பழந்தமிழ் நூல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழந்தமிழ் நூல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

7.2.24 புத்தகவிழா உரை

 

7-2-2024 மாலையில் விழுப்புரம் புத்தகவிழா அரங்கில் தமிழநம்பி ஆற்றிய உரை:

===================================================

மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கும் பெரியோரே! மாவட்ட நூலகர் அவர்களே! அரசு அலுவலர்களே! தாய்க்குலமே! மாணவர்களே! அனைவர்க்கும் வணக்கம்.

 

அவையோரே, தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆய்வறிஞர்கள் தொல்காப்பியம் 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரையறுத்துக் கூறுகின்றனர். தொல்காப்பியத்திற்கும் முன்னதாகப் பல இலக்கணநூல்கள், இலக்கிய நூல்கள் கலைநூல்கள் இருந்ததற்கான சான்றுகள் அந்நூலிலேயே உள்ளன. 

எள்ளிலிருந்து எண்ணெய் எடுப்பதைப்போல் இலக்கியங்களிலிருந்துதான் இலக்கணங்கள் உருவாக்கப்பட்டன என்று அறிஞர்கள் கூறுகின்றனர். இலக்கண நூலன தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட நூல்களெல்லாம் நமக்குக் கிடைக்கவில்லை. 

மயிலை சீனி வேங்கடசாமி என்னும் ஆய்வறிஞர், ‘மறைந்துபோன தமிழ்நூல்கள்’ என்ற அவருடைய ஆய்வு நூலில் 200 நூல்கள் மறைந்துபோனதாகச் சான்றுகளுடன் குறிப்பிடுகிறார். மேலும் பல நூல்கள் மறைந்து போனதை ஆய்ந்தறிந்து சொல்வேன் என்று எழுதியிருந்தார். ஆனால் அதற்குள் அவர் வாழ்நாள் முடிந்துவிட்டது. 

பழந்தமிழ் நூல்கள் மறைந்ததற்குச் சீனி வேங்கடசாமி ஐயா கூறும் காரணங்கள்: கடற்கோள்கள், சமயப்பகைமை, மூடநம்பிக்கையால் ஏடுகளை அதாவது எழுதப்பட்டிருந்த பனைஓலைகளை தீயிலும், ஆற்றுநீரிலும் போட்டு அழித்தமை, கறையான் அரிக்க விட்டமை, ,அயலார் படையெடுப்பால் அழிந்தமை ஆகியனவாகும். 

மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பலநூல்களும் மறைந்ததற்குக் கூறிய காரணங்களை இதற்குமுன் இரண்டொரு கூட்டங்களில் கூறியுள்ளேன். பாவாணர், இடைக் காலத் தமிழரின் பேதைமையால் பாழான மண்ணுக்கும், படையான சிதலுக்கும், படியாதார் நெருப்பிற்கும், பதினெட்டாம் பெருக்கிற்கும், பற்பல பூச்சிக்கும், பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலை நூல்கள் எத்தனையெத்தனையோ எனக் கலங்கிக் கூறுவார். 

சூரியநாராயண சாத்திரி என்ற தம் பெயரை பரிதிமாற் கலைஞர் என மாற்றிக்கொண்ட அறிஞர், அவருடைய ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்ற நூலில் தமி.ழ்நூல்களை அழித்த பகைவர் யாரென்றும் ஏன் அழித்தனர் என்றும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 

இப்போது, நமக்குக் கிடைத்திருக்கும் பழந்தமிழ் நூல்கள், சங்க இலக்கியங்கள் என்ற பெயரில் குறிப்பிடப்பெறும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற பெயரிலான பதினெண் மேற்கணக்கு நூல்களுடன் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஆகும். இவற்றிலும் பத்துப்பாட்டும் எட்டுத்தொதகையும் மட்டுமே சங்க இலக்கியங்களாகும் என்பது அறிஞர் சிலரின் கருத்தாகும். 

சங்க இலக்கியங்களின் பெருமையை, சிறப்பை சியார்ச்சு ஆர்ட்டு போன்ற அயலக அறிஞர்கள் பலரும் போற்றிப் புகழ்கின்றனர். தமிழைச் செம்மொழி என அறிவிக்கக் காரணங்கள் கேட்டதற்காக அவர்கள் தம் வியப்பைத் தெரிவித்தனர். 

சரி, சங்க இலக்கியங்களில் இருப்பவைதாம் என்னென்ன? அவற்றில், தமிழரின் தொன்மை, நாகரிகம், பண்பாடு மேம்பட்ட வாழ்க்கைமுறை, நுட்மான மாந்தநேயக்கூறுகள், நுட்பமான அறிவுக் கூறுகள், பொதுமை உணர்வு, இயற்கை மொழியின் வளர்ச்சிக்கூறுகள், அறிவியல் வானியல் கூறுகள் முதலிய அரியபல செய்திகளைக் காண்கிறோம். 

அகப்பாடல்களில் காதலின் நுண்ணுணர்வுகள் மிகச்சிறப்பாக விளக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். புறப்பாடல்களில் அக்காலத் தமிழரின் வீரம், கொடை, அரசனின் கடமைகள், கல்வியின் சிறப்பு, உலகியல், அறிவியல், மருத்துவக்கூறுகள் முதலியவற்றை எல்லாம் நுணுக்கமாகக் கூறியிருப்பதைக் காண்கிறோம். 

உலகமே வியக்கும் அன்புணர்ச்சி வெளிப்பாடான மதம் சாதி உணர்வறியாத உண்மைக் காதல் பாட்டொன்றை நினைவூட்டுகிறேன். 

யாயும் ஞாயும் யாரா கியரோ?

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?

யானும் நீயும் எவ்வழி அறிதும்?

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.   

- இந்தக் குறுந்தொகைப் பாடலை அறியாதார் யார்? 

     ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ – என்னும் மாந்தநேயப் பொதுமை கூறும் புறநானூற்றுப் பாடலின் முதலடியைப் போற்றாதார் யார்? புகழாதார் யார்? 

கூறிக்கொண்டே இருக்கலாம், நேரமில்லை. 

அறிவார்ந்த அவையோரே, மறைந்த அறிஞர் வ.சுப.மாணிக்கம் ஐயா, ‘மாணிக்கக் குறள்’ என்றொரு நூல் எழுதினார். அந்நூலில் பழந்தமிழ் இலக்கியச்சிறப்பை ஒரு குறளில் கூறியுள்ளார் அக்குறள் இதுதான்:

பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால்

கிழம்போகும் கீழ்மையும் போம்.

சங்க இலக்கிய நூல்களைப் படித்தால், முதுமை போய்விடுமாம்! கீழான எண்ணங்களும் கீழான செயல்களும் போய்விடுமாம்! 

அன்பர்களே! விழுப்புரத்தில் புலவர் தமிழரசு முன்னின்று நடத்திய ‘சங்க இலக்கியப் பொதும்பர்’ எனும் சிறப்பான இலக்கிய அமைப்பொன்று இருந்தது. அவர்கள் அதே பெயரில் மும்மாத இதழொன்றையும் நடத்தினர், அவ்விதழில் ஒருமுறை ‘சங்கப் பனுவல் படி’ என ஈற்றடி கொடுத்து வெணபா எழுதும்படி கேட்டனர். அப்போது எழுதிய வெண்பா. 

இங்கிவ் வுலகில்நீ யாரென் றறிந்துணர

மங்காப் புகழ்ப்பண்பின் மாண்பறிய – கங்குலாய்த்

தங்கியுள இற்றையிழி தாழ்வகற்ற எந்தமிழா

சங்கப் பனுவல் படி.             

– என்பதே அந்த வெண்பா. 

அன்பார்ந்த அவையோரே! இத்தனை சிறப்பு வாய்ந்த அந்தச் சங்க இலக்கிய நூல்கள் எனிமையாக எழுதப்பட்ட உரைகளுடன் இப்புத்தகத் திருவிழாவில் பெரும்பாலான கடைகளில் இருக்கின்றன. வாங்கிப் படிக்க வேண்டும். விலை கொடுத்து வாங்க இயலாதார் நூலகங்களை நாடிச்சென்று படிக்க வேண்டும். நூலகங்களில் படித்து முன்னேறி உயர்ந்தோர் பலராவர். 

விழுப்புரம் மாவட்ட தலைமை நூலகத்தில் ஒருமுறை நடந்த நூலகவிழாப் பாட்டரங்கத்தில் ‘நூலகம்’ என்ற தலைப்பில் படித்த பாட்டொன்றின் சிறு பகுதியைப் படித்துக் காட்டி என் உரையை முடிக்க வி.ரும்புகின்றேன். 

ஆலகம் என்பது ஆலடி நிழலாம்!

ஏலகம் என்பது எளிதிலொப் புளமாம்!

ஓலகம் என்பது ஒலிசெய் கடலாம்!

காலகம் என்பது காற்றுசேர் நீராம்!

 

கீலகம் என்பது கேடுசெய் தந்திரம்!

கூலகம் என்பது குதிர்க ளஞ்சியம்!

சாலகம் என்பது சாளரம் பலகணி!

சூலகம் என்பது சூலுறு கருப்பை!

சேலகம் என்பது செறிகயல் சேரிடம்!

தாலகம் என்பது தாலாட்டு நா,வாய்!

 

கோலகம் என்பது குழகழகு வீடே!

தோலகம் என்பது தோற்பொருட் கடையே!

நீலகம் என்பது நெடுங்காழ் இருளே!

நோலகம் என்பது நோன்பிரு இடமே!

 

பேலகம் என்பது பெரும்புணை தெப்பம்!

போலகம் என்பது புகலுமகத் துவமை!

மேலகம் என்பது மேலுள்ள இல்லம்!

வாலகம் என்பது வயங்கொளி மாடம்!

மாலகம் என்பது மருந்தெனும் வேம்பு!

மூலகம் என்பது முழுத்தனி அணுவாம்!

நூலகம் என்பதோ அறிவின் தொகுப்பாம்!

 

நூலகம் செல்லுதல் சாலவும் நன்று!

மேலும் வளர்க்கும் ஏலும் வகையெலாம்!

அதனாற் பயனுற அழைக்கிறேன்

எதனா லுயரலாம் எனவேங் கிளையரே!

 

வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து முடிக்கின்றேன்.

நன்றி! வணக்கம்.

-------------------------------------------------------------------------