ஞாயிறு, 7 மே, 2023

31-3-2023 வெள்ளிக்கிழமை மாலை 05-30 மனியளவில் விழுப்புரம் புத்தகக்காட்சி அரங்கில் தமிழநம்பி ஆற்றிய உரை:

 

31-3-2023 வெள்ளிக்கிழமை மாலை 05-30 மனியளவில் விழுப்புரம் புத்தகக்காட்சி அரங்கில் தமிழநம்பி ஆற்றிய உரை:

===========================================================

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய பெரியோர்களே! அறிஞர்களே! தாய்க்குலமே! பல்வேறு அரசு அதிகாரிகளே! நூலகத்துறை சார்ந்தோரே! நிகழ்ச்சியை நடத்தும் புத்தக வெளியீட்டுக் குழுமத்தாரே! அவையிலுள்ள ஏனைய நல்லுள்ளங்களே! அனைவர்க்கும் வணக்கம். மூன்று பகுதிகளில் என் உரையைச் சுருக்கமாக முடிக்க விரும்புகிறேன்.

 

முதலில், வாழ்த்துரை:

       நெடுநாட்களாக விழுப்புரத்தில் புத்தகக் காட்சி வராதா? என்று ஏங்கி எதிர்பார்த்திருந்தோம். புத்தகத் திருவிழாவாகவே வருவதாக அறிந்தோம்; பருத்தி பொன்னாகக் காய்க்கப்போவதாக மகிழ்ந்தோம். ஆனால், உள்ளூர் எழுத்தாளர்களை, இந்த மாவட்ட எழுத்தாளர்களை அடியோடு புறக்கணிக்கும் விழாவாக அது அமைந்துவிடக்கூடாது என்ற ஆற்றாமையால், மாவட்ட மேலாண்மைக்கு, எழுத்தாளர் சோதி நரசிம்மனும் எழுத்தாளர் செகுட்டுவனும் நேரிலும் எழுத்துவழியாகவும் கோரிக்கை வைத்தனர்.

 

        அவை கண்டு கொள்ளப்படாமல் சுணங்கிய நிலையிலுள்ளதை அறிந்தோம். விழாத் தொடக்க நாளுக்கு முந்தைய நாள் மாவட்ட எழுத்தாளர்கள் விழுப்புரம் நகராட்சிப் பூங்காவில் கலந்துபேசினோம். முடிவாகத் துண்டறிக்கை வெளிவந்தது. ஆனால், அடுத்தநாள் காலை மாவட்ட ஆட்சியர் நேரில்வந்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகக் கூறியபோது மனம் நெகிழ்ந்து போனோம்.

 

         இந்த விழுப்புரம் புத்தகத்திருவிழாவில் ஓரிரு குறைகளிருந்தாலும் பொதுவாகச் சிறப்பாகவும் பாராட்டத் தக்கதாகவும் நடந்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டு முதலமைச்சர் முதல் இங்குப் பணிசெய்யும் கடைநிலைத் தொழிலாளர் ஈறாக அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர், நூலகர் உள்ளிட்ட அதிகாரிகள், விழா நடத்தும் பதிப்பு நிறுவனத்தார் இன்னும் தொடர்புடைய அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

இரண்டாம் பகுதி: தமிழும் புத்தகங்களும், உலக அறிஞர் கருத்துகளும்:

 

உலகமுதன்மொழியில்,

முதல்தாய்மொழியில்,

ஆப்பிரிக்கா மடகாசுகரையும் ஆத்திரேலிய கண்டத்தையும் இன்றைய குமரிமுனையையும் இணைத்திருந்த பெருநிலப்பரப்பான குமரிநாட்டுத் தமிழ் மாந்தனின் மொழியில்,

வண்புகழ் மூவராகிய சேரசோழ பாண்டியரின் தண்பொழில் வரைப்பில் பேசிய தமிழ் மொழியில்,

பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம் வையகம் போர்த்த வயங்கொலிநீர் – கையகலக் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி - ஆகிய தமிழ்க்குடி பேசிய தமிழ்மொழியில்…

 

     இன்று தமிழர்க்குக் கிடைத்துள்ள பழமையன நூலான தொல்காப்பியத்திற்கு முன் புத்தகங்கள், நூல்கள் இருந்தனவா? அவை என்னாயின? என்ற ஐயம் பலருக்கும் இருக்கும்.

அன்பார்ந்த அறிஞர்களே, அவையோரே!

 

         இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்களின் உயர்ந்த பல இலக்கிய நூல்கள் இருந்தன! இகலக்கண நூல்கள் இருந்தன! கலைநூல்கள, நுண்கலை நூல்கள் இருந்தன. இது, வீண் பெருமைக்காகக் கூறும் கூற்று இல்லை.

         சங்க இலக்கியத்தில் ஒருவன், ‘வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்; மெய் கூறுவல்!’ என்று கூறுவான். அதைப்போல் எதற்காகவும் பொய்யாக இதைக் கூறவில்லை! மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே சுவடியில் அல்லது வேறு வடிவில் நூல்கள் புத்தகங்கள் இருந்தமை உண்மைதான் என்பதை எளிதில் மெய்ப்பிக்க முடியும்.

 

         முன்பே கூறியவாறு, தமிழர்க்குக் கிடைத்துள்ள பழமையான நூல் தொல்காப்பியம். அதற்கும் முந்தைய நூல் எதுவும் கிடைக்கவில்லை. தொல்காப்பியத்தின் காலம் இன்றைக்கு 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்நூலுக்கு, முன்னுரையாகப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் என்பார், ‘முந்து நூல்கண்டு முறைப்பட எண்ணிப் புலம் தொகுத்தோனே’ என்று தொல்காப்பியரைக் குறிப்பிட்டு எழுதி இருக்கின்றார்.

        இதற்குப்பொருள்….. தொல்காப்பியர் அவருக்கு முன்தோன்றிய நூல்களை ஆராய்ந்து முறைப்பட எண்ணி தொல்காப்பியத்தை எழுதியிருக்கின்றார் என்பதுதான்.

மேலும், தொல்காப்பியத்தில், முதல் சூத்திரத்தில், முதல் நூற்பா விலேயே ‘எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப’ என்று கூறுகிறார்.

         இவ்வாறு என்ப, மொழிப, என்மனார், என்மனார் புலவர், மொழிமனார் புலவர், சொல்லினர் புலவர், வகுத்துரைத்தனரே எனப் பல்வேறு இடங்களில் பலமுறை தொல்காப்பியர் எழுதி யுள்ளார்.

         இவைமட்டுமல்ல அவையோரே, தொன்றுதொட்டு உயர்ந்தோர் அறிஞர் பின்பற்றி வரும் முறைமையை மரபு என்கிறோம். இதையே முன்னோர் மொழியைப் பொன்னேபோற் போற்றிக் கொள்ளும் தன்மை என்றும் சொல்வார்கள்.

தொல்காப்பியர், நூல்மரபு, மொழிமரபு, தொகைமரபு, விளிமரபு என்றவாறு இயல்களுக்குத் தலைப்பிட்டிருக்கிறார். இவையுந்தவிர மரபியல் என்றே ஓரியலுக்குத் தலைப்பிட்டிருக்கின்றார். மரபு என்னும் சொல்லைத் தம் நூலில் 60 இடங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தியிருக்கின்றார். இவையெல்லாம் தொல்காப்பியத்திற்கு முன்னரே பல நூல்கள் இருந்தன என்பதை உறுதிப்படுத்துகின்றன அல்லவா?

        சரி, இனி அந்த நூல்களல்லாம் எங்கு போயின? மொழியறிஞர் தேவநேயப்பாவாணர் கவலையோடு எழுதிய செய்தி இதற்கு விடையாக உள்ளது . “தமிழரின் பேதைமையால், பாழான மண்ணுக்கும் படையான சிதலுக்கும் படியாதார் நெருப்புக்கும் பதினெட்டாம் பெருக்கிற்கும் பற்பல பூச்சிக்கும் பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்தனை எத்தனையோ” என்று பாவாணர் எழுதுவார்.

        பகைவரின் சூழ்ச்சிக்கும் என்று எழுதியிருக்கின்றாரே, யாரந்தப் பகைவர்? அந்தச் சூழ்ச்சி என்ன? என்ற கேள்விகளுக்குச் சூரிய நாராயண சாத்திரி என்ற தம் பெயரைத் தனித்தமிழில் பரிதிமாற்கலைஞர் என்று மாற்றிக் கொண்ட நல்லறிஞர் விடை தருகிறார்.

         பரிதிமாற் கலைஞர் ‘தமிழ்மொழி வரலாறு என்னும் அவருடைய நூலில் பக்கம்.27-இல், ‘பிராமணர்கள் தமிழரசர்களிடம் அமைச்சர்களாகவும் மேலதிகாரம் மிக்க பிரபுக்களாகவும் அமர்ந்து கொண்டனர். தமிழரிடமிருந்த பல அரிய செய்திகளை மொழிபெயர்த்துக் கொண்டுத் தமிழர் அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தனர் போலவும் வடமொழியிலிருந்து அவை வந்தன போலவும் காட்டினர்’ என்று எழுதுகிறார்.

 

        இவையிருக்க, பாறை ஓவியங்களும் சித்திர எழுத்துக்களும் புத்தகத்தின் தொன்மையான வடிவங்களாக இருந்தன. சீனர்கள் முதலில் மரப்பலகைகளையும் மரப் பட்டைகளையும் எழுதப் பயன்படுத்தினர். பிறகு பட்டுத் துணிகளில் எழுதத் தொடங்கினர். தமிழர்கள் பனையோலைகளை நூல் எழுதப் பயன்படுத்தினர்.

 

    சரி, இனி, உலக அறிஞர்கள் புத்தகம் பற்றி என்ன சொல்லி யிருக்கின்றார்கள் என்று ஒருசிறு பார்வை:

 

      1.“புத்தகம் இல்லாத வீடு உயிரில்லாத உடலுக்கு ஒப்பானதுˮ என்கிறார் சிசரோ. 2.“மனிதனுடைய மிகச் சிறந்த கண்டுபிடிப்பு புத்தகங்கள் தான்ˮ என்கின்றார் ஆல்பர்ட் ஐன்சுடீன். 3.பழங்காலத்துப் பெரியோரை நேரில்கண்டு உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…–என்கிறார் மாசேதுங் 4.‘போதும் போதும் என்று நொந்துபோய்ப் புதுவாழ்க்கையைத் தேடுகிறாயா, ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குக’ என்கிறார் இங்கர்சால். 5.புரட்சிப் பாதையில் துமுக்கிகளைவிட பெரிய ஆய்தங்கள் புத்தகங்களே! என்கிறார் விளாடிமிர் இலியச் லெனின்.

        க) உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை வழங்கும் ஒரே இடம் நூலகமே எனக் கூறியுள்ளார். உ)உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனத்துக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! என்கிறார் சிக்மண்ட் பிராய்டு.            1.நூலை உண்டாக்கியவருடைய உயிராற்றல் போலவே நூலும் உயிராற்றல் உடையதாகும். - மில்டன் 2...நல்ல புத்தகமே என்றும் தலை சிறந்த நண்பன். - மார்டின் டப்பர்[1] 3.என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் வருத்தப்பட மாட்டேன் என்றார் மாஜினி 4.எனக்கு மிகவும் பிடித்தமான பொருள் புத்தகம். புத்தகத்திற்காகப் பணம் செலவழிப்பதில் நான் வீண்செலவாளி என்ற பட்டத்தையும் பெறத் தயார் என்றார் நேரு. 5.எனக்குக் கொஞ்சம் பணம் கிடைத்தால், புத்தகங்கள் வாங்குவேன்; பணம் மிச்சமிருந்தால், உணவும் துணிகளும் வாங்குவேன். என்றார் எராசுமசு. 6.புத்தகங்கள் இல்லாத வீடு, சாளரங்கள் இல்லாத அறை போன்றது - எச்மான். 7.“மண்புழுக்கள் மண்ணைவளமாக்கும், புத்தகப்புழுக்கள் மனத்தை வளமாக்குவர். என்றார் ஓர் அறிஞர். 8..உன்னை அதிகமாய்ச் சிந்திக்கச் செய்யும் புத்தகங்களே உனக்கு அதிகமாக உதவக்கூடியவை. - தியோடோர் பார்க்கர் 9.கற்பதற்குத் தகுதியான நூல்களைக் குற்றமறக் கற்கவேண்டும். கற்றபின் அத் தகுதிக்குத் தக்கபடி நடக்கவேண்டும் – திருவள்ளுவர்

 

       உலகின் பெரும்பேரறிஞர்கள் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. 1.கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு நஞ்சுகுடித்து உயிர்நீக்கும் தண்டனை தரப்பட்டது. நஞ்சு அவருக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். 2.இலிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளர் தூக்குக் கயிற்றை அவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். 3. இலண்டன் நூலகத்தில் இருபதுஆண்டுக் காலம் படித்து ஆய்வுசெய்த கார்ல் மார்க்சே பின்னாளில் பொதுவுடைமைத் கொள்கையின் தந்தையாக விளங்கினார். 4.நேரு தான் மறைந்தபின் தமது உடலின் மீது மலர் மாலைகள் வைக்காது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். 5.பேரறிஞர் அண்ணா படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைப் படித்து முடிக்கச் சில பக்கங்கள் மீதி இருந்ததால் அதை முடிக்கும் வரை உயிர்காக்கும் அறுவை மருத்துவத்தைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.

        நல்ல நூல்கள் நம்முள் நல்ல குணங்களை வளர்க்கின்றன. . நம்மைத் தூங்க விடாமல் அறிவு விழிப்பை ஏற்படுத்துவனவாகச் சிறந்த புத்தகங்கள் இருக்கின்றன. இவ்வளவு சிறப்புகளை உடைய புத்தகங்களை விரும்பாதார் யார்? விருப்பத்தோடு விலைக்கு வாங்காதார் யார்? என்ற கேள்விகளுடன் இப்பகுதியை முடிக்கின்றேன்.

 

மூன்றாம்பகுதி: என் எழுத்துப்பணி:

        நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அறிவியற் கட்டுரை ஒன்றை அப்போது கடலூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'தென்மொழி' என்ற மாத இதழுக்கு அனுப்பினேன். அதில் வெளிவந்தது. உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே தனித்தமிழ் ஈடுபாட்டாளனாக அறிவியற் கட்டுரைகள் எழுதுதலிலும், கலைச்சொல்லாக்கம், மொழிபெயர்ப்பிலும் ஈடுபட்டு வந்தேன்.

தென்மொழியில் வந்த என் கட்டுரையில், செய்திருந்த கலைச்சொல்லாக்கத்தைப் பாவாணரே ஒரு மாநாட்டில் பாராட்டிப் பேசினார்.

          என்நூல்களில் மூன்றே இதுவரை அச்சேறி வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று விடுகதைப் பாடல் நூல். பெயர் விடுகதைப்பா நூறு. தீங்கற்ற பொழுது போக்கு விளையாட்டு விடுகதை விளையாட்டாகும். ஒவ்வொரு விடுகதையும் ஒரு எண்சீர் மண்டிலப் பாடலாக உள்ளது. இரண்டு முறை இந்திய இலக்கியக் கழகமான 'சாகித்திய அகாதமி' பரிசு பெற்ற காலஞ்சென்ற ம.இலெ.தங்கப்பா ஐயா பாராட்டி அணிந்துரை எழுதியிருக்கின்றார்.

          இன்னொன்று, ஒரு மொழியாக்க நூலாகும். உளத்தியல் அறிஞரும் பகுத்தறிவாளருமான ஆமிரகாம் கோவூரின் நிகழ்வு ஆய்வுகள் பற்றியதாகும். அவருடைய ஆங்கில நூல்களான Begone Godmen, Gods, Demons and Spirits ஆகிய இரண்டு நூல்களிலும் அவர் நேரடியாக ஆய்வு செய்து அறிவியல் முறையில் தீர்வு செய்த பதுமையான, மூடநம்பிக்கைமிக்க, இயல்பு கடந்த நிகழ்ச்சி என்று கருதப்பட்ட நிகழ்வுகளைப் பற்றிய ஆய்வுகளாகும். அனைத்துமே உண்மையில் நடந்த நிகழ்வுகளாகும்.

          மூன்றாவது புத்தகம் நறுக்குத் தறித்தாற்போன்ற கருத்துகளைக் கொண்ட சொற்செப்பமும் சொல்லழகுமுடைய மும்மூன்று வரிகள் கொண்ட நூல்.

        கடைசியாக, ஒரு வேண்டுகோளோடு என் உரையை முடிக்கவிரும்புகிறேன். நீங்கள் அவ்வேண்டுகோளை ஏற்றாலும் சரி, தவிர்த்தாலும் சரி, அதைக் கூறவேண்டியதை என் கடமையாகக் கருதுகிறேன்.

         என் வேண்டுகோள் இதுதான் இப் புத்தகத் திருவிழாவில் பெரும்பங்கேற்று நடத்திவரும் வாயில் நுழையாத ஓர் ஆங்கிலப் பெயரைக் கொண்ட பதிப்பக நிறுவனத்தின் அறிவிப்பாளர்களும், நிகழ்வுகளை அறிமுகம் செய்வாரும் ஒருங்கிணைப்பாளரும் தமிழை இசைப்பாங்கோடு ஏற்ற இறக்கத்தோடும் நீட்டிக் குறுக்கியும் அருமையாகவும் சிறப்பாகவும் பேசினர். அது பாராட்டுக்குரியதாகும். ஆனால், ஓரோர் சமையத்தில் ஆங்கிலம் உள்ளிட்ட அயற்சொல் கலந்து பேசும்போது அது அழகிய முகத்தில் மருவாகத் தெரிகிறது. அதனைத் தவிர்க்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

வாய்பளித்தமைக்கு நன்றி கூறி முடித்துக் கொள்கின்றேன்.

--------------------------------------------------------------------------------------------------------------