திங்கள், 12 ஜனவரி, 2009

கொடுமையிதே! அறக்கொலையே!

(எண்சீர் மண்டிலம்: காய் - காய் - மா - தேமா)


இகழ்சேர்க்கும் எனஅஞ்சீர்! அறமுங் கொல்வீர்!
     இந்தியத்தை ஆளுகின்ற அரசே! இங்கே
புகலருங்கே டினத்திற்கே புரிந்தும் கண்ணைப்
     பொத்திக்கொண் டறியார்போல் நடித்துக் கொண்டு
அகலலிலா தந்திரத்தில் ஆளு கின்ற
     அருட்செல்வர் தலைமையுள அரசே! நீங்கள்
மிகக்கரவாய் தமிழினத்தின் அழிவிற் கென்றே
     மேன்மேலும் இரண்டகங்கள் செய்கின் றீரே!

தினைத்துணையும் அறவுணர்வே அற்றுப் போனீர்!
     தெரிந்திருந்தும் சிங்களர்க்கே உதவி செய்வீர்!
அனைத்துவகை ஆய்தங்கள் அள்ளித் தந்தீர்!
     அரியஉள வுந்தொகையும் அவர்க்கே ஈவீர்!
முனைத்தெழுந்து பாக்கித்தான் சீனத் தோடு
     மும்முரமாய்ப் படைநடத்தத் துணையும் செய்வீர்!
எனைத்தென்ற அளவின்றி உதவு கின்றீர்!
     இனக்கொலையில் எந்தமிழர் அழிந்து போக!

தூசாகக் கருதுகின்றீர் தமிழர் தம்மை!
     துளிக்கூட எம்முணர்வை மதிக்க வில்லை!
காசாவைத் தாக்குவதைக் கண்டிக் கின்றீர்!
     கனிவுடனே ஆப்கான்மற் றெவர்க்கும் உங்கள்
ஊசலிலாத் துணைதரவு உண்டே! ஆனால்
     உரிமைமறுத் தினமழிக்கும் சிங்க ளர்க்கும்
கூசாமல் உதவுகின்றீர்! கொள்கை அற்றீர்!
     கொடுமையிதே! அறக்கொலையே! கொதித்துச் சொன்னேன்!