமாகும். 40% தகுதி மதிப்பெண் பெறாதவர்கள், முதன்மைப் பாடத் தேர்வு
எழுதினாலும் அந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யாமல் புறக்கணிக்கப்படும்.
இத் தமிழ்த் தகுதித் தேர்வை 2,20,412 பேர்
எழுதியிருந்தார்கள். எழுதியவர்களில் ஏறத்தாழ 85,000 பேர் தேர்ச்சி பெறவில்லை
என்று சிலரும், ஏறத்தாழ 84,000 பேர் தோல்வியுற்றதாக வேறுசிலரும் கூறுகின்றனர். துல்லியமான
எண்ணிக்கை அதிகார அடிப்படையில் அறிவிக்கப்படவில்லை. எனினும், இந்த முடிவு தமிழர்
அனைவர்க்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது உண்மையாகும். முடிவாக, ஏறத்தாழ 36 விழுக்காட்டுத் (% ) தேர்வர்கள் தோல்வி
அடைந்ததாகக் கூறுகின்றனர்.
தமிழகத்தில் தாய்மொழியான தமிழ் பயிற்றுவிப்போர் -பயில்வோரின்
தகுதிநிலையை மேற்குறித்த தேர்வுமுடிவுகள் கூறுகின்றன. இந்த இரங்கத்தக்க நிலைக்கு யார் காரணம்? ஓர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்
மிகவும் மனம் வருந்தி, “ஏழாம் வகுப்பில்
பயிலும் ஒரு மாணவர்க்குத் தமிழ் நெடுங்கணக்கு – அதாவது அ,
ஆ, இ, ஈ,………ஒள, ஃ, க், ங், ச்,
ஞ்,……..ற், ன் - சொல்லவும் எழுதவும் தெரியாத நிலையாகவே பள்ளிக்கல்வி நிலை
இருக்கிறது” என்று கூறியதைக்
கேட்கநேர்ந்தது. இது சற்றும்
மிகையின்றிக் கூறப்படும் உண்மை நிலையாகும். அரசுப்பள்ளிகளின் நிலைமை இவ்வாறே உள்ளது. இதைப் பள்ளி ஆசிரியர் பலரும்
ஒப்புக்கொள்வர்.
இந்தநிலை, பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும்
தெரியாதா? என்ன ஆக்க
அடிப்படையிலான நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்? இந்தத் தமிழ்த் தகுதித்தேர்வு முடிவுகள் அவர்களுக்கும்
தெரிந்துதானே இருக்கும்? ஆசிரியர்களின் நிலையே
இரங்கத்தக்கதாய் இருக்கிறதே!
இதுவரை
பள்ளிக்கல்வித் துறை இவ்விழிநிலை போக்க ஏதாவது செய்திருக்கின்றதா?
‘தமிழ் வாழ்க!’ என்று அரசுக் கட்டடங்களில்
எழுதிவைத்தாலே தமிழ் வாழ்ந்துவிடுமா? மக்களை மயக்கி ஒப்போலை பெறும் வழியாகவன்றோ தெரிகிறது! இனியேனும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும்
விழிப்புற வேண்டும்! தமிழைக் காக்கும்
உண்மையான முயற்சியாக மாணவர்க்கு முறையாகவும் சரியாகவும் தமிழைப் பயிற்றுவிக்கத்
தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்!
முதலமைச்சர்
இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நெஞ்சை அழுத்தும் கவலையுடன் கேட்டுக்
கொள்கின்றோம்.