சென்னைக் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு
(சென்னையில் 16-12-2012-இல் நடைபெறவிருக்கும்
கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு பற்றிப் புதுச்சேரியில் 5-12-2012 அன்று நடைபெற்ற
விளக்கக் கூட்டத்தில் தமிழநம்பியின் உரை)
இந்த நிகழ்ச்சி, இந்நாட்டில் இக்கால்
மொழிநிலையில் கணிப்பொறி கைப்பேசி போன்ற ஊடகங்களின் வளர்ச்சியைப் பயன்படுத்தி எதைச்
செயற்படுத்த என்ன முயற்சி நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவும், நாம் என்ன
செய்யவேண்டும் என்பதைத் தெளிந்து செயற்பாட்டுக்கு முனைய வேண்டியதைக் கூறுகின்ற ஒரு
நிகழ்ச்சியாகும்.
என்ன நடக்கிறது? இந்தியநாட்டின் ஆட்சி அதிகாரம்
இந்தியை மட்டுமே வல்லாண்மையுடன் முழுமையான தனியொரு ஆட்சிமொழியாக ஆக்குவதில்
முழுமுனைப்பாக மும்முரமாக உள்ளது. இதற்கெனக் கரவுத்தனமாகப் பல்வேறு பணிகள்
நடக்கின்றன. இந்திக் கணிப்பொறிப் பயன்பாட்டுக்குத் தேவையான மென்பொருள்களையும் பிற
வகை ஆக்கங்களையும் தடையின்றி பெரும் பொருட்செலவில் உருவாக்கி வரும் வேலை தொடர்ந்து
நடைபெற்று வருகின்றது.
இதை ஏன் செய்பகிறார்கள்? எக்காலத்திலும்
இந்தியே முதன்மை மொழியாக வல்லாண்மை செலுத்தும் மொழியாக நிலைநாட்ட மிகக்கரவாக
நுட்பமான காரறிவு வளப்பத்துடன் செயற்படுகின்றனர். இதனால் அரசியல் சட்டத்தின் 8-ஆவது அட்டவணையில்
உள்ள மற்ற 22 மொழிகள் என்னாகும்? அடிமை மொழிகளாகிப் புறக்கணிக்கப்படும்;
வளர்ச்சியற்று காலப்போக்கில் வழக்கொழிந்து அழியும்.
இன்னொன்று. “கணிப்பொறியில் இடைமொழியாகப் பயன்படுத்த சமற்கிருதமே ஏற்றது; சமற்கிருத இலக்கண
நூல் பாணினியமே கணிப்பொறி மொழியியலுக்கு அடிப்படையாக அமைவதற்கு ஏற்றது’ என்ற கருத்துரு மிகக் கரவுத்தனமாக வலிவுடன்
நுழைக்கப்பட்டுள்ளது.
இதன்வழி, என்றென்றும் இந்தி, சமற்கிருத
மொழிகளின் வல்லாண்மை நிலைக்க உறுதியான ஏற்பாட்டுக்கு அடிகோலும் முயற்சி தடையின்றி
நடக்கின்றது.
சரி, இப்போது என்ன செய்ய வேண்டும்?
நம் தாய்மொழி தமிழ், முதல் தாய்மொழியாகவும்
இயற்கை மொழியாகவும் உயர்தனிச் செம்மொழியாகவும் இருப்பதால்,கணிப்பொறி கைப்பேசி
முதலியவற்றின் செயற்பாட்டுக்கு மிகப்பொருந்திய மொழி என்று வல்லுநர் கூறுகின்றனர். “எத்துறை அறிவையும் ஏற்குமெந் தமிழே இனி உங்கள் பருப்பு
வேகாது” என்று பொருஞ்சித்திரனார்
முழங்குவார். இருந்தும் என்ன?
தமிழ் ஆட்சிமொழியாக இல்லை, பயிற்றுமொழியாக
இல்லை, வழிபாட்டு மொழியாக இல்லை, வணிக மொழியாக இல்லை, வழக்குமன்ற மொழியாகவும்
இல்லை. இப்போது கணிப்பொறி போலும் ஊடகங்களின் மொழியாகவும் இல்லாது போகவிட்டால்,
பெருமை பேசிப் பயனில்லை, தமிழ் அழிவை நோக்கிச் செல்வதைத் தடுக்க இயலாது.
என்ன செய்யவேண்டும்?
தமிழகத்தில் ஆறரைக்கோடி மக்களின்மொழி, உலகளவில்
பத்தரை கோடிப்பேரின் தாய்மொழியாகிய தமிழ், இந்நாட்டின் ஆட்சி மொழியாக வேண்டும்.
இதற்காக, இம்மண்ணிலுள்ள அரசியல் கட்சிகள் முனைந்து முயலுமென்ற நம்பிக்கை
நமக்கில்லை என்பதே உண்மை.
இந்நிலையில், நாம், தமிழில் கலைச்சொல்லாக்கம்,
அறிவியல் நூலாக்கங்கள் செய்தாக வேண்டும்; கணிப்பொறியில் பயன்பாட்டுக்குச்
செயன்முறையாக்கி என்னும் சொல்லாளர், ஒளிவழி எழுத்துணரி, பேச்சு – எழுத்து மாற்றி, எழுத்து - பேச்சு மாற்றி, பொறி
மொழிபெயர்ப்பு போன்றவற்றிற்கெல்லாம் மென்பொருள்கள் உருவாக்க வேண்டும். கணிப்பொறி
வழி என்னென்ன வேலைகளைச் செய்கின்றோமோ அவை அனைத்திற்கும் தேவையான மென்பொருட்களைத்
தமிழில் உருவாக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு முயற்சிகளை மேற்கொள்ள மக்கள் அரசுக்கு நெருக்கடி தரவேண்டும்.
கணிப்பொறித்தமிழ் வளர்ச்சியே எதிர்காலத்
தமிழின் வளர்ச்சி என்பதால் அனைவரும் இதில் கருத்துச்செலுத்த வேண்டும். மக்களிடம்
இவற்றைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய நிலையில்தான்,
திசம்பர் 16 மாநாடு நடக்கிறது.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு நம்
பாராட்டும் நன்றியும் கூறுவதோடு மாநாட்டின் வெற்றிக்கு உதவ்வேண்டும்
என்றவேண்டுகோளுடன் என் உரையை முடிக்கின்றேன். வாய்ப்பளித்தோர்க்கு நன்றி.
2 கருத்துகள்:
வணக்கம்!
பொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
பாராட்டுகள்:-)
கருத்துரையிடுக