திங்கள், 31 ஆகஸ்ட், 2009

மேலாண்மையில் தமிழ்!


(விழுப்புரம் ‘மருதம்விழாப் பாட்டரங்கில் கலந்துகொண்டு பாடிய அறுசீர்மண்டிலப் பதிகம்)

பெருமதிப்புக் குரியோரே! பேரன்பீர்! தலைமையமர்
பெரும்பா வாண!
அருந்தமிழ்ப்பா யாத்தளிக்கும் ஆற்றல்சால் பாவலரே!
அன்பு நண்பீர்!
இருளகற்றும் அறிஞர்களே! இன்னன்புத் தாய்மாரே!
இளமை யோரே!
தெருளார்ந்த தமிழ்வணக்கம் தெரிவித்தேன் எல்லோர்க்கும்
தெளிந்த அன்பால்!

விழுப்புரத்தில் மருதவிழா! விருப்பூட்டும் இனியவிழா!
விளக்க மாக
செழுமரபுக் கலைகளெலாம் சீருறவே தொகுத்தளிக்கும்
சிறப்பு மிக்க
எழுச்சிமிகு சுறவவிழா! எல்லாரும் மகிழ்கின்ற
இவ்வி ழாவின்
கெழுவலுறு பாட்டரங்கில் கிழமையிழந் தேங்குதமிழ்
கிளத்த வந்தேன்!

மேலாண்மை செய்மொழியாய் மேற்குலக மொழியின்னும்
மேலி ருக்க
ஏலாத மொழியிங்கு எமையாள ஏற்றமிகு
எம்த மிழ்த்தாய்க்(கு)
ஆலாத்தி எடுத்ததன்பின் அங்கோர்மூ லைதொலைப்பார்
அதையு ணர்ந்தால்
மேலான இந்தஇனம் மீத்தாழ்ச்சி உற்றகதை
மிகவி ளங்கும்!

வரப்பகலந் தொடர்பாக வழக்கொன்று நம்சிற்றூர்
வடிவே லுக்கும்
பரப்புகுறை நிலமுடைய பச்சையப்பன் இருவருக்கும்
      பட்ட ணத்தில்
உரத்தகுரல் வழக்கறிஞர் உகைத்தெழுந்தே ஆங்கிலத்தில்
      உரைசெய் கின்றார்!
கரப்பின்றிக் கூறின்இவர் கவலைமிகப் புரியாமல்
      கலங்கி நிற்பார்!

சிற்றூரில் வாழ்கின்ற சின்னத்தாய் மனைஉரிமை
      சிறுகு டிற்கு
கொற்றத்தார் அலுவலகம் கொடுத்தவிடை ஆங்கிலத்தில்!
      கூறும் செய்தி
கற்றறியாச் சின்னத்தாய் கலங்கிடுவாள் புரியாமல்!
      காணீர் ஈதே
உற்றநிலை! தமிழிலதை உரைத்திருந்தால் சின்னத்தாய்
      உணர்வாள் அன்றோ?

ஆண்டைம்பைத் தொன்றாயிற்(று) ஆட்சிமொழி சட்டமினும்
      ஆழத் தூங்கும்!
மாண்தமிழில் எழுதாது மக்களுக்குப் புரியாத
      மயக்க மூட்டும்
வேண்டாத மொழியினிலே விடைதருவார்! அரசாணை
      விடுப்ப தெல்லாம்
ஈண்டெமக்கு விளங்காத இன்னொருவர் மொழியிலெனில்
      இதுவா ஞாயம்?

அரசாணை நூற்றுக்கும் அதிகமுண்டு! தேவையெலாம்
      அவற்றை மெய்யாய்
அரசுநடை முறைப்படுத்தல்! ஆட்சிதமிழ் வழிநடந்தால்
      அதனால் மக்கள்
அரசாளும் முறைபுரிந்து அதன்நிறைகள் குறைகளையும்
      அறியக் கூடும்!
அரசினிலும் பங்கேற்க அதன்வழியாய்த் தொண்டாற்ற
      ஆகும் ர்க்கும்!

அதிகாரம் மக்களளித்(து) அரியணையில் அமர்ந்திடுவோர்
      அச்சம் இன்றி
அதிர்தலுற செயற்படுவீர்! ஆட்சிமொழி தமிழென்றே
      அறுத்துச் சொல்வீர்!
மதியாதார் ஒதுக்கிதமிழ் மக்களுக்கு விளங்குவகை
      மாண்பில் ஆள்வீர்!
புதியமொழி குழப்பமற பொருத்தமுற மக்களுக்குப்
      புரியும் அன்றோ?

அலுவலகப் பணியாளர் ஆசிரியர் மற்றவரும்
      அவர்கை யொப்பம்
பொலிதலுறத் தாய்மொழியில் பொறித்திடுவீர்! மக்களுக்குப்
      புரியும் வண்ணம்
சலியாதே தந்திடுவீர் தமிழினிலே உம்விடையைச்
      சட்ட திட்டம்
புலனாகும்! அவருணர்ந்தே போயடுத்த பணிபார்ப்பார்
      பொல்லாப் பில்லை!  

அலுவலக நடைமுறைகள் அரசாணை தமிழினிலே
      அளிக்க வேண்டும்!
மலியமிகக் கணிப்பொறிகள் மாத்தமிழில் மென்பொருள்கள்
      மன்ற வேண்டும்!
நலிவில்லாத் தொடர்புமொழி நற்றமிழே எனுமுறுதி
      நாளும் வேண்டும்!
வலிவோடு இவைசெய்தால் வண்டமிழிங் காட்சிசெயும்
      வாழ்வும் ஓங்கும்!          

--------------------------------------------------------------------------------------------------------

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

இன்முகத்தோடு உள்ளனராம்!

   இன்முகத்தோடு உள்ளனராம்!

இனக்கொலையர் வெங்கொடுமை எல்லை மீற
      இனியுமிதைப் பொறுப்பதுவோ என்றெ ழுந்த
மனக்கனலர் திரண்டறிவு ஆற்றல் வீரம்
      மாசற்ற ஈகத்தால் மண்ணை மீட்டே 
இனக்கொடியை ஈழத்தில் ஏற்றி ஆண்டார்!
      எல்லாரும் நல்லாட்சி இதுவென் றாரே!
தனக்கெனவே வாழ்ந்திடுவார் தில்லி யோடு
      தன்மானம் கெட்டுஓர்ஒப் பந்தம் போட்டார்!


சிங்களனை ஆளாக்கித் தில்லி யங்கே
      செந்தமிழ இனந்தன்னைச் சிதைத்த ழிக்க
இங்குள்ள தமிழர்களின் எதிர்ப்பை மாற்ற
      ஏய்த்துநடித்(து) ஏமாற்றி எல்லாம் செய்தார்!
எங்குமிலாக் கொடுங்குண்டு வீசி அங்கே
      எண்ணற்ற தமிழர்களைக் கொன்றார் இங்குப்
பொங்குணர்வில் பதின்மூவர் பொசுங்கிச் செத்த
      போதுமதைப் பொருட்படுத்தாக் கொடுமை என்னே!


உயிரிருந்த மூன்றிலக்கம் பேரை அங்கே
      ஒருசேர முள்வேலி அடைப்புக் குள்ளே
செயிர்உருவர் சிறைவைத்துச் சிதைக்கின் றாரே
      சிந்தைமிக நொந்தவரும் சிறுகச் சாக!
அயிறற்கு உணவில்லை அருந்த நீரும்
      அழற்காயம் நோய்கட்கு` மருந்து மில்லை!
எயிலிருக்கும் கோட்டையிருந்(து) இரண்ட கத்தில்
      இவருரைத்தார் இன்முகத்தோ(டு) இருப்ப தாக!


அடைத்துவைத்த கூடாரம் மிதந்த தங்கே
      அடைமழையின் வெள்ளத்தில் அவர்ந னைந்தே
முடைநாற்ற நீரினிலே நின்ற வாறே
      முன்னறியாத் துனபத்தில் மூழ்கிப் போனார்!
கடைகெட்ட தொலைக்காட்சி காட்டு மிங்கே
      களிப்போடு பேசியமர்ந் திருப்ப தாக!
விடைசொல்லும் நாளொன்று வந்தே தீரும்!
      விழிப்புவரும்! விடிவுவரும்! வீழ்வார் வஞ்சர்! 
 ----------------------------------------------------------------------------------------------------------
     
  

பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர்!


    பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான
                 ஈழத்தமிழறிஞர்!


தமிழ்ஈழம் என்று இக்காலத்தில் நாம் அழைக்கும் பகுதி, சிரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளாகக் குறிக்கப் படுகின்றது. இலங்கையின் மேற்குக் கரையிலும் மிக நெடுங்காலமாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர்.  அங்குப் பிறந்த அரிய ஆற்றல் மிக்க அறிஞர் பன்மொழிப் புலவர் சய்மன் காசிச் செட்டி ஆவார்.

தமிழர் வாழ்ந்த மேற்குக்கரை :

மேற்குக்கரையில் அமைந்துள்ள முனீசுவரர் கோயிலும், அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளும், அங்கு வாழ்ந்த மூதாதையர் பயன்படுத்திய தமிழில் எழுதப்பட்ட காணி நிலங்களுக்கான உறுதிகளும் சான்றுகளாக உள்ளன.

மேலும் இலங்கையின் மேற்குக் கரையோரமாக உள்ள பெருநிலப்பரப்பில், சிலாபம், உடப்பு, கருக்குப்பனை, மங்கலவெளி, கட்டைக்காடு, நாவற்காடு, நுரைச்சோலை, புளிச்சாங்குளம், நரைக்களி, மாம்புரி, பாலாவி, முந்தல், பாலைக்குடா, குறிஞ்சிப்பிட்டி, கற்பிட்டி, புத்தளம், மருதங்குளம், பலகைத்துறை, முன்னைக்கரை, நஞ்சுண்டான் கரை, கண்டல் குடா, முதலிய பல இடங்கள் தூயதமிழ் மணக்கும் ஊர்களாக நிலவி வந்துள்ளன என்பதற்குப போதிய சான்றுகள் உள்ளன என்று திரு.க.சி.குலரத்தினமும், தமிழ்ஒளி க.செபரத்தினமும் குறிப்பிடுகிறார்கள்.

உலகச் செலவரான (world traveller) இபன்பற்றுற்றா என்பவர், 1344இல் இலங்கைக்கு வந்திருந்த போது, யாழ்ப்பாண அரசரான செகராச சேகரனை, புத்தளத்திலிருந்த அரண்மனை ஒன்றில் சந்தித்ததாக தம் நூலான சாவர்நாமா வில் குறிப்பிட்டுள்ளதால், புத்தளம் பகுதி யாழ்ப்பாண அரசனின் ஆட்சியிலிருந்த தமிழ்ப்பகுதி என்பதை அறியலாம்.

பிறப்பும் கல்வியும்  :

மேற்குக் கரையோரத்தில் பெரிய ஊராகவும் துறைமுகமாகவும் விளங்கியது கற்பிட்டி ஆகும். இவ்வூரில் 21-3-1807ஆம் ஆண்டில் காபிரியேல் என்பார்க்கும் மேரி என்பார்க்கும் பிறந்தவர் சய்மன் காசிச் செட்டி என்பவராவார். செட்டி என்பது செட்டிமார் என்று அழைக்கப்பட்ட வணிகர் குலத்தைக் குறிக்கிறது.

சய்மன் காசி, கற்பிட்டியிலும், புத்தளம் கொழும்பு ஆகிய இடங்களிலும் கல்வி பயின்றார். தம் பதினேழாம் அகவைக்குள் தாய்மொழியாகிய தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். மேலும், சமற்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், அரபி, பாளி ஆகிய மொழிகளையும் தாமே கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலவரானார்.

பணியாற்றிய பதவிகள் :

     1824இல் கற்பிட்டி நயன்மன்ற மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்.
1828இல் புத்தளம் சிலாபம் பகுதிகளுக்கான மணியக்காரர் என்றழைக்கப்படும் ஊர்த் தலைமகனாகவும், 1833இல் அவர்தம் 27ஆம் அகவையில் மாவட்ட முதலியராகவும் அமர்த்தப்பட்டார். 1838இல் சய்மன் காசி, சட்டமன்ற உறுப்பினராக அமர்த்தம் பெற்றார். 1845இல் இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon civil service) சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1848இல் மாவட்ட நயனகராக அமர்த்தப்பட்டார். மாவட்ட நயன்மன்ற நடுவராக இருந்த போதே 1860ஆம் ஆண்டில், தமது 53ஆம் அகவையில் காலமானார். மாவட்ட நயனகராக பதவியமர்த்தப் பட்ட முதல் இலங்கையர் இவரே ஆவார்.

ஆற்றிய அரிய பணிகள் :
    
காசியின் பணிகள், அவருடைய புதுமையான ஆற்றல்களைக் காட்டுவனவாக விளங்கின. அவர் வரலாற்றறிவைப் புலப்படுத்துவன வாகவும், தமிழ் இனம் குமுக உயர்வு பற்றியனவாகவும், தமிழ் இலக்கியம் தமிழ்ப்புலவர்கள் பற்றினவாகவும் சமய அடிப்படை கொண்டனவாகவும் இருந்தன.
    
உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலாங்கு நெட்டாங்கு அளவுகள் பற்றி, அக்கால நிலவரைவியலர் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர் காசி. புதும அளவைக் கருவிகள் எவையுமின்றி, மேலைநாட்டு அறிஞர் வியக்கும் வகையில், இலங்கையின் நீளம், அகலம்,  சுற்றளவு, பரப்பு முதலியவற்றை முதலில் கூறியவரும் அவரே.

இலங்கையின் அனைத்து இன மக்களின் வரலாறு பற்றியும், ஊர்ப் பெயர்களின் வரலாறு பற்றியும் ஆய்ந்தெழுதினார். சிலோன் கருப்பொருட் களஞ்சியம் (Ceylon  gazetteer) என்னும் பெயரோடு 1834 இல் இச்செய்திகள் வெளிவந்தன. இந்நூல், காசிக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் அரசு வெளியிட்ட அரசிதழுக்கும் பிற இதழ்களுக்கும் முன்னோடியாக இருந்தது.

வரலாற்று நூல்கள் :
    
     கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள குதிரைமலை என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்தில் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658ஆம் ஆண்டு வரையில் எழுதிய காசியின் நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்குக் கைவிளக்காக உதவியது.

பரதவர் குல வரலாற்று நூலையும் காசி எழுதியுள்ளார். பல்வேறு நூல்களை ஆராய்ந்து இவர் எழுதிய இலங்கை வரலாற்றுக் குறிப்பு என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகக் காசி மதிக்கப்பட்டார்.

ஆக்கிய அகராதிகள் :

     தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக்கண்டறிந்து, அவற்றை நிரல்படுத்தி எழுதியிருக்கிறார். தமிழ் வடமொழி அகராதி, ஆங்கில -  தமிழ் அகராதி, தமிழ்ப் புதலியல்(botany) அகராதி ஆகிய நூல்களை எழுதினார்.  தமிழ் நூல்களின் பட்டியல் ஒன்றை அகராதி அமைப்பில் உருவாக்கினார். தமிழ்ப் புலவர்கள் 202 பேரின் வரலாறு கூறும்  நூலை, தமிழ் புளூடாக் (Tamil Plutarch) என்ற பெயரில் எழுதினார்.

     (பண்டை கிரேக்கத்தில் வாழ்ந்த 46 புலவர்களின் வரலாற்றை எழுதிய அறிஞர் புளூடாக்(Plutarch)கின் நூல், அவர் பெயரிலேயே புளூடாக் என்று வழங்கப்பட்டது.)
    
     மாலத்தீவு மொழியில் சிங்களமொழி கலந்துள்ளது பற்றி ஆராய்ந்தும், யாவாத்தீவின் மொழிக்கும் சமற்கிருத மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தும் சய்மன் காசி எழுதியிருக்கிறார்.

தமிழர் தொடர்பான நூல்கள் :

     காசி எழுதிய தமிழ்ப்புலவர் வரலாறு கூறும் நூல், தெ.பொ.மீ., விபுலானந்த அடிகளார் ஆகியோரின் அணிந்துரையை ஏற்று 1946இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.

     தமிழ்மொழியில் ஆக்கப்பட்டிருந்த நூல்களின் பட்டியலை அந்நூல்களின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல்கள் கூறும் பொருள், ஆக்கிய ஆண்டு முதலிய விளக்கங்களுடன் தொகுத்து 1848இல் வெளியிட்டார். இவ்வகையில் வெளிவந்த நூல்களில் இதுவே முதல் நூலாகும்.

     சய்மன் காசி அவர்களுக்குப் புகழ் தந்த நூல் தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்கள் தொடர்பானதாகும். மருத்துவக் கலாநிதி எசு.சிபோல் அவர்களின் பாராட்டு அணிந்துரையுடன் 1934இல் இந்நூல் வெளிவந்தது. இவரின் மற்றைய நூல்களைப் போலவே இந்நூலையும் காசி ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.
    
     இந்நூல், தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ்மொழியின் பழமை, தமிழரின் உடைகள் அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழரின் திருமணச்சடங்கு முறைகள் மலையாள மொழி பற்றிய விளக்கம் முதலியவற்றைக் கூறுகிறது.

     தமிழர்கள் 3300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழந்து வருகின்றனர் என்றும் இந்நூல் விளக்குகிறது. 1833ஆம் ஆண்டுக்கு முற்பட்ட இலங்கை, மாநில மாவட்டப் பிரிவுச் சிக்கல்கள் இன்றி இருந்ததாகவும் அறிவிக்கிறது.
    
     அறிஞர் சய்மன் காசி அவர்களுடைய நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் அந்தக் காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த போதிலும்,
அவையனைத்திலும் தமிழ் உணர்வு இழையோடி இருப்பதனால், அவருடைய பணிகள் யாவும் தமிழ்த் தொண்டுகளாகவே கொள்ளப்படும் என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.

     காசி, தமிழில் உதயாதித்தன் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை 1841இல் தொடங்கிச் சிறிது காலம் நடத்தியதும் அவரின் தமிழ்ப்பற்றைக் காட்டுவதாகும் எனபதும் அறிஞர்களின் மதிப்பீடாகும்.

பிற நூல்கள் :

     காசி சமயஞ் சார்ந்த நூல்களையும் எழுதி இருக்கின்றார். திருக்கேணேசு வரத் திருக்கோயில் பற்றிய கவிராச வரோதயரின் பழைய தொன்மப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 1831இல் வெளியிட்டார். கடவுள்மா முனிவரின் திருவாதவூரர் தொன்மத்தின் பகுதிகளையும் அல்லியரசாணி வரலாற்றையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

     முசுலிம்களின் சீறாப் புராணத்தை ஆய்வுசெய்து, சீறாப் புராணத்தின் சிறப்பு என்னும் நூலை எழுதினார். கத்தோலிக்கத் திருச்சவைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பற்றி எழுதியிருக்கின்றார். பிலிப்-டி-மெல்லோ, ஓசப் வாசு ஆகியோரின் வரலாறுகளையும் எழுதியிருக்கின்றார். மேலும், கிறித்தவ மறைதோன்றியத்தின் (வேதாகமம்) பழைய ஏற்பாட்டிலுள்ள ஆதித் தோன்றியம் பற்றிய ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார்.

குமுகப் பணி :

     சய்மன் காசி, தம் சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியில் இலவயமாகக் கற்பிக்க ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

     கற்பிட்டியில் அவரது சொந்தச் செலவில், திருச்சவை ஒன்றையும் கட்டிக் கொடுத்தார்.

பாராட்டுகள் :

     மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி நூலாக்கி வெளியிடும் காசியின் முயற்சியைப் பாராட்டி, சர் இராபர்ட்டு ஆட்டன், அவர் எழுதிய நூலின் பதிப்புச் செலவிற்கு 100கினி பணமும் அன்பளிப்பாகத் தந்தார். சர் சார்லசு மார்சல், சர் சான் வில்சன்,  எசு.சிபோல், சிலோன் அப்சர்வர் என்ற ஆங்கில ஏடு, ஆளுநர் மக்கன்சி ஆகியோரும் இவரைப் பாராட்டியுள்ளனர்.

     விபுலானந்த அடிகளார், தெ.பொ.மீ., களத்தூர் வேதகிரியார், முனைவர் கால்டுவெல், தி.பி.எ.என்றி ஆராய்ச்சி, எப்.எக்சு.சி.நடராசா ஆகியோரும் சய்மன் காசியைப் பாராட்டியுள்ளனர்.

     கற்பிட்டியில், காசியின் வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப் படுத்தும் வகையில் செட்டித்தெரு என்று அழைக்கப் படுவதாயிற்று. காசியின் புகழுரைக்கும் பாராட்டு வாசகமொன்று, புத்தளம் நயன்மன்றத்தில் 1983இல் பொறிக்கப்பட்டது. 1987இல் அவர் உருவப்படந் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

முடிவாக...

     பதினேழே அகவையில் பதினொரு மொழிகளுக்கும் மேல் கற்றுப் பன்மொழிப் புலமை பெற்ற அறிவாற்றலராகத் திகழ்ந்தவர் சய்மன் காசி அவர்கள். அரசுப்பணிகளில் இருந்து கொண்டே, ஐம்பத்து மூன்று அகவைக்குள், பல்வேறு களப்பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்; ஏறத்தாழ ஐம்பதிற்கும் குறையாத நூல்களையும் நிறைய கட்டுரைகளையும் எழுதித் தந்துள்ளார்.

     மாந்தநேயப் பற்றாளராகவும், குமுகப்பணியில் வல்லவராகவும் காசி திகழ்ந்திருக்கிறார். பல்துறை அறிஞராகவும் வினையாண்மை மிக்கவராகவும் விளங்கிய சய்மன் காசியின் வாழ்க்கை, இளையோர்க்கு அரிய செயல்களை ஆற்ற வழிகாட்டி ஊக்கும் என்பதில் ஐயமில்லை.

     செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
     செயற்கரிய செய்கலா தார்.                                                                                               

----------------------------------------------------------------------------------------------------------------------------------
உசாத் துணை நன்றியுரைப்பு:

  1. தமிழ் வலைக் கலைக் களஞ்சியம் (விக்கிபீடியா)
  2. தமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச் செட்டி வரலாறும் பணிகளும் தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி.
  3. ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் தமிழ்ஒளி க.செபரத்தினம்.
  4. kalaikesari.com.
 துணை செய்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி.

------------------------------------------------------------------------ 

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

நா.பார்த்தசாரதியின் "மொழியின் வழியே"


       நா.பார்த்தசாரதியின் மொழியின் வழியே


தமிழ் வாசகர்களால் புதின ஆசிரியராகப் பரவலாக அறியப்பட்டவர்  நா.பார்த்தசாரதி. தமிழ்த் தாளிகை உலகில் 1960, 70ஆம் ஆண்டுகளில் முதன்மையான புதின எழுத்தாளராகத் திகழ்ந்தவர் இவர்.  தமிழ் படித்துத் தமிழாசிரியராக வேலை செய்தவர்! கல்கி இதழின் துணையாசிரியராகப் பணி செய்தவர். தீபம் என்ற இதழைத் தொடங்கி, விடாமுயற்சியுடன் 23 ஆண்டுகள் நடத்தியவர். தினமணிக் கதிர் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார்.

நா.பா., ஏறத்தாழ பதினைந்து புதினங்கள் எழுதியிருக்கிறார். இவற்றுள், குறிஞ்சிமலர், பொன்விலங்கு, மணிபல்லவம், சமுதாய வீதியிலே போன்றவை பலராலும் விரும்பிப் படிக்கப்பட்ட புதினங்கள் எனலாம். புதினங்கள் மட்டுமின்றிக் கட்டுரை நாடகம் பாடல்களும் கூட இவர் எழுதியிருந்தாலும், புதின ஆசிரியராகவே பரவலாக அறியப்பட்டுப் பெயர் பெற்றார். 

மொழியின் வழியே
மொழியின் வழியே என்ற தலைப்பைக் கொண்ட இவருடைய கட்டுரை நூல், 1961இல் முதற் பதிப்பாகவும் 2002இல் இரண்டாம் பதிப்பாகவம் வந்தது. 144 பக்கங்களைக் கொண்ட இந்நூல், நம் தாய்மொழியாகிய தமிழ் தொடர்பான  பல்வேறு கூறுகளைக் கூறும் 21 தலைப்புகளில் எழுதப்பெற்ற கட்டுரைகளைக் கொண்டதாகும். கட்டுரை நூலாகையால் இது பரவலாக அறியப்படவில்லை. இந்நூலில் காணப்படும் சில கருத்துக்கள், புதின ஆசிரியராக இவரைப் படித்தவர்களுக்கு வியப்பளிக்கக் கூடியவையாக இருக்கக் கூடும்!
இந்நூலில் பல்வேறு தலைப்புகளில் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. தலைப்பையும் அத் தலைப்பில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை ஒரு சோற்றுப் பதனாக மிகச் சுருக்கமாகவும் கீழே காண்போம்.

மொழியும் பணபாடும்
      மரபும் இலக்கணமும் தூய்மைக்கும், வழக்கும் இலக்கியமும் பண்பாட்டிற்கும் காரணமாக நிற்கின்றன எனகிறார் நா.பா. காற்றையும் நீரையும் பெற்று வளர்ந்து கிளைத்து வளமடைந்த பழுமரம் ஒன்றிற் கனியும் கனியைப்போல, மரபையும் இலக்கணத்தையும் போற்றி ஒழுகும் மொழியில் பண்பாடு கனியும்.
      மொழியின் நிலைத்த வாழ்விற்கும், முன்னேற்றத்திற்கும் மக்கள் வழக்கு இன்றியமையாதது ஆவது போலவே அதன் தூய்மைக்கும் பண்பாட்டிற்கும் மரபு, இலக்கணம், பழவழக்கு, இலக்கியமும் ஆகியவை இன்றியமையாதவை ஆகின்றன.
சான்றோர் மொழி ஆட்சிகளை மூலமாகக் கொண்டே மொழியின் பண்பாடும் உருப்பெறுகின்றது.
மொழியின் முன்னேற்றம்
     பழமையும் பண்பாடும் பொருந்திய எந்த மொழியும் தனது மரபிலிருந்து விலகியபின் முன்னேற இயலாது. மரபுடன் கைகோத்து நடவாத மொழி தனது கட்டுக்குலைந்து சீரழிவது ஒருதலை.  
பண்பட்ட இலக்கிய மொழி(செம்மொழி)களுங்கூட மரபைப் போற்றியே வாழவேண்டும். காலத்திற்கு ஒவ்வாத சில வரையறைகளைக் காலத்திற் கேற்பச் சீர்திருத்திக் கொள்வது தவறன்று. அதுவும் மொழிவல்லுநர் துணையின்றிச் செய்யப்படுமானால் தவறுதான்.  
      ஒரு மொழி முன்னேற வேண்டுமானால், மொழியை ஆர்வத்தோடு பேணுகின்ற பெருமக்கள் மிகுதியாக இருக்கின்ற நாடாக அம்மொழி பயிலும் நாடு இருக்க வேண்டும். அது வளர்ச்சிக்கு முதற் காரணம்.
      மொழியை எழுதுவதிலும் பேசுவதிலும் மிகுதியான கவனம் கொள்ள வேண்டும். முழுமுதலாகிய இறைவனிடம் பக்தி செலுத்துவது போல் மொழியின் மேல் பயபக்தி ஏற்படவேண்டும். கடவுளைப்போல் முதன்மை வாய்ந்தது ஆகும் மொழி. மொழியுணர்ச்சியற்ற மக்கள் வாழ்கின்ற நாடு நாகரிகத்திலோ, அறிவு வளர்ச்சியிலோ பண்படவே முடியாது. மொழிப் பற்ற்றின்றி விழிப்பற்றுக் கிடக்கும் மக்கள் விலங்குகளினும் இழிந்தவர். தாய்மொழியை ஏற்றமுறவும் முன்னேற்றவும் மறந்துவிடுகின்ற சமுதாயம் வாழத் தகுதியற்றது.  
பிழையற எழுதுதல், பிழையறப் பேசுதல், மரபு குலையாது நூலியற்றல், தான்தோன்றிகளாகாது, ஆன்றோர் சென்ற நெறியைப் பாதுகாத்தல், புதிய முறையைப் பழைய முறைக்குக் கேடின்றி ஏற்றுக் கொள்ளுதல் முதலிய செயல்களாலல்லவா ஒரு மொழி முன்னேற முடியும்?
      எந்த ஒரு மொழியும் அரசியலோடு இசையாதவரை தனித்து முன்னேற முடியாது என்கிறார்.

மொழியும் வரலாறும்       
      போர் பூசல்களையும் அரசாட்சிக்கு இருவேறு வேந்தர் போட்டி யிடுதலையும் ஒழுக்க வரையறை கடந்த அரசியற் சூழ்ச்சிகளையுமே பெரும்பாலும் உலக வரலாறுகள் பரக்க விரித்துப் பேசுகின்றன.
தமிழகத்து வரலாற்றில் இவற்றிற்கு ஒரு சிறிதும் இடமில்லை என்று சொல்ல வரவில்லை. ஆனால், இவை மிகக் குறைவான அளவிலும், ஒழுக்கத்தையும் அறவுணர்ச்சியையும் வற்புறுத்தும் உண்மைகள் நிறைந்த அளவிலும், தமிழகத்து வரலாற்றில் விளங்கும்.
ஒழுக்கமும், அறமும், அவையிரண்டுங் கலந்த பண்பாடும் உலகின் எந்த வரலாற்றிலும் இவ்வளவு கலந்ததுங் கூட இல்லை. போரிலும் கூட, வடக்கிருந்து மானம் காக்க உயிர்விடும் அரசர்களையும், பகைவன் கை நீர் பருக நாணி உயிர் துறந்த கணைக்கால் இரும்பொறைகளையுமே நாம் காண்கிறோம்.
கால முற்பாடு பிற்பாட்டிற்குரிய அடையாளமாக, அடிமை முத்திரையான கி.மு கி.பி.யைத் தவிர்த்து தி.மு. (திருவள்ளுவருக்கு முன்) தி.பி. (திருவள்ளுவருக்குப் பின்) என்றும் தொ.மு. (தொல்காப்பியருக்கு முன்) தொ.பி. (தொல்காப்பியருக்குப் பின்) என்று எழுதினால் என்ன?

மொழியும் கற்பிக்கையும் (போதனையும்)
     தமிழுக்கு அந்த(கல்வி மொழி)த் தகுதிஇல்லை. அதை உண்டாக்குவதும் அருமை. என்று கூறுவது அறியாமையால் நேரும் பிழைபட்ட முடிவு; பொருந்தாத துணிவு; இந்த முடிவால் தமிழ் உள்ளம் குமுறாமல் இருக்க முடியாது.
      (இந்த வகையில் பாரதியாரின் தமிழ் உள்ளம் குமுறியதை அவரின் சொல்லவுங் கூடுவதில்லை அவை.... என்ற பாரதியின் பாடலை எடுத்துக் காட்டி எழுதுகிறார்)
      தமிழில் கலைகளை கற்பிக்கலாம்; கலைச் சொற்கள் உள்ளன; இன்றியமையா நிலையில் கலைச் சொற்களை உண்டாக்கிக் கொள்ளலாம்.  தமிழ் மொழியைப் போல எல்லாக் கலைகளுக்கும்  இடங்கொடுக்கும் பரந்த இயல்புடைய மொழி மற்றொன்று காண்பதரிது.

மொழியும் இசையும்
     இசைக் கலையைப் பகுதி பகுதியாகப் பிரித்து நுண்ணிதாக ஆராய்ந்து இவை குணம், இவை குற்றம், இவை இலக்கணம், இவை வழு என அக் கலைக்கு நிலையான வரையறைகள் கண்ட பெருந்திறன் பழந் தமிழர்க்கு இருந்துள்ளது.
      (இசை மரபு என்னும் பழந்தமிழ் இசைநூல் குறித்தும் உள்ளாளப் பாடல் முறை குறித்தும் விளக்குகிறார்)

மொழியும் பாட்டும் (கவியும்)
     பாட்டைச் சுவைக்கிறவர்கள் பண்பட்டு உயரவேண்டும் என்பதைப் பாடுகின்றவன் நோக்கமாகக் கொள்ளவேண்டும். உலகின் உயர்நிலை இழிநிலைக் காட்சிகளை மற்றவர்கள் காணாத ஒரு புதிய நோக்குடன் கண்டு தனக்கே உரிய சிந்தனைக் கலவையோடு அணிசெய்து படிப்போர்க்குக் கவர்ச்சி நிறைந்து தோன்றும்படி கூறும் தகுதி வாய்ந்தவன் எவனோ, அவன் பாட வேண்டும்.
      (தொல்காப்பியம் கூறும் பல்வகைத் தாதுவின் உயிர்க்குடல்... என்ற பாட்டிலக்கண மரபை எடுத்துக்காட்டுகிறார்)
      பொது(சாதாரண) நடையில் பொது(சாதாரண)க் கருத்தை உரைபோலச் சொல்லுகின்ற ஒருவகைப் பாட்டு மேல்புலத்தார் வழக்கில் உண்டு. இக் காலத்தில் தமிழ் வழக்கிலும் அது பரவி வருகிறது. நடைச்செய்யுள் என்பர் அதனை. உயரிய பொருட்பாடு அமையாவிட்டால் இவ்வகைச் செய்யுள்களும் பயனற்றவையே எனகிறார்.

மொழியும் செவிப்பயனும் என்ற கட்டுரையில் கேள்விச்செல்வம் குறித்து திருக்குறளை எடுத்துக்காட்டி விளக்குகிறார்.

      
மொழியும் மரபும்
                அறிபுலனுக்கும் நுகர்புலனுக்கும் அவை பிறக்கும் மனத்திற்கும் ஆகிய இம் மூன்றோடும் தொடர்புபடும் இலக்கியம், மரபை விலக்கிய முறையிலே தோற்றுவிக்கப் படுமானால் சமுதாயத்தோடு இயைபு இழப்பது உறுதி. இலக்கியங்களைச் சமூகத்தோடு இணைக்கும் பொறுப்புடையதே மரபு.
(மரபு வழுக்களையும் வழுவமைதிபற்றியும் விளக்குகிறார்.)
பாட்டு, உரை, எழுத்து, பேச்சு ஆகிய எல்லாத் துறைகளிலும் மரபை எதிர்ப்பது, மீறுவது என்பது ஒரு பொழுது போக்கு விளையாட்டாகிவிட்டது இப்போது. மரபின் சிதைவு மொழியையும் சிதைக்கத் தொடங்காது என்பதற்கு என்ன உறுதி?

மொழியும் மனத்தத்துவமும் என்ற தலைப்பில் அப்பனைப் போல் மகன் என்ற கூற்றைச் சரியென்று நிறுவ முயலும் நா.பா.வின் முயற்சி இன்றைய அறிவியல் வளர்ச்சி நிலையில் ஏற்றுக் கொள்ளுமாறு இல்லை என்றே கூறவேண்டியுள்ளது.

இரண்டு மணிமொழிகள் கட்டுரையில் இரு குறள்களின் சிறப்பை விளக்குகிறார்.

மொழியில் ஒப்புநயம் என்ற கட்டுரையில் திருக்குறளில் ஒரே உவமை, ஒன்றில் நிலையாத தொடர்பின்மையையும் மற்றொன்றில் நிலைத்த தொடர்பையும் பொதுத் தன்மைகளாகப் பொருத்திக் கூறப்பட்டிருக்கும் நயத்திற்காக வள்ளுவரைப் பாராட்டுகிறார்.

தென்னிந்திய மொழிகள், மொழியும் நாடகமும் கட்டுரைகளில் தலைப்புக் கொத்த பல செய்திகளைக் கூறுகிறார்.

மொழியும் சிறுகதைகளும்
எழுத்தாளர்களே! இன்றைய வளர்ச்சியின் வேகத்தில் உங்களுக்கிருக்கும்
பொறுப்பைத் தவற விட்டுவிடாதீர்கள்.
      தமிழ் மரபும், தமிழ்ப் பண்பும், தமிழ் மக்கள் இனமும் என்றும் எதற்காகவும் பொறுப்பின்மைக்குத் தொடர்ந்து ஆதரவளித்தது இல்லை.


மொழியும் புதின வளர்ச்சியும் கட்டுரை, தமிழ்ப்புதின வரலாற்றை வளர்ச்சியைக் கூறுகின்றது.

தாளிகை(பத்திரிகை)களும் மொழிநடையும்
     நாளிதழிலிருந்து மாத இதழ்கள் வரை பெரும்பாலானவற்றின் மொழி நடையில் காணும் பிழைகளைக் களைய வேண்டும்.
சந்திப் பிழையும், மரபுப் பிழையும், பொருட் பிழையும் மலியப் பெரும்பாலான பிறமொழிச் சொற்களைக் கலந்து ஆசிரியருரை எழுதுவதும் தவறாக மொழி பெயர்ப்பதும் அச்சுக்கோப்பில் தவறு செய்வதும் இதழின் மொழிநடையைக் கெடுக்கும்.
கொச்சை மொழி, அயற்சொல் பயன்பாட்டிற்கு வரம்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுங்கும், மரபும், இலக்கணமும் இல்லாத மொழிநடையில் கருத்துக்கள் தங்குமா? தங்கத்தான் முடியுமா?
இறுதியாக, மொழியைப் பாதுகாக்க முடியாவிட்டாலும் அதன் தூய்மையைக் கெடுத்துக் கறைப்படுத்தும் பணியை அல்லது பழியை நீங்கள் செய்ய வேண்டாம்.

மொழியும் உரைநடையும் 
     சொற்களின் வகையும் பொருள்நிலையும் தெரிந்து பயன்படுத்த வேண்டும். மொழியை எளிமையாகவும், தூய்மையாகவும், தெளிவாகவும் பயன்படுத்துகிறவர்களைப் போற்ற வேண்டும்.
      பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் தன்னலத்தை இன்று எங்கும் காண்கிறோம்.
      தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் கவிதைகள் எழுத முயல்வதைக்  காட்டிலும் எளிமையும் தூய்மையும் தனித்தன்மையும் இலங்க நான்கு வாக்கியங்கள் நன்றாகவும் அழகாகவும் எழுதிவிடுவது எவ்வளவோ சிறந்தது. பிழையில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம்
      தெளிவுக்குச் சுருக்கம் தேவை. சுருக்கத்தில் அழகு அதிகம். தெளிவும் சுருக்கமும் இருந்தால் முறையும் இருக்கும்.

மொழியும் சுவையும்
     நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எண்வகை மெய்ப்பாடுகளைத் தொல்காப்பியர் வரிசைப் படுத்தியமைக்குக் காரணங்களை விளக்குகிறார். ஏனைச்சுவைகளுக் குள்ளது போல, சமனிலைச் சுவைக்கு மெய்யின் கண் நிகழும் வேறுபாடு இன்மையின் ஆசிரியர் தொல்காப்பியர் அதனைக் கூறாராயினர் என்னும் பேராசிரியர் கருத்தை எடுத்துக் காட்டுகிறார்.

மொழியும் புதிய விளைவுகளும்
     பிறமொழி பயிற்சி காரணமாக தமிழ் மொழி மரபுக்கு ஏலாத சொல்லிய அமைப்புகளை எடுத்துக் காட்டுகிறார். இடம் போட்டு வைத்தல், பங்கெடுத்துக்கொள்ளல், முயற்சிக்கிறேன், ஒருநூறு, மோசமானவராக இருக்கிறீர்கள் போன்ற தவறான ஆட்சிகளை விளக்குகிறார்,
      இருமொழி இணைந்து பிரியாது  ஒரு தொடராய் நிற்கும் பிறமொழிச் சொற்றொடர்களைப் பயன்படுத்துவது நல்லதாகாது என்கிறார்.
      தமிழ் புதிய வளர்ச்சியைப் பெறுவதற்குப் பழமையின் ஆசியும் அறிவுரையும் வேண்டும். புதுமையின் உழைப்பும் வேண்டும் என்று கூறுகிறார்.

மொழியும் பொறுப்புணர்ச்சியும்          
இலக்கியத்தில் படைப்போர் படிப்பொர் ஆகிய இருபாலார்க்கும் பொறுப்புணர்ச்சி குன்றும் போது தம் நிலையினின்று தாழ்கின்றனர். பொலிவு குன்றுகின்றனர். பண்பிழக்கின்றனர்.
யார் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைத்தல் தவறு. உரையாடலாகப் பேசும் பேச்சிலும், சொற் பொழிவிலும் செய்யப்படும் தவறுகள் காற்றோடு போய்விடும். எழுத்தில் செய்யப்படும் பிழைகளோ செய்தவரின் பொறுப்பின்மைக்கு நிலைத்த சான்றாக என்றும் இருந்துவிடக்கூடியவை.
(எழுத்தாளர்களைப் பழைய இலக்கியங்களையும், இலக்கண வம்புகளையும், மரபுகளையும் புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுறுத்துகிறார். முந்தைத் தலைமுறையின் அறிவைப் போற்றவும்,மதிக்கவும் தெரியாவிட்டால் பிந்தைத் தலைமுறையின் போற்றுதலும் மதிப்பும் உங்களுக்கு எய்தாது என்று கூறுகிறார்.)

மொழியும் அறநூல்களும்
                நல்லவற்றை விரும்பவும் தீயவற்றை வெறுக்கவும் கற்றுக் கொடுத்த பண்பை நமக்கு அளித்தது எது? இந்த நாளிலும் கூட நமக்கு அறத்திலும் ஒழுக்கத்திலும் நம்பிக்கை பய்விடவில்லையே! இதற்குக் காரணம் நமது பழமையான அறநூல்களே எனபதில் ஐயமில்லை.
அறநூல்கள் விதை நெல்லைப் போன்றவை. வாழ்வை ஒழுங்குப் படுத்தும் உண்மைகளை நாம் அவற்றிலிருந்துதான் பயர் செய்து வளர்க்க வேண்டும். சமய நூல்கள், இலக்கியங்கள், பாடல்கள், காவியங்கள் என்ற மற்றைய துறைகள் எல்லாம் அறநூல்கள் என்ற விதை நெல்லிலிருந்து பயிர் செய்யப்பட்டவைதாம்.

முன்னுரையில் நா.பா.
     மனம் நடக்கிற வழியில் கால்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்தது. என்னுடைய மனம் நடக்கின்ற வழி எப்போதுமே தமிழ்வழி. உலகத்துச் சிந்தனைகளை எல்லாம் சிந்தித்தாலும் அவற்றைத் தமிழ்நாட்டு மனத்தோடு தமிழனாக இருந்து  தமிழின் வழியே சிந்திக்க வேண்டும் என்பது என் குறிக்கோள்.
      தமிழ்வழியில் நடக்காதவர்களுக்கு அருகே என்னுடைய கால்கள் நடக்க நேரும்போதும் கூட மனம் தமிழ் வழியிலேயே நடந்துகொண்டிருக்கும். கால்கள் எந்தெந்த வழிகளில் நடக்க நேர்ந்தாலும் மனம் ஒரே வழியில் நடக்கும்படி பழக்கிக் கொள்வதைத்தான் தவம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்தத் தவத்தைத் தமிழ்த் தவமாகச் செய்து கொண்டு வருகின்றேன்.
      இந்தத் தமிழ்வழி நடையில் வாசகர்களை எல்லாம் என்னோடு அழைத்துச் செல்ல ஆசைப் படுகிறேன். அந்த ஆசை காரணமாகத்தான் இந்த நூலுக்கு மொழியின் வழியே என்ற பெயரையும் சூட்டினேன்.
      இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே வங்காளிகளுக்கு ஏற்பட்டிருக்கிற தாய்மொழியுணர்ச்சி நூறு ஆண்டுகளுக்குப் பின்பும் தமிழர்களுக்கு ஏற்படவில்லையே என்பதை நினைக்கும் போது சிற்சில சந்தர்ப்பங்களில் நான் மனம் புழுங்கியது உண்டு. தமிழ் நன்றாகத் தெரிந்த தமிழர்களே தங்கள் தாய் மொழியில் உரையாடுவதற்கு வெட்கப்படுகிறார்களே!
      இந்த நிலைகள் யாவும் மாறி நாட்டுணர்ச்சி பெருக வேண்டும். அப்படிப் பெருகுவதற்கு எதைச் சிந்தித்தாலும் நம்முடைய மொழியின் வழியே சிந்திக்கப் பழக வேண்டும். மாசுகோவிலோ, அமெரிக்காவிலோ, லண்டனிலோ உங்கள் கால்கள் எந்த நாட்டின் வழியில் நடந்தாலும் மனம் தமிழ் வழியில் நடக்கட்டுமே! இது என் வேண்டுகோள். - இவை நா.பா. முன்னுரையில் எழுதியிருந்ததின் பகுதிகளாகும்.

      நா.பார்த்தசாரதி அவர்கள் தனித்தமிழ் இயக்கஞ் சார்ந்தவரல்லர். தனித்தமிழ்க் கொள்கையாளரும் அல்லர். அவருடைய எழுத்தாக்கங்கள் வடசொற் கலந்தே எழுதப் பட்டுள்ளன. ஆனால், இந்நூலில் காணப்படும் கட்டுரைகளில் பல இடங்களில் மரபு, தூய்மை, வழக்கு, இலக்கணம் பேணப்பட வேண்டும் என்று பலவாறு வலியுறுத்துவதைக் காண்கின்றோம். அறிவுரையாகவும் வேண்டுகோளாகவும் இவற்றையே அழுத்தமாகக் கூறுகிறார்.
அவர் வலியுறுத்தும்  இக் கருத்துக்கள் தமிழுக்கும் தமிழர்க்கும் காப்பளித்து நலன் சேர்க்கும் கருத்துக்கள் என்பதில் ஐயமில்லை.  இந்நூலை அவர் தம்முடைய ஏனைய நூல்களைப் போலன்றி நடையில் செறிவோடு எழுதியிருப்பதைப் பல இடங்களில் காணலாம்.

*****************************************************************
 
    

   
  
         

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

சொல்லும் சொல்லலும்!

          சொல்லும் சொல்லலும்!

      
     உலகப் பொதுமறையான திருக்குறளில், ஆசிரியர்  திருவள்ளுவர் சொல்லைப் பற்றியும் சொல்லுவதைப் பற்றியும் ஒரு குறளில் விளக்குகிறார். நாம் சொல்ல வந்த செய்தியைச் சொல்லும் போது, நாம் பயன்படுத்தும் சொறகள் தேர்ந்தெடுத்த வையாக இருக்க வேண்டுமாம். எப்படித் தேர்ந்தவை தெரியுமா? நாம் தேர்ந்த சொல்லை நீக்கிவிட்டு வேறு சொல்லை அந்த இடத்தில் பயன்படுத்தினால் முன்னைவிட சிறப்பாக அமைய இயலாதபடியாகத் தேர்ந்தெடுத்தவையாம்!
    
இவ்வாறு சொல் ஆட்சி பற்றி விளக்கியுள்ள ஆசான் திருவள்ளுவர், சொல் என்ற சொல்லைத் திருக்குறளில் 125 இடங்களில் பயன்படுத்தி உள்ளார். இவற்றில் சொல் என்ற வடிவிலேயே 50 இடங்களிலும் பின்னொட்டுகள் சேர்ந்து 75 இடங்களிலும் ஆண்டிருக்கின்றார்.   

மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், சொல்லும் வகைகளாக
எடுத்துச் சொல்லியுள்ள சொற்களை அறியும் போது, தமிழின் சொல்வளம் நம்மைத் திக்குமுக்காடச் செய்கிறது. அச்சொற்களை அவற்றின் பொருளுடன் ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

1. அசைத்தல் : அசை பிரித்துச் சொல்லுதல்.
2. அறைதல் : உரக்கச்சொல்லுதல்.
3. இசைத்தல் : கோவைபடச் சொல்லுதல்  
4. இயம்புதல் : இயவொலியுடன் (இசையோடு) சொல்லுதல்.
5. உரைத்தல் : செய்யுட்கு உரை சொல்லுதல்.
6. உளறுதல் : அச்சத்தினால் ஒன்றிற்கின்னொன்றைச்
              சொல்லுதல்.                                     
7. என்னுதல் : ஒரு செய்தியைச் சொல்லுதல்.
8. ஓதுதல் : காதில் மெல்லச் சொல்லுதல்.
9. கரைதல் : அழுது சொல்லுதல்.
10. கழறுதல் : கடிந்து சொல்லுதல்.
11. கிளத்தல் : ஒன்றைத் தெளிவாய்க் குறிப்பிட்டுச் சொல்லுதல்.
12. குயிற்றுதல் : கியிற் குரலுல் சொல்லுதல்.
13. குழறுதல் : நாத் தடுமாறிச் சொல்லுதல்.
14. கூறுதல் : கூறுபடுத்துச் சொல்லுதல்.
15. கொஞ்சுதல் : செல்லப் பிள்ளைபோற் சொல்லுதல்.
16. சாற்றுதல் : அரசன் ஆணையைக் குடிகளுக்கு அறிவித்தல்.
17. செப்புதல் : வினாவிற்கு விடை சொல்லுதல்.
18. சொல்லுதல் : இயல்பாக ஒன்றைச் சொல்லுதல்.
19. நவிலுதல் : பலகால் ஒன்றைச் சொல்லிப் பயிலுதல்.
20. நுதலுதல் : ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
21. நுவலுதல் : நூலைக் கற்பித்தல்.
22. நொடித்தல் : கதை சொல்லுதல்.
23. பகர்தல் : பகிர்ந்து விலை கூறுதல்.
24. பலுக்குதல் : உச்சரித்தல்.
25. பறைதல் : ஒன்றைத் தெரிவித்தல்.
26. பன்னுதல் : நுட்பமாய் விரித்துச் சொல்லுதல்.
27. பிதற்றுதல் : பித்தனைப் போலப் பேசுதல்.
28. புகலுதல் : ஒன்றை விரும்பிச் சொல்லுதல்.
29. புலம்புதல் : தனிமையாய்ப் பேசுதல்.
30. பேசுதல் : உரையாடுதல் அல்லது மொழியைக் கையாளுதல்.
31. மாறுதல் : மாறிச் சொல்லுதல்.
32. மிழற்றுதல் : கிளிக்குரலில் சொல்லுதல்.
33. மொழிதல் : சொல் திருத்தமாகப் பேசுதல்.
34. வலத்தல் : கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்.
35. வலித்தல் : வற்புறுத்திச் சொல்லுதல்.
36. விடுதல் : மெல்ல வெளியிடுதல்.
37. விதத்தல் : சிறப்பாய் எடுத்துச்சொல்லுதல்.
38. விள்ளுதல் : வெளிவிட்டுச் சொல்லுதல்.
39. விளத்துதல் : விரித்துச் சொல்லுதல்.
40. விளம்புதல் : பலர்க்கு அறிவித்தல்.
41. நொடுத்தல் : விலை கூறுதல்.
42. பாராட்டல் : போற்றி உரைத்தல்.
43. பொழிதல் : இடைவிடாது சொல்லுதல்.
44. பனுவுதல் : செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்.
45. கத்துதல் : குரலெழுப்பிச் சொல்லுதல்.

     தமிழ் இயற்கை மொழி என்றும் முதல் தாய் மொழி என்றும் உலக முதன் மொழி என்றும் பாவாணர் முதலான மொழியியல் அறிஞர்களால் பாராட்டப் படுகின்றது. இப்படிப்பட தகுதிகள் கொண்டதாகத் தமிழ் இருப்பதால்தான் தமிழ் சொல்வளம் மிக்க மொழியாக உள்ளது என்பது பாவாணர் கருத்தாகும்.
    
     சொல்லும்வகைச் சொற்கள் போன்ற வினைச்சொற்களுக்கு மட்டுமின்றி பல்வேறு பெயர்ச் சொற்களுக்கும் மற்ற வகைச் சொற்களுக்குமான பட்டியலை சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் என்ற நூலிலும் அவருடைய பிற நூல்களிலும் கட்டுரைகளிலும் எடுத்துரைப்பதைக் காணலாம். 

--------------------------------------------------------------    


திருக்குறள் அரிய வாழ்வியல் நூல். மொழி, நாடு, இனம் கடந்த நிலையில், உலகின் மக்கள் அனைவர்க்கும் பொதுவான வாழ்வியல் கூறுகளை அறங்களை ஆட்சிமுறைகளை அக வாழ்க்கை அன்புறவுத் துய்ப்புகளைக் கூறும் நூல். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் நூல்.
     எல்லாப் பொருளும் இதன்பாலுள, இதன்பால் இல்லாத எப்பொருளும் இல்லை என்பார் மதுரைத் தமிழ்நாகனார். இத்தகைய ஒப்பற்ற உயர்ந்த சிறப்புக்குரிய அறிவார்ந்த நூல் தமிழ்மொழியில்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பேரறிவார்ந்த தமிழ மூதாதையால் எழதப்பட்டுள்ளது என்று தமிழர் பெருமை கொள்ள உரிமையுண்டு. ஆனால், அந்த ஈடிணையற்ற நூல் கூறுகின்றவாறு வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற கடமையைத் தமிழர் மறந்து விடுவதுதான் வருத்தம் தரும் செய்தியாகும்.                              

-----------------------------------------------------------------------------------------------------------