புதன், 29 அக்டோபர், 2008

வியத்தகு நிகழ்ச்சிகளின் வரலாறு!


(ஆங்கில மூலம்: ஆபிரகாம் தொ.கோவூர். *** தமிழாக்கம்: தமிழநம்பி)


     மிகுதியாக விற்பனையாகின்ற பம்பாயிலிருந்து வெளிவரும் ஒரு கிழமை இதழ், விளங்காத ஆராய்ச்சிக்குரிய விந்தைகளை உண்மையானவை என்று நிலைநாட்டுவதற்காக, எல்லா வகையான கற்பனைக் கதைகளையும் வெளியிட்டுப் படிப்பவர்களின் உள்ளங்களையும் சிந்தனைகளையும் மாசுபடுத்திக் கொண்டிருக்கிறது.

     அந்த இதழில், வழை (பீங்கான்)ப் பொம்மை ஒன்றைப் பற்றிய கதை வந்தது. நெடுங்காலத்திற்கு முன்பு இறந்துபோன ஒரு சப்பானியச் சிறுமிக்குச் சொந்தமா யிருந்த அப் பொம்மையில், அவளுடைய ஆவி குடிகொண்டிருப்பதாக அந்தக் கதையில் கூறப்பட்டிருந்தது.

     செத்துப்போன சிறுமியின் சாம்பல் இருந்த ஏனம் அபொம்மையின் பக்கத்தில் வைக்கப்பட்ட போதிலிருந்து அதன் தலையில் மாந்த மயிர் வளரத் தொடங்கிய தாகக் கூறப் பட்டிருந்தது. இந்த விந்தையான நிகழ்ச்சி, அப் பொம்மையில் இறந்து போன சிறுமியின் ஆவி குடி கொண்டிருப்பதை மெய்ப்பிப்பதாகக் கதையை எழுதியவர் கூறியுள்ளார்.

     அக் கதையை, நம்பத் தகுந்ததாக்கப், பல 'அறிவியலர்', அந்தத் தலைமயிரை ஆய்வு செய்து, அது மாந்தத் தலைமயிரென்று உறுதிப்படுத்தி உள்ளார்கள் என்றும் அந்த எழுத்தாளர் கூறியுள்ளார். பொது அறிவுடைய யாரும் அதை ஒரு கற்பனைக் கதை என்றே கருதுவார்கள் என்றாலும், பெரும்பாலான ஏமாளிகள், 'அறிவியலர்' சிலர் உறுதிப் படுத்தியதால் அதை உண்மை என்றே ஒப்புக்கொள்ள அணியமாக இருப்பர்.

     பொம்மையின் தலையிலிருந்து எடுத்த மயிர், மாந்தத் தலைமயிரெனக் கண்டுபிடித்த தாலேயே, உயிரற்ற அப்பொம்மையின் தலையில் மாந்த மயிர் வளருவதாக எந்த ஒரு உண்மையான 'அறிவியலறிஞ'ரும் முடிவு செய்ய மாட்டார். அவ்வாறு முடிவு செய்வது, ஒரு கம்பளப் போர்வையிலிருந்து எடுத்த மயிர் உண்மையான ஆட்டுமயிராக இருப்பதால், போர்வையில் ஆட்டுமயிர் வளருகின்றதென்று கூறும் மடமையான கூற்றைப் போன்றதாகும்.

     பொம்மையின் தலையில் முடி வளரவேண்டுமென்றால், அத்தலைக்கு அரத்த ஓட்டம் இருந்தாக வேண்டும். ஒரு மாந்தன் அல்லது விலங்கின் உடலில் முடி வளருவதற்குத் தேவையான பொருள், அரத்தத்தாலேயே அவ்வுடலின் தோலுக்குக் கிடைக்க வேண்டும். உண்மையான அறிவியலர் அந்தப் பொம்மையை ஆய்வு செய்திருந்தால், பொம்மையின் தலையிலிருந்து உண்மையிலேயே மயிர் வளருகிறதாஅல்லது மற்றெல்லாப் பொம்மைகளிலும் இருப்பதைப் போல ஒட்டப்பட்டு இருக்கிறதா? எனபதை ஆய்ந்து அறிந்திருப்பார்கள்.

     இந்தத் தாளிகை (பத்திரிகை)யி்ன் கதையின்படி, அப்படிப்பட்ட ஆய்வுகள் நடத்தப்படவில்லை. தலையில் மயிர் வளருவதற்கு இயலும்படி, அப் பொம்மையின் உடலில் அரத்தம் இருக்குமானால், உணவூட்டம், மூச்சுயிர்ப்பு, அரத்த ஓட்டம், மலங்கழிப்பு போன்ற உடலியக்க வினைகளையும் அந்தப் பொம்மை பெற்றிருக்க வேண்டும்.

     இந்த மிக முகன்மையான கூறுகள், இக் கற்பனைக் கதையை எழுதியவரின் மண்டையிலோ, இதனைப் பதிப்பித்த ஆசி்ரியரின் மண்டையிலோ நுழைந்திருக்கக் காணோம்! இறந்தவர்களின் உடலைவிட்டு நீங்கிவிட்டதாகக் கூறப்படும் ஆவியானது உடலும், தலையும், தலையில் மயிரும் பெற்றிருக்கும் எனபதை நம்புவதற்கு அணியமாக இருக்கும் ஆயிரக்கணக்கான ஏமாளிகள் ஒருபோதும் பகுத்தறிவைப் பயன்படுத்தியதே இல்லை!

     அண்ணாத்துரை இறந்துபோன பிறகு இருமுறை சொற்பொழிவுகள் செய்தார் என்பதை உறுதிப்படுத்திக் கூறுவதற்கு மதுரை மடத்தலைவர் சோமசுந்தர தேசிகர் இருக்கிறார்! 'பறக்கும் தட்டு' ஒன்றிற்குள் சென்று விண்வெளி மாந்தருடன் பேசியதாக அடித்துக் கூறுவதற்கு ஆடம் சுமித் இருக்கிறார்! அவர்கள் எந்த மொழியில் பேசினார்கள் என்று வியப்படைகிறீர்களா? இப்படிப்பட்ட நம்பமுடியாத கதைகளை எழுதும் எழுத்தாளர்கள், "அறிவியலர்" சிலரின் சான்றுறுதிகளை மேற்கோள் காட்டி, அக் கதைகளுக்கு நம்பகப் புனைவு தருவது வழக்கமாகக் கையாளும் நுட்பமாகும்.

     இசுரேலிய மந்திரக்காரர் யூரிகெல்லர் , 130 இலக்கம் ஒளியாண்டுத் தொலைவில் விண்வெளியில் உள்ள கணிப்பொறியியக்க மனங்களிடமிருந்து மன ஆற்றலைப் பெறுகின்ற திறமையினால் வியக்கத் தக்க நிகழ்ச்சிகளை நடத்திக் காட்ட வல்லவர் என்பதை நிலைநாட்ட நியூயார்க்கைச் சேரந்த முனைவர் அந்திரிசா புகாரிச்சு இருந்தார். புட்டபர்த்தி எத்தர் சாயிபாபா கடவுளின் தோற்றரவு (அவதாரம்) ஆக இருப்பதால், தெய்விய ஆற்றலுடன் "வியத்தகு செயல்களை" நிகழ்த்துகிறார் எனபதை வலியுறுத்த இந்தியாவில் முனைவர் எசு.பகவந்தம் இருக்கிறார்!

     சில 'அருள்பெற்ற' ஆள்களும் வர்சீனியாவைச் சேர்ந்த திருவாட்டி போன்டாவிற்குச் சொந்தமான ஓர் அருள் பெற்ற குதிரையும், தொலைவிலுணர் திறமும், புலன்மீறிய காட்சித்திறமும், உளத்தியல் தாக்கத் திறமும், முன்ன்றி திறமும் பெற்றிருந்ததாகத் தம் 'ஆராய்ச்சிக'ளின் வழி நிலைநாட்ட வட கரோலினாவி லுள்ள தியூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் சே.பி.இரைன் இருந்தார்!

     சாகர்த்தாவில் ஒரு முசுலிம் பெண்ணின் கருப்பையில் இருந்த முதிர்கரு குரான் வரிகளை ஒப்பிக்கும் திறமை பெற்றிருந்ததாக உறுதிசெய்ய இந்தோனேசியாவி்ல் சில மருத்துவர்கள் இருந்தார்கள்! பாண்டவபுரம் சாய்கிருட்டினா, அருள்திரு.கிருட்டினனின் தோற்றரவாக இருப்பதால் "வியத்தகு நிகழ்ச்சிகளை"ச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கிறார் என்று உறுதிப்படுத்திக் கூற பெங்களூர் முனைவர் சி.வெங்கட்டராவ் இருந்தார்!

     இத்தகைய புனைகதைகளை உண்மை என்று நிலைநிறுத்த அறிவியலறிவே இல்லாத 'அறிவியலர்' மலிந்திருந்தாலும், அவர்களை வீழ்த்த உண்மையான அறிவியலறிஞர்களும் இருந்துகொண் டிருக்கிறார்கள். சேம்சு ரேன்டி நடத்திய புலனாய்வுகள், யூரிகெல்லரின் மோசடியை வெளிப்படுத்தின!

     பேராசிரியர் சான் சுகார்னி, சே.பி.இரைனின் ஆவியாற்றல் குதிரையின் தொலைவிலுணர் திறம், புலன் மீறிய காட்சித் திறம் ஆகியவற்றின் பின்னுள்ள நுண்ணுத்தி (தந்திரம்), அக் குதிரையின் சொந்தக்காரி போன்டாவின் மறைவான சைகைகளே என்பதை வெளிப்படுத்தினார்! பெங்களூர் பல்கலைக் கழகத்தின் உண்மையான அறிவியலறிஞர்கள் சாயி கிருட்டினாவின் "வியத்தகு நிகழ்ச்சிகள்" எனக் கூறப் பட்டவைகளின் பின்னே இருந்த மோசடிகளை வெளிப்படுத்தினர்.

     இந்தோனேசிய அறிவியலர் ஒருவர், முசுலிம் பெண்ணின் கருப்பையிலிருந்த குரான் ஒப்பிக்கும் முதிர்கரு என்று கூறப்பட்டது, அவளுடைய மேலாடைக்குக் கீழே வயிற்றில் பொதிந்திருந்த தலையணைக்கடியில் மறைக்கப்பட்டிருந்த ஒரு நுண்ணளவு நாடாப்பதிவான் என்ற உண்மையை வெளிப்படுத்தினார்! இவ்வாறே, இந்தியாவிலுள்ள உண்மையான அறிவியலறிஞர்களின் புலனாய்வுகள் 'சத்திய சாயிபாபா'வின் மோசடிகளை ஒருநாள் வெளிப்படுத்தும்!

     புதிதாகத் திருத்தப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தின்படி, 'தோற்றர'வான சாய்பாபாவின் சாயத்தை வெளுக்க நாள்கள் குறிக்கப்பட்டு விட்டன! அடிப்படைக் கடமைகள் ஆகிய பத்துப் பிரிவுகளுள் ஒன்று, "அறிவியல் மனநிலையை வளர்த்துக்கொள்வதும், மாந்த நேயமும், தீர உசாவி (விசாரித்து) அறிவதும், சீர்திருத்துவதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும் என்று கூறுகிறது!

     அரசியல் சட்டத்தின் இப்பிரிவு, சாயிபாபாவும் பிற திருடர்களும் நிகழ்த்தும் வியப்பூட்டும் வினைகள் என்று கூறப்படுபவை பற்றி இந்தியப் பகுத்தறிவாளர்கள் அறிவியல் நோக்கில் உசாவல்கள் நடத்துவதன் மூலம் அவர்களுடைய "அடிப்படைக் கடமைக"ளைச் செய்வதை எளிதாக்கும்!

     ஒரு குடிமகனை, அவனுடைய கடமையைச் செய்யும்படிக் கட்டாயப் படுத்தச் சட்டம் இடந்தரவில்லை யென்றாலும், குடிமக்கள் அடிப்படைக் கடமைகளைச் செய்வதை எதிர்க்கும் போலி அறிஞர்களின் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்!

     ஏமாற்றுக்காரர்களின் மோசடிகளை வெளிப்படுத்துவதின் மூலம் அவர்களின் சுரண்டல்களிலிருந்து இலக்கக் கணக்கான என் மாந்தத் தோழர்கள் என்னுடைய சாவிற்கு முன்பு காப்பாற்றப் படுவார்களானால் - மக்களினத்தின் பால் அன்புள்ள ஒருவனாக, மகிழ்ச்சியோடு நான் செத்துப் போவேன்!
------------------------------------------------------------------