சனி, 2 ஜூலை, 2016

பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!



பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!
          - புலவர் குழந்தை ஐயா தரும் விளக்கம்!
-----------------------------------------------------------
     சில தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாடுகளுடன் நடத்திய கடல்வாணிகத்திற்குச் சான்று பகர்ந்துகொண்டு அம்மேனாட்டு மொழிகளில் இருந்து வருகின்றன.
தோகை துகி சிரியா
அகில் அகல் எபிரேயம்
கவி கபிம் எபிரேயம்
அரிசி அரிஜா கிரேக்கம்
இஞ்சி ஜஞ்சர் கிரேக்கம்
இஞ்சிவேர் ஜிஞ்சிபார் கிரேக்கம்

கி.மு.3000 ஆண்டுகட்கு முன், பாபிலோனிய நாட்டை ஆண்ட ஊர்ஏயா என்னும் மன்னனால், சாலடிய நாட்டின் தலைநகரான ஊர் (Ur) என்னும் நகரில் சேரநாட்டுத் தேக்கு மரத்தினால் திங்கட் கோட்டம் கட்டப்பட்டது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

கி.மு2600இல், தமிழகத்திலிருந்து கருங்காலி மரம், மணப் பொருள்கள் முதலியன எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதியானதாக,
ஆக்கஃப் என்னும் இடத்திலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

பாலத்தீனத்துப் பேரரசனான சாலமன் காலத்தே (கி.மு.1000) மூன்று ஆண்டுகட் கொருமுறை, தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து கப்பல்கள் அங்குச் சென்றனவாம்.

திமிலையுடைய எருதுகள், பாரசீக வளைகுடாவுக்கும், ஆப்பரிக்காவுக்கும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டனவாம். (டாகடர் இராசமாணிக்கனார்-இலக்கிய வரலாறு-45)

மேனாட்டுகட்கு மிகுதியாக ஏற்றிமதியானது மிளகு ஆகும். அடுத்தது ஏலம் முதலிய மணப்பொருள்கள், முத்து, யானைத் தந்தம் முதலியனவாம்.
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை சிதற
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி      - (அகநானூறு-149).....

இரும்பிலிருந்து எஃகு (உருக்கு) செய்வதற்குத் தமிழ்நாட்டாரைத் தவிர, அக்காலத்தில் வேறு யாருக்கும் தெரியாதென்று கிரேக்க உரோமப் புலவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
எகிப்து நாட்டுக் கல்லறைக் கோபுரங்கட்கு (Pyramids) அடியிலிருந்து சேலத்து எஃகினால் செய்யப்பட்ட சுத்தி உளி முதலிய கருவிகள் கிடைத்திருக்கின்றன.

எஃகு ஆராய்ச்சியில் வல்லுநர்களான J.M.Heath என்பாரும் Sir.J.J.Wilkinson என்பாரும் சேலம் எஃகினால் செய்யப்பட்ட சுத்தி, உளி முதலியவற்றைத்தாம் எகிப்து நாட்டுச் சிற்பிகள் அப் பழங்காலத்தே பயன்படுத்தினார்கள் என்கின்றனர்.
அக்கல்லறைக் கோபுரங்களின் காலம் கி.மு.8000 ஆண்டுகட்கு முற்பட்டதென்பர்.  

(புலவர் குழந்தை ஐயாவுக்கு நன்றி! கொங்குநாடு பக்கம் 86,87,88. சாரதா பதிப்பகம், சென்னை)
-----------------------------------------------------------