திங்கள், 12 ஏப்ரல், 2010

927ஆம் குறள் விளக்க எழுசீர் மண்டிலங்கள்.


உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். -குறள் 927. 

          இக் குறளை நான்கு எழுசீர் மண்டிலங்களில் விளக்கும்படிப் 'பன்மலர்' இலக்கிய மாத இதழ் கேட்டிருந்தது.
    அதன்படி எழுதப்பட்ட இந்த எழுசீர் மண்டிலங்கள் பன்மலர் இதழ் 109இல் வெளிவந்தன : 

மறைவினில் கள்ளை மாந்திய பின்னே
     மயக்கினில் அறிவையும் தளர்வார்
கறைமயக் குளறல் கூறிடும் செய்தி
     கண்டுகேட் டூரரெப் போதும்
பறையறை நகைப்போ டிகழ்வுறு எள்ளல்
     பகன்றிடும் திருக்குறள் ஒன்றை
நிறைவினில் விளக்கும் நிகழ்வினை யுரைப்பேன்
     நிலைத்திடு சான்றதைக் கேளீர்!

தெள்ளுற ஐயம் தெளிந்திட வொருநாள்
     தேர்ந்தொரு அஞ்சல கத்தில்
விள்ளுவீர் நூல்கள் விருப்பினர்க் கயல்மண்
     விடுத்திடக் கட்டண மென்றேன்!
உள்ளுள ஒருவர் உரைத்திடற் குரியர்
     உறுபொறுப் பினரவர் என்றார்!
வெள்ளுடை நீறு விளங்கிடு முருவில்
     வீற்றிருந் தாரவர் நடுவே!

கேட்டவி னாவிற் களித்தனர் விளக்கம்
     கேண்மையில் நன்றியைக் கூறி
ஓட்டமும் நடையாய் ஒருவகை யாக
     உச்சியில் வீடுவந் தடைந்தேன்!
மூட்டையாய் அரிசி வாங்கிட மாலையில்
     மொத்தவி லைக்கடை சென்றேன்!
வேட்டவா றரிசி வாங்கிய பின்னர்
     வீட்டினை நோக்கி நடந்தேன்!

கொஞ்சதூ ரத்தில் கூட்டமாய் மக்கள்
     குழுமியி ருந்ததைக் கண்டே
மிஞ்சிடு மாவ லுந்திடச் சென்றேன்
     மேலெலா மழுக்குட னாங்கே
வஞ்சவு ளறலும் வாயொழுக் குடனும்
     வளைவுறக் கிடந்தவர் காலை
எஞ்சலில் தெளிவில் எனக்கையந் தீர்த்தவர்!
     இழிநகை யாடின ரூரார்!

-----------------------------------------------------------------------------