ஞாயிறு, 31 அக்டோபர், 2010

எண்ணிக் கொதித்தெழு தம்பி!

கொதித்தெழடா!

எண்ணிக்  கொதித் தெழடா! – தம்பி
ஏதும் முறையிலா இழிநிலை மாற்றிட  ..  ..  ..  .. (எண்ணிக்)

உயர்வென்றும் தாழ்வென்றும் பிறப்பினிலே – பொய்
உரைத்துப் பழித்தே இழித்திடுவார்!
அயர்வின்றி உழைப்பவர் தாழ்ந்தவரா – இந்த
அடாப்பழி தொடர விடுவதுவா?  ..  ..  ..  ..  ..  ..  (எண்ணிக்)

சாதி சமயத்தின் பேராலே – நாட்டில்
சண்டை கொடுமைகள் உயிர்க்கொலைகள்!
ஆதி எதுவென ஆராய்ந்தால் – அது
அரசியற் காரரின் தூண்டுதலே!  ..  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

ஊழல் சுரண்டல் பதுக்குதல்கள் – தன்
உறவுக்கு முறைமீறி ஒதுக்குதல்கள்!
ஏழைகள் மென்மேலும் ஏழையராய் – இங்கு
எல்லா மிழந்தே வாழ்நிலைகள்!  ..  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

பள்ளிக் குழந்தைகள் படித்திடவும் – பணம்
பறிகொள்ளைக் கொடுமையைப் பார்த்திருந்தும்
கள்ளத் தனமாகத் துணைபோவார்! – இதைக்
காறி உமிழ்ந்து திருத்திடவே  ..  ..  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

செல்வர்க்கே உதவிடும் சட்டதிட்டம் – பொருள்
சேர்ந்து குவிந்திடும் அவர்க்குமட்டும்!
சொல்லும் திறத்தாலே ஏமாற்றி – மக்கள்
சொந்த உணர்வை மழுங்கடித்தார்!  ..  ..  ..  ..  ..  .. (எண்ணிக்)

சொந்த இனங்கொலத் துணைபோனார்! – வந்த
'சோனி'க்கும் சொத்தைக்கும் நாயானார்!
இந்த இழிவினில் தம்குடும்பம் – பதவி
எலும்புபெறக் காட்டிக் கொடுத்ததெலாம்  ..  ..  ..  ..  (எண்ணிக்)

ஞாயம் நயன்மைகள் சொல்பவரைச் – சொந்த
நாட்டில் சிறைக்குள்ளே பூட்டுவதோ?
தேயத்தில் கொள்ளை அடிப்பவர்கள் – என்றும்
திளைத்துக் கொழுத்துத் திரிவதுவோ?  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

அச்சம் துடைத்தெறி, ஆர்த்தெழுவாய்! – அவர்
அழிவினை முடிவுசெய், அதர்ந்தெழுவாய்!
எச்சில் உமிழ்வாழ்க்கை ஏனினியும் – அட,
இரண்டிலொன் றாகட்டும் என்றேநீ  ..  ..  ..  ..  ..  ..(எண்ணிக்)

-------------------------------------------------------------