‘தினமணி’யில் ‘வேத’மயக்கம்!
சில நாள்களுக்கு முன்னர்
‘தினமணி’ நாளிதழில்,
‘வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்’ என்ற தலைப்பிலும் ‘வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி’என்ற தலைப்பிலும் இரண்டு கட்டுரைகள் ஒன்றன்பின் ஒன்றாக இடம்பெற்றிருந்தன. இரண்டையும் ஓர் அம்மையார் எழுதியிருந்தார்.
இந்நாவலந்தீவில் குமரிக்கண்டத்திலிருந்து கடல்கோள்களால் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கியே மாந்தர் இடம் பெயர்ந்தனர். முக்கழக(முச்சங்க) வரலாறு தமிழர் வரலாற்றின் பகுதியாகும். ஒருகாலத்தில் நாவலந்தீவு முழுமையும் தமிழர்களே இருந்தனர். தமிழே அவர்கள் மொழியாக இருந்தது. ஆரியப் பார்ப்பனரும் பிற இனத்தாரும் வடக்குவழி வந்தபின், மொழிக் கலப்பால் தமிழ் திரிந்து வெவ்வேறு மொழிகள் தோன்றின. மக்களினக் கலப்பால் வெவ்வேறு இனங்களாக மக்கள் பிரிந்தனர். அதன்வழி வெவ்வேறு இனங்களும் தோன்றிப் பரவின என்ற செய்தி வரலாற்றறிஞர் கூறும் உண்மையாகும்.
மருதனிளநாகனார் எழுதிய அகம் 77ஆம் பாடலில்,
பொறிகண் டழிக்கும் ஆவண மாக்களின்…”
– எனவரும்
இரண்டடிகள் கூறும் பொருள்
“கயிற்றால் கட்டப்பட்ட குடத்திலுள்ள ஓலைகளை ஆவணமாக்கள் அக்குடத்தின் மேலிட்ட முத்திரையை ஆராய்ந்து சரிபார்த்துப் பின் அவ்வோலைகளைக் குடத்திலின்றும் வெளியில் எடுப்பர்”
என்பதாகும். இச்செய்தியின் தொடர்புடைய ஒரு விளக்கத்தைக் கீழே காண்போம்:
“பழங்காலத்தில் ஊர்களிலும் நகரங்களிலும் குடவோலை முறையில் ஊர், நகர அவைகளில் மக்கள் சார்பாளர்களையும் பல்வேறு துறைகளுக்கான வாரியப் பொறுப்பாளர்களையும் அமர்த்தத் தேர்தல்கள் நடைபெற்றன. இதனைக் கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மருதன் இளநாகனார் அகம். 77ஆம் பாடல் உறுதிப்படுத்துகின்றது” என்று அறிஞர் கணியன்பாலன் தம் ‘பழம்பெரும் தமிழ்ச்சமூகம்’ நூலில் (பக்கம்.91) குறிப்பிடுகின்றார்.
இதுமட்டுமன்று,
தமிழகத்தில் இருந்த அரசனின் ஆட்சியதிகாரம் பொதுமக்கள் அவைகளால் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டு இருந்தது என கி.மு.நான்காம் நூற்றாண்டு கிரேக்கத் தூதுவரான மெகத்தனிசு
குறிப்பிடுவதாக சவகர்லால் நேரு கூறுகிறார் என்றும் கணியன்பாலனின் நூல் கூறுகிறது.
வேதக் கூற்றுகளே இந்திய நாட்டின் கருத்துகள் என்றும் ‘வேதங்கள்’, ‘உபநிடதங்கள்’, ‘மனு’ நூல் முதலியவையே இந்திய நாட்டின் பழந்தமிழ் அறநூல்கள் என்றும் வந்தேறி ஆரியப்பார்ப்பனியம் அடிப்படை ஏதுமின்றி அடாவடியாக எழுதி வருவது கடுமையான கண்டிப்புக்குரியதாகும்.
வேதங்களில் முந்தியதும் முதலாவதுமாகக் கூறப்படுவதுமான இருக்கு வேதம் ஆக்கப்பட்ட காலம் சரியாக நிறுவப்படவில்லை. இது எழுதாக் கிளவியாக, வாய்மொழிச் செய்யுள்களாக காலந்தோறும் மாற்றங்களுற்றும் சேர்க்கைகள் பெற்றும் வந்திருக்கின்றது. இவற்றின் தொன்மை பற்றி இட்டுக்கட்டிய கதைகளும் போலிப் பெருமை கூறிக் கொள்ளும் கதைகளுமே பரவலாக்கப்பட்டிருக்கின்றன.
இருக்குவேதம் உள்ளிட்ட நான்கு வேதங்களிலும் தமிழிய பண்பாட்டுக் கூறுகளும், அறிவுக்கூறுகளும் தமிழிலிருந்து பெயர்த்து எழுதப்பட்டிருக்கின்றன என்றும் அவற்றை வடக்கே உள்ள நாடுகளில் செய்திருக்க வேண்டுமென்றும் அவையும் கி.மு.2இலிருந்து கி.பி.2க்கும் இடையில்தான் தொகுத்திருக்க முடியும் என்றும் (பொழிலன்: வேதவெறி இந்தியா - பக்.71) அறிஞர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், கட்டுரை எழுதிய அம்மையார், இருக்கு வேதமே உலகின் முதல்நூல் என்று பெருமைபேசிக் கொள்கின்றார்.
அறிஞர் அசுக்கோ பருபோலோ ‘சிந்து சமவெளி எழுத்துகளின் படிப்பு’என்ற தம் நூலில், “இருக்குவேதம் திராவிட(தமிழிய)த்திலிருந்து பெருவாரியான சொற்களை மட்டும் கொண்டிருக்கவில்லை. 1. பண்பாட்டுச் சொற்கள் 2. பால்வேறுபாடுகள் 3. மேற்கோள்கள் 4. சொல்லும் ஒலி ஒத்த சொல் உருவாக்கங்கள் ஆகியவற்றுடன் உறவுடையதாக இருப்பதோடு அவை ஈரானிய – ஆரிய மொழிகளுக்கிடையிலான உறவுடையதாக இல்லாமல் இருப்பதையும் அறிய வேண்டும்” என்று கூறுகிறார்.
‘தினமணி’க் கட்டுரையாளர் முழுப்பூசுணையைச் சோற்றில் மறைக்க முயல்கின்றார்.
படிப்போரை ‘வேத’மயக்குறுத்த முனைகின்றார்.
இனியும் உண்மையை மறைக்க முடியாது.
இந்தியத் துணைக்கண்ட வரலாறு ஆரியப் பார்ப்பனிய வரலாறில்லை.
அது தெற்கிலிருந்து
(குமரிக்கண்டத்திலிருந்து)
எழுதப்படவேண்டிய வரலாறு என்பதை உண்மையான வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே,
‘தினமணி’யும் கட்டுரை எழுதியவரும் இனியும் மக்களை
‘வேத’ மயக்கத்திலாழ்த்த முயல்வது வீண்வேலையாகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
புதுவையிலிருந்து வரும் ‘நற்றமிழ்’ 15-06-2024 இதழில் வந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------