திங்கள், 23 டிசம்பர், 2024

நாங்குநேரி: ஓராள் அமைப்பின் பரிந்துரைகளும் தமிழ்நாட்டரசும்!

 

நாங்குநேரி: ஓராள் அமைப்பின் பரிந்துரைகளும் தமிழ்நாட்டரசும்!

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர் சின்னதுரையும் அவர் தங்கை சந்திராசெல்வியும் அப் பள்ளியில் உடன்படிக்கும் மூன்று மாணவர்களால் கடந்த ஆண்டு (2023) ஆகத்து மாதத்தில் சாதிய வெறுப்பு காரணமாகக் கொடிய முறையில் வீடுபுகுந்து அரிவாளால் வெட்டித் தாக்கப்பட்டனர். அந் நிகழ்ச்சி மாந்தத் தன்மையுள்ள எல்லாரின் மனத்தையும் உலுக்கியது.

தாக்கப்பட்ட இருவரும் தக்க மருத்துவம் பெறுவதற்கும் அக்குடும்பம் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்கும் தமிழ்நாட்டரசு ஏற்பாடு செய்தது. மேலும் அவர்கள் குடும்பத்தை நெல்லைக்கு மாற்றி அவர்கள் தாய்க்கு வேறொரு மழலையர் பள்ளி ஊழியராகப் பணிசெய்ய மாறுதலும் தந்தது. அவர்களுக்கு நெல்லையில் ஒரு வீடும் ஒதுக்கியது. அம் மாணவர் இருவரும் வேறொரு பள்ளியில் படிப்பைத் தொடர உதவியது.

நாங்குநேரியில் நிகழ்ந்தது போன்ற கொடிய நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்குப் பள்ளி, கல்லூரி மாணவரிடையே சாதி உணர்வு அடிப்படையிலான வன்முறையைத் தவிர்க்கவும் நல்லிணக்கத்தை உருவாக்கவும் வழிகாட்டும் பரிந்துரைகளை வழங்கத் தமிழ்நாட்டரசு, மதிப்பார்ந்த முன்னாள் உயர்நயன்மன்ற நயனகர் கே.சந்துருவை ஓராள் அமைப்பாக அமர்த்தியது.

அவர் ஒன்பது மாதம் செயற்பட்டு ஆங்கிலத்தில் 610 பக்கங்கள் கொண்டநாங்குநேரி ஒருபோதும்,,,எப்போதும் வேண்டா – (“Nanguneri Never…Ever) என்னும் தலைப்பில் ஆங்கில அறிக்கையை 18.6.2024-இல் தமிழ்நாட்டரசுக்குத் தந்தார்.

அந்த அறிக்கையின் பரிந்துரைகள் மட்டும் தமிழில்நாங்குநேரி இன்றும் என்றும் வேண்டாம் என்ற தலைப்பில்போதிவனம் வெளியீடாக இருபது பக்கங்களில் உருவா பத்து விலையில் வெளிவந்துள்ளது


அதில் இரண்டு தலைப்புகளில் மொத்தம் இருபத்துநான்கு பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன. ‘இனியும் காத்திருக்க முடியாத சிக்கல்கள் என்ற பெருந்தலைப்பில், சாதிப்பெயர்களைக் கைவிடுதல், அனைத்துப்பள்ளிகளும் ஒரே குடையின்கீழ், ஆசிரியர்களும் அதிகாரிகளும் முதலிய இருபத்தொரு தலைப்புகளில் பரிந்துரைகள் உள்ளன.

இரண்டாவதாகத்தொலைநோக்கு இலக்குகள் என்ற பெருந்தலைப்பில் மூன்று தலைப்புகளில் பரிந்துரைகள் தரப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரைகளில் மிகப் பெரும்பாலனவை உடனே செயற்படுத்தப்பட வேண்டிய இன்றியமையாத் தேவையினவாகவே இருக்கின்றன.   

அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்ட உடனேயே, இங்குள்ள மதவெறிக் கூட்டமும் சாதிய அமைப்புகளும் அந்த அரிய அறிக்கைக்கு எதிராகக் கூச்சலிட்டன. அரசு அறிக்கையை வாங்கி வைத்து அமைதி காக்கின்றது.

குமுகநயன் நிலைநாட்டப்பட வேண்டுமென்தில் ஈடுபாடும், சமன்மை நிலைநிறுத்தப்பட வேண்டுமென்பதில் உறுதியும் இருப்பது உண்மையென்பதை வெளிப்படுத்த அறிக்கையைச் செயற்படுத்தும் உடனடி நடவடிக்கைகள் தேவை. தமிழ்நாட்டரசு காலந்தாழ்த்தாது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமெனநற்றமிழ் வலியுறுத்துகின்றது.

           -   த. ந.

 

சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல

தமிழ்வளர்த்தல் மற்றொன்று

பாதியை நாடு மறந்தால்

மற்றப் பாதி துலங்குவதில்லை!

- பாவேந்தர்    


----------------------------------------------------------------                                                                             

  புதுவை நற்றமிழ் சூலை-அகத்து 2024 இதழில்              வந்தது


----------------------------------------------------------------

வியாழன், 7 நவம்பர், 2024

‘தினமணி’யில் ‘வேத’மயக்கம்!

 

தினமணியில் வேதமயக்கம்!

 

சில நாள்களுக்கு முன்னர்தினமணிநாளிதழில், ‘வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்என்ற தலைப்பிலும்வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதிஎன்ற தலைப்பிலும் இரண்டு கட்டுரைகள் ஒன்றன்பின் ஒன்றாக இடம்பெற்றிருந்தன. இரண்டையும் ஓர் அம்மையார் எழுதியிருந்தார்.

 

வரலாற்றைத் திரித்து எழுதுவதும், சரியாகப் பயிலாத நிலையில் 

மிக ஆராய்ந்து எழுதுவதுபோல முழுவதுமாக அறிந்து கொள்ளாமல் ஒரு செய்தியை அறுதியிட்டுக் கூறுவதும் ஆரியப் பார்ப்பனிய எழுத்தாளர் மிகப்பெரும்பான்மையரின் தந்திரங்கள் என்பதை, உண்மை ஆய்வாளர் அறிவர்.

 

இத்தகையார், ஆங்கிலேயர் வருகைக்கு முன், இந்தத் துணைக்கண்டப் பகுதி முழுமையும் இந்தியா என்ற ஒரே நாடாக இருந்ததில்லை என்ற அடிப்படை உண்மையையும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததில்லை என்ற உண்மையையும் அறிந்திராதவர்கள் என்று கூறமுடியாது. இந்தியத் துணைக்கண்டம் பல்வேறு மொழி, குமுகாயம், பண்பாடு, அரசியல் நிலைகளைக் கொண்டிருந்த நிலப்பகுதி என்பது அடிப்படை வரலாறாகும். தமிழகத்தின் தெருக்கூத்துகளில் கூட, கட்டியங்காரன், ‘ஐம்பத்தாறு தேசத்தரசர்களும் வந்திருக்கின்றார்களா?’ என்றுதான் கேட்பான். இந்நிலையில், இந்திய நாட்டிற்கு அவர்கள் எழுத்தில் கூறுவதானால் பாரத தேசத்திற்கெனத் தனிக்கோட்பாடு, தனிக்கொண்முடிபு (சித்தாந்தம்) தனிப்பண்பாடு என்றவாறு இவர்கள் கூறுவது அனைத்தும் ஆரியக்கோட்பாடு, ஆரியப் பார்ப்பனியப் பண்பாடு முதலியவையே ஆகும்.

 

இந்திய வரலாறு என்று ஆரியப்பார்ப்பனர் வரலாற்றையே கூறும்

போக்கு ஏமாற்றும், கண்டிக்கத்தக்கதுமாகும். தமிழர் வரலாறு வேறு; இக்கால் இந்திய வரலாறு என்று கூறும் ஆரியப்பார்ப்பனர் வரலாறு வேறாகும். தமிழர் வரலாறு குமரிக்கண்டத்திலிருந்து தொடங்கி எழுதப்படவேண்டியதாகும். இந் நாவலந்தீவில் குமரிக்கண்டத்திலிருந்து கடல்கோள்களால் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கியே மாந்தர் இடம் பெயர்ந்தனர். முக்கழக(முச்சங்க) வரலாறு தமிழர் வரலாற்றின் பகுதியாகும். ஒருகாலத்தில் நாவலந்தீவு முழுமையும் தமிழர்களே இருந்தனர். தமிழே அவர்கள் மொழியாக இருந்தது. ஆரியப் பார்ப்பனரும் பிற இனத்தாரும் வடக்குவழி வந்தபின், மொழிக் கலப்பால் தமிழ் திரிந்து வெவ்வேறு மொழிகள் தோன்றின. மக்களினக் கலப்பால் வெவ்வேறு இனங்களாக மக்கள் பிரிந்தனர். அதன்வழி வெவ்வேறு இனங்களும் தோன்றிப் பரவின என்ற செய்தி வரலாற்றறிஞர் கூறும் உண்மையாகும்.

 

தமிழர் வரலாற்றில், குடவோலை முறை உத்திரமேரூர் கல்வெட்டுக் காலத்ததே அதாவது முதலாம் பராந்தக சோழன் காலமான கி.பி 907 – 955 காலத்ததே என்பது கட்டுரை எழுதிய அம்மையார் கருத்தாக உள்ளது. அவரிடம் தமிழ் இலக்கியப் பயிற்சியை நாம் எதிர்பார்க்க முடியாது தான்! அவர்களுக்குக் காஞ்சி சங்கரமடக் கூற்றே வரலாறு என்பதும் நாம் அறிந்ததே. தமிழரின் பழந்தமிழ் இலக்கியமான அகநானூற்றின் 77ஆம் பாடலை அந்த அம்மையார் அறிந்திருக்கவில்லை என்பது வியப்பளிக்கக் கூடிய செய்தி இல்லைதான்!

மருதனிளநாகனார் எழுதிய அகம் 77ஆம்  பாடலில்,

 

கயிறுபிழிக் குணிசி ஓலை கொண்மார்

பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்…” – எனவரும்

இரண்டடிகள் கூறும் பொருள்கயிற்றால் கட்டப்பட்ட குடத்திலுள்ள ஓலைகளை ஆவணமாக்கள் அக்குடத்தின் மேலிட்ட முத்திரையை ஆராய்ந்து சரிபார்த்துப் பின் அவ்வோலைகளைக் குடத்திலின்றும்  வெளியில் எடுப்பர்என்பதாகும். இச்செய்தியின் தொடர்புடைய ஒரு விளக்கத்தைக் கீழே காண்போம்:

 

பழங்காலத்தில் ஊர்களிலும் நகரங்களிலும் குடவோலை முறையில் ஊர், நகர அவைகளில் மக்கள் சார்பாளர்களையும் பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் அமர்த்தத் தேர்தல்கள் நடைபெற்றன. இதனைக் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மருதன் இளநாகனார் அகம். 77ஆம் பாடல் உறுதிப்படுத்துகின்றதுஎன்று அறிஞர் கணியன்பாலன் தம்பழம்பெரும் தமிழ்ச்சமூகம்நூலில் (பக்கம்.91) குறிப்பிடுகின்றார்.

 

இதுமட்டுமன்று, தமிழகத்தில் இருந்த அரசனின் ஆட்சியதிகாரம் பொதுமக்கள் அவைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு.நான்காம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு குறிப்பிடுவதாக சவகர்லால் நேரு கூறுகிறார் என்றும் கணியன்பாலனின் நூல் கூறுகிறது.

 

தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆய்வறிஞர்கள் தொல்காப்பியம் 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று வரையறுத்துக் கூறுகின்றனர். தொல்காப்பியத்திற்கும் முன்னதாகப் பல இலக்கணநூல்கள், இலக்கிய நூல்கள் கலைநூல்கள் இருந்ததற்கான சான்றுகள் அந்நூலிலேயே உள்ளன. தமிழ்எழுத்துகள் சொற்களுக்கான சான்றுகள் பொருந்தல், கொடுமணல், கீழடி அகழ்வாய்வுகளில் காணப்பட்டுள்ளன. 

 

இப்போது கிடைத்துள்ள சான்றுகளின்படி தமிழின் வரிவடிவம் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் இருந்தது உறுதியாகி உள்ளது. சமற்கிருதத்  தொன்மைக்காகக் கிடைத்துள்ள கல்வெட்டுச் சான்று கி.மு.150ஆம் ஆண்டினதே ஆகும். அதுவும்கூட அசோகர் பிராமி எழுத்துகளில் உள்ளதே. நகர நாகரிகமான சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று சொல்லப்பட்டாலும் அது தமிழர் நாகரிகமே ஆகும். சிந்துவெளி நாகரிகத்திற்கும் இருக்குவேத நாகரிகத்திற்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

 

வேத ஆரியர் நாவலந்தேயத்திற்குள் (இந்தியாவிற்குள்) கால் வைப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகட்கு முந்திய பாபிலோனிய மொழியிலும், ஆரியம் என்னும் பெயர் தோன்றுவதற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முந்திய எகிப்து மொழியிலும், மறுக்கமுடியாத தமிழ்ச் சொற்கள் அடிப்படையா யுள்ளன. ஆகவே, மேலையுலகில் (தோரா. கி. மு. 5,000) முதன்முதலாக நாகரிகமடைந்த எகிப்து நாட்டு மொழியில், ஒருசொல் இருசொல் அல்ல, பலசொற்கள், அவையும் அடிப்படைச் சொற்கள், தமிழாயிருந்ததே தமிழின் தொன்மைக்குத் தலைசிறந்த இலக்கியச் சான்றாகும்என்று மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் எழுதுகிறார். (நூல்:;தமிழ் வரலாறு; முதற்பகுதி முன்னுரை பக்கம்18, தமிழ்மண் பதிப்பகம் 1967)

 

வேதக் கூற்றுகளே இந்திய நாட்டின் கருத்துகள் என்றும் வேதங்கள்’, ‘உபநிடதங்கள்’, ‘மனுநூல் முதலியவையே இந்திய நாட்டின் பழந்தமிழ் அறநூல்கள் என்றும் வந்தேறி ஆரியப்பார்ப்பனியம் அடிப்படை ஏதுமின்றி அடாவடியாக எழுதி வருவது கடுமையான கண்டிப்புக்குரியதாகும். 

 

அவ் வேதங்களில் காணப் பெறும் சில பச்சையான அருவருப்பு நிகழ்ச்சிகளைக் கொக்கோக நூல்களிலும் காண்பதரிது. காட்டு விலங்காண்டிகள் போல் அவர்கள் நடந்துகொண்ட முறைகள் அவ் வேதங்களில் நன்கு வண்ணிக்கப் பெறுகின்றன. எனினும் இவர்கள் அவ் வேதங்களைத் தோற்றுவிக்கப் பெறாதவை (அநாதி) என்றும், தொன்று தொட்டு வருவன என்றும்; இறைவனுக்கு முந்தித் தோன்றியவை என்றும் பொய்யுரையும் புளுகுரையும் கூறிப் பழங்கால மக்களை ஏமாற்றிவந்தனர்; இன்று வரை அவற்றையே திரும்பதிரும்பக் கூறிக் கற்றவர்களையும் அறிஞர்களையும் ஏமாற்றப் பார்க்கின்றனர். வரலாற்றாசிரியர்கள் சிலரும் இவர்களின் மதிமயக்குப் பேச்சுகளில் நம்பி உண்மையைப் பறிகொடுத்துள்ளனர். வேதங்களை நேரிடையாகப் படிப்பவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருக்கின்றது. இருப்பினும் அவ்வேதபுராணஇதிகாசங்களை வைத்துக்கொண்டு ஆரிய இனத்தவரில் பெரும்பாலோர் பிழைத்து வருகின்றனர்” – என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் நூலானஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்என்ற நூலில் எழுதுகிறார்.

 

வேதங்களில் முந்தியதும் முதலாவதுமாகக் கூறப்படுவதுமான இருக்கு வேதம் ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்படவில்லை. இது எழுதாக் கிளவியாக, வாய்மொழிச் செய்யுள்களாக காலந்தோறும் மாற்றங்களுற்றும் சேர்க்கைகள் பெற்றும் வந்திருக்கின்றது. இவற்றின் தொன்மை பற்றி இட்டுக்கட்டிய கதைகளும் போலிப் பெருமை கூறிக் கொள்ளும் கதைகளுமே பரவலாக்கப்பட்டிருக்கின்றன.

 

இருக்குவேதம் உள்ளிட்ட நான்கு வேதங்களிலும் தமிழிய பண்பாட்டுக் கூறுகளும், அறிவுக்கூறுகளும் தமிழிலிருந்து பெயர்த்து எழுதப்பட்டிருக்கின்றன என்றும் அவற்றை வடக்கே உள்ள நாடுகளில் செய்திருக்க வேண்டுமென்றும் அவையும் கி.மு.2இலிருந்து கி.பி.2க்கும் இடையில்தான் தொகுத்திருக்க முடியும் என்றும் (பொழிலன்: வேதவெறி இந்தியா - பக்.71) அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், கட்டுரை எழுதிய அம்மையார், இருக்கு வேதமே உலகின் முதல்நூல் என்று பெருமைபேசிக் கொள்கின்றார்.

 

இன்னும், பேரா. கூத்து என்பவர் கி.பி 200இல் வேதங்கள் எழுதப்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றார். பேரா.ஐகோபி, வேத நூற்கள் கி.பி 200க்கும் கி.பி 450க்கும் இடையிலான காலத்தில் எழுதப் பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றார் என்று அம்பேத்கர் விளக்குகின்றார். இப்படிப்பட்டதாக வரலாறுள்ள நிலையில், ‘தினமணிக் கட்டுரையாளர் இருக்கு வேதத்தில்சபா, சமிதி, விததாபற்றி வரம்புகடந்து பெருமைபட்டுக் கொள்கின்றார். குடியும் கூத்தும் பற்றிக் கூறும் விளக்கங்கள் அளவிற்கு அவை ஆட்சிமுறையில் அரசனைக் கட்டுப் படுத்துவனவாக இருந்ததற்கான வலிய சான்றேதும் இல்லை.

 

இருக்குவேதம் பாரதத்தின் அறிவுநுட்பமாம்! அதிலிருந்துதான்ஜனநாயகம்பரவுகிறதாம்! (இதில் அடங்கியுள்ள பெரும்பான்மையான பகுதிகள் (சூக்தங்கள்), அவர்களுக்கு நல்ல உணவு, நல்ல குடிப்பு (சோமபானம்), நல்ல மழை, தவச (தானிய) விளைச்சல், பெருங்கொடை (தட்சனை) அதிக பால் தரும் ஆக்கள், வேள்விகள் (யாகங்கள்) செய்திட செல்வம், வேகமாக செல்லும் குதிரைகள், உறுதியான தேர்கள், நல்ல உடல் நலம், மன உறுதி, வேத மந்திரங்களை நினைவில் வைத்துக்கொண்டு வேத மந்திரங்களைப் பாட நல்ல வாக்கு, அவர்களின் வெற்றிக்காகவும், எதிரிகளின் வீழ்ச்சிக்காகவும் தேவர்களின் உதவி வேண்டி தேவர்களைப் போற்றும் நோக்கிலமைந்தவை. மேலும் தங்கள் மன்னர்களைப் பற்றிச் சில வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே காணப்படுவதாகக் கூறுகின்றனர். அவ்வளவே!) 

 

அறிஞர் அசுக்கோ பருபோலோசிந்து சமவெளி எழுத்துகளின் படிப்புஎன்ற தம் நூலில், “இருக்குவேதம் திராவிட(தமிழிய)த்திலிருந்து பெருவாரியான சொற்களை மட்டும் கொண்டிருக்கவில்லை.                                            1. பண்பாட்டுச் சொற்கள் 2. பால்வேறுபாடுகள் 3. மேற்கோள்கள்                                    4. சொல்லும் ஒலி ஒத்த சொல் உருவாக்கங்கள் ஆகியவற்றுடன் உறவுடையதாக இருப்பதோடு அவை ஈரானியஆரிய மொழிகளுக்கிடையிலான உறவுடையதாக இல்லாமல் இருப்பதையும் அறிய வேண்டும்என்று கூறுகிறார். 


தினமணிக் கட்டுரையாளர் முழுப்பூசுணையைச் சோற்றில் மறைக்க முயல்கின்றார். படிப்போரைவேதமயக்குறுத்த முனைகின்றார். இனியும் உண்மையை மறைக்க முடியாது. இந்தியத் துணைக்கண்ட வரலாறு ஆரியப் பார்ப்பனிய வரலாறில்லை. அது தெற்கிலிருந்து (குமரிக்கண்டத்திலிருந்து) எழுதப்படவேண்டிய வரலாறு என்பதை உண்மையான வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, ‘தினமணியும் கட்டுரை எழுதியவரும் இனியும் மக்களைவேதமயக்கத்திலாழ்த்த முயல்வது வீண்வேலையாகும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

புதுவையிலிருந்து வரும் ‘நற்றமிழ்’ 15-06-2024 உதழில் வந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------