புதன், 25 ஆகஸ்ட், 2010

செம்மொழி மாநாடு!

செம்மொழி மாநாடு!

(பஃறொடை வெண்பா)


உலக்கை விழுங்கியவன் உற்றநோய் நீக்கும்

இலக்கில் கொதிசுக் கிறுத்தே கலக்கிக்

குடித்தகதை ஈழத்தே கொன்று குவிக்க

நடித்துத் துணைபோன நாணார் துடித்திழைத்த

செம்மொழிமா நாடென்றே செப்பு.

------------------------------------------------

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

எப்படித் தீர்ப்பது?

எப்படித் தீர்ப்பது?

(வெளி மண்டிலம்)


செந்தமிழ் வேங்கையைச் சிங்களன் கொல்வதோ? – தமிழிளைஞ!

முந்தியித் தாலியின் மூளிப் பேய்துணை – தமிழிளைஞ!

சொந்த இனங்கொலத் துணையருட் செல்வனும் – தமிழிளைஞ!

இந்தக் கணக்கினை எப்படித் தீர்ப்பதோ? – தமிழிளைஞ!


__________________________________________________________________

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

இரண்டகரின் முழு உருவம்!

இரண்டகரின் முழு உருவம்!
 
           
ஈழத்தார்க் கிழைத்திட்ட இரண்டகத்தை மக்களிடம்
எடுத்துச் சொன்னால்
ஆழத்தான் பதறுகிறார் அடக்குமுறைச் சட்டத்தை
அழைக்கின் றாரே!
ஊழலுறை இரண்டகத்தை உண்மையினை மிகவிளக்கி
உரைப்போர் தம்மைத்
தோழமெனும் சிறையிட்டே தொடுக்கின்றார் பொய்வழக்கு
தொல்லை தோய்த்தே!

பாட்டன்பூட் டன்சேயோன் பழந்தமிழோட் டன்மார்கள்
பரவர் என்றே
வேட்டாழி தனிலோடி விருப்பமுடன் மீன்பிடித்தார்
விளக்கி ஓங்கும்
பாட்டாலே முழக்கமிடும் பழந்தமிழர் இலக்கியங்கள்
படித்தீர்! இன்றே
வேட்டையெனக் கொல்கின்றார் வெறியர்நம் மீனவரை
வீணில் பார்ப்பீர்!

எம்மீழ உறவுகட்கே இழைத்தயிரண் டகஞ்சொன்னால்
எழுந்து வந்தே
வெம்பலுடன் உறுமுகிறார் வீணிலுறை ஓரமைச்சர்
விரைவில் இங்கே
தும்முதற்கும் தடைசெய்தோர் துடைமாறு புதுச்சட்டம்
தொடுப்போம் என்றே!
மொய்ம்புறவே முழங்கிடுவோம்! முழுஉருவம் வெளித்தெரியும்
முனைந்து செய்வீர்!


-----------------------------------------------------