வியாழன், 29 டிசம்பர், 2016

‘செந்தமிழ்ப் பாடினி’ பாவலர் திருவமை மணிமேகலை குப்புசாமி எழுதிய ‘செந்நெற் பயன்மழை’ நூல்

‘செந்தமிழ்ப் பாடினி’ பாவலர் திருவமை மணிமேகலை குப்புசாமி எழுதிய ‘செந்நெற் பயன்மழை’ நூல்.
---------------------------------------------------------------------------------------------------------------
பாவேந்தர் பாரதிதாசன், 23-8-1960 நாளிட்ட குயில் இதழில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்  பற்றி எழுதிய பன்னிரண்டு வெணபாக்களுள் ஒன்றில், எந்தமிழ் மேலென்று உணமை எடுத்துரைப்போன்; செந்தமிழன்! செந்நெற் பயன்மழை... என்று எழுதியிருப்பார்.
செந்நெல்லைப் பயனாக்ககும் மழையாக அவர் பாவாணரைப் புகழ்ந்திருப்பார். அதே,செந்நெற் பயன்மழை என்னும் தொடரை நூலாசிரியர் மணிமேகலை அவர்கள் பாவேந்தர் பாவாணர் இருவரையும் குறிக்கப் பயன்படுத்தி நூலின் தலைப்பாக்கி உள்ளார்.
நூலாசிரியர் மணிமேகலை, பாவேந்தரின் மகள் வயிற்றுப் பெயர்த்தி ஆவார். தேர்ந்த பாவலராகத் திகழ்பவர். பல பாடல் நூல்களை ஆக்கி அளித்தவர். அவருடைய முதல் உரைநடை நூலாக செந்நெற் பயன்மழை வந்துள்ளது.   

நூல், ஐந்து பகுதிகளாகத் தரப்பட்டுள்ளது. பாவேந்தர், பாவாணர், பாவேந்தர் போற்றிய பாவாணர், பாவாணர் போற்றிய பாவேந்தர், பாவேந்தரும் பாவாணரும் ஆகியவை அந்த ஐந்து பகுதிகளாகும்.

பாவேந்தர் என்னும் பகுதியில், சுருக்கமாக அவர் வாழ்க்கைக் குறிப்புகளாகப் பிறப்பு, குடும்பம், கல்வி, தோற்றம், திருமணம், ஆசிரியப்பணி, பணிநிறைவு, இதழ்ப்பணி, படைத்த நூல்களைப்பற்றிய செய்திகளைத் தந்துள்ளார். பாவேந்தர் படைத்த நூல்கள் 92-ஐயும் பட்டியலிட்டுள்ளார்.
சிலநிகழ்வுகள் என்னும் தலைப்பிலும், மறைவுக்குப் பின் என்ற தலைப்பிலும் இவர் தரும் பல செய்திகள் இதுவரை பலரும் அறியாதவை; வரலாற்றுச் சிறப்புடையனவாகும். மக்கள் பாவலர்
பட்டுக்கோட்டையார் பாரதிதாசன் வாழ்க! என்று எழுதிவிட்டுத்தான் எழுதத் தொடங்குவார், பெங்களூரில் இசைநிகழ்ச்சி நடத்திய எம்.எசு.சுப்புலட்சுமியைப் பாடவிடாமல் கலகம் செய்த கன்னடர்களைக் கண்டித்துக் குயில் இதழில், கன்னடம் பணியவேண்டும் என்றதலைப்பிட்டுக் கடுமையாகப் பாடல் எழுதியது போன்ற பல செய்திகளைக் காணலாம்.

பாவாணர் என்ற தலைப்பிலும், பாவாணரின் சுருக்க வரலாறு, பணி, படைத்த நூல்களின் பட்டியல், சில நிகழ்வுகள், மறைவுக்குப்பின் ஆகிய செய்திகளைத் தருகிறார். மொழி ஆராய்ச்சி என்ற பாவாணரின் முதற்கட்டுரை 1931 சூன்-சூலை செந்தமிழ்ச்செல்வி இதழில் வந்தது போன்ற பல செய்திகளைத் தந்திருக்கின்றார்.

பாவேந்தர் போற்றிய பாவாணர் என்னும் பகுதியில், பாவாணருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நேர்ந்த ஒத்துழைப்பின்மையும் மதிப்புக்குறைவும் வேலைநீக்கமும் பற்றிய செய்திகளையும், பாவேந்தர் முழுமையாகப் பாவாணரைத் தாங்கி அவருக்குத் துணையாக வலிவாக எழுதிய பல செய்திகளையும் தந்திருக்கிறார்.

பாவாணர் போற்றிய பாவேந்தர் என்ற பகுதியில் பாவாணர், பாவேந்தரின் கொள்கைப்பற்றையும், அன்பையும் போற்றிய பல செய்திகளைத் தந்துள்ளார்.

பாவாணரும் பாவேந்தரும் என்னும் பகுதியில் இருவரின் செயல்பாடுகளில் காணும் கொள்கை ஒற்றுமையையும் விளக்கிக் கூறுகின்றார்.

பாவேந்தரைப் பற்றியும் பாவாணரைப் பற்றியும் அறிந்தவர்களும் தெரிந்திராத பல செய்திகள் நூலில் உள்ளன. இந்நூல்,
தமிழன்பர்களும், ஆய்வாளர்களும் பயன்கொள்ளத் தக்கதாம்.

இந்த நூல்லைப் பதிப்பித்தோர் முகவரி:         
விளாதிமிர் பதிப்பகம்,
44, நான்காம் குறுக்குத் தெரு,
குறிஞ்சி நகர்,
புதுச்சேரி 605 008.
தொலைப்பேசி: 0413 2255693
கைப்பேசி: 94421 86802.
-------------------------------------------------------------------------------------------------------------

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் – கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!






திரு.வி.க. வின் இறுதிச் சொற்கள் கி.ஆ.பெ..வி. எழுதிய செய்தி!
-------------------------------------------------------------

தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரனாரும் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்களும் நண்பர்களாக இருந்துள்ளனர். பல நேரங்களில் கி.ஆ.பெ.வி., திருவிகவைக் கண்டு பேசியிருக்கிறார்.

மறைமலையடிகளுக்கும் பெரியாருக்கும் முரண் ஏற்பட்ட காலத்தில், அடிகளார்மீது, பெரியாரைக் கொலைசெய்யத் தூண்டினார் எனக் குற்றம் சுமத்தி வழக்கொன்றும் போடப்பட்டிருந்தது. அவ்வழக்கைத் திரும்பப்பெறச் செய்ததற்குத் திரு.வி.க.வும் கி.ஆ.பெ.வி.யும் காரணமாக இருந்திருக்கின்றனர்.

திரு.வி.க., தாம் எழுதி வெளியிட்ட தம் வரலாற்றில், கி.ஆ.பெ.வி.யைப்பற்றி நீண்டதொரு கட்டுரை எழுதியிருக்கிறார்கள்.   

திரு.வி.க., அகவை முதிர்ந்து, நடைதளர்ந்து, கண்பார்வை குறைந்து, செயலிழந்து இல்லத்தில் இருக்கம் பொழுது, கி.ஆ.பெ.வி. பலமுறை சென்று அவரைப் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கச் சென்றபோதும், முனைவர் மு.வரதராசனார் அங்கு இருந்திருக்கிறார். மு.வ., திருவி.க.வைத் தம் தலைவராகவும் தம் ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் கருதி வந்ததாகக்  கி.ஆ.பெ.வி. எழுதியுள்ளார்.

கடைசியாக ஒருமுறை கி.ஆ.பெ.வி., திரு.வி.க.வைக் காணச் சென்றநிகழ்வினை அவர் எழுதியவாறே கீழே காண்க:

திரு.வி.க. அவர்கள் படுக்கையில் அசைவின்றிக் கிடந்தார். கி.ஆ.பெ. வந்திருக்கிறார் என்று டாகடர் மு.வ., அவர்கள் காதருகில் சென்று உரக்கக் கூவினார். திரு.வி.க. கையை அசைத்து உட்காரச் சொன்னார்.

நான் அவரருகில் சென்று அவரது கையை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டு,
ஐயா! நாட்டுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மொழிக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
மக்களுக்கு என்ன சொல்லுகிறீர்கள்?
என்று கேட்டேன்.
அதையே அவர் மிகவும் ஓசை குறைந்த சொற்களால் திரும்பக் குறிப்பிட்டு,
நாடு இருக்கிறது... மொழி இருக்கிறது... மக்கள் இருக்கிறார்கள்... நீங்களும் இருக்கிறீர்கள்... பார்த்துக் கொள்ளுங்கள்
என்று கூறினார்கள். நாங்கள் கண்கலங்கினோம்....
வாழட்டும் திரு.வி.க. புகழ்!
வளரட்டும் திரு.வி.க. மரபு!
 - என்று முடித்திருக்கின்றார் கி.ஆ.பெ.வி.

(கி.ஆ.பெ.விசுவநாதம் படைப்புகள் 3, நெய்தல் பதிப்பகம், சென்னை-5., பக்கம் 397-399)
--------------------------------------------------------------


திங்கள், 7 நவம்பர், 2016

பாவாணர் விளக்கும் மதிப்படைச் சொற்கள்



பாவாணர் விளக்கும் மதிப்படைச் சொற்கள்


 
..இளந்தை (youth) கடந்த ஆடவர் பெயருக்கு முன்: திருவாளர் (Mr.)
இளந்தை கடந்த பெண்டிர் பெயருக்கு முன்: திருவாட்டி(Mrs.)
கண்ணியம் வாய்ந்த ஆடவர் பெயருக்கு முன்: பெருமான்
கண்ணியம் வாய்ந்த ஆடவர் பெயருக்கு முன்: பெருமாட்டி....
இளந்தை = இளமை...

மதிப்பான மக்கட்டன்மையைக் குறிக்கும் திருவாளன் என்னும் அடைச்சொல், திரு. என்று குறுகிநிற்கும்போது முற்றுப்புள்ளி பெறவேண்டும். அல்லாக்கால், தெய்வத்தன்மையுணர்த்தும் திரு என்னும் சொல்லோ டொப்பக்கொண்டு மயங்க நேரும்.
எ-டு: திருநாவுக்கரசு (இறையடியார் பெயர்)
     திரு. நாவுக்கரசு (பொதுமகன் பெயர்)
இறையடியார் பெயரே, பொதுமகன் பெயராயின் அப்படியே யிருக்கலாம். புள்ளி வேண்டியதில்லை.

துறவியர் பெயருக்கு முன் தவத்திரு என்பதையும், தமிழ்த்தொண்டர் பெயருக்கு முன் தமிழ்த்திரு என்பதையும், 
மறையொழுக்கத்தினர் பெயருக்குமுன் மறைத்திரு என்பதனையும் அடைச்சொல்லாக ஆளலாம்.
எ-டு: தவத்திரு குன்றக்குடியடிகள்
     தமிழ்த்திரு மறைமலையடிகள்
     மறைத்திரு மணியம் அவர்கள்

சிறீலசிறீ என்னும் சிவமடவழக்கை திருத்தவத்திரு அல்லது பெருந்தவத்திரு என்று குறிக்கலாம்.
திருமதி என்னும் அடைச்சொல், திரு என்னும் தென் சொல்லையும் மதி என்னும் வடமொழியீற்றுத் திரிபையும் கொண்ட இருபிறப்பி (hybrid) ஆதலால், உதை அறவே விலக்கல் வேண்டும். 
திருமகன் திருமான் >சிறீமத் (வடமொழி) சிறீமதி (பவண்பால்)
திருவாட்டி சிறீமதி
திருவாட்டி என்னும் தூய தென்சோல்லை நீக்கிவிட்டுத் திருமதி என்னும் இருபிறப்பியை ஆள்வது,
பேதைமை என்ப தியாதெனின் ஏதங்கொண்
டூதியம் போக விடல்                      - (குறள்.831)
என்னும் திருக்குறட்கே எடுத்துக்காட்டாம்….

இனி, மதிப்படைச்சொற்கள் (1) முன்னடைச்சொற்கள் (2) பின்னடைச்சொற்கள் என இரு வகைய.
கண்ணியம் வாய்ந்தவர் பெயருக்குப்பின் அவர்கள் என்று குறிப்பது பின்னடைச்சொல்லாகும்.அது உயர்வுப்பன்மை. அதற்கு ஒருமையும் பன்மையும் இல்லை.
எ-டு: திரு. மாணிக்கவேல் அவர்கள்

ஆற்றலும் தேர்வுப்பட்டமும்:
புலமையும் தொழிலும் குறித்துவரும் சோற்கள் முன்னடையாக வரின் வேறடை தேவையில்லை.
எ-டு: பண்டிதமணி கதிரேசனார்
     புலவர் சின்னாண்டார்
     பேராசிரியர் சொக்கப்பனார்
     மருத்துவர் கண்ணப்பர்
     புதுப்புனைவர் கோ.துரைசாமி...
பேராசிரியர் என்பதை பேரா. என்று குறுக்கலாம்.

சிலசொற்கள் முன்னடையாகவும் பின்னடையாகவும் ஆளப்பெறும்.
எ-டு: புலவர் புகழேந்தியார், புகழேந்திப் புலவர்...

அவர்கள் என்னும் பின்னடையை எவர் பெயர்க்கும் பின் குறிக்கலாம். அது எழுதுவாரின் நிலைமையையும் விருப்பத்தையும் பொருத்தது...

அரசியல் பதவிகள் பற்றிய முன்னடைகள்:
The Hon’ble                 : பெருந்தகை
The Right Hon’ble        : மாபெருந்தகை
His Worship                 : வணங்குதகை
His Lordship                 : குருசில்தகை
His Excellency  : மேன்மை தங்கிய
His Highness                 : உயர்வு தங்கிய
His Majesty                  : மாட்சிமை தங்கிய

மதவியல் பற்றிய முன்னடைகள்:
Rev.                             : கனம்
Rt. Rev.                        : மாகனம்
His Grace                     : அருட்டிரு
His Holiness                 : தவத்திரு

(பாவாணர் தமிழ்க்களஞ்சியம் -33, தமிழ்மண், சென்னை-17)
-------------------------------------------------------------

புதன், 26 அக்டோபர், 2016

பாட்டரங்கத் தலைமையேற்றுப் பாடிய பாடல்



23-10-2016 ஞாயிறு அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற
விழுப்புரம் தமிழ்ச்சங்கம் 14-ஆம் ஆண்டுவிழாவில் நடைபெற்ற பாட்டரங்கத் தலைமையேற்றுப் பாடிய பாடல்:
பாட்டரங்கத் தலைப்பு : பாவேந்தர் படைப்புகளில்... குடும்பவிளக்கு, தமிழியக்கம், புரட்சிக்கவி.
-------------------------------------------------------------------------------------------------

அன்பார்ந்த தாய்க்குலமே! அறிவார்ந்த பெரியோரே! ஆக்கம் சேர்க்கும்
தென்பார்ந்த இளையோரே! தீந்தமிழ்ப்பா வேந்தரவர் திறத்தில் யாத்த
நன்னூல்கள் மூன்றையிங்கே நனிவிளக்கிப் பாடவந்த நற்பா வல்லீர்!
என்னினிய நல்வணக்கம் எல்லார்க்கும் பணிவுடனே இயம்பு கின்றேன்!

விழு என்றால் சிறந்தஎன்பர், விழுமியவூ ராமிந்த விழுப்பு ரத்தில்
தழுவலுறும் தமிழ்ப்பற்றில் தமிழ்ச்சங்கம் தனைத்தொடக்கித் தக்க வாறே
ஒழுங்கெனவே தனிஓரேர் உழவரென உழைப்பெடுத்தே ஓயா தின்றும்
பழுதறவே விழாநடத்தும் பாலதண்டா யுதமென்னும் பசுமை நெஞ்சம்!

உலகிலுள மொழியறிஞர் உயர்தனிச்செம் மொழிதமிழென் றுரைக்கின் றார்கள்!
பலவகையும் சிறப்புயர்வுப் பாங்குகளை எடுத்துரைத்துப் பராவு கின்றார்!
நிலவுகின்ற நம்நிலையோ நித்தமும்இப் பெருமைகளை நீளப் பேசி
வலம்வருவ தல்லாமல் வண்டமிழைக் காப்பாற்றி வளர்ப்ப(து) எண்ணோம்!

தாய்மொழியே படிக்காமல் தமிழ்நாட்டில் கற்குநிலை தணியாத் துன்பம்!
ஏய்த்தநிலை இங்கன்றி எங்குமிலை! ஆட்சிமொழி ஏட்டில் மட்டும்!
வாய்த்ததிருக் கோயிலிலே வழிபாட்டில் தமிழில்லை! வழக்கு மன்றில்
போய்ப்பேச வாய்ப்பில்லை பூந்தமிழ்க்கே! எங்கெங்கும் புறக்க ணிப்பே!

செய்தித்தாள் இதழ்களிலே செறிவற்ற நூல்களிலே சீர்மை அற்றே
மொய்த்தெழுதும் சொற்களிலே முறையற்ற மொழிக்கலப்பு முடுக்க மாக!
நெய்வண்ண மினுக்கலிலே நிமிர்த்தெழுதும் கடைப்பெயர்கள் நிலைமை என்ன?
துய்யதமிழ் தொலைத்துபிற தொடர்பற்ற மொழிகளிலே துலங்கல் அன்றோ?

ஊடகத்தில் தொலைக்காட்சி உரையாட்டில் நிகழ்ச்சிகளில் ஓய்வே இல்லாக்
கேடுவிளை நாடகத்தில் கிளர்ச்சியுறு கூத்தாட்டக் கீழ்மை தம்மில்
ஈடுசொல முடியாத இழிவான தமிழ்க்கொலைகள்! இன்னு மிங்கே
பாடாகப் படுத்துதிரை பழியெனவே தமிழழிக்கும்! பார்க்கின் றோமே!

இத்தகைய நிலைஎதிர்த்தே இனியதமிழ் காப்பதற்கே இளைஞர் தம்மை
எத்தகைய இழப்பினையும் எதிர்கொண்டு தமிழ்காக்க எழுச்சி யூட்டும்
பற்றியெரி நெருப்புணர்வுப் பாடல்கள் எழுதியவர் பாவேந் தர்தாம்!
முற்றுமவர் உயிருடலும் முழுமையாய்த் தமிழ்கலக்க முழக்க மிட்டார்!

அஞ்சாத நெஞ்சுறுதி அரிமாவின் நோக்குநடை அருந்த மிழ்க்கே
கொஞ்சங்கே டென்றாலும் கொதித்தெழுந்தே முழங்குகின்ற கூர்மை, காப்பு!
விஞ்சுகின்ற பாவாற்றல் வீழ்தலிலாச் சொல்லாற்றல் வீச்சு கொண்டே
எஞ்ஞான்றும் தமிழ்தமிழர் தமிழ்நாட்டு நலன்காக்க ஏழ்ந்து நின்றார்!
                            
பாவேந்தர் நூல்களிலே பாராட்டித் தமிழறிஞர் பலரும் போற்றும்
மேவலுறும் குடும்பவிளக்(கு) ஒன்றாகும்! இன்னொன்று மேன்மை கூட்டும்
தாவறுநம் தமிழ்காக்கும் தமிழியக்கம், இவையிரண்டும் தவிர மேலும்
பாவேந்தர் தமைப்புரட்சிப் பாவலரென் றழைக்கவைத்த பாநூல் ஒன்றாம்!
                             
துலக்கமுற புரட்சிக்குத் தூண்டுபுரட் சிக்கவிநூல் துய்க்க இன்பம்!
பிலகணிய மென்னுமொரு பிறமொழிநூல் தழுவியதாய்ப் பெருஞ் சிறப்பில்
இலகுதமிழ் மொழிப்பற்றும் இனப்பற்றும் இணைத்துமிக எழுச்சி கூட்டும்!
உலகிலுள மக்களிலே உழைப்பாளர் சிறப்புரைக்கும், உயர்வு சொல்லும்!

நல்லதொரு குடும்பத்தின் நலன்களையும் கடமையையும் நவிலும் நூலாம்
வல்லவகை வகுத்தளித்த குடும்பவிளக் கென்னும்நூல் வாழ்க்கை தன்னை
எல்லார்க்கும் சுவைசேர எளியவகை விளக்கமுற எடுத்துக் கூறும்
நில்லும்நூல் குடும்பத்தில் நிலைமகிழ்வு அனைவர்க்கும் நிறுத்தும் நூலே!

மண்ணிலுள மாந்தரிடை மாண்குடும்ப விளக்குஆக மதித்துப் போற்றிப்
பெண்மக்கள் சிறப்புரைக்கும் பெண்கல்வி வலியுறுத்தும் பெற்றி யோடே
பெண்ணுரிமை நிலையெல்லாம் பேசுமிது குடும்பத்தின் பெருமை கூறி
வண்ணமுற முதியோரின் வாடாத காதலையும் வழங்கும் நூலாம்!

எங்கெங்கும் தமிழழிந்த இழிநிலைகள் எல்லாமும் எண்ணி எண்ணி
அங்கங்கும் தமிழ்விளங்க ஆர்த்தெழுந்து போராட அழைத்த நூல்தான்
பொங்குணர்வு இளைஞரிடை பூத்தெழவே தூண்டுகின்ற புதுமை யான
தங்குசிறப் பில்முழங்கும் தமிழியக்கம் என்கின்ற தகைசால் நூலாம்!
 
காரிருள்சூழ் தாழ்நிலையில் கனித்தமிழின் வீழ்ச்சியினைக் காட்டி நம்மின்
ஊரிலுள தமிழிளைஞர் உடனெழுந்து தமிழியக்க உழைப்பிற்(கு) ஏக
தேரியபல் நிலைகளிலே திறத்துடனே ஈடுபடத் தெரிந்து ரைக்கும்
ஓரிரவில் எழுதியநூல் உணர்வூட்டி எழுச்சிகொள உந்தும் நூலே!

பாவேந்தின் இம்மூன்று பாநூற்கள் சிறப்பெல்லாம் பகுத்த றிந்தே
பூவேந்துந் தேன்சுவைசேர் புத்துணர்வுப் பாக்களிலே புரியும் வண்ணம்
நாவேந்து முதன்மொழியாம் நற்றமிழில் பாடிநலம் நயங்காட் டற்கே!
பாவேந்தி வந்துள்ளார் பாவலர்கள் மூவரிவர் பாடல் கேட்போம்!!  
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 12 செப்டம்பர், 2016

ஒரு பணிவான வேண்டுகோள்!



ஒரு பணிவான வேண்டுகோள்!

கருநாடகத்தில் தமிழர்களைக் கன்னடர் தாக்குகின்றனர்; தமிழர் உடைமைகளைத் தீக்கிரையாக்குகின்றனர் என்றெல்லாம் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

கருநாடகத்தில் அடுத்த தேர்தல் நெருங்கிவரும் நேரமாக இருப்பதால், அங்கு அரசியல் கட்சிகள் ஞாயம் நேர்மையின்றி தமிழர்க் கெதிராகக் கன்னடரிடம் வெறியுணர்வைத்
தூண்டிவிடுவதைக் காணமுடிகின்றது.

தமிழகத்தில் உள்ள நம் கவலைகள், கருநாடகத்தில் உள்ள தமிழரை, வெறியுணர் வேற்றப்பட்ட கும்பல்களிடமிருந்து காப்பாற்ற உடனடியாக உருப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டு மென்பதே!

நடுவணரசின் போக்கு ஏமாற்றமளிப்பதாக இருந்தாலும், தமிழக அரசு நடுவணரசை வலியுறுத்தி கருநாடத் தமிழரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவைக்கவேண்டும்! தமிழக அரசு அவ்வகையில் செயலாற்ற வலியுறுத்துவோம்!

இன்றைய நிலையில், கன்னடக்காரர்களை இங்கு தாக்க முயல்வதோ, அவர்கள் உடைமைகளுக்குத் தீங்கிழைக்க எண்ணுவதோ எந்த நற்பயனையும் தராது என்பது மட்டுமின்றி, மென்மேலும் அங்கு தமிழர்களுக்குக் காப்பில்லாத நிலையையே தொடரச்செய்யும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன்.

தமிழக அரசை உடனடியாகச் செயலாற்ற வலியுறுத்துவோம்! நடுவணரசு நடவடிக்கை எடுக்கச்செய்வோம்! அதுவே இக்கால் நாம் செய்ய வேண்டியதாகும்!

நம் செயல்கள் கருநாடகத்தில் உள்ள நம் உறவுகளுக்குத் தீங்கின்றிக் காக்கும் வகையில் அமையட்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி!
-----------------------------------------------------------

    

சனி, 10 செப்டம்பர், 2016

கி.ஆ.பெ.வி. ஐயா காட்டும் தமிழரின் கலைச்சிறப்பு! (சில பகுதிகள்)



கி.ஆ.பெ.வி. ஐயா காட்டும் தமிழரின் கலைச்சிறப்பு!
(சில பகுதிகள்)

முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஐயா 47ஆண்டுகட்கு முன்னர் தி.பி.2000த்தில் எழுதி வெளியிட்ட தமிழின் சிறப்பு என்னும் நூலில், கலைச்சிறப்பு என்னும் தலைப்பில் தந்துள்ள செய்திகளில் சில:



நிலத்தை ஐந்தாக, காற்றை நான்காக, மொழியை மூன்றாக, இலக்கணத்தை இரண்டாகக் கண்ட தமிழ்மக்கள், ஒழுக்கத்தை ஒன்றாக வைத்து மாந்தனோடு வைத்து இணைத்து எழுதிவிட்டனர். திணை என்றால் ஒழுக்கம்; உயர்திணை என்றால் ஒழுக்கமுள்ளவை எனவும், அஃறிணை என்றால் ஒழுக்கமற்றவை என்றும் பொருள்படும்....

திருச்சிக்கு கிழக்கே பன்னிரண்டு கல் தொலைவில் கல்லணை ஒன்று கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே தரையில் கட்டப்பட்டுள்ள அணை இது ஒன்றே. அதிலும் இருபுறங்களிலும் ஐந்தடிக்கு மேற்படாத கரையை வைத்துக்கொண்டே தண்ணீரைத் தேக்கி அத்தண்ணீரை ஆறுபகுதிகளுக்குப் பிரித்தனுப்புகிற கலை ஒரு தனிக்கலையேயாம்.

மற்ற அணைகள் எல்லாம் இருபுறங்களிலும் மலைகளையே கரைகளாகக் கொண்டதாகவும் பெரும் பள்ளத்தாக்குகளில் நீரைத் தேக்குவதாகவும் அமைந்திருக்கும்....

சதுப்பு நிலத்தில் கட்டப்பட்ட கட்டடங்கள் சில ஆண்டுகளுக் குள்ளாகவே வெடிப்பிட்டுப் போவதைக் காணும் நமக்குத் தண்ணீரிலேயே அடித்தளம் போட்ட கட்டடம் 2000 ஆண்டுகளாகியும் வெடிப்பு ஏற்படாமல் எப்படி இருக்கிறது?... இதுபற்றிப் பெரிய பெரிய பொறியியல் வல்லுநர்களும் புரியாது தவிக்கின்றனர்.

கி.பி.1003ஆம் ஆண்டில் தொடங்கி 1009க்குள் இராசராச சோழ மன்னனால் கட்டி முடிக்கப்பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் தமிழ்மக்களின் கட்டடக்கலைக்கு ஒரு பெரும் சான்று.

இதன் கோபுரத்தின்உயரம் 216அடி. அதன்உச்சியில் வைத்துள்ள கல் 25½ அடி. சதுரமுள்ள கல் அதன் எடை 80 டன். அதில் நான்குபுறமும் சுற்றி வைத்திருக்கும் நந்திகளின் எண்ணிக்கை எட்டு. அவை ஒவ்வொன்றின் உயரம் 5½ அடி. நீளம் 6½.. இவற்றை உச்சிக்குக் கொண்டுபோக நான்கு கல் தூரத்திலிருந்து சாரம் கட்டத்தொடங்கிய இடத்திற்கு சாரப்பள்ளம் என்ற பெயர் இன்றும் இருந்து வருகிறது....

திருச்சிக்கு வடக்கே நான்கு கல் தொலைவில் சிறீரங்கம் என்ற ஓர் ஊர் உள்ளது.அது நான்குபுறமும் நீர் சூழ்ந்த ஒரு தீவு....
தெற்குக்கோபுரத்திற்கு மொட்டைக்கோபுரம் என்றுபெயர். காரணம் கோபுரம் கட்டப்படாமல் கோபரத்திற்குரிய அடித்தளம் மட்டும் கட்டப்பட்டிருப்பதே. நான்கு புரமும் நான்கு கற்றூண்கள் நிற்கின்றன. (இப்போது, கோபுரம் 72 மீட்டர உயரத்தில் கட்டப் பட்டுள்ளது)         

கோயிலைச்சுற்றி நான்கு வெளிக்கோபுர வாயில்களிலும் 16 கற்றூண்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணின் அகலம் 3அடி, நீளம் 5அடி, உயரம் 62அடி. மேலே 42அடி தெரிவதால் மூன்றில் ஒருபங்கு 20 அடியாவது மண்ணில் புதைந்திருக்க வேண்டும்.இன்றேல் அது வலுவாக நில்லாது. இவ்வாறு 16 தூண்கள் ஒரே அளவில் எவ்வாறு கிடைத்தன?

இருபுறமும் காவிரியும் கொள்ளிடமும் உள்ள மண்ற்பரப்பில் 20அடி ஆழம் எப்படி வெட்ட முடிந்தது? மூன்றடியிலேயே தண்ணீர் இருக்கும்போது அதற்கும் கீழ் எப்படித்தோண்ட முடிந்தது?...

தமிழகத்தின் சிற்பக்கலை உலகம் முழுதும் நன்கறிந்த ஒன்று... தமிழ் மக்களின் சிற்பக்கலையைத் தமிழகத் திருக்கோயில்கள் அனைத்திலும் காணலாம். இவற்றுள் பேரூர்க்கோயில், மதுரைக்கோயில் தூண்களின் சிற்பங்கள் மிகமிக உயர்ந்தவை...

சில கோயில் தூண்கள் இசைக்கருவிகளாக அமைந்திருக்கின்றன. ஒரே தூணில் 16 வகையாகப் பிரித்துச் செதுக்கப்பட்டிருக்கிறது. அது அரம் போட்டு அறுத்ததுபோல் காணப்படுகிறது... கண்பார்வை நுழைய முடியாவிடத்தில் கூட கைவேலைகள் நுழைந்திருக்கின்றன. ஒவ்வொரு சிறு பகுதியும் தட்டத்தட்ட ஒவ்வோர் ஒலி கிளம்புகிறது. அனைத்தையும் தட்டி அருமையான இசையை முழக்க முடிகிறது.

கற்றூண்கள் இசைபாடும் கலைக் காட்சியை மதுரை, திருநெல்வேலி, சுசீந்திரம், ஆழ்வார் திருநகரி முதலிய திருக்கோயில்களில் இன்றும் கண்டு மகிழலாம். இவற்றுள் நெல்லைக்கோயில் தூண்கள் மிகச்சிறந்தவை....

(தொகுப்பு நூல்: முத்தமிழ்க் காவலரின் அறிவுக்கு உணவு பக்கம் 235 முதல் 240 வரை. வெளியீடு: பெரியண்ணன் நூலகம், நல்லாமூர், விழுப்புரம் மாவட்டம்)
---------------------------------------------------------------------------------------------------------

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயாவின் அரிய உரை!



பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயாவின் அரிய உரை!

தி.பி.2047-8-21 (6-9-2016) செவ்வாயன்று புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனமும், விடுதலை வீரர் சீனுவாசன் தனலட்சுமி அறக்கடளையாரும் சேர்ந்து ஏற்பாடு செய்த ஒன்பதாம் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிறுவனத்தின் தொல்காப்பியர் அரங்கில் நடைபெற்றது.

பெரியாரியல் அறிஞர் வே.ஆனைமுத்து ஐயா தாய்நாடு, தாழ்மொழி: இந்தியாவில் இன்றைய நிலை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 


தாய்மொழி, தாய்நாடு என்பவற்றின் வரையறையைத் தெளிவாகக் கூறி இக்கால் இந்திய ஒன்றியத்தில் உள்ள பல்வேறு மக்களின் தாய்மொழி இருக்கும் நிலையை விளக்கினார். 2001ஆம் ஆண்டு குடிமதிப்பறிக்கையில் கண்டுள்ளபடி ஏறத்தாழ 25ஆயிரம் கோடி மக்கள்மட்டும் பேசும் இந்திக்கும், ஏறத்தாழ 14ஆயிரம்பேர் பேசுவதாகத் தவறாக்க் கூறப்படும் சமற்கிருதத்திற்கும் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான உருவா வீணே செலவழிப்பதைப் பற்றியும் எடுத்துக்காட்டினார்.

இன்றைய இந்திய ஒன்றியத்தில், பல்வேறு மொழிபேசும் மக்களின் நாடுகள் இன்றுள்ள மொழிவழி மாழநிலங்கள் நடைமுறையில்  எவ்வெந் நிலையில் வேறுபட்ட உரிமைகளோடு உள்ளன என்றெல்லாம் சான்றுகளுடன் விளக்கினார்.

தம் உரையின் இறுதிப் பகுதியில், ஆனைமுத்து ஐயா, பெரியார் ஆங்கிலத்திற்கு முதன்மை கொடுத்து அம்மொழி படிக்க அனைவரையும் வலியுறுத்தியது பற்றிய அரிய விளக்கமளித்தார். அன்றைய நிலையில், தமிழ் அறிவியல் துறைகளில் வளரா திருந்ததையும் மக்கள் மூடநம்பிக்கையோடு விழிப்புணர் வற்றவர்களாக இருந்ததால் அவர்களை விரைந்து முன்னேற்றக் கருதியுமே அவ்வாறு கூறினார். என்றாலும், தமிழைப் பலதுறை அறிவும் நிறைந்ததாக வளர்த்தெடுக்க வேணுமென்று வற்புறுத்தி யிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்றார்.

பெரியாரே, தாம் கூறியவாயினும் அவற்றை அப்படியே ஏற்க வேண்டாமென்றும், அறிவடிப்படையில் ஆராய்ந்து தத்தமக்குச் சரியென்று படுவதை மட்டும் ஏற்றுக் கொள்ளலாமென்றும் எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார் என்றும் விளக்கம் தந்தார்.

காலை பத்தரை மணிக்குத் தொடங்கிய பயனுள்ள நிகழ்ச்சி, பகல் ஒரு மணியளவில் நிறைவுற்றது. அறக்கட்டளையார், வந்திருந்த அனைவருக்கும் சுவையான பகல்உணவு ஏற்பாடு செய்திருந்தனர்.

குறிப்பு: படம் அளித்த  திரு.புதுவைத் தமிழ்நெஞ்சன், செல்வி தமிழ்மொழிக்கு நன்றி!
------------------------------------------------------------------------------------------------------  
 

சனி, 3 செப்டம்பர், 2016

சமற்கிருத நூல்கள் அறிவுறுத்துவன யாவை? - பாவாணர் விளக்கம்!



சமற்கிருத நூல்கள் அறிவுறுத்துவன  யாவை?           - பாவாணர் விளக்கம்!



...சமற்கிருத நூல்களோ, பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நாற்குலங்களையும் இறைவனே படைத்தான் என்றும் அங்ஙனம் படைத்ததாக இறைவனே சொன்னான் என்றும் (பகவற்கீதை-4:13),

புருடன் (புருஷ) என்னும் உயிரின மூல வடிவத்தின் முகத்தினின்று பிராமணனும், தோளினின்று சத்திரியனும், தொடையினின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும் தோன்றினர் என்றும் (இருக்குவேதம் 10ஆம் மண்டிலம், 90ஆம் மந்திரம் புருஷசூக்தம்),

பிராமணனுக்கு மற்ற மூவரும் தொண்டுசெய்ய வேண்டுமென்றும்,

துறவும் வீடுபேறும் பிராமணனுக்கே உரியனவென்றும்,

முக்குண வேறுபாட்டாலும் பழவினையாலும் நாற்குலமும் அமைவதாற் குலம், பிறவிபற்றியதென்றும்,

நாற்குலமும் முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவை யென்றும்,

ஒருவன் எவ்வெத் தொழிலை மேற்கோள்ளினும் அவன் குலம் அவன் இறக்கும்வரை மாறாதென்றும்,

நாற்குலத்தாரும் முறையே வேதமோதி வேள்வி வளர்த்தும், போர்செய்து காவல் மேற்கொண்டும், வணிகமும் உழவும் ஆற்றியும், கைத்தொழிலுங் கூலிவேலையுந் தொண்டுஞ் செய்தும் வாழவேண்டுமென்றும்,

பிராமணன் சமையத்திற்கேற்ப எந்த வேலையும் மேற்கொள்ளலா மென்றும், அவன் நிலத்தேவன் (பூசுரன்) என்றும்,

வேதமொழியும் சமற்கிருதமும் ஆகிய கீழையாரியம் தேவமொழியென்றும்,

உண்டி உடை உறையுள், உடைமை, பெயர், பழக்க வழக்கம், சடங்கு, தண்டனை முதலிய எல்லாவகை நிலைமைகளும் குலத்திற்கேற்ப வேறுபட்டிருத்தல் வேண்டுமென்றும்,

இத்தகைய பிறவுமே கூறுகின்றன.

     சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால்
     உழந்தும் உழவே தலை.`            -(கு.1031)
     உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா
     தெழுவாரை யெல்லாம் பொறுத்து.          (கு.1032)
     உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்
     தொழுதுண்டு புன்செல் பவர்.          -(கு.1033)
     பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்
     அலகுடை நீழ லவர்.       -(கு.1034)
     இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது
     கைசெய்தூண் மாலை யவர்.          -(கு.1035)
     உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
     விட்டேம் என்பார்க்கு நிலை.          (கு.1036)
என்றது தமிழ் அறநூல்.

சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப் பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலே உடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியிலுண்டான பலபல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?: என்றது வடமொழி அறநூல்.(-மநுதர்ம சாத்திரம் இராமாநுசாசாரியார் மொழிபெயர்ப்பு. 10:84)     
.....  
--------------------------------------------------------------