திங்கள், 8 மே, 2017

பொறிஞர் அகனின் “தமிழ் வீறு” – நூல் அறிமுகமும் கருத்துரையும்!



     பொறிஞர் அகனின்
தமிழ் வீறு நூல் அறிமுகமும் கருத்துரையும்!

     மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரின் மொழியாய்வுக் கொள்கைகளையும் கருத்துக்களையும் ஏற்று நடப்பவர் அகன் ஐயா! பொறிஞராக அலுவல் பார்த்தவர்; தமிழைத் தனியே பயின்றவர்; யாப்பிலக்கணம் கற்றவர்; இனிய எளிய உணர்வு தெறிக்கும் பாடல்களை எழுதுகின்றவர்; சுவைமிக்க கருத்தாழம் மிக்க சிறுகதைகளத் தூய தமிழில் எழுதுவதில் வல்லவர்.   

     அகன் ஐயா, தெளிதமிழ், நற்றமிழ், எழுகதிர், தமிழ்நேயம், தமிழர் முழக்கம், தேமதுரத் தமிழோசை, கண்ணியம், மள்ளர் மலர், திருக்குறள் தொண்டூழியம், தமுக்கு, யாதும் ஊரே, நாளை விடியும், புதிய தென்றல் போலும் சிற்றிதழ்களில் எழுதிய பாடல்களுடன் ஈராண்டுக் காலத்தில் எழுதிய பிற பாடல்களையும் சேர்த்து தமிழ் வீறு நூலாக்கியிருக்கின்றார்.



வெண்பா, கலிவிருத்தம், கட்டளைக் கலித்துறை, பொறிஞர் அகன் அவர்களின் பா நூலின் அனைத்துப் பாடல்களிலும் தலைப்பிற் கேற்ப, தமிழ் வீறு வெளிப்படுகின்றது அறுசீர் மண்டிலம், எழுசீர் மண்டிலம், எண்சீர் மண்டிலம், ஆசிரியம் ஆகிய பா, பாவின வகைகளில் 52 தல்ப்புகளில் பாடல்களை ஆக்கியிருக்கிறார்.

     தமிழைப் போற்றிக் காத்தல், தமிழ் ஆன்றோரைப் போற்றல், தமிழ் மரபு காத்தல், தமிழ், தமிழர் நலன்களுக்கெதிராக இயங்குவாரைக் கண்ணின்று கண்ணறக் கண்டித்தல், தமிழின் பல்வேறு சிறப்புகளைக் கூறல், தமிழைக் காக்க எழுச்சியூட்டல், குமுகாய சீர்திருத்தக் கருத்துக்களை வலியுறுத்தல், சாதி மதம் எதிர்த்தல், பெண்ண்டிமை எதிர்த்தல் போன்ற உயர்ந்த கருத்துகள் பாடுபொருள்களாக உள்ளன. நேரடியாகக் கூறி நெறிப்படுத்தும் உத்தியே பெரும்பாலும் கையாளப்பட்டுள்ளது.

முப்பாலே; முத்தமிழே; மூப்பில்லாச் செந்தமிழே!
இப்பாரின் முன்மை இயன்மொழியே! ஒப்பில்லா
நன்றூறும் வாழ்வறமும் நன்றாம் அகம்புறமும்
மன்னுலகிற் கீந்ததுன் மாண்பு
இப்பாடல் அகன் ஐயா தமிழைப் போற்றும் பாடல்களுள் ஒன்று!

பயனில் இந்தியைப் பகைத்தல் போலவே
மயக்கும் ஆங்கில மடமை மாய்ப்பமே என்று பாடுகிறார்.

ஐந்திணைச் சீரறம் ஓங்கு நந்தமிழ்ச்
செந்நெறி தீய்த்திடும் இந்தி ஓட்டுவம் என்றும் முங்குகிறார்.

நந்தமிழ் கொல்லும் திராவிட ஆரிய நஞ்சினையே
உந்தி அழுந்திட முற்றிலும் காறி உமிழ்ந்திடுக! என்கிறார்.

விழுப்புறு மானம், உரிமைகள் காத்திடல் வாழுதலாம் என்று விளக்குகிறார்.

விண்ணின்று வந்தொருவன் விழிப்பேற்றி விடியலீவான் என்றா உள்ளாய்? என்று கேட்கின்றார்.

சீரோங்கும் செந்தமிழின் தூய்மைதனைக் காக்கச்
சீரற்ற பிறஎழுத்து, சொல் விக்குவோமே என்று வலியுறுத்துகிறார்.

இந்தியா இந்தி இந்துவென் றுளறி
செந்தமிழ்க் குடிஎம் சீரினைச் சிதைப்பதா? எனச் சீறுகிறார்.

இவை போலும் கருத்துக்களும் எழுச்சியூட்டும் பாடல்களும் நூலெங்கும் விரவிக் கிடக்கின்றன. 

தனித்தமிழ் உணர்வார்ந்தார் மெய்ப்பு பார்க்கவியலாத நிலையில், இடம்பெற்றுவிட்ட அற்பம், சாமி, சதி, சவம் போன்ற சில அயற்சொற்களை அடுத்த பதிப்புகளில் தவிர்த்திடலாம்.

இன்றைய தமிழரின் வாழ்வு, மொழி, பண்பாடு பொன்ற பல்வேறு நிலைகளிலும் உள்ள சீர்கேட்டினைக் கண்டு மன வெதும்பலுடன்,  தமிழ் தமிழர் நலத்தையன்றி வேறு எவ்வகைப் பற்றுமற்ற துறவார்ந்த மனநிலையோடு ஒருவர்,  தமிழர்க்கு எழுச்சியூட்டப் பாடும் வீறார்ந்த பாடல்களாக தமிழ்வீறு பாடல்கள் விளங்குகின்றன எனில் மிகையில்லை. 

இன்னொரு பயனாக, நூலில் இடம்பெற்றுள்ள பாடல்களின் பல்வேறு யாப்பு வகைகளையும் குறிப்பிட்டிருப்பதால் தொடக்கநிலை பாவலர்க்கு பாட்டெழுத இந்நூல் பெரிதும் உதவியாயிருக்கும் என்பதில் ஐயமில்லை.

உயரிய கருத்தார்ந்த அரிய பாக்கள் அடங்கிய நூலைத் தந்துள்ள பொறிஞர் அகனார்க்கு நம் நெஞ்சார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்!
-------------------------------------------------------------------------