ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பெரியாரைப் பற்றித் திரு.வி.க. எழுதியவை…!பெரியாரைப் பற்றித் திரு.வி.க. எழுதியவை

           முன்னாளில் தமிழ்நாட்டில் காங்கிரசு தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்க்கேனும் பரிசில் வழங்கப் புகுந்தால் முதல் பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரசு நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது.
     அவர் காங்கிரசு வெறிகொண்டு நாலா பக்கமும் பறந்து பறந்து உழைத்ததை யான் நன்கு அறிவேன். நாயக்கரும் யானும் சேர்ந்து எங்கெங்கேயோ தொண்டு செய்தோம்; காடுமலை யேறியும் பணிபுரிந்தோம்!

            இராமசாமி நாயக்கர் ஒத்துழையாமையில் உறுதி கொண்டு பலமுறை சிறை புகுந்தனர். அவ்வுறுதிக்கு இடர் விளைத்தது சுயராச்சியக் கட்சி. சுயராச்சியக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிரசு சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியது நாயக்கருக்கு எரியூட்டிற்று *தி.வா.கு.(ப. 433)

            வைக்கத்தில் (1924) தீண்டாமைப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகம் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து நாயக்கரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது நாயக்கருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று - *தி.வா.கு.(ப.435-436)

            1938-இல் பெரியார் கட்டாய இந்தியை எதிர்த்ததால் சிறைப் படுத்தப்பட்டபோது திரு.வி.க. நவசக்தி ஆசிரியருரையாக எழுதியிருந்ததின் பகுதி:

            திரு.ஈ.வெ.இராமசாமி கடுங்காவல் தண்டனை ஏற்று, சிறைக்கோட்டம் நண்ணினர். வெள்ளிய தாடி அசைய, மெலிந்த தோல் திரங்க, இரங்கிய கண்கள் ஒளிர, பரந்த முகம் மலர, கனிந்த முதுமை ஒழுக ஒழுகத் தாங்கிய தடியுடன் அவர் சிறைபுகுந்த காட்சி, அவர்தம் பகைவர், நொதுமலர், நண்பர் எல்லார் உள்ளத்தையும் குழையச் செய்திருக்குமென்பதில் ஐயமில்லை!
     முதுமைப் பருவம்! காவல்! கடுங்காவல்!  என்னே! இந்நிலையை உன்ன உன்ன உள்ளம் உருகுகிறது.
                ______________ 

*தி.வா.கு திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்.

நன்றி! நூல்: தமிழ் இதழியல் சுவடுகள் (பக்கம் 118,177,178), மா.சு.சம்மந்தன், தமிழ்க் குடியரசுப் பதிப்பகம், சென்னை-5.
---------------------------------------------------------