செயமோகனின் வன்மமும் வசையும்!
2026 ஆகத்து 15, 16 ஆகிய நாள்களில் ஈரோட்டில் ‘தமிழ்விக்கி’ என்ற பெயரிலான அமைப்பு பரிசளிப்பு விழா ஒன்றை நடத்தியிருக்கிறது. அந்த விழாவில் எழுத்தாளர் செயமோகன் முதன்மைப் பேச்சாளராகப் பேசியிருக்கின்றார். இந்தத் ‘தமிழ்விக்கி’ என்ற அமைப்பு செயமோகனின் வாசகர்கள் ஏற்பாட்டில் உருவானது என்று கூறுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய செயமோகன் அயற்சொல் கலவாது தமிழை (தூயதமிழில்) எழுதுவது ‘மடத்தனமான தமிழ்’ என்றும், அப்படித் தனித்தமிழில் எழுதுவோர் ‘மூடக்கும்பல்’ என்றும், பொறியாளர்களுக்கும் தனித்தமிழ் எழுதுவார்க்கும் தமிழே தெரியாது என்றும் திருவாய் மலர்ந்திருக்கின்றார். கிரந்த எழுத்து நீக்கித் தமிழ் எழுத்துகளில் எழுதுவதையும் பிறமொழிச் சொற்களைத் தமிழ் இலக்கண வரையறையின்படி எழுதுவதையும் எள்ளல் செய்திருக்கின்றார்.
கதை எழுதும் எழுத்தாளர் ஒருவர், தமிழ்இலக்கணத்தை முழுமையாக அறியாதவர், மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர் இங்ஙனம் வரம்புமீறிப் பேசியிருப்பதை ‘நற்றமிழ்’ மிகக் கடுமையாகக் கண்டிக்கின்றது. தமிழ் என்று சொன்னால், அது அயற்சொல் கலவாத தமிழ்மொழியைத்தான் குறிக்கும். “தமிழென ஒன்றும் தனித்தமிழ் என்றும் தானிரு மொழியில்லை; தமிழது தானே தனித்தமிழாகும் தவிர்த்திடின் பிறசொல்லை”– என்பது தமிழாய்ந்த நல்லறிஞர் கூற்றாகும். அயல்மொழிச் சொற்களை அவரவர் விருப்பத்திற்குக் கலந்து எழுதுவதை எல்லாம் தமிழ் என்று கூறமுடியாது.
தொல்காப்பியம் 884ஆம் நூற்பா ‘வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’ என்பதாகும். இந்நூற்பா, வடசொல் தமிழில் வரும்போது, அது வடமொழி எழுத்து, ஒலிகளை நீக்கி, தமிழ் எழுத்துகளில் மாற்றத்துடன் வழங்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. ‘வடஎழுத்து’ - என்றது பிற அயல் எழுத்துகளுக்கும் பொருந்தும். இந்நூற்பாவின்படி செயமோகன் தம் பெயரை அவர் தவறாகவே எழுதிக்கொண்டு இருக்கின்றார். எப்படி எனில், தம் பெயரின் முதலெழுத்தை அவர் தமிழ் எழுத்தில் எழுதவில்லை. ஆமாம், அந்தத் தமிழ் இலக்கண வரையறையை அவர் அறிந்திருக்கவில்லை அல்லது அவர் அந்த இலக்கணத்தைப் பொருட்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.
‘இசுக்காட்டுலாந்து’ என்கிறான்’ ‘உருசியா’ என்கிறான், இந்த மூடக் கும்பலிடம் ஏரணம் (விவாதம்) செய்யமுடியாது’ – என்பது இந்தச் செயமோகனின் கூற்றாகும். ”தமிழை முழுமையாக அறியாதவரின் வன்மமான, வசையான பேச்சு” – என்றால், அவர் பேர்பெற்ற எழுத்தாளர் என்பர்! பேர்பெற்ற எழுத்தாளரின் நிலை இப்படித்தான் இருக்கின்றது!
‘இசுக்காட்டுலாந்து’ என்று சொல்வது தானே சரி? அதில் என்ன தவறு? ‘உருசியா’ என்பதில் இவர்கண்ட பிழை என்ன? தொல்காப்பியம் 885-ஆம் நூற்பா ‘சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்’– என்பதாகும். மூலச்சொல்லின் அமைப்பும் ஒலிப்பும் சிதைந்தாலும் தமிழின் அமைப்புக்கும் ஒலிப்புக்கும் பொருந்தி வர எழுத வேண்டும் என்றே இந்நூற்பா கூறுகிறது. இதை இந்தச் செயமோகன் படித்தாரா என்று தெரியவில்லை! இலக்கணம் மொழியின் ஒழுங்கும் உயிரும் ஆகும். தமிழின் தோற்றம், வளர்ச்சி, அதன் கட்டமைப்பு குறித்து இந்தச் செயமோகனின் புரிந்துகொள்ளாத தன்மையையே அவர் கூற்று வெளிப்படுத்துகின்றது. மொழியைச் சிதைப்பதைப் பெருமையாகவும், மொழியைக் காப்பதைத் தாழ்வாகவும் கருதுவது மனக்கோளாற்று நிலையாகும்.
தமிழ் இன்றுவரை நிலைத்து நிற்பதற்கு, அன்றிலிருந்து இன்றுவரை மொழித்தூய்மையைப் பேணிய சான்றோர்களே காரணம். அவர்களை 'மூடர்கள்' என்று இழிவுசெய்யும் இந்தச் செயமோகன், நிற்கும் மரத்தின் கிளையையே மரத்தை ஒட்டி வெட்டும் அறிவாளியாகிறார்.
எம்மொழியிலும் எல்லாமொழி ஒலிப்புகளும் இல்லை. சீனஎழுத்தின் ஒலிப்பு வேறு எந்த மொழியிலுள்ளது? ஒருமொழி தன் இயல்பிற்கேற்காத ஒலிகளை ஏற்பின், நாளடைவில் அது சிதைந்து வேறொரு மொழியாகி விடும். தமிழ் என்பதை ‘டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தமிசு’ - என்றெல்லாம் தானே ஆங்கிலத்தில் எழுதுகின்றனர்! பலுக்குகின்றனர்! ஆங்கிலம் ஏன் ‘ழ’ என்னும் தமிழ் எழுத்தை ஏற்கக்கூடாது என்று இந்தச் செயமோகன் கேட்பாரா?
இந்தச் செயமோகன் கூற்றுப்படி தொல்காப்பியரும் கழகஇலக்கியம் படைத்த புலமை சான்ற பாவலர் அனைவரும் ‘மடத்தனமான தமிழ்’ எழுதிய ‘மூடக்கும்ப’லைச் சேர்ந்தவர்- களாகிறார்கள்!
பலரும் போற்றித் தூக்கித் தாங்கும் பாரதி, கட்டுரை ஒன்றில் “பாடசாலைகள் ஸ்தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப் படுவதுமன்றிப் பலகைக் குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்லவேண்டும். ‘ஸ்லேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக்கூடாது….. ‘மெம்பர்’ என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் எனக்கு அகப்படவில்லை. இது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்…. ‘யாரேனும் பண்டிதர்கள் நல்ல பதங்கள் கண்டுபிடித்துக் கொடுத்தால் புண்ணியமுண்டு. அரைமணி நேரம் யோசித்துப்பார்த்தேன். ‘உறுப்பாளி’ ஏதெல்லாமோ நினைத்தேன். ஒன்றும் மனத்திற்குப் பொருந்தவில்லை, என்னசெய்வேன்……. இன்னும் ஆர அமர யோசித்துப் பார்த்துச் சரியான பதங்கள் கண்டுபிடித்து மற்றொருமுறை சொல்லுகிறேன்” என்று எழுதியிருப்பதால் இந்தச் செயமோகனுக்குப் பாரதியும் ‘மூடக்கும்ப’லைச் சேர்ந்தவனே!
கல்வியிற் பெரியவராகிய கம்பர், தம் நூலில், தயரதன், கோசலை, இராமன், சீதை, சானகி, சனகன், இலக்குவன், இந்திரசித்தன், வீடணன், வசிட்டர், அகலிகை, ஆதிசேடன், உருப்பசி, குகன், கும்பகன்னன், சடாயு, சயந்திரன், அம்பரீடன், இரண்யகசிபு, இரணியன், பிரகற்பதி, தூடணன், வச்சிரஎயிற்றியான், பிரகலாதன் முதலிய கதை உறுப்பினர் பெயர்களைத் தமிழ்இலக்கண வரையறையின்படி எழுதியதால் கம்பரும் இந்தச் செயமோகனுக்கு ‘மடத்தனமான தமிழ்’ எழுதிய ‘மூடக்கும்ப’லைச் சேர்ந்தவரே!
இனி, ஆழ்வார்களும் நாயன்மார்களும்கூட வட எழுத்துகளையும் பிற அயல்எழுத்துகளையும் பயன்படுத்தாமல் பாடியதால் இந்தச் செயமோகனுக்கு ‘மடத்தனமான தமிழ்’ எழுதிய ‘மூடக்கும்ப’லைச் சேர்ந்தோரே!
அயற்சொல் கலவாது தமிழ் எழுதுவாரை, ‘அவர்கள் பொறியாளர்கள், அவர்களுக்குத் தமிழ்தெரியாது’ என்று இந்தச் செயமோகன் உறுமியிருக்கின்றார். தாமே அனைத்தும் அறிந்தோராக எண்ணிக்கொண்டு, கண்டபடி உளறுவதே சிலர் ‘அறிவு’ வெளிப்பாடாக இருக்கிறது! பா.வே.மாணிக்க நாயக்கர், மு.பொன்னவைக்கோ, மு.அனந்தகிருட்டினன், கொடுமுடி ச.சண்முகன், க.சி.அகமுடை நம்பி, மயில்சாமி அண்ணாத்துரை, இராமகி, செ.இரா.செல்வகுமரன் முதலிய தமிழறிஞர்களின் நீண்ட பட்டியலில் உள்ளோர் பொறியாளர்களே என்பதை இந்தச் செயமோகன் அறிந்திராதது வியப்பில்லை.
தமிழைத் தம் விருப்பத்திற்கு எப்படியும் எழுதலாம் என்று கருதி எழுதிக் கொண்டிருக்கும் இந்தச் செயமோகன் போலும் மன அழுக்கா- ளர்கள் தமிழர்க்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருக்கின்றனர். மெய்த்தமிழ் அறிஞர் உலகம் சீற்றத்துடன் விடையளிக்காமல் உணர்வு அவிந்து கிடக்கின்றது. எனவே நம்மை எதிர்த்துப் பேச எவரும் இல்லை என்ற துணிச்சலில் தொடர்ச்சியாக இப்படியான கருத்துகளை இந்தச் செயமோகன்கள் வெளியிட்டுவரும் நிலையைப் பார்த்து வருகின்றோம்.
இந்தச் செயமோகன், தம் பெயர் ‘விக்கிப்பீடியா’ என்னும் களஞ்சியத் தொகுப்பில் இடம்பெறவில்லை என்ற வெறுப்புணர்வில் பிறந்த சினத்தைத் ‘தனித்தமிழ் இயக்க’த்தின் மீது காட்டுவதாக ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது.
இங்கிலாந்துக்கும் அமெரிக்காவுக்கும் செல்வதாகப் பெருமை பேசிக் கொள்ளும் இந்தச் செயமோகன், அதையே தகுதியாகவும் ஆங்கு சிலர் அளித்துவரும் தொகைகளையே தம் வலிவாகவும் கருதிக்கொண்டு உளறித் திரிவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இவர் கூறும் ஒருவர்தான் அறிவாளி என்றும் மற்றவர்கள் அனைவரும் ‘மூடக்கும்பல்’ என்றும் கூற இவருக்கு அதிகாரமளித்தது யார்?
தனித்தமிழ் இயக்கம் தோன்றவேண்டிய இன்றியமையாமை ஏன் ஏற்பட்டது? வேற்றுச் சொற்களை ஏற்றுக்கொண்டே போவதால் தமிழ் பன்மொழிக் கலவையாக மாறுகிறது; தமிழ்ச்சொற்கள் வழக்கிழந்து மறைந்து போகின்ற கெடுதல் நேர்கிறது.அயற்சொற் கலப்பால் தமிழ்ப் பண்பாடு, கலை, நாகரிகத்தின் மீது வல்லாண்மை உருவாகிறது.
அயற்சொல் கலப்பு, தமிழின் இயல்பைக் கெடுக்கிறது. தமிழின் இனிமையையும் அழகையும் குலைக்கிறது; தமிழின் வளர்ச்சியைக் குன்றச் செய்கின்றது. கலப்புநிலை தொடரும்போது, காலப்போக்கில், தமிழர் அடையாளமற்றவர்களாக, வரலாறற்ற மக்களாக மாறும் கேட்டிற்கு வழி செய்கிறது.
உலகத்தில் தமிழர்கள் மட்டும்தானா இவ்வாறு அயற்சொற் கலப்பை எதிர்க்கிறார்கள்? மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்கள்? ஆங்கில வரலாற்று ஆசிரியர் பிரிமன், ஆங்கிலத்தில் பிரெஞ்சு இலத்தீன் மொழிச்சொற்கள் கலந்து பொருட்குழப்பத்தை ஏற்படுத்துவதால், அம்மொழிகள் கலப்பற்ற தூய ஆங்கிலம் எழுத வேண்டுமென்றார்.
“தூய ஆங்கிலக் கழகம்“ (Society for pure English) என்ற அமைப்பு 1918 முதல் இயங்கி வருகின்றது. பிரெஞ்சு மொழியில் பிறமொழிச் சொற்களை நீக்குவதற்காக பிரான்சின் தலைவராயிருந்த சார்லசு திகால் என்பார் பல சட்டங்களை இயற்றினார். செருமானியர் மொழிச் சீர்திருத்தம் செய்து பல அயற்சொற்களை விலக்கினர். புரட்சியாளர் இலெனின், ‘உருசிய மொழியைக் கெடுப்பதை நிறுத்துங்கள், பிறசொற் கலப்பை எதிர்த்துப் போரிடுங்கள்’ என்று அறிக்கை வெளியிட்டவராவார்.துருக்கியின் வல்லாட்சியர் அத்தாதுர்க்கு என்ற கமால்பாச்சா துருக்கி மொழியிலிருந்து இருபதாயிரம் அரபி, பாரசீகச் சொற்களை நீக்கிவிட்டு 1,58,000 தூய துருக்கிச் சொற்களை உருவாக்கச் செய்தார். சீனமொழி தூயதாக்கப்பட்ட பிறகு, ‘மாண்டரின்’ எனப்பட்டது. தூய சீனமொழியையே பேசவேண்டுமென்று பொதுவுடைமை அரசு கட்டளையிட்டது.
பிரெஞ்சு, சீனம், உருசிய மொழிகளில் அயற்சொற்கலப்பு தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்றது. இந்தச் செயமோகனுக்கு இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தனித்தமிழ் இயக்கம் ஒரு தமிழ்க்காப்பு இயக்கம்; நூறாண்டுகளுக்கும் மேலாகப் பலரின் பலவகை எதிர்ப்பு எள்ளல்களை நேர்கொண்டுதான் வந்திருக்கின்றது. நூறாண்டுகளுக்கும் முன் இருந்த தமிழ்நடைக்கும் இன்று எழுதப்பெறும் தமிழ்நடைக்கும் உள்ள வேறுபாடே தனித்தமிழ் இயக்கம் பெற்ற வெற்றியைப் பறைசாற்றும். இந்தச் செயமோகன்கள் இவற்றை அறிந்திரார்; அறிந்திருந்தாலும் உணரார்.
தனித்தமிழ் இயக்கம் முழுமையான வெற்றிபெற இன்னும் தொலைவு உள்ளதென்பது உண்மை. ஆனால், தூயதமிழ் பேணும் முயற்சியே தமிழ்மொழியைக் காக்கும் என்பதும் தமிழை வளர்த்தெடுத் துயர்த்த இன்றியமையாததென்பதும் உறுதியாகும். தூயதமிழ் காக்கும் முயற்சி மட்டும் இல்லாதிருந்தால், இருபதாம் நூற்றாண்டில் இன்னுமொரு மலையாளம் தோன்றியிருக்கும்! சில கோடித்தமிழர்கள் இன்னொருவகை மொழியினத்தவராக மாறியிருப்பர் என்றால் மிகையுரையன்று, உண்மை!
இந்தச் செயமோகன்களின் வன்மமும் வசையும் தூயதமிழ் இயக்கத்திற்குத் தூசாகும். மாறாக, இவை நமக்குப் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல்அடிகளையும், தனித்தமிழறிஞர் பேரா.இளவரசு பாடல்அடிகளையும், அரிய இரண்டு குறள்களையும் நினைவூட்டுகின்றன. அவை இவை:
கல்லறைப் பிணத்தைத் தோண்டிக் கவின்பெறப் புகழ்வர்; ஆனால்
சில்லறை மொழிகள் கூறிச் செந்தமிழ் அழிப்பர்; இன்னார்
சொல்லறை பட்டுந் தேரார்! செவியறக் கொடிறு வீழ
மல்லறை வாங்கித் தேரும் மணிநாளும் விரைந்த தன்றே!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
உதைத்துத் திருத்த ஒருபடை வேண்டும் தமிழ்க் காளையே! – அதில்
உன்னையும் உறுப்பின னாக்கிக் கொள்வாய் இந்த வேளையே!
- பாவலர் பேரா. இரா.இளவரசு.
வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. – கு.844.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. - கு.439.
- த.ந.
(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர், 2026 இதழில் வந்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக