வீரவணக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரவணக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

அம்மாஅஅ.....!










அம்மாஅஅ.....!


உலகுமுன் காணா வொருதனிப் பெருமற
இலகுயர் மாந்த ஏந்தலாந் தலைவ
னீன்றுபுறந் தந்த எந்தமி ழன்னாய்!

ஆன்றவிஞ் ஞால அருந்தமி ழுளத்த
ரனைவர்க்கு மன்னை யானநற் றாயே!

நினையா யிழப்பெலா நெடுகத் தொடர்ந்திடுங்
கொழுமழு நெஞ்சகங் குத்திக் கிழிக்கும்
அழுவே மல்லே மரற்றலு மாற்றேம்!

நெஞ்சு நிமிர்த்தி நெடுங்கை யுயர்த்தி
வஞ்சகங் கொடும்பகை யஞ்சி வெருவுற
வணக்கம் முழக்குவம் வாழ்த்துவை யம்ம!

வணக்கம் வீர வணக்கமெந் தாய்க்கே!

வெள்ளி, 14 ஜனவரி, 2011

வீரவணக்கம்!

விழுப்புரம் வி.ப.இளங்கோவனார்க்கு
வீரவணக்கம்!


இவரியா ரென்குவீ ராயி னிவரே
தவச்சிறி தாறுந் தனிநல முன்னா
ஓங்குறு தூய்தமி ழுணர்வின ரென்றும்
நீங்கா நல்லிசை நெடுந்தொண் டாற்றிய
பெறற்கரும் பெரியார் பெருந்தொண் டரெனும்
சிறப்புறு தகைசால் செவ்வியர் பரந்த
ஆழ்கட லன்ன அமைதியர் ஆன்றநற்
காழ்சேர் கொள்கைக் கடுந்தொண் டாற்றியார்!
அழுக்குடை மழியா அடர்தா டிமுகம்
விழும இயக்க வி.ப. இளங்கோ!

மிதிவண் டிக்கடை; மேவிடு நினைப்பெலா
மெதிலுமெப் போது மெந்தமிழ் தமிழர்
உயர்வுற லன்றி யொன்றுவே றில்லை!

நயநற் கருத்தை நாடொறும் பலகையில்
சாலையோ ரத்தே சலிப்பிலா தெழுதிப்
பாலை மனத்தும் பசுமை கிளர்த்தவர்!

புதுவைவா னொலியில் புரையுறுந் தமிழ்கண்
டிதுவிது தவறென எடுத்தவர்க் குரைத்தவர்!

ஈழக் கொடும்போ ரிழிவுகண் டதிர்ந்தே
வேழமென் றேழ்ந்தவர்! வெய்தென் றேபல
அறவழிப் போரில் அழிசிறை ஏகியார்!

திறநற் றமிழில் தெளிவுறத் தொடர்ந்து
கொடுத்த படியே தொடுத்தார் பாடல்!

எடுப்புற எழுதி இளம்பா வலர்க்களி
பரிசுமுந் நூறு பாங்கினில் பெற்றவர்!

சரிதவ றுணர்த்தித் தமிழோ சைக்கிவர்
எழுதிய மடல்கள் இவருணர் வுரைக்கும்!

பழுதிலாத் தொண்டால் பைந்தமிழ் காத்தவர்!
இருங்கடல் வையத் தருங்கட னாற்றிய
ஒருமறத் தமிழர் ஓய்வுற் றாரே!

தேரலர் எதிர்த்தே தீந்தமிழ் காத்த
வீரருக் கெங்கள் விறலுறு
வீரவ ணக்கம்! வீரவ ணக்கமே!
---------------------------------------------------------------

சனி, 30 ஜனவரி, 2010

விழுப்புரத்தில் வீரவணக்கப் பொதுக்கூட்டம்




            விழுப்புரத்தில் முத்துக்குமாருக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் 30-01-2010 காரி(சனி)க்கிழமை மாலை 06-30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
           
            விழுப்புரம் அஞ்சலகத்திற்கு அருகில் பெரியார் சிலைப் பக்கத்தில் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு திரு. சோதி நரசிம்மன் தலைமை ஏற்றார்.
*
            தொடக்கத்தில், வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கும், ஈழமக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வற்புறுத்தித் தீக்குளித்து உயிர்நீத்த மற்ற ஈகிகளுக்கும் ஈகச்சுடர் ஏற்றிப் பெண்கள் வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து பலரும் மெழுகுத்திரி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
*
            அதன்பின், சோதிநரசிம்மனும் இன்னொரு தோழரும் உரையாடல் வழியாகத் தமிழ் மொழி அழிப்பு, தமிழர் நிலம் பறிப்பு ஈழத்தமிழர் படுகொலைகள், தமிழக மீனவர் சிங்களக் கடற்படையிரால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுதல் ஆகியவற்றை விளக்கினர். இடையிடையே இசைக்குழுவினர் விளக்கம் தரும் பாடல்களைப் பாடினர்.
*
            சொற்பொழிவாளர்கள் எழில். இளங்கோவும் திருச்சி வேலுச்சாமியும் ஈழத்தமிழருக்குத் துணையிருக்க வேண்டுமெனவும் இந்திய அரசும் தமிழக அரசும் ஈழத்தமிழருக்கு எதிரான போக்கைக் கைவிட வேண்டுமெனவும் விளக்கிப் பேசினர்.
*
            பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இரவு பத்துமணி அளவில் திரு. கொ.ப.சிவராமன் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.

------------------------------------------------------------------------------------------------------------

*