சனி, 11 ஜனவரி, 2025

திரவிடப்பெருமை வெளிப்பட உதவிய பிரித்தன் தொல்லியலர்!

  

(என்.விநோத்குமார் என்பார் தைம்சு ஆப்பு இந்தியாநாளிதழில் (24-9-2024) எழுதிய கட்டுரையின் தமிழாக்கமே இது. தைம்சு ஆப்பு இந்தியாநாளிதழுக்கும் என்.விநோத்குமாருக்கும் நன்றி. தமிழநம்பி.)

திரவிடப்பெருமை வெளிப்பட உதவிய பிரித்தன் தொல்லியலர்!



திரவிடமொழியைக் கொண்டிருந்ததாகக் கருதப்படுவதும் ஆரியருக்கு முந்தியதுமாகிய சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பை 1924இல் சான் மார்சல் அறிவித்தது, இலக்கியங்கள், அகழ்வாய்வுகளில் தமிழ் வேர்களைத்தேடும் மரபுவழிக் குழுக்கள் பெருகக் காரணமானது.

இந்திய ஒன்றியஅரசு உறுதியான நிலையில் பிரித்தானியருக்கு (ஆங்கிலேயருக்கு) எதிராகப் பரப்புரை செய்துவரும் பொழுது தமிழ்நாடு ஒரு பிரித்தானிய அலுவலரை அவருடைய தொல்லியல் கண்டுபிடிப்பு திராவிடத்திற்கு உச்சவுயர்வைத் தந்து ஓர் உந்துதலானதால் அவரைக் கொண்டாடி வருகின்றது.

20 செபுதம்பர் 1924இல் பிரித்தானியத் தொல்லியலர் சர் சான் மார்சல் சிந்துவெளி நாகரிகக் கண்டிபிடிப்பைப் படவிளக்க இலண்டன் செய்திகள்” (Illustrated London News) இதழ்வழி அறிவித்தார். அவருடைய கட்டுரையான, “நெடுங்காலமாக மறக்கப்பட்ட நாகரிகத்தின் முதல் வெளிப்பாடு: ஒரு வரலாற்றுக்கு முந்திய கடந்த காலம்என்பதில், ‘சிந்துவெளி நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது. சிந்துவெளி மொழி அல்லது மொழிகள் கட்டாயம் ஆரியருக்கு முற்பட்டதாக இருந்திருக்க வேண்டும். அம்மொழிகளில் ஒன்றோ மற்றொன்றோ (ஒன்றுக்கு மேற்பட்டதுபோல் தோன்றுகின்றபடி இருக்குமானால்) திரவிட மொழியாகும் என்று குறிப்பிட்டார்.

எழுச்சிமிக்க மொழிவரலாற்றைக் கொண்ட ஒரு மாநிலத்திற்கு ஒரு பிரித்தன் அதிகாரியின் இந்த ஆய்வுமுடிவு திராவிடர்க்கருத்தியல் மொழிவோர்க்கு மேடை அமைத்துக் கொடுத்ததுபோல் ஆயிற்று. பின்னாளில், ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் சிந்துவெளி எழுத்திற்குப் பொருள்காணும் அவர்களுடைய முயற்சியால் அந்த மாநில மொழியினுடைய தொன்மையை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.


தியூக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான சுமதி இராமசாமி 2001இல் ஒரு கட்டுரையில் இக் கண்டுபிடிப்பின் தொடக்கக்கால எதிர்வினையாகச் சென்னை மாநிலத்திலிருந்து தி.ஆர்.சேச ஐயங்காரின் (1925) ‘திராவிடர் இந்தியா’ (Dravidian India), மு.சி.பூரணலிங்கம் பிள்ளையின் (1927) ‘தமிழ் இந்தியா’ (Tamil India) போன்ற நூல்கள் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அப்போதிலிருந்து தமிழ்நிலம் சிந்துவெளி நாகரிகம் இரண்டிற்கும் இடையில் மொழியியல் தொடர்பில் நிறைய இலக்கியங்கள் வந்துள்ளன.

இருந்தபோதிலும், மேலும் உறுதிப்படுத்த, அம்மாநிலம் அதற்குப் பிறகும் 90 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 2015இல் இந்திய அகழ்வாய்வுத் துறையின் (Archaeological Survey of India - ASI) கே.அமர்நாத்து இராமகிருட்டினா தலைமையில் கீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பானைகள், வைகையாற்றங் கரையில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண்ணாலான சுட்ட செம்பழுப்பு வட்டக் கிணறுகள் போன்ற கலைப்பொருள்கள், தமிழ்நாட்டின் கழக (சங்க)க் காலம் முன்பு நினைத்திருந்ததைவிட மேலும் பழமையானதென்ற கருத்தளித்தன. இக் கண்டுபிடிப்புகள் தமிழ்நாட்டில் ஒரு கிளர்ச்சியை உருவாக்கின. பலர், கருப்பு-சிவப்பு மட்பாண்டச் சில்லுகளில் கண்ட ஆதன், குவிரன் எனும் பெயர்களைத் தம் பிள்ளைகளுக்குச் சூட்டினர்.

இது, “திரவிட மொழிபேசும் மக்கள் வடஇந்தியாவில் ஆரியர்களுக்கு முற்பட்டவர்களாகவும் பெரும்பாலும் சிந்துவெளி நாகரிகத்தினரைப் போல் மேம்பட்ட பண்பாட்டை உடையவர்களாகவும் இருந்தனர்என்னும் மார்சலின் உறுதியுரையைச் சான்றுடன் உறுதிப்படுத்துகின்றது.

ஒரு புயல் தொடர்ந்தது. இந்திய ஒன்றியஅரசு இராமகிருட்டினாவை மாற்றியது. கீழடி அகழ்வாய்வை நிறுத்தும் நோக்கிலேயே அம்மாறுதல், செய்யப்பட்டதாக தமிழ்நாட்டு அறிவாளிகள் குற்றம்சாட்ட அது காரணமாயிற்று. மூன்று கட்ட அகழ்வாய்வுகளுக்குப்பின், தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை அகழ்வாய்வுப் பணியை மேற்கொண்டது.

வரலாறு, இலக்கியங்களின்பால் ஈடுபாடு கொண்டவராக அறியப்பட்ட இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான தி.உதயச்சந்திரன் 2018இல் தொல்லியல் துறையின் ஆணையராக்கப்பட்டார். அவருடைய தலைமையில் தொல்லியல் துறையில் இம் மாநிலத்தில் பரபரப்பான செயற்பாடுகள் நிகழ்ந்தன. அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள் எளிய மக்கள் மொழியில் பதிப்பித்து


வெளியிடப்பட்டன. புதிய அகழ்வாய்வு இடங்கள் அடையாளம் காணப்பட்டன. பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

ஏறத்தாழ இதே நேரத்தில், சென்னையில் உள்ள உரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம், அரப்பா, சிந்துவெளிநாகரிகத்தின் அறிவியல் சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சியைத் தொடங்கியது. சிந்துவெளி நாகரிகத்தில் மார்சலின் திராவிடர்பற்றிய குறிப்பும் இங்கே பரவலாக நிலவும் திராவிடர் பற்றிய கருத்துகளும் ஒத்திருந்தன. எனவே, 2018இலிருந்து நாங்கள் சொற்பொழிவுகள், அச்சிட்ட வெளியீடுகளுடன் சிந்துவெளி கண்டுபிடிப்பு நாள்கொண்டாடுகின்றோம். மார்சலுக்குத் தமிழருடன் நேரடித் தொடர்பில்லை என்றாலும், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம் அவருடைய வல்லாண்மையின்கீழ் இருந்தபோதுதான் மற்றொரு பிரித்தானியத் தொல்லியலரான அலெக்குசாந்தர் இரியா, ஆதிச்சநல்லூர் அகழ்வாழ்வுகளை மேற்கொண்டார்என்று உரோ.மு.ஆ.நிறுவனத்தின் நிறுவுநர்-அறங்காவலர் சுந்தர் கணேசன் கூறுகிறார்.

மாநிலத் தொல்லியல் துறையும் உரோ.மு.ஆ.நிறுவனமும் சனவரி 5-7, 2025இல் சென்னையில் பன்னாட்டு சிந்துவெளி மாநாடுநடத்துகின்றன.

2018இல் உரோ.மு.ஆ.நிறுவனம் இந்திய ஆட்சிப்பணி அலுவலராக இருந்து தொல்லியல் துறை ஆராய்ச்சியாளரான ஆர்.பாலகிருட்டினனின் சொற்பொழிவு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது. அவர், கழக(சங்க) இலக்கியங்களைப் பயனபடுத்திப் பானை வழியில் விளக்கமளித்தார். தென்தமிழகத்தில் அகழ்வாய்வில் கிடைத்த பானைகளில் சிந்துவெளி எழுத்துகள் பொறிக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர். சிந்துவெளி நாகரிகமும் வைகைக்கரை நாகரிகமும் சிந்துவெளி எழுத்துகளைப் பயன்படுத்தியுள்ளதால் இரண்டிற்கும் தொடர்புள்ளதாக அவர் கருத்துரைத்தார். இக்கருதுகோள், சிந்துவெளி நாகரிகம் முடிகின்ற இடமும் கழகஇலக்கியங்கள் தொடங்குகின்ற இடமும் ஒன்றே என்று முன்மொழியும் அவருடைய தலைசிறந்த படைப்பான ஒரு நாகரிகத்தின் வழிச்செலவுஎன்ற நூலைப் பாலகிருட்டினன் வெளியிடச் செய்தது.

தமிழினத்தின் (திராவிட இனத்தின் எனப் படியுங்கள்) தனிச்சிறப்பு அடையாளக் கூறுகளில் ஒன்றாகக் கழக(சங்க) இலக்கியங்களைப் போற்றும் கட்சியான தி.மு.க.விற்குப் பாலகிருட்டினனின் கருதுகோள் உடனடியாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாயிற்று.


வடக்கு தெற்குப் பிரிவு வளர்ந்துவரும் நிலையில், சிந்துவெளி கண்டுபிடிப்பு நூற்றாண்டைக் கொண்டாடத் தி.மு.க. ஏன் தேர்ந்தெடுத்தது என்று தெளிவாகத்தெரிகிறது. அக்கட்சி, ஒரு பிரித்தானிய அலுவலரைப் பெருமைப்படுத்துவது இது முதன்முறை இல்லை. 2000த்தில் முதலமைச்சர் கருணாநிதி முல்லைப்பெரியாறு அணை கட்டித்தந்த பிரித்தானியப் பொறியியலரான பென்னிகுயிக்குக்கு ஒரு சிலையை நிறுவினார். 2022இல் மாநில அரசு பென்னிகுயிக்குக்கு பிரித்தன் நாட்டில் ஒரு சிலை நிறுவும் திட்டத்தை அறிவித்தது. இப்போது, மார்சலுக்கு ஒரு முழுஉருவச்சிலை நிறுவத் தீர்மானித்துள்ளது.

மாநிலத் தொல்லியல் துறையின் தொடர் கண்டுபிடிப்புகளும் பா.ச.க.தலைமையிலுள்ள ஒன்றியஅரசின் மிரட்டல் அழுத்தமும் திராவிட மாதிரிமுழக்கமிடலும் சேர்ந்து தமிழக மக்கள்தொகையின் பெரும்பகுதியின் கவனத்தை இதுவரை கண்டுகொள்ளப்படாதிருந்த தொல்லியலை நோக்கித் திருப்பியது. தென்தமிழ்நாட்டில் கழக(சங்க)க்கால மரபு சார்ந்ததாக அறிந்துள்ள மதுரை, தஞ்சை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி பகுதிகளின் அகழ்வாய்வுகள் தொல்லியலாய்வு, கல்வெட்டாய்வு ஆர்வலர் குழுக்கள் பலவற்றைத் தோற்றுவித்தன.

தொல்லியல் இடங்கள் பற்றி விழிப்பூட்டவும் அவற்றைப் பாதுகாத்துப் பேணவும் இக் குழுக்கள் கிழமையிறுதி நாட்களில் தொல்லியலாய்வு, கல்வெட்டாய்வுகளில் சான்றிதழ், பட்டயப் படிப்புகளை இணையவழி, நேர்முகவழிகளில் நடத்துகின்றன. இவை மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகத்திலும் தமிழ்நாட்டு அரசு பயிற்சி நிறுவனங்களான தமிழ்நாடு தொல்லியல் அருங்காட்சியியல் பயிற்சி நிறுவனங்களிலும் அளிக்கப்படும் வழக்கமான படிப்புகள் அல்லாதவை. குடிமக்கள் அறிவியல்’ – என்பதைப் போன்று குடிமக்கள் தொல்லியல்’’ என்பதற்குத் துணைதரும் ஒரு புதிய அடித்தளம் உருவாக்கும் வகையில், சில குழுக்கள் தொல்லியல் இடங்களுக்கு மரபறி நடைச்செலவுகளுக்கும் கூட ஏற்பாடு செய்கின்றன.

இத்தகைய ஆர்வலர்கள் புதிய பொருள்களைக் கண்டுபிடிக்க உதவுகிறார்கள். ஆனால், அவர்கள் அடையாளம் காண்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடாது. எந்தக் கருதுகோளையும் மெய்ப்பிக்கத் தகுந்த தொழிலறிந்தார் அணுகுமுறை தேவைஎன்று பெயர்தெரிவிக்க விரும்பாத ஓய்வுபெற்ற ஒரு தொல்லியல் பேராசிரியர் கூறுகின்றார்.

(புதுவை தூயதமிழ் மாத இதழ் நாகிய 'நற்றமிழ்'  (செபுதம்பர்- அக்குதோபர் 2024) இதழில் வந்தது)

‘தமிழ்நாடு’ – பெயருக்காக உயிரீகம் செய்த சங்கரலிங்கனார்!

 

தமிழ்நாடு’ – பெயருக்காக உயிரீகம் செய்த சங்கரலிங்கனார்!





ஒரு நோக்கத்திற்காக, ஒரு தன்னலமற்ற வேண்டுதலை முன்வைத்து நீண்டநாள்கள் உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த ஈடற்ற ஈகத்திற்குரியவர் சங்கரலிங்கம் என்னும் கண்டன் சங்கரலிங்கம் ஆவார். தாம் சார்ந்திருந்த அரசியல்கட்சி தம் வேண்டுகைக்குச் செவிசாய்க்காததால் அக்கட்சி ஆட்சியிலிருந்தபோதே தம் தன்னலமற்ற நோக்கத்திற்காக உண்மையான அறவழிப் போராட்டத்தில் உயிரீகம் செய்த போராளி சங்கரலிங்கனார் ஆவார்.

விருதுநகரை அடுத்த சிற்றூர் மண்மலைமேட்டில் 26-1-1895இல் சங்கரலிங்கம் பிறந்தார். தந்தை பெரிய கருப்பசாமி; தாயார் வள்ளியம்மை. தலைவர் காமராசர் படித்த பள்ளியிலேயே சங்கரலிங்கமும் எட்டாம் வகுப்புவரை படித்தார். பேராயக் கட்சியின்பால் ஈடுபாடு கொண்டிருந்தார். இவர் மாதர் கடமைஎன்னும் நூலை எழுதி 1920 ஆம் ஆண்டு வெளியிட்டார். அவரும் அவர் குடும்பத்தினரும் கைந்நூலாடையையே உடுத்துவதென 1922இல் முடிவு செய்து அவ்வாறே அதனைப் பின்பற்றினர்.

அப்போது கைந்நூல் வாரியத்தலைவராக இருந்த பெரியார் ஈ.வெ.இரா. அவர்களை விருதுநகருக்கு 1924 ஆம் ஆண்டு அழைத்து, த.இரத்தினசாமி நாடார் நினைவு படிப்பகம் சார்பாகச் சங்கரலிங்கனார் பொதுக் கூட்டம் நடத்தினார்.


கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் விடுதலைப் போராட்ட உரையினைக் கேட்டு விடுதலை உணர்வு பெற்றார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1908ஆம் ஆண்டு முதல் கலந்து கொண்டார். பலமுறை சிறைப்படுத்தப்பட்டார்.

காந்தியடிகளை 16.02.1925இல் பம்பாயில் சந்தித்தார். 1927 ஆம் ஆண்டு காந்தியடிகள் விருதுநகர் வந்தபோது சங்கரலிங்கனார் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தார். காந்தியார் தங்கிய சிற்றூர்க்கு நகராட்சியின் ஒப்புதல் பெற்றுக் காந்தி தங்கல்என்று பெயர் சூட்டினார். காந்தியாரின் உப்புப் போராட்டம் தொடர்பாக 1930 ஆம் ஆண்டு தண்டிச்செலவு தொடங்கியபோது சங்கரலிங்கனார் மூன்று நாட்கள் காந்தியடிகளுடன் நடைச்செலவு மேற்கொண்டார். அண்ணல்காந்தி கைந்நூல் ஆடைக்கடைஎன்னும் கடையில் சிலகாலம் பணியாற்றினார்.

காந்தியார் தலைமையில் 1930-31 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உண்மையுறுதி ஆற்றல் (சத்தியாக்கிரகப்) போராட்டக் காலத்தில், சங்கரலிங்கனார் சென்னை, திருச்செங்கோடு, ஈரோடு, காரைக்குடி ஆகிய நகரங்களுக்குச் சென்று தலைவர்களைச் சந்தித்துப் போராட்டத்திற்குத் துணை திரட்டினார். திருச்சி உண்மையுறுதி ஆற்றல்(சத்தியாக்கிரகப்) போராட்ட வழக்கில் சங்கரலிங்கனார்க்கு ஆறு மாத‌ங்கள் கடுங்காவல் தண்டனை தந்தனர். கரூர் வழக்கில் ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனையும், உருவா 50 தண்டத்தொகை கட்டவும் தீர்ப்பளித்தனர். சங்கரலிங்கனார் திருச்சி நடுவண் சிறையில் அடைக்கப்பட்டார்.

சங்கரலிங்கனார் அவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகளையும், அவர் சேமித்து வைத்திருந்த உருவா நான்காயிரத்தையும் விருதுநகர் சத்திரிய மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 1952 ஆம் ஆண்டு நன்கொடையாகக் கொடுத்தார். அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டித் தொகையைக் கொண்டு, பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு நண்பகல் உணவாக உப்பில்லாக் கஞ்சி ஊற்ற வேண்டும் என்ற ஒரு திட்டத்தை ஏற்படுத்தினார். தலைவர் காமராசர் பின்னர்க் கொண்டு வந்த நண்பகல் உணவுத் திட்டத்திற்கு இது முன்னோடியாகும்!


ஆந்திரமாநிலப் பிரிவினையை வலியுறுத்தி சென்னையில் பொட்டி சீராமலு 1952 திசம்பர் 15 அன்று உயிர்துறந்தார். இதையடுத்து ஆந்திர மாநிலம் உருவெடுத்தது. சங்கரலிங்கனாருக்கு இது ஒரு தூண்டுதலை ஏற்படுத்தியது. ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகம் தமிழ்நாடு பெயர் சூட்டுவதற்காகப் போராட்டம் நடத்தியதும் அவருக்குத் தூண்டுதலாயிற்று..

1956 சூலை 27ஆம் நாள் மெட்ராசு இசுடேட்என்ற பெயரைத் தமிழ்நாடு என்று மாற்றவேண்டும் என்ற தலையாய வேண்டுகையுடன் மேலும் பதினொரு வேண்டுகைகளை முன்வைத்துச் சாகும்வரை உண்ணாநோன்பைச் சூலக்கரை மேட்டில் தனியாளாகத் தொடங்கினார். அப்போது அந்த இடம் விருதுநகரிலிருந்து தூரத்தில் ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதியாக இருந்ததால், பொதுவுடைமைக் கட்சியாரின் பரிந்துரையின்படி விருதுநகர் தேசபந்துதிடலில் உண்ணாநோன்பைத் தொடங்கினார்.

சங்கரலிங்கனார் முன்வைத்த ஏனைய பதினொரு வேண்டுகைகளாவன: மொழிவழி மாநிலம் அமைக்கவேண்டும், தொடர்வண்டியில் அனைவரும் ஒரேவகுப்பில் சமாகச்செல்ல நடவடிக்கை வேண்டும், வெளிநாட்டு விருந்தினர்க்கு காய்கறி உணவே தரவேண்டும்; அவர்களுக்காக நாட்டியம் முதலானவற்றை நிறுத்தவேண்டும், அரசுப்பணியாளர் அனைவரும் கைந்நூலாடையையே அணியவேண்டும், அரசியல் தலைவர்கள் பகட்டுப்புனைவின்றி எளிமையாக வாழவேண்டும், தேர்தல் முறையில் மாறுதல் வேண்டும், தொழிற்கல்வி அளிக்கவேண்டும், நாடு முழுமைக்கும் மதுவிலக்கு வேண்டும், நடுவணரசு இந்தியை மட்டும் அலுவல் மொழியாகப் பயன்டுத்தக்கூடாது, உழவர்க்கு விளைச்சலில் 60 விழுக்காடு குத்தகை தர வேண்டும், பொது இடங்களில் அருவருப்பாக நடப்பதைத் தடுக்கவேண்டும் ஆகியனவாகும்.

சங்கரலிங்கனாரின் உண்ணாநோன்பை நிறுத்த ம.பொ.சி, அண்ணாதுரை, காமராசர், சீவானந்தம் முதலியோர் வலியுறுத்தினர். சங்கரலிங்கனார் மறுத்துவிட்டார். விருதுநகருக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசிய அண்ணா, இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் வேண்டுகையை ஏற்கமாட்டார்களே என்று கூறினார். நான்


இறந்தபிறகாவது என் வேண்டுகையை ஏற்பார்களா என்று பார்ப்போம் என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.

சங்கரலிங்கனார் இறப்பதற்கு இரு நாள்களுக்கு முன் நான் ஒருவேளை இறக்கநேரிட்டால், என் உடலை அருள்கூர்ந்து பேராயக்கட்சிக்காரர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். எனக்கு உறுதுணையாக இருந்த பொதுவுடைமைக்கட்சிக்காரர்களிடம் ஒப்படையுங்கள்என்று நாளிதழ் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

அக்குதோபர் 10ஆம் நாள் சங்கரலிங்கனார் நிலை மோசமாகியது. அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கும் அவர் மருத்துவம் செய்துகொள்ள ஒப்பவில்லை. 13.10.1956 அன்று அந்த ஈடற்ற ஈகியின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது. மதுரை எருசுகின் மருத்துவமனையி லிருந்த சங்கரலிங்கனாரின் உடலைப் பொதுவுடமைக் கட்சியின் கே. டி. கே. தங்கமணியும்   கே.பி.சானகி யம்மாவும் பெற்றனர். தமிழர்நலம் கருதி உயிர் நீத்த ஈகியின் உடல் மதுரைத் தத்தனேரி சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

ஈகி சங்கரலிங்கனாரின் மறைவுச்செய்தி மாணவர்களை மீளாத் துயரில் ஆழ்த்தியது. சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உண்ணாநோன்பு இருந்தனர். 76 நிமிடங்கள் கல்லூரி வளாகத்தில் அமைதி காத்து வீரவணக்கம் செலுத்தினர். சென்னை மாநகர அனைத்துக்கல்லூரி மாணவர்கள் 15.10.1956இல் வேலைநிறுத்தம் செய்து ஈகி சங்கரலிங்கனாருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாடு 25.12.1960 அன்று ம.பொ.சி. தலைமையில் கோகலே மண்டபத்தில் நடைபெற்றது. மாநாட்டில் பெயர்மாற்றப் போராட்டத்திற்கு அறிஞர்கள் முழுமையாகத் துணை நல்கினார். மாணவர்களும், பொது மக்களும் பல்வேறுவகைப் போராட்டங்களில் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கில் சிறை புகுந்தனர்.

1961இல் சென்னைச் சட்டமன்றத்தில் மெட்ராசு இசுடேட்டுக்குத் தமிழ்நாடுஎன்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அன்று காமராசர் தலைமையில்


இயங்கிய அரசு, அரசின் ஆவணங்கள் தமிழில் அளிக்கப்படும்போது  தமிழ்நாடு அரசுஎன்று குறிப்பிடப்படும் என்றும், ஆங்கில மொழியில் பயன்படுத்தும்போது மெட்ராசு இசுடேட்டுஎன்ற பெயரே தொடர்ந்து கையாளப்படும் என்றும் இரட்டை நிலையை அறிவித்தது. அதுவே தொடர்ந்து நடைமுறையிலும் இருந்தது.

உண்ணாநோன்பால் உடல்நலிந்து சங்கரலிங்கனார் இறந்ததை, அன்றைய பேராயக் கட்சிக்காரர்கள் எள்ளல் செய்து எழுதினார்கள். அது மட்டுமின்றி, 16.03.1962அன்று அறிஞர் அண்ணா மாநிலங்களவையில் மெட்ராசு இசுடேட்டுக்குத் தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றத் தீர்மானத்தை கொண்டு வந்தபோது, ஒரு தமிழ்நாட்டு உறுப்பினர் எழுந்து, தமிழ்நாடு என்று பெயரை மாற்றுவதால் பயன் என்ன என்று கோவத்துடன் கேட்டு இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்குத், தமிழ்நாடு என்று பெயர் வைப்பது அதன் அடையாளத்தை குறிக்கும் செயல். பெயர்மாற்றத்தின் மூலம் உணர்வு அடிப்படையிலான மனநிறைவு கிட்டும் என்பதுதான் உண்மையான பயன். ஒரு தொன்மையான வரலாற்றுப்பெயர் மீட்டெடுக்கப்பட்டு, மக்கள் மனத்தில் பதியவைக்கப்படுவதுதான் பயன். என்று விடையளித்த அண்ணா, தமிழ்நாட்டுக்கு மெட்ராசு இசுடேட்டுஎன்ற பெயர்தான் இருக்கும் என்றால், கேரளத்துக்கு திருவனந்தபுரம், ஆந்திரத்துக்கு ஐதராபாத், குசராத்துக்கு ஆமதாபாத் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னபோது, அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. ஆனால், இறுதியில் அந்தத் தீர்மானத்தைப் பேராயக்கட்சி உறுப்பினர்கள் தோற்கடித்தார்கள்.

1967-ம் ஆண்டு அறிஞர் அண்ணா முதல்-அமைச்சரானதும், 1968 சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு பெயர்மாற்றத் தீர்மானம் ஒருமனத்துடன் நிறைவேற்றப் பட்டது. 1968 நவம்பர் மாதம் தமிழ்நாடு பெயர்மாற்றச் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. 1968 திசம்பர் 1ஆம் நாள் தமிழ்நாடு பெயர்மாற்றம் விழாவாகக் கொண்டாடப்பட்டது 1969 சனவரி 14ஆம் நாள் பொங்கல்முதல் அதிகார அடிப்படையில் மெட்ராசு இசுடேட்டுதமிழ்நாடு ஆனது. சங்கரலிங்கனாரின் ஈகத்தை அறிஞர் அண்ணாவும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் போற்றினர்.


2012இல் அப்போதைய முதல்வர் செயலலிதா ஆட்சியில் சங்கரலிங்கனார் நினைவு மணிமண்டம் அமைக்க உருவா.76 இலக்கம் ஒதுக்கினார். சங்கரலிங்கனாரின் நினைவைப் போற்றும் வகையில் விருதுநகர் கல்லூரிச்சாலையில் நகராட்சிப் பூங்கா அருகில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாடு என்று தமிழர்வாழும் மாநிலத்திற்குப் பெயர் வேண்டும் என்பதற்காக ஒரு தமிழர் போராடி உயிரீகம் செய்தார். அறிஞர் அண்ணாவும் மற்றவர்களும் முயன்று தமிழ்நாடு என்னும் பெயரை மீட்டனர். ஆனால் இன்றைய இரங்கத்தக்க நிலை என்னவெனில், தமிழ்நாட்டரசு திராவிடத்தை விடாமல் பற்றித் தொங்கிக்கொண்டிருக்கிறது.

பக்கத்திலுள்ள கருநாடகமாநில முதலமைச்சர், எங்களைச் சேர்த்து யாராவது திராவிடம், திராவிடர் என்று சொன்னால் செருப்பால் அடிப்போம் என்று கூறினார், அது செவிடன் காதில் ஊதிய சங்காகியது. ஆறிஞர் அண்ணா இன்று இருந்தால், தெலுங்கரும், கன்னடரும், மலையாளத்தாரும் பிரிந்துபோனபின் நாம் தமிழர் என்று சொல்வதே சரியானதும் பொருத்தமானதுமாக இருக்கும் என்று தெளிவாக்கியிருப்பார்.

இன்னும் மோசமான நிலை. திராவிட மாடல்அரசு என்று ஆங்கிலத்தைக் கலந்துத் திரும்பதிரும்பக் கூறும் போதெல்லாம் காது வலிகண்டுவிடுகிறது. திராவிட மாதிரி அரசு என்றாவது கூறித் தொலைக்கலாமன்றோ? நயன்மன்றமும்கூட திராவிடமாடலைத் தமிழில் சொல்ல இடித்துரைத்ததே! தமிழறிஞர் பலரும் பலமுறை வலியுறுத்தினார்களே! தமிழ்நாட்டரசும் தமிழ்மக்களும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர் - அக்குதோபர் 2024 இதழில் வந்தது)

தமிழ்ஆட்சிமொழிச் சட்டம் -இன்றைய நிலை!

 தமிழ்ஆட்சிமொழிச் சட்டம் -இன்றைய நிலை!

ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியே அம் மாநில ஆட்சிமொழியாக்கப்பட வேண்டும் என்பதே முறையாகும். மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களுடைய ஆட்சி என்பர். மக்கள்மொழி ஒன்றாகவும், அவர்களை ஆளும் ஆட்சியின்மொழி வேறொன்றாகவும் அமையுமாயின், மக்களுக்குத் தொடர்பின்றிப் போகிறது. அதனால், அம் மக்களின் மொழியும் பண்பாடும் கலையும் நாகரிகமும் பொருளியலும் உலகஅரங்கில் அவர்களைப்பற்றிய குமுகாய மதிப்பீடுகளும் தாழ்ந்துபோய்விடுகின்றன.

தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி உள்ளது. ஒரு மொழி ஆட்சிமொழி ஆவதற்கு, அது தாய்மொழி என்னும் தகுதிக்குமேல் வேறு எந்தத் தகுதியும் பெற்றிருக்கத் தேவையில்லைஎன்பது அறிஞர் அண்ணா அவர்களின் கருத்து.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுக் கூறு 345இல் வகை செய்யப்பட்டவாறு, தமிழ்நாட்டில் தமிழ்மொழிதான் ஆட்சிமொழி என்று 7.12.1956இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 19-01-1957 ஆம் நாளன்று ஆளுநரின் இசைவினை இச் சட்டம் பெற்றது. 27-01-1957ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.

தமிழ் ஆட்சிமொழிச்சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கென ஆட்சிமொழித் திட்ட நிறைவேற்றக் குழுஒன்று 1957ஆம் ஆண்டு அரசால் அமைக்கப்பட்டது. 1968ஆம் ஆண்டில் இக்குழு மாற்றப்பட்டு, ‘தமிழ் வளர்ச்சி இயக்ககம்என்னும் தனித்துறை ஒன்றை அரசு உருவாக்கியது. தமிழ் வளர்ச்சித்துறையின் அலுவலர்கள், அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் தமிழ் ஆளுகைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அணுப்ப வேண்டும்.

ஆய்வு செய்யப்படும் அலுவலகத்தில், பேணப்பட்டு வரும் பதிவேடுகள், கோப்புகள், காலமுறை அறிக்கைகள், மடல் போக்குவரத்து, அலுவலகஆணைகள், செயல்முறை ஆணைகள், கருத்துருக்கள், பணிச்செலவு (duty travel) நிரல், நாட்குறி்ப்பு, பெயர்ப்பலகை, செய்திப்பலகைகள், பயன்பாட்டில் உள்ள இழுவை முத்திரைகள் போன்ற பலவற்றின் விளக்கங்களையும் அளிக்கவேண்டும். ஆய்வு செய்யப்பட்ட அலுவலகத் தலைவர் தேவைப்படும் இடங்களில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தல் செய்யப்படவேண்டும்.

அரசு அலுவலர்களும் பணியாளர்களும் ஆட்சிமொழித் திட்டம் தொடர்பாக நன்கு அறிந்துகொண்டு செயல்பட வேண்டும்


என்பதற்காக மாவட்டந்தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கமும், கருத்தரங்கமும் நடத்தப் பெறுகின்றன. ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடத்துவதற்கு ரூ.30,000 உம் கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூ.20,000 உம் அரசுப்பணம் ஒதுக்கீடு செய்கின்றனர். அரசு அலுவலகங்களில் மட்டுமே பயன்படுத்தக் கூடிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்களைத் தொகுத்து ஆட்சிச் சொல்லகராதி என்ற நூலினைத் உருவாக்கி அச்சிட்டு அனைத்து அலுவலகங்களுக்கும் வழங்குகின்றனர். அரசின் பல்வேறு துறைகளுக்கு உரியனவாக 75 சிறப்புச் சொல்லகராதிகள் வெளியிடப்பட்டன.

1957இல் திரு. வெங்கடேசுவரன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பெற்ற ஆட்சிமொழிக்குழு பல்வேறு துறைகளில் வழக்கிலுள்ள பொதுவான சொற்களுக்குரிய தமிழாக்கங்களைத் தொகுத்து ஆட்சிச்சொல் அகராதியின் முதல் பதிப்பை 1957ஆம் ஆண்டு வெளியிட்டது. அரசு அலுவலகங்களில் பயன்படுத்தும் ஏறத்தாழ 9000 மேலாண்மை ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இவ்வகராதி தருகிறது. 1957ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவ்வகராதி இதுவரை நான்கு பதிப்புகளாக வெளி வந்துள்ளது. நான்காம் பதிப்பின் மறு பதிப்பும் வெளிவந்துள்ளது.

17,161 சொற்கள் அடங்கிய ஆட்சிச்சொல் அகராதி 2015ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றது. 

ஆட்சிச் சொல்லகராதி உருவாக்கத்திற்கு முன்பும், பின்பும் பாவேந்தர் பாரதிதாசன், மறைமலையடிகளார், தமிழ்த்தென்றல் திரு.வி.க., மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் முதலானோர் தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புகளும், புதுச் சொல்லாக்கங்களும் உருவாகும் வகையில் பல சொற்களைப் படைத்தளித்து ஊக்கமூட்டினர்.

ஆட்சிமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த பிறப்பித்த ஆணைகள் சிலவற்றைக் கீழே காண்க:

1. அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தமிழில் மட்டுமே ஒப்பமிட வேண்டும் என்ற அரசு ஆணை எண். 1134, நாள்.26.01.1978.

2. அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்ற அரசு ஆணை எண்.2618, நாள்.30.01.1981.

3. பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும் என்ற அரசு நிலையாணை எண்.1993, நாள்.28.06.1971

4. உயர்நயன்மன்றம், உச்சநயன்மன்றம், நடுவணரசு, பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தி்ல் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே ஆட்சிமொழித்


திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் மடல்போக்குவரத்துகள் தமிழிலேயே அமைய வேண்டும் என்ற அரசு கல்வித்துறை நிலையாணை எண்.432, நாள்.31.10.1986.

5. அலுவலக நடைமுறையில் திருவள்ளுவராண்டினைக் குறிப்பிட வேண்டும் என்ற பணியாளர் மேலாண்மைச் சீர்திருத்தத்துறை அரசாணை நிலை எண்.91, நாள்.03.02.1981.

6. அலுவலகவரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்ற அரசு கல்வித்துறை நிலையாணை எண். 1875, நாள்.19.10.1978.

7. அலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ்எழுத்துக்களின் அளவு இடம்பெற வேண்டுவது தொடர்பாகத் தமிழ் வளர்ச்சி, பண்பாட்டுத்துறை அரசாணை நிலை எண். 349, நாள்,14.10.1987.

இவை போன்ற பல அரசாணைகளை அரசு பிறப்பித்தது.

முதலமைச்சராக இருந்த அறிஞர் அண்ணா 1968ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதைக் குறிப்பிட்டுப் பேசும்போது, இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழ் ஆட்சிமொழியாகவும், பயிற்றுமொழியாகவும் ஆக்கப்படுமென உறுதியளித்தார். அதன்படி 1973ஆம் ஆண்டிலேயே ஆட்சிமொழிச் சட்டம் முழுமையாகவும் அனைத்து நிலைகளிலும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கவேண்டும். கல்விநிலையங்கள் அனைத்திலும் தமிழ் பயிற்றுமொழி யாக்கப்பட்டிருக்க வேண்டும்.

அண்ணா அவர்கள் மறைவுக்குப்பிறகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பயிற்றுமொழித் திட்டத்திற்கென ஆணைகள் பல பிறப்பிக்கப்பட்டிருந்தும் தமிழ் ஆட்சிமொழிச் செயலாக்கம் எதிர்பார்த்தஅளவுக்கு வளர்ச்சி எல்லையை எட்டவேயில்லை என்பதுதான் உண்மை நிலை. தமிழ்வாழ்க என்னும் வாசகம் மட்டுமே அரசுத்துறைகளில் காணப்படுகிறது. ஆனால் அரசாணைகள் சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. தமிழ்வளர்ச்சித்துறையோ பிறரோ இவற்றில் கருத்தூன்றல் இல்லாதவராகவே உள்ளனர். இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் இதே நிலையே தொடர்கிறது.

தமிழ் பயிற்றுமொழி என்னும் நிலை இன்னும் கனவாக, எட்டாக்கனியாகவே உள்ளது! இன்னும் இழிநிலையாக ஆங்கிலவழிக் கல்விக்கூடங்கள் புற்றீசல்களாகப் பெருகி வல்லாளுமைநிலை பெற்றுள்ளன.

அடிப்படை நிலையிலுள்ள சார்நிலை அலுவலகங்களில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் முன்னேற்றமிருந்தாலும் மேலே செல்லசெல்ல செயலாக்கமின்மை தெளிவாகத் தெரிகிறது. ஆட்சிமொழித் திட்டத்தின் செயலாக்கத்தை அரசாணைகளாலும்,


அறிவுரைகளாலும் மட்டுமே நிறைவேறிட முடியாது. இதில் ஆட்சியாளரின் ஈடுபாடும் பற்றார்வமும் தொடர்ந்த கண்காணிப்பும் கண்டிப்பாகத் தேவை; இன்றேல் பயனில்லா நிலையே தொடரும்.

தமிழ்ஆட்சிமொழித் திட்ட செயலாக்கம் அரசு அலுவலகங்களுடன் மட்டும் அமைந்துவிடுவது அன்று. அது தெருக்களிலும், பெயர்ப்பலகைகளிலும் செய்தித்தாள்கள், இதழ்கள், ஒளிஊடகங்கள் முதலியவற்றிலும், கல்விநிலைய பயிற்று மொழியிலும், மக்கள் பேச்சிலும் எழுத்திலும் செயலாக்கப்பட வேண்டியதாகும். ஆனால், இவற்றைப் பற்றித் தமிழ்நாட்டரசும், புதுவைஅரசும் மக்களும் கருத்தூன்றலில்லாமல் இருக்கின்ற நிலை இரங்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் கடைகள், வணிகநிறுவனங்கள், தொழிலகங்கள் தங்கள் நிறுவனப்பெயர்களை, பெயர்ப் பலகைகளில் தமிழில் எழுத வேண்டுமென அரசாணை வெளியிட்டதோடு சரி, தொடர்நடவடிக்கை இல்லை. ஆங்கிலத்தில் மட்டுமே எழுதியவற்றையும், இக்கால் சில இடங்களில் இந்தியில் மட்டுமே எழுதியுள்ள பலகைகளையும் பார்க்கும் அவலநிலை உள்ளது. தமிழ் அறவே புறக்கணிக்கப்படுகிறது.

தமிழ் பயிற்றுமொழி பற்றித் தமிழ்நாட்டரசும் புதுவை அரசும் கொஞ்சமும் பொருட்படுத்துவனவாகத் தெரியவில்லை. அரசுப்பள்ளிகளும் நாளுக்கு நாள் ஆங்கிலவழிப் பள்ளிகளாகி வருகின்ற அவலநிலை! புதுவையில் தமிழ்வழிப்பள்ளிகள் அறவே ஒழிக்கப்பட்டுவிட்டன.

தமிழர்களின் பெருமை, தமிழின் மேன்மை, தமிழ்ப்பண்பாட்டுக் காப்பு, தமிழரின் உயர்வு, தமிழரின் உரிமை முதலியவற்றைப் பேணிக் காக்க இன்றியமையாத் தேவை தமிழைப் பயிற்றுமொழியாக்கவேண்டியதாகும்.

ஆட்சிமொழிச் சட்டத்தின் நிலை, இவ்வாறு தமிழ்நாட்டிலும் புதுவையிலும் இரங்கத்தக்க நிலையிலுள்ளது. பலமுறை பலரும் தமிழ்நாட்டரசையும் புதுவை அரசுசையும் வலியுறுத்திய பின்பும் மாற்றமில்லா நிலையே தொடர்கின்றது. ஆட்சிக்கு வரும் எந்தக்கட்சியும் தமிழ் ஆட்சிமொழி செயலாக்கத்தைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

இந் நிலை தொடர்ந்தால் தமிழரிடமே தமிழ் வழக்கொழிந்து போகும். தமிழர் தம் அடையாளமிழந்து வெவ்வேறு கலவை இனத்தவராகி விடுவர் என்ற உண்மை கொஞ்சமும் மிகையாகக் கூறப்படுவதில்லை என்பதை ஆட்சியாளரும் பிறரும் உணர்ந்து இனியேனும் செயற்படவேண்டும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும். - குறள் 466.

(புதுவை 'நற்றமிழ்' செபுதம்பர் - அக்குதோபர் 2024 இநழில் வந்தது)