வியாழன், 30 ஜூன், 2016

சங்க இலக்கியக் கல்வி பற்றித் தொல்காப்பித் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம் ஐயாவின் வலியுறுத்தம்!








சங்க இலக்கியக் கல்வி பற்றித் தொல்காப்பித் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம் ஐயாவின் வலியுறுத்தம்!
----------------------------------------------------------------------------------

எவ்வகைத் தமிழ்நூல்கள் எவ்வளவு படித்திருந்தாலும் தொல்காப்பியம்முதலான சங்க இலக்கியக் கல்வி இல்லாதாரைத் திறமான தமிழ்ப்புலமை பெற்றவராகச் சொல்ல முடியாது.
ஆற்றுநீர் கடலிற்போய்க் கலக்கின்றது என்றாலும் ஆற்றிற் குளித்தோரைக் கடலிற் குளித்துத் திளைத்தவராகச் சொல்வதுண்டோ?
சொல்லாலும் பொருளாலும் பண்பாலும் செறிவாலும் நடையாலும் ஓங்கிய சங்கவிலக்கியம் கற்றாரின் புலமையே வேரோடிய தமிழ்ப் புலமையாகும்....

புரியாத நடையுடையது சங்கவிலக்கியம் என்ற ஒருசாராரின் அவலக் கருத்து, நீர்சுடும் என்பது போன்ற மயக்க மருளாகும்.

இலக்கண வழக்கு முரண்பட்ட அயல்மொழிகளைப் புரியும் என்று பொருள் கொட்டிப் படிக்கும் தமிழர்கள், தம் தாயிலக்கியம் புரியாது என்று புலம்புவது பேதைமையுள் எல்லாம் கலப்பற்ற பேதைமையாகும்.
சங்கத்தமிழை நீர்தெளிந்த கோதாவரிக்குக் கம்பர் ஒப்பிடுவதைச் சிறிதேனும் எண்ணுங்கள், புரியும்.

(‘நாவலர் நாட்டார் தமிழுரைகள்’-18, ‘நாட்டாரின் சங்கப்புலமை’ – தொல்காப்பியத் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம், பக்கம் xxii,xxiv, தமிழ் மண், சென்னை)
---------
 
சங்கக்காலம் யார்க்கும் சிந்தனையை வளர்த்த காலம். சங்கக் கல்வி கற்பவர்க்கெல்லாம் சிந்தனையை ஊட்டிய கல்வி. ௩௭௮ (378) அகப்புலவோருள் ஒரே பாடல் பாடியமைந்த புலவோர் தொகை ௨௪௯ (249) எனின்,படித்தோர் பெருக்கமும், பாடவல்லுநர் பெருக்கமும், சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தமை பெறப்படும்.
 - மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார், ‘தமிழ்க்காதல்
-----------

பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால் கிழம்போகும் கீழ்மையும் போம்
- மா.குறள்-461. ஆசிரியர்: வ.சுப.மாணிக்கனார்
--------------

வெள்ளி, 17 ஜூன், 2016

சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா?



சங்க காலத்தில் சாதிப்பெயருண்டா?
நாவலர் ந.மு.வேங்கடசாமியார் விளக்குகிறார்:


இப்பொழுது வழங்குவது போல ஐயர், ஐயங்கார், நாயுடு, செட்டி, பிள்ளை, முதலியார் என்னும் பட்டப் பெயர்களாவது, கள்ளர் வகுப்பினர் முதலானோர்பால் காணப்படும் அளவற்ற பட்டப் பெயருகளாவது சங்கநாளில் வழங்கவில்லை. அவையெல்லாம் இடைக் காலத்துத் தோன்றியவையே.

ஐயர் எனபது முனிவர் அல்லது பெரியாருக்கே சிறப்பாய் வழங்கியது.கண்ணப்பர், நந்தனார் முதலிய வேறுகுலத்துப் பெரியார்களையும் சிறப்புப்பற்றி ஐயர் என ஆன்றோர் வழங்கியிருக்கின்றனர். சிறப்புப் பெயர் வருங்காலும்,

சிறப்பி னாகிய பெயர்நிலைக் கிளவிக்கும்
இயற்பெயர்க் கிளவி முற்படக் கிளவார்

என்ற விதிப்படி, அமரமுனிவன் அகத்தியன், தெய்வப்புலவன் திருவள்ளுவன், சேரமான் சேரலாதன் என்றாற்போல இயற்பெயர்க்கு முன் வருதலே மரபு. பிற்காலத்திற்றான் பெயர்கள் இம்முறைமாறி வரலாயின. சிறப்புப்பெயரும் முன்பு யாவர்க்கும் வழங்குவன அல்ல. எனவே பண்டை மக்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டப் பெரிதும் விரும்பவில்லையென்பது போதரும்

(நாவலர் நாட்டார் தமிழ் உரைகள்- 18, தமிழ்மண், சென்னை, பக்கம் 43, 44.)

--------------------------------------------------------------

சனி, 11 ஜூன், 2016

பாவலரேறு ஐயாவுக்கு ஒரு மடல்!



பாவலரேறு ஐயாவுக்கு ஒரு மடல்!

ஐயா,
     வணக்கம்.

இருபத்தோராம் ஆண்டு முடியவிருக்கின்றது….  
16-6-1995-இல் சென்னையைக் குலுக்கிய அந்த இறுதி ஊர்வலம் நடைபெற்று!
    
            இறுதி ஊர்வலத்திலும் உணர்வு கொப்புளிக்க வீறுமுழக்கிய விடுதலைப் பெரும் பேரணி நடத்திய ஆற்றலரே!
    
            உங்களுக்குத் தெரிவிக்கப் பல செய்திகள் உள்ளன. ஆனால், அன்புமிக்க ஐயா, எதுவும் மகிழ்ச்சியான செய்தி இல்லையே!
    
            பொங்குணர்வுச் சூறாவளியே! போழ்வாய் அரிமாவே! பொரு களிறே! மூண்ட இடியாய் இத்தமிழ் மண்ணின் விடுதலை முழக்கமிட்ட பெருமுரசே!
    
            ஒரு தமிழ்ப் பாவலனுக்கு இத்துணைச் சிறப்பா? இத்தகைய படையணியா? என இறுதி ஊர்வலங் கண்டோரை வியக்கவைத்த மா மறவரே!
    
            தமழின், தமிழரின, தமிழ்நிலத்தின் விடுதலைக்குப் பல்லாயிரம் பாடல்களில் முழங்கிய பாவலரேறே!
    
     பிரிவினைத் தடைச் சட்டம், இந்திய பாதுகாப்புச் சட்டம், அச்சுறுத்தர் ஒழிப்புச் சட்டம் போலும் பற்பலப் புதுப்புதுச் சட்டங்களால் நிலைப்படுத்திக் கொண்ட இந்திய வல்லாட்சியரின் வன்தலை திரும்பி நோக்கும் வகையில், தமிழகத்தை விடுவிக்க மூன்று முறை தமிழக விடுதலை மாநாடுகளை  நடத்திய திண்ணிய வல்லுர அஞ்சா நெஞ்சம் பெற்றிருந்த ஒருதனிப் பெருமறத் தனித்தமிழ்ப் புலவ!
    
     தமிழ்த் தேசியம் பேச இக்கால் பலர் எழுந்துள்ளனர். நன்றே! அவர்களுள் சிலர், தந்தை பெரியாரைப் புழுதிவாரித் தூற்றத் தொடங்கிய நிலையும், அதற்குத் துணையாகப் பாவாணரையும் உங்களையுமே வலிந்து சேர்க்க முனையும் விந்தையும் நடக்கிறது.
    
     மொழிநிலையிலும் தமிழ் தொடர்பாகவும் தந்தை பெரியாரை நீங்கள் எதிர்த்தெழுதிய போதும், அவரின் ஈடிணையற்ற தொண்டினைக் கட்டுரைகளிலும் பாடல்களிலும் ஒப்பாரும் மிக்காருமில்லா வகையில் ஏற்றிப் போற்றிப் புகழ்ந்துள்ள வரலாற்றை அவர்கள் அறிந்திருக்கவில்லை!
     
     இத்தகைய அவர்கள் போக்கால், தமிழ்த் தேசிய விடுதலை உணர்வாளர்களைப் பிரித்தாளும் நரித்தனத்திற்குத் தாம் துணைபோவதை அறியாராக, உணராராக உள்ளனர்.

     ஐயா, பல்வேறு செய்திகள் தங்களுக்குத் தெரிவிக்க வேண்டியவை உள்ளன. அவ்வப்போது இனி எழுதுகிறேன்.    

     உங்கள் பிரிவிற்குப் பின்னால் விடுதலை முயற்சிகளில் பல காரணங்களால் தொய்வு நேர்ந்திருக்கின்றது. ஆனாலும் நீங்கள் ஊட்டிய உணர்வு காப்பாற்றப்பட்டு வருகின்றது! உங்கள் பாடல் முழக்கம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.!

புரிவினைகள் அத்தனைக்கும் புரைவடவர் தம்மிசைவைப்
போய்போய்க் கேட்டுப்

பரிவினுக்குக் காமத்திருக்கும் படியென்ன வந்ததிங்கே?
பணங்கா சுக்கே

நரிவினையைச் செய்திடுவார்; நயந்துவரார்; நறுந்தமிழர்க்(கு)
உரிமை வேண்டிப்

பிரிவினைக்கு வழிவகுப்போம்! பிறவினைகள் பிறகென்போம்!
பிளிறு வோமே!

பிற பின்.

அன்புத் தம்பி,
தமிழநம்பி.

(தனித்தமிழ் இலக்கியத் திங்களிதழாக வந்த தென்மொழி இதழின் ஆசிரியர்,
தமிழக விடுதலையை உயிர்க் கொள்கையாகக் கொண்டுப் பெரும் பாடாற்றிய ஈடிணையற்ற பாவலர்,
தனித்தமிழ் அறிஞர்,
தமிழ்ப் பகைவர் அஞ்சிநடுங்கிய தமிழரிமா
துரைமாணிக்கம் என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவு நாள் இன்று!)