சனி, 22 ஜனவரி, 2011

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக்கலப்பு

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு
30-01-2011 ஞாயிறு
காலை 9.00 முதல் மாலை 1.00 மணிவரை
வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்)புதுச்சேரி
................................................
பங்கேற்று கிரந்தக் கலப்பு எதிர்ப்பைப் பதிவு செய்ய இருப்பவர்கள்

பேராசிரியர் திரு. ந. தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர், (ஓய்வு) தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள்
திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
தமிழ் எழுத்து பாதுகாப்பியக்கம்
திரு. இராம.கி அவர்கள் பொறியாளர்
பொதுக்குழு உறுப்பினர்உத்தமம் INFITT), சென்னை
.................
பேராசிரியர் நா.இளங்கோ அவர்கள்,
காஞ்சிமா முனிவர் பட்ட மேற்படிப்பு மையம் புதுச்சேரி
திரு கோ.சுகுமாரன்
செயலர்மக்கள் உரிமைக்கூட்டமைப்பு - பொதுக்குழு உறுப்பினர்உத்தமம், (INFITT).
திரு. இரா.சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர்புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
திரு ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
விரிவுரையாளர், பாரதியார் பல்கலைக்கூடம்
திரு.ஏ. வெங்கடேசு அவர்கள்,
திரட்டிwww.thiratti.com
திரு க. அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,
திரு ம. இளங்கோ, அவர்கள்
செய்தித் தொடர்பாளர் பெரியார் திராவிடர்கழகம் புதுச்சேரி
.....................
திருமா,பூங்குன்றன் அவர்கள்,
தென்மொழிசென்னை.
திரு.கோ.திருநாவுக்கரசு அவர்கள்
தாளாண்மை உழவர் இயக்கம்
திருஇரா.அழகிரி அவர்கள்
தமிழர் தேசிய இயக்கம் புதுச்சேரி
திரு. ந.மு தமிழ்மணி அவர்கள்
அமைப்பாளர் செந்தமிழர் இயக்கம்,புதுச்சேரிதிரு. க.தமிழமல்லன் அவர்கள்
தலைவர்தனித் தமிழ் இயக்கம் புதுச்சேரி,
திருதமிழ நம்பி அவர்கள்
விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு
திரு, சீனு,அரிமாப்பாண்டியன் அவர்கள்,
செயலர்தனித்தமிழ்க் கழகமபுதுச்சேரி,

திருதமிழ்நெஞ்சன்
 புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம், புதுச்சேரி,
திருபராங்குசம், புதுச்சேரி,
திரு. ப. திருநாவுக்கரசு அவர்கள்
தலைவர்நண்பர்கள் தோட்டம்புதுச்சேரி
தொடர்புக்கு:
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
20,4- வது தெரு விரிவாக்கம், அன்னைதெரசா நகர் 
மூலக்குளம் புதுச்சேரி -605010.பேசி: +91 94431 05825
மின்னஞ்சல்rajasugumaran@gmail.comஇணையம் : www.pudhuvaitamilbloggers.org
வலைப்பூ : www.puduvaibloggers.blogspot.com,

வெள்ளி, 14 ஜனவரி, 2011

வீரவணக்கம்!

விழுப்புரம் வி.ப.இளங்கோவனார்க்கு
வீரவணக்கம்!


இவரியா ரென்குவீ ராயி னிவரே
தவச்சிறி தாறுந் தனிநல முன்னா
ஓங்குறு தூய்தமி ழுணர்வின ரென்றும்
நீங்கா நல்லிசை நெடுந்தொண் டாற்றிய
பெறற்கரும் பெரியார் பெருந்தொண் டரெனும்
சிறப்புறு தகைசால் செவ்வியர் பரந்த
ஆழ்கட லன்ன அமைதியர் ஆன்றநற்
காழ்சேர் கொள்கைக் கடுந்தொண் டாற்றியார்!
அழுக்குடை மழியா அடர்தா டிமுகம்
விழும இயக்க வி.ப. இளங்கோ!

மிதிவண் டிக்கடை; மேவிடு நினைப்பெலா
மெதிலுமெப் போது மெந்தமிழ் தமிழர்
உயர்வுற லன்றி யொன்றுவே றில்லை!

நயநற் கருத்தை நாடொறும் பலகையில்
சாலையோ ரத்தே சலிப்பிலா தெழுதிப்
பாலை மனத்தும் பசுமை கிளர்த்தவர்!

புதுவைவா னொலியில் புரையுறுந் தமிழ்கண்
டிதுவிது தவறென எடுத்தவர்க் குரைத்தவர்!

ஈழக் கொடும்போ ரிழிவுகண் டதிர்ந்தே
வேழமென் றேழ்ந்தவர்! வெய்தென் றேபல
அறவழிப் போரில் அழிசிறை ஏகியார்!

திறநற் றமிழில் தெளிவுறத் தொடர்ந்து
கொடுத்த படியே தொடுத்தார் பாடல்!

எடுப்புற எழுதி இளம்பா வலர்க்களி
பரிசுமுந் நூறு பாங்கினில் பெற்றவர்!

சரிதவ றுணர்த்தித் தமிழோ சைக்கிவர்
எழுதிய மடல்கள் இவருணர் வுரைக்கும்!

பழுதிலாத் தொண்டால் பைந்தமிழ் காத்தவர்!
இருங்கடல் வையத் தருங்கட னாற்றிய
ஒருமறத் தமிழர் ஓய்வுற் றாரே!

தேரலர் எதிர்த்தே தீந்தமிழ் காத்த
வீரருக் கெங்கள் விறலுறு
வீரவ ணக்கம்! வீரவ ணக்கமே!
---------------------------------------------------------------

திங்கள், 3 ஜனவரி, 2011

நெடுநல்வாடை அறிமுகமும் ஆய்வும் – அறுசீர் மண்டிலங்களில்!

நினைக்க இனிக்கும் நெடுநல்வாடை!
                            
(நான்குகாய் மா - தேமா வாய்பாட்டில் அமைந்த அறுசீர் மண்டிலங்கள்)


கழக(சங்க) இலக்கியமும் நெடுநல்வாடையும்

சீரார்ந்த செம்மொழியாம் செந்தமிழின் தமிழர்தம்
     சிறப்பைச் சொல்லும்
ஈரார்ந்த சான்றுகளாய் இலங்குவன நம்கழக
     இலக்கி யங்கள்!
கூரார்ந்த தொன்மையுறு கொழுஞ்செழுமை நாகரிகம்
     கூறா நிற்கும்!
வேரார்ந்த சொன்மலியும் வியன்றமிழின் நுட்பமெலாம்
     விளக்கிச் சொல்லும்!

பத்துப்பாட் டுடனெட்டுத் தொகைக்கழக இலக்கியமாம்
     பத்துப் பாட்டில்
முத்தேழாம் பாட்டாகும் முழுத்திறத்தில் நக்கீரர்
     மொழிந்த திந்த
எத்துணையும் சுவைகுன்றா தேந்துநெடு நல்வாடை
     ஏற்ற பேரும்
ஒத்தவகை கருத்தறியின் உணர்ந்துசுவைத் தேத்திடலாம்
     ஓர்ந்து நோக்கி!

பெயர்ப் பொருத்தம்

தலைவன்றன் பிரிவாற்றாத் தலைவிக்கோ நெடுந்துயரைத்
     தந்த வாடை!
உலைவறியாத் தலைவனுக்கோ உறுவெற்றி ஞாட்பளிக்கும்
     ஒருநல் வாடை!
கலைவறியா நிகழ்நடக்கும் காலமதும் வாடையெனக்
     கருத்தாய்த் தேர்ந்தே
நிலைபொருந்த பெயரிட்டார் நெடுநல்வா டையெனவே
     நேர்த்தி சேர்த்தார்!  

பாட்டும் உரையும்

சுவையான நிகழ்வுகளைச் சொல்லழகில் கலைநுட்பில்
     சொல்வ தோடே
சவையேற்றும் நச்சருரை தந்தகருத் தெழுப்பியதோர்
     தக்கத் தாலே
சுவைகூடும் இப்பாடல் சொலலகமா புறப்பொருளா?
     சொற்போ ராலே!
இவையிருக்க, சுருக்கமுற இப்பாடல் இயம்புவதை
     இனிகாண் போமே!

பாட்டு கூறும் நிகழ்வுகள்

கூதிர்கா லத்தரசன் கொண்டதுணை தனைப்பிரிந்தான்
     கொடும்போர் செய்ய!
கோதில்தூய் தலைவியுறும் கொடுந்துயரை செவிலித்தாய்
     குறைக்க எண்ணி
ஊதிகைநெல் தூவிதொழு துருகிமனம் கொற்றவையை
     உதவக் கேட்பாள்!
மாதிவளின் துயர்தீரே! மன்னன்வா கைசூடி
     வரச்செய் என்றே!


கூதிர்காலமும் ஊரும் உயிர்களும்

ஒருநூற்று எண்பதுடன் ஓரெட்டின் அடிப்பாட்டில்
     உரைக்கும் செய்தி
பருகிடவே ஒவ்வொன்றாய்ப் பார்த்திடுவோம் சுருக்கமுற
     பாரில் மாரி
பெருவெள்ளம்! கோவலரும் பிறவுயிரும் நடுங்குகுளிர்
     பீழை கூறி
இருங்களியும் ஊர்செழிப்பும் ஈரநீர்ப்பூ விரிசிரிப்பும்
     எழில்வி ளக்கும்!

ஓங்கியவீ டமைந்ததெரு ஓராற்றைப் போல்கிடக்கும்
     ஊர்வ ளத்தில்!
வீங்குதிணி தோள்வலியர் விலங்கன்னார் முறுக்குடலர்
     வீழ்ம ழைக்கே
ஆங்கஞ்சா தலைந்திடுவர் அளிமூசு கட்குடியில்
     அறுவை தொங்க!
பாங்காக விளக்கேற்றிப் பனிமுல்லை நெல்தூவிப்
       பணிவர் பெண்டிர்!

கூதிர்கால நிலைப்பால் விளைவுகள்

மனையுறையும் ஆண்புறவு மகிழ்பெடையோ டுணாத்தேட
     மறந்து மாழ்கி
வினையின்றி நின்றவலி மிகவாகக் கால்மாற்றும்
     விந்தைக் காட்சி!
புனைமாலை தவிர்பெண்டிர் பூச்செருக நறுங்கூந்தற்
     புகைவ ளர்ப்பார்!
முனைகொக்கி விசிறிதொங்கும் மூண்டிருக்கும் சிலந்திவலை
     மொழிதல் நுட்பம்!

தென்றலடி சாளரத்தின் திண்கதவங் குளிர்க்கஞ்சித்
திறவாத் தாழில்!
கன்னலுள தண்ணீரைக் கருதியுணார் குளிர்காயக்
     கடுகிச் செல்வார்!
குன்றியுள யாழிற்பண் கூட்டுதற்கே நரம்பைமுலைக்
     கொம்மை வைப்பார்!
புன்கூர்ந்த காதலர்கள் புலம்பிடுவர் பிரிதுன்பில்
     போகாக் கூதிர்!

அரசியின் மனை வகுத்த முறை

கதிரவனின் வெப்பொளியில் காலிரண்டு குடகுணக்கில்
     கணக்கில் நட்டே
அதிலிரண்டு கோல்குறுக்காய் அளவிட்டு வைத்துப்பின்
     அவற்றின் நீழல்
பொதிந்தொன்றன் மேலொன்றாய்ப் பொருந்தியொரு கோடாகும்
     போதில் கண்டே
மதிபுலவர் நூலறிந்தார் மயக்கின்றிக் கயிறிட்டே
     மனைவ குப்பார்!

வாயிலும் முன்றிலும் வழங்கொலிகளும்

புகுவாயில் யானையமர் மறவன்கைக் கொடியுயர்த்திப்
     போகும் வண்ணம்
மிகுமலையில் திறந்தன்ன மேலுயர நெடுவாயில்
     வினைவல் லாரால்
தகுவுயரத் திருக்கதவம் தாழமைத்துப் பிடிபொருத்தித்
     தக்க வாறு
தெகுளுறவெண் கடுகொடுநெய் தேர்ந்தப்பி நெடுநிலையும்
     திகழா நிற்கும்!

மணல்ஞெமிரும் முன்றிலிலே மானன்னம் துள்ளிமிக
     மகிழ்வி லாடும்!
உணவாம்புல் தெவிட்டபரி ஒலிகனைப்பும் நீர்வீழும்
     ஒலியும் மஞ்ஞை
முணங்கின்றி அகவொலியும் மூண்டுமலை எதிரொலியாய்
     முழக்கம் கேட்கும்!
இணங்கலுறப் பலவொலியும் இவ்வாறே அரண்மனையில்
     எழுச்சி கொள்ளும்!

அரசியின் நல்லில்லம்

பாவையகல் நெய்யூற்றிப் பருத்திரியும் நேரெரியப்
பார்த்துத் தூண்டித்
தேவையுறு பள்ளிதொறும் தேங்கிருளை நீக்கியொளி
     சேர்த்தும் காவல்
கோவையலால் பிறஆண்கள் குறுகியலா வரையிருக்கும்
     குன்றென் இல்லில்!
பூவைமிகக் கொள்கொடிகள் பொலிவான்வில் குன்றின்மேல்
     போல்வி ளங்கும்!

வெள்ளியெனச் சுதைசாந்து வீசவொளி பூசிமிக
     விளங்க, தூண்கள்
வள்ளுரக்காழ் கருநிறத்தில் வாய்த்திருக்க நெடுஞ்சுவரோ
     வார்ப்புச் செம்பில்
உள்ளியவே லைப்பாட்டில் உயர்வாகச் செய்ததைப்போல்
     ஓங்கி நிற்கும்!
கொள்ளையழ கோவியப்பூக் கொடிகளுடன் கருப்பெயர்தாங்
     கும்நல் லில்லம்!

கட்டிலும் படுக்கையும்

நாற்பத்தின் அகவையுடை நால்வாய்ப்போர்க் களம்பட்டு
     நல்குங் கொம்பை
ஆற்றலுற கைவல்லான் அழகாகக் காற்குடமாய்
     ஆக்கிக் கட்டில்
ஏற்றவகை இலையுருவை இடையமைத்து நாற்புறமும்
     இனிய முத்து
நூற்சரமாய்த் தொங்குமதன் மேல்நோக்கின் தகட்டிலுரு
     நுட்பம் தோன்றும்!

கான்முல்லை சேர்ந்தமலர் கவினுறவே வேறறிய
     கட்டில் இட்டார்!
கோன்கோதை தாம்படுக்கக் குழையிணைவில் படுக்கைகளைக்
     கூட்டி வைத்தார்!
மேன்மென்மை புணரன்னம் மெலவுதிர்த்தத் தூவியணை
     மேலே இட்டார்!
தேன்றவசக் கஞ்சியுடன் திகழ்சலவை மடியாடை
     தேர்ந்து வைத்தார்!

அரசியின் நிலை

ஆரமில்லாத் தனித்தாலி அழுத்துமுலை உலர்கூந்தல்
     ஐயன் நீங்க
சீரழகி நுதல்உலற செறிகுழையும் அகற்றியதால்
     சிறிதே தொங்கும்
ஆரழகு வடுச்செவியே! அவள்முன்கை பொன்வளையும்
     நீங்கி ஆங்கே
நேரல்லாத் தொடிசங்கில் நெளிமெலிதாய் துய்யுடையும்
     நீக்கா மாசில்!

தீட்டாத ஓவியமாய்த் திகழ்வளவள் தோழியர்க்கோ
     தேமல் மேனி
ஊட்டத்தோள் வேயொப்ப உறுத்துமுலை மரையொக்க
     ஒடுங்கி டையாம்!
நாட்டமுடன் தோழியரும் நல்லடியை வருடிடுவர்
     நன்மை சொல்வர்!
கூட்டமுறு செவிலியரும் குறைதேற்றத் துணைவனின்னே
     குறுகும் என்பார்!

ஆற்றாதாள் இன்சொலினும் அதையேற்கா தகங்கலங்கி
     அமைதி அற்றாள்!
மேற்கட்டின் ஓவியத்தில் விண்ணிலவும் மீன்சகடும்
     மேவி நீங்கா
வீற்றமெண்ணி நெட்டுயிர்த்தாள் விழிவடிநீர் செவ்விரலால்
     மெலத்து டைத்தாள்!
மாற்றியவள் படர்தீர மன்னற்கு விறல்தந்தே
     மறல்மு டிக்க!

பாசறையில் அரசன்

ஒளிப்பட்டப் போர்யானை ஒற்றைக்கை நிலம்புரள
     ஒறுத்த வீரர்
ஒளிறுபகை போழ்ந்திடவே உற்றபுண்கண் டவர்வீரம்
     உயர்த்திப் போற்ற
நளிர்வாடை அகற்சுடரை நனியசைக்க வேம்பார்த்த
     நல்வேல் தாங்கி
மிளிர்பொருநன் முன்சென்றே விழுப்புண்ணர் குறித்திறைக்கு
     விளக்கிச் சொல்வான்!

மணியணிந்த கடிவாளம் மாட்டுகிற சேணம்வேய்
     மாத்தாள் பாய்மா
துணிவோடே பாசறையின் தொய்யலதை எங்கெங்கும்
     துளித்துச் செல்ல
அணிவெண்கொற் றக்குடைக்கீழ் அந்துகிலை இடப்பக்கம்
     அணைத்துக் கொண்டே
பிணித்தவாள் தோள்தொங்கும் பெருமறவன் சுவலில்கை
     பெய்து செல்வான்!

நள்ளிரவும் பள்ளிகொளா நல்வேந்தன் சிலரோடே
     நண்ணி யாங்கே
வள்வலியர் விழுப்புண்ணார் மனம்மகிழக் கண்டவரை
     வாழ்த்தி ஊக்கி
நள்ளார்தம் மோடுபொரும் நசைகொள்பா சறைத்தொழிலாம்
      நவில்கின றாரே!
தெள்ளலுற நக்கீரர் தேர்ந்துரைத்த பாட்டிலிவை
     தெரிவித் தாரே!

அகமா புறமா?

அகப்பொருளி லக்கணத்தில் அன்றேதொல் காப்பியனார்
     அறியத் தந்தார்
மிகத்தெளிவாய் மக்களியற் பெயர்சுட்டி எவ்விடத்தும்
     விளியா ரென்றே!
அகமறிந்த நக்கீரர் அதைமீறா தெழுதிடினும்
     அறிவர் நச்சர்
தகவாய்ந்தே தருமுரையில் தலைவனியற் பெயரறிந்து
     தருகின் றாரே!

வீரர்படைத் தலைவனின்வேல் வேம்புதலை யாத்த'தென
     விளம்ப லாலே
கீரருரைப் படிவேலில் வேப்பம்பூத் தாருளதால்
     வேந்தன் மாறன்!
வீரமிகப் பலரோடு முரணியனென் றுரைத்ததனால்                                                             விளங்கும் மன்னன்
கூரறிவு நெடுஞ்செழியன்  கொடுந்தாக்கில் எண்மரென
     கொண்ட செய்தி

இன்னவகை ஆய்வுரையால் இயற்பெயரைக் கண்டுரைத்தே
     இந்தப் பாட்டு
சொன்னவகை புறப்பாட்டே சுட்டியந்த வேப்பந்தார்
     சொன்ன தென்றார்!
இன்னுமதன் திணைவாகை என்றுரைத்தே வெற்றிதனை
     இயம்பி யுள்ளார்!
பின்னுமதன் துறைவாடைப் பாசறையா மதுபாலைப்
     புறமென் றாரே!

புலவர்தம் உச்சிகொளும் நச்சருரை இவ்வாறு
     புகன்ற போது
பலராய்வு வேம்பெனவே பகன்றததன் தழையைத்தான்
     படலை அன்றென்
றிலகலுற சான்றுடனே எடுத்துரைத்தே இதுஅகமே
     என்று சொல்லும்!
நிலவுமிரு ஆய்வுகளும் நெடுநல்வா டைச்சிறப்பை
     நிலைக்கச் செய்யும்!

அகப்புற ஒப்பீடு

நெடுஞ்செழியன் பாடியுளான் நிகழ்போரில் வெற்றிகொள
     நினைத்தி ருப்பான்!
நெடும்பிரிவில் மன்னவனை நினைத்தரசி கலங்கிடுவாள்
     நெஞ்சம் நொய்வாள்!
படுக்கையுறு விழுப்புண்ணர் பார்க்கஅர சன்செல்வான்
     படர்த ணிக்க!
கடுந்துன்பில் தலைவியவள் கனிவுரைக்கும் ஆற்றாதாள்
     கலக்கம் மாறாள்!

செந்தமிழின் இலக்கியங்கள் செழியன்பு செருமறத்தின்
     சீர்மை சொல்லும்!
சிந்தையுறு நுண்ணுட்பச் செய்திகளைத் தெரிவிக்கும்
     தெருட்சி மாட்சி!
இந்தநெடு நல்வாடை இன்னன்பும் மறச்சிறப்பும்
     எடுப்பாய்க் கூறித்
தந்தவகை அன்புமறம் தமிழினகப் புறச்சிறப்பைத்
     தகவி ளக்கும்!

பாட்டு நலம்

பாட்டுநலம் அனைத்தையுமே பாராட்டல் எளிதன்று
     பலநி கழ்வை
ஏட்டினிலே இயல்பின்பம் எள்ளளவும் மாறாதே
     எழுதி யுள்ளார்!
காட்டும்வா னியற்சிறப்பும் கணியறிவும் ஓவியமும்
     கனியத் தந்தே
தீட்டியுள அழகியற்கை தேன்சுவையாய் உயிரியக்கம்
     திகட்டா இன்பம்!

சிறப்புரைக்கும் மருவினிய கோலநெடு நல்வாடை
     செப்பக் கூற்று!
திறஞ்சான்ற பொருள்வளமும் தேர்ந்தெடுத்த உவமைகளும்
     செஞ்சொற் சீரும்
மறஞ்சான்ற மன்னவனின் மதித்தொழுகும் பொதுவுணர்வும்
     வழங்கும் பாட்டு
விறலார்ந்த நாகரிகம் விளங்கவுரை நக்கீரர்
     வெற்றிப் பாட்டாம்!

------------------------------------------------------------------- 
   

செவ்வாய், 28 டிசம்பர், 2010

'தென்மொழி' மா.பூங்குன்றன் கட்டுரை

தமிழ் ஒருங்குகுறிச் செயற்பாட்டில் புகுத்தப்படும் புதிய சிக்கல்கள்
கணினிப் பயன்பாட்டில் தமிழ் இடம் பெறுவது இக்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மிகவும் தேவையானது. அம்முயற்சியின் தொடக்கத்திலேயே நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இப்போது நேர்ந்துள்ளது.
     இக்காலம்வரை தமிழின் தொல் இலக்கியங்களைக் காத்துவந்தோம். அவ் இலக்கியங்களே தமிழைக் காத்து வந்துள்ளன.
     அறிவியல் தொழில் நுட்ப முன்னேற்றக் காலத்தில் தமிழ் அடுத்த படிநிலைக்குத் தன்னை அணியப்படுத்திக் கொண்டுவிட்டது. சென்ற நூற்றாண்டுக்கு முன்னமேயே பல்துறைத் தமிழ் அறிஞர்களும் தோன்றி அப்போக்குகளில் தமிழை வளப்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதனால் தமிழும் வளப்பட்டது. தொழில்நுட்ப அறிவும் இம் மண்ணில் வளப்படத் தொடங்கியது. அனைத்துத்துறையின் நல்கையும் தமிழுக்குக்கிட்டியது.

எழுத்துச்சீர்த்திருத்தம்
     அந்நேரத்தில் தமிழ் நெடுங்கணக்கில் உள்ள சில எழுத்துகளின் வடிவமாற்றத்தை அதன் சீர்மை நோக்கில் பெரியார், எழுத்துச் சீர்திருத்தம் என நடைமுறைப் படுத்தினார். அவருக்குப்பின் அவர் நினைவாக அதைத்தமிழ் நாட்டு அரசு ஏற்றுப் பொது நடைமுறைப்படுத்தியது.
     எழுத்துச்சீர்திருத்தம் என்ற பெயரில் அந் நடைமுறைப்படுத்தமே தமிழ்வளர்ச்சி போலவும், தமிழ் வளர்ச்சிக்குத் தமிழ் எழுத்துகளே தடை என்பது போலவும் தமிழ் எழுத்துகளைச் சீர்மை செய்கிறேன் என்ற பெயரில் தலைக்குத் தலை பலரும் புகுந்து தமிழ் எழுத்து வரிசைகளைப் பலவகையில் விரித்தும் சுருக்கியும், மொத்தத்தில் தமிழ் நெடுங்கணக்கைச் சிதைப்பதான பணிகளைச் செய்ய முற்பட்டனர். உண்மையில் பெரியார் செய்த சில எழுத்துகளின் வடிவமாற்றம் எந்த வகையிலும் தமிழின் நெடுங்கணக்கைச் சிதைக்கவில்லை.
     அரசியல் சாய்கால் பெற்ற சிலர் அவர்களின் எழுத்துச்சிதைப்புக் கண்டுபிடிப்புகளை நடைமுறைப்படுத்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
     அண்மையில் தமிழக அரசு நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிலேயேகூட அவ்வாறு எழுத்துச் சீர்திருத்தம் என்றதான ஒருவரின் கண்டுபிடிப்பு நடைமுறைப் படுத்தப்பட்டுவிடுமோ என்று தமிழ்நாட்டு அறிஞர் களெல்லாம் எதிர்க்க அணியப்படுத்திக் கொண்டிருந்தனர். நல்ல வேளையாக எதிர்க்க வேண்டிய நிலை நடைபெறவில்லை.

உலக மொழிகளில் எழுத்தமைப்புகள்
     உலக மொழிகளின் எழுத்துகள் சிலவகைப்பட்டன. சீனம், சப்பான், கொரியா போன்ற மொழிகளில் சொற்களுக்கே எழுத்து உண்டு. இதைத் தவிர்த்து ஒலி யெழுத்து (Phonetic letter) அசையெழுத்து (Syllabic letter)இருவகை எழுத்துகளாக உலகமொழி எழுத்துகளைப் பிரிக்கலாம்.
     அகரமுதல் னகர இறுவாய் முப்பது எழுத்துகள் என்ற தமிழ் எழுத்துகள் ஒலி யெழுத்து (Phonetic letter) வகையைச் சார்ந்தது. ஆங்கிலத்தில் 26 எழுத்துகளும் ஒலியெழுத்துகள்தாம். இந்த ஒலி யெழுத்துகளே மொழிக்குப் போதுமானவை.
   
  நாம் நம் ஏந்துகளுக்காக உயிர், மெய் யெழுத்துகளைக் கொண்டுள்ளோம். இவை அசையெழுத்துகள் (Syllabic letter)இவை அனைத்தையும் உள்ளடக்கி நெடுங்கணக்கு என்ற பட்டியல் அமைப்பு நாம் ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.

நெடுங்கணக்கு
     தமிழின் இந்த எழுத்தமைவுமுறை ஓர் உயர்ந்தமுறை. தமிழில் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த எழுத்தமைவுத் தொகுதியான நெடுங்கணக்கு தமிழுக்கு ஒரு வேலியாக இருந்து தமிழைக் காத்து வருகிறது.
     இதுபோன்றே ஆங்கிலத்தில் உள்ள 26 ஒலியெழுத்துகளுக்கு ஒரு வரிசை முறை ஒழுங்கைக்கூட அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. உயிர்மெய் பாகுபாடுகூட அவர்கள் ஒழுங்குபடுத்தவில்லை. அதற்குமேலும் இந்த வடிவத்திற்கு இந்த ஒலி என்று வரையறைகூட அவர்களிடம் சரியாக இருப்பதில்லை. இருப்பினும் அது இன்றைக்கு உலகமொழி. இந்த ஒலிக்கு ஆங்கிலத்தில் எழுத்து இல்லையே என்று யாரும் கவலைப்பட்டுப் புதியதாக ஓரெழுத்தைச் சேர்த்துக் கொண்டுவிட முடியாது. ஆங்கிலத்தை யார் எழுதினாலும் 26 எழுத்துகளில்தான் எழுத வேண்டும். எழுத்தைச் சீர்திருத்தப்போகிறேன் என்று குறுக்குத்தனமாகச் செய்யும் எதிரிகள் அங்கு உள்ளேயும் இல்லை; வெளியிலும் இல்லை.
     அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலம் வளர்கிறது; அனைத்துத் துறையினரும் ஆங்கிலத்தை வளர்க்கின்றனர்; அனைத்து மொழியினரும் ஆங்கிலத்தை வளர்க்கின்றனர்.
     நெடுங்கணக்கு அமைப்பைக் காப்பதே மொழியையும் காப்பதாகும். மலைக்கு அந்தப்புறம் எழுத்தச்சன் என்றொருவன் தோன்றினான். நெடுங்கணக்கில் வர்க்க எழுத்து நஞ்சைக் கலந்தான். மலையாளமாக ஒருபிரிவு வேறுபட்டுப் போய்விட்டது. இப்போது நம் அறிஞர்களில் சிலரின் திட்டங்களும் நெடுங்கணக்கைச் சிதைப்பனவாகவே உள்ளன.
     இன்றைக்குக் கணினி பரவலாக ஆங்கிலத்தின் பயன்பாட்டில் உள்ளது. ஆங்கிலத்தில் செய்திப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. ஆங்கிலத்தில் சொற் செயலி (word processor), இயல்மொழி சொற்பகுப்பு (Natural language parsing) சொல்லாய்வு, பேச்சொலி உணரி (Speech Recognizer), எழுத்துணரி (Optical Charactor Recognizer), எனப் பல மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுக் கணிப்பொறியில் ஆங்கிலச் செயற்பாடுகள் விரிவாக்கப் பட்டுவிட்டன.
     தமிழில் அச்சுத்துறைக்குத் தேவையான எழுத்துருக்களும், மென்பொருள்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் அவற்றிடை ஒருங்குப்பாடு இல்லை. ஒருவரின் செயல்பாட்டை இன்னொன்று ஏற்கும் நிலையமைவு இல்லை.

கணினித் தமிழ்ப் பயன்பாட்டுக்குக் ஒருங்குகுறி
     இந்த நேரத்தில் அமெரிக்கக் கணினித் தனியார் நிறுவனங்கள் சில ஒன்றிணைந்து கணினி விற்பனை, மென்பொருள் விற்பனையைக் கருத்திற்கொண்டு ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உள்ள பிற பெரிய மொழிகளுக்கும் கணினிப் பயன்பாட்டில் இடம் கொடுக்கும் வண்ணம் ஒருங்கு குறி என்ற அமைப்பைக் கண்டுபிடித்து அறிமுகப் படுத்தியிருந்தனர்.
     அதன் செயலகத்திற்கு ஒருங்குகுறி சேர்க்கையம் (Unicode Consortium) என்ற பெயரளித்து அதில் பல மொழியினரையும் நிறுவனங்களையும் அரசையும் உறுப்பாண்மையராகச் சேர வாய்ப்பளித்திருந்தனர்.
     இது பத்தாண்டுகளுக்கு முன்னமேயே தொடங்கி நடைமுறைக்குப் படிப்படியாகச் செயற்பட்டு வந்ததானாலும் இப்போது அதன் நடைமுறைப்படுத்தம் மிகவும் விரைவுபடத் தொடங்கியுள்ளது எனலாம்.
     அதன்வழி ஆங்கிலத்தில் உள்ள அனைத்துச் செயற்பாடுகளையும்
தமிழிலும் ஆக்கிக் கொள்ளமுடியும். செயலிகள், மென்பொருள்கள் செய்து கொள்வது நம்மைப் பொறுத்தது. இதற்கு முறையான ஏற்பிசைவு இந்திய அரசு கொடுக்க வேண்டும்; தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும். எனினும் ஒருங்குகுறி யமைப்பில் தமிழ் இப்போதே இயங்க வல்லதாக உள்ளது.
     தமிழ்நாடு அரசு இந்த ஒருங்குகுறி சேர்க்கையத்தில் சில ஆண்டுகள் உறுப்பாண்மைப் பெறுவதும் சில ஆண்டுகள் விடுபடுவதுமாக இருந்து வந்துள்ளது. எனவே ஒருங்குகுறி சேர்கையத்தில் நடக்கும் செய்திகள் அவ்வப்போதே தெரிவதற்கு வாய்ப்பில்லாமல் இருந்தது.
     இந்தநிலையில் சங்கர மடத்தைச் சார்ந்த இரமண சர்மா என்பவர் கிரந்த எழுத்தெழுத ஒருங்குகுறியில் சேர்க்க வேண்டும் என்ற வேண்டுகோளை ஒருங்குகுறி சேர்க்கையத்திற்கும் இந்திய அரசுக்கும் 2009 அத்தோபர் மாதத்திலேயே விடுத்திருந்தார்.
கிரந்தம்

     கிரந்தம் ஒரு மொழியன்று. அஃது ஓர் எழுத்து வடிவமுறைமட்டுமே. தமிழகத்தின் வடபகுதியையும் இப்போதுள்ள ஆந்திரத்தில் சில பகுதியையும் இணைத்து ஒரு காலத்தில் அடிமைப்படுத்தி ஆண்டு கொண்டிருந்த பல்லவன் தன் அரசு மொழியாகச் சமற்கிருதத்தைப் பயன்படுத்தினான்.
     அவன் காலத்தில்தான் முதன்முதலாகச் சமற்கிருதம் புகுத்தப்பட்டது. பிராமணர்களுக்கெல்லாம் உயர்மட்ட மதிப்புரவு கொடுக்கப்பட்டது. அவன் காலத்தில் எழுப்பப்பட்ட கோவில்களில் அவன் புகழ்பாடும் செய்திகள் அவன் பிராமணர்களுக்குக் கொடுத்த கொடைச் செய்திகள் கல்வெட்டுகளாகப் பதிக்கச் செய்தான். ஆவணங்கள் எழுதினான். நாலாயிரத்திவ்வியப் பிரபந்த ஈட்டு உரை போன்றவை எழுந்தன.
     அத்தனையும் கிரந்த எழுத்துகளில்தான் உருவாக்கப்பட்டன. கிரந்த எழுத்துகளில் ஒரு மொழிக்குத் தேவையான அனைத்து ஒலிகளையும் எழுதிவிடமுடியாது.

இருமொழி இரண்டுவகை எழுத்துகள்
     அன்றைய நாளில் தமிழ் எழுத்துகளைக் கடன் பெற்றுக்கொண்டு அவை எழுதப்பட்டிருந்தன. அச்சொற்றொடர்கள் முழுவதும் சமற்கிருதத்தில் அமைந்தனவும் அல்ல. இடையில் தமிழ்ச்சொற்கள் பெய்யப்பட்டிருக்கும்.

இருமொழியினருக்கும் பயனில்லை
     அதனால் தமிழ் மக்கள் யாரும் படிக்க இயலாது. கிரந்த எழுத்துகளில் சிலவே தமிழ் எழுத்துகளாக இருக்கும். அப்படியே அதன் ஒலிகளைக் கற்றுக் கொண்டு படித்தாலும் விளங்காது. அவை சமற்கிருத மொழியில் இடையில்தான் சில தமிழ்ச் சொற்கள் மட்டுமே இருப்பதால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது.
     அதேபோல் சமற்கிருதம் அறிந்த சமற்கிருதவாணர்களும் படிக்கமுடியாது. இதன் அனைத்து வரிவடிவ ஒலிகளையும் பின்பற்றிப் படித்தாலும் புரியாது. காரணம் சமற்கிருதச்சொற்களுக்கிடையில் தமிழ்ச்சொற்கள் இருப்பதால் அவர்களுக்கும் புரியாது.
     அவ்வாறு கோளாறு பிடித்த கல்வெட்டுகள் அவை. பொதுமக்களுக்கும் தெரியாது. அறிஞர்களுக்கும் விளங்காது. இருமொழி எழுத்துச்சார்ந்த கோளாறான தொகுப்பே - இக்கோயில் கல்வெட்டுகள், ஆவணங்கள், ஈட்டுரைகள்.
     ஈட்டுரைகளிலும் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தின் மூலம்மே தமிழானதால் அதுவே பொதுமக்களுக்கும் விளங்கும் என்ற நிலைதான்.
     சமற்கிருதம் அரசு மொழியாக மட்டுமே இருந்து அரசின் ஏவலுக்கு ஏற்ப அவர்கள் காலத்தில் எடுப்பித்த கல்வெட்டுகள் அவை. அவற்றில் மொழியமைப்போ முறையோ கிடையாது. மக்கள் சார்ந்தனவுமல்ல. அவர்களின் ஆட்சி வீழ்ந்தபோது அம்முறைகளும் வீழ்ந்துபோனது.

கிரந்தத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு 
     பிற்காலத்தில் இந்த ஈட்டுரைகள் செயலற்றுக் கிடப்பது கண்டு இப்போது சென்னைப் பல்கலைக் கழகத்தில் அவற்றை ஒரு மொழிப்படுத்தினால் ஒருமொழியினராவது செய்திகளையாவது தெரிந்து கொள்ளலாம் என்ற அளவில் மொழிபெயர்ப்பு முயற்சி நடந்தது. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் எழுதிய ஓராயிரமான திருவாய்மொழிக்கான ஈட்டுரைகளை திரு. புருடோத்தமர் (நாயுடு) அவர்களை அமர்த்தி மொழி பெயர்க்க வேண்டியதாயிற்று. அதன் பின்னரே அதன் ஈட்டுரைகளை அறிஞர்களே விளங்கிக் கொள்ள முடிந்தது. ஈட்டுரைகளுக்கே இந்தநிலை யென்றால் கல்வெட்டு களைக் கூறவே தேவையில்லை. இவை இருமொழி; எழுத்துகளின் வகைகளும் இரண்டு.

இரமண சர்மாவின் வேண்டுகோள்
     இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த கிரந்த எழுத்துகளை தமிழ் ஒருங்குகுறி யில் சேர்க்கவேண்டும் என்பதுதான் இரமண சர்மாவின் வேண்டுகோள். இவை இப்போது மக்களுக்குத் தெரிந்த ஜ, ஷ, ஹ, ஸ, க்ஷ என்ற ஐந்தெழுத்துகளுடன் நில்லாமல் தமிழ் எழுத்துகளுக்கு இணையான 26 எழுத்துக்களும் சேர்ந்து மொத்தம் 31 எழுத்துகள் கிரந்த எழுத்துகளாகக் கருதப்படுவன. அந்த 31 எழுத்துகளையும் ஒருங்கு குறியில் இணைக்கவேண்டும் என்று அத்தோபர் 2009- இல் ஒரு வேண்டுகோளை ஒருங்குகுறி சேர்க்கையத்திற்கும் இந்திய அரசிற்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
     அவர் இந்திய அரசுக்கு அனுப்பிய மடல் தமிழ்நாட்டு அரசின் ஒப்புதலுக்காகத் தமிழ் ஒருங்குகுறி என்ற பெயரில் வந்ததால் அது எவ்வாறோ கையொப்பமாகி இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
     இது எப்படியோ தமிழறிஞர்களின் செவிகளுக்குக் கசிந்துவிட்டதால் அவர்கள் விழிப்புற்றுத் தக்கவகையில் அணுகியதால் தமிழக அரசு ஒப்புதல் கொடுத்த கோப்பை நிறுத்தி வைக்குமாறு தமிழக முதல்வர் நடுவணரசுக்குச் செய்தி கொடுத்து அதுவும் இடைநிறுத்தப்பட்டது. செய்தித் தொடர்புத் துறையில் அந்த நேரம் திரு.ஆ. இராசா இருந்ததால் அதை உடனே இடை நிறுத்த வாய்ப்பானது.
     அதுவரை அமைதியாக இருந்த சில அமைப்புகள் இது நிறுத்தப்பட்டவுடன் தம் கூக்குரலை எழுப்பத் தொடங்கின.

‘தினமணி’ இதழின் இருட்டடிப்புக் கட்டுரை
     ‘தினமணி’ செய்தியிதழும் இதைக் கண்டித்து ஓர் ஆசிரியவுரை வெளியிட்டது. தினமணியில் இப்போது பொறுப்பேற்றிருக்கும் திரு. வைத்தியநாதன் பல பொதுநோக்குகளில் அவரின் கருத்துத்துணிவு நமக்கு இசைவாகவும், நம் கருத்தை ஒத்தாகவும் இருந்தது கண்டு, அவர்மீது நல்ல எண்ணங் கொண்டிருந்த நேரத்தில் இந்த ஆசிரியவுரை அவரை வேறுபடுத்திக் காண்பித்தது.
     அவரின் கூற்றுப்படி ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ என்ற ஐந்து கிரந்த எழுத்துகளை மட்டுமே ஒருங்குகுறியில் சேர்ப்பதாகவும் அதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதில் நடைமுறையில் என்ன தவறு ஏற்பட்டுவிடப்போகிறது என்றவாறு அதில் எழுதப்பட்டிருந்தது.
     ‘சமற்கிருதச் சொற்கள் வராமல் தமிழைக் கையாளுவது வரவேற்கத்தக்கது தான். சமற்கிருத ஒலிப்பே இடம்பெறாத தமிழ்ச் சூழலை உருவாக்குவது நல்லதுதான். இதனால் முந்தைய காலத்தில் வெளியிடப் பெற்ற நூல்களைச் செம்பதிப்பாக வெளியிட வேண்டுமானால் அவற்றைத் தவிர்த்து வெளியிடுவது சரியானதாக இருக்குமா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பிச் சிக்கல்களை வேறுபக்கம், திசை திருப்பியிருந்தார்.
     ஆனால் கிரந்த எழுத்துகளை ஒருங்குகுறியில் இணைப்பது தொடர்பான சிக்கல்கள் இவர் கூறுவதுபோல் இல்லாமல் வேறுபக்கம் இருந்தன.
     திரு. இரமண சர்மா வேண்டுதல் மடலில் 26 + 5 கிரந்த எழுத்துகளை ஒருங்குகுறியில் இணைக்கக் கோரியிருந்தார். அதைத் தினமணி ஆசிரியர் காட்டாமல் ஜ, ஷ, ஹ, ஸ, க்ஷ ஆகிய ஐந்தெழுத்துகள் மட்டுமே சேர்க்க வேண்டியதில் சிக்கல் இருப்பது போல் எடுத்துக்காட்டியிருந்தார். மேலும் ஒருங்குகுறியில் தமிழ்ப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இரமண சர்மா கூறவில்லை. பல்லவன் காலத்தில் கல்வெட்டுகளும் ஆவணங்களும் பிறவும் இருந்ததுபோல் நடைமுறையில் இன்றும் தமிழில் அனைத்துக் கிரந்த எழுத்துகளும் பயன்பாட்டில் இருப்பது போலவும், அவை இல்லை யென்றால் தமிழ் இயங்காதது போலவும் எழுதியுள்ளார்.
நாளைக்குப் படைக்கப்படும் உணவில் இன்றே நஞ்சு
     எவ்வாறோ தமிழறிஞர்களாக இருக்கிற பலருக்கும் கணிப்பொறி அறிமுகமாகி இல்லாத நிலையில் - ஒருங்குகுறி பற்றிப் பரவலாகப் செய்திகள் தெரியாதிருக்கும் நிலையில் - இன்றைக்கு அது முழுதுமாகப் பயன்படுத்தம் இல்லாத போது, நாளைக்கு அதன் பயன்பாடு நடைமுறைக்கு வரும் நிலையில் அதில் கிரந்தம் என்ற நஞ்சைக் கலக்க முற்பட்டிருப்பது நமக்குத் தெரியவந்தது.
     நாளைக்குப் படைக்கப்படும் உணவில் இன்றே நஞ்சைக் கலப்பதாக நாம் கருதுகிறோம்.
     தமிழறிஞர்கள் பலருக்குக் கணிப்பொறி ஈடுபாடு ஏற்படாத நிலையில் கணிப்பொறி அறிஞர்கள் தமிழுணர்விருந்தும் தமிழறிஞர்களின் அறிவுக்குப் போதுமான மதிப்பளிக்காத நிலையில் அவர்களுடைய உறவு ஏற்படாமல் இடைவெளி இருந்தது. அந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்டு இரமண சர்மா போன்றவர்கள் தமிழுக்குக் குழிவெட்டுகிறார்களே என்ற உணர்வு மேலிட்டது.

பாவலரேறு தமிழ்க்களத்தில் கலந்துரையாடல்
     எனவே நாம் பாவலரேறு தமிழ்க்களத்தில் தென்மொழி அவையம் சார்பாக தமிழறிஞர்கள், கணிப்பொறி அறிஞர்கள் பலரும் கலந்துகொள்ள ஒருவாய்ப்பு ஏற்படுத்தியவாறு ஒரு கலந்துரையாடல் கூட்டம் 20.11.2010 அன்று கூட்டியிருந்தோம்.
     நாம் அழைப்பு விடுத்தவாறு இதிலேயே பலகாலம் ஈடுபட்டு வந்த, பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர், முனைவர் பொன்னவைக்கோ அவர்களை விளக்கவுரையாற்ற அழைத்திருந்தோம். கணிப்பொறி அறிஞர்களான பொறியாளர் மணிவண்ணன், முனைவர் இராமகி அவர்களும் இணையப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. சானகிராமன், திருக்குறள்மணி இறைக்குருவனார் ஆகியோரை முன்னெடுத்த அரங்கு நிறைந்த கூட்டம் நிரம்பியது. பேராசிரியர் இறையரசன், திரு.இறையெழிலன், தமிழ் எழுத்துக்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.திருவள்ளுவன் ஆகியோர் வந்திருந்தனர். திருவாட்டி தாமரையம்மையார் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் தொடங்கியது.

கிரந்தத் திணிப்புச் சிக்கல்
     ஒருங்குகுறி தொடர்பான அனைத்துச் செய்திகளையும் உத்தமம் நிறுவனப் பொறியாளர் மணிவண்ணன் அழகாக எடுத்துரைத்தார். ஒருங்குகுறியில் கிரந்தத்தைச் சேர்ப்பதால் ஏற்படும் நன்மை தீமை களைத் திரு. மணிவண்ணன், திரு. இராமகி இருவரும் எடுத்துரைத்தனர். அதில் கிரந்தம் சேருவதால், கல்வெட்டுப் பதிவுகளையும் ஆவணங்களையும் படிக்கவும் அதிலிருந்த வரலாற்றைத் தெரிந்து கொள்ளவும் இயலும் என்று தங்கள் நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர்.
     பேரா. சானகிராமன் நன்னூலின் உரையிலுள்ள கிரந்த எழுத்துகளைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக் காட்டினார். தமிழறிஞர் சார்பில் பேரா. இறையரசனும் தமிழ் எழுத்துக் காப்பு இயக்கத்தின் சார்பில் திரு. திருவள்ளுவனும் பேசினர்.
     திரு.பொன்னவைக்கோ இறுதியாகத் தமிழ் ஒருங்குகுறிப் பட்டியலில் கிரந்தம் இடம் பெறக்கூடாது; ஒருவேளை கிரந்தத்திற்கு ஒரு பட்டியல் அமைத்தாலும் அதில் தமிழ் எழுத்துகளைத் துணைக்கு எடுத்துக் கொள்ளலாகாது என்றும் கூறினார்.
     பல்லவன் காலத்தில் நடந்த செய்திகளையும் நமக்குத் தேவையான பிறவற்றையும் தொகுக்க அவர் காலத்து கல்வெட்டுகள் ஆவணங்கள் தேவை அவற்றை நாம் படிக்க வேண்டுமென்றால் ஒருங்குகுறியில் கிரந்த எழுத்துகள் தேவை என்று திரு. மணிவண்ணனும் திரு.இராமகியும் குறிப்பிட்டதை எடுத்துக்காட்டி முனைவர் பொன்னவைக்கோ கூறுகையில், தமிழ் ஒருங்குகுறி யென்பது தமிழைக் கணினியில் பயன்படுத்துவது தொடர்பானது, தமிழின் தொடர்புகளுக்கும் பரிமாற்றத்திற்கும் தமிழ்ச் சொல் பிரிப்பு, செயலி முதலானவற்றை ஆய்வதற்கும் பயன்பாட்டிற்கும் இன்றைய மொழியை இலக்கியத்தில் ஆண்ட சொற்களைப் பயன்படுத்த வேண்டுமே யல்லாமல் பிறமொழி பிறஎழுத்துகள் கலந்த - மக்கள் மொழியல்லாத கல்வெட்டு ஆவணத்திற்குப் பயன்படுத்திய வேற்றுவடிவங்கள் தமிழ் ஒருங்குகுறிப் பட்டியலுள்ளே நுழைக்கத் தேவையில்லை.

பட வடிவம் (PDF)
     வேண்டுமானால் அவற்றைப் படவடிவான (PDF), கோப்புகளில் தொகுத்து வைத்து ஆய்வுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் - என்று தம் கருத்தைப் பதிவு செய்தார்.
     இக் கலந்துரையாடலுக்கிடையிலேயே கல்வெட்டு ஆய்வாளர் திரு.குழந்தை வேலனாரும் வந்துவிட்டார். அவரும் இந்தக் கிரந்த எழுத்துகளைத் தேவையில்லாமல் ஒருங்குகுறியில் இணைக்கவேண்டாம் என்று கருத்துக் கூறினார்.
     அரங்கில் உள்ள அனைவரும் அதற்கு ஒப்புதல் குரல் எழுப்பினர்.
     இறுதியுரையாக ஒருங்கிணைப்பாளராக இருந்து நாம் கூறியதுவும் அதுவே.
     “இக் கலந்துரையாடலின் நோக்கமே தமிழறிஞர்களும் கணினி அறிஞர்களும் ஒன்றுசேர்ந்த முடிவே தமிழுலகத்திற்குப் பயன்படுவதாக இருக்கும். தமிழ் இலக்கணப்படி கணினித்தமிழ் பயன்பாடு அமைய வேண்டும். அதற்குக் கணினி அறிஞர்களின், ஒத்துழைப்பு தேவை. கணினிப் பயன்பாட்டிற்குத்தக்க தமிழ் பயன்பாடும் விரிய வேண்டும். இதற்கு இரண்டு அறிஞர்களின் ஒருங்கிணைப்புத் தேவை. அதன் முதற்படியே இந்தக் கலந்துரையாடல்.
     இதில் கிரந்த எழுத்துகளைச் சேர்க்க வேண்டுமா? இல்லையா? என்பது எதிர்பாராது முரண்பாடு கருத்தாடல் இக்கலந்துரையாடலில் எழுந்தது. இக் கருத்தாடலால் கலந்துரையாடல் மிகவும் பயன் பெற்றது.
     கல்வெட்டுகளில் கிரந்தம் மட்டுமல்லாமல் ‘தமிழி’ என்று அழைக்கப்படும் ‘பிராமி’ என்ற கல்வெட்டுத் தமிழ் எழுத்துவடிவங்களெல்லாம் தமிழ்ப்பயன்பாட்டில் காலத்தால் முந்தியவை.
     இவற்றையெல்லாம் ஒருங்குகுறியில் புகுத்த எண்ணினால் சீனத்திற்கு ஒதுக்கியதுபோல் பன்மடங்கு இடம் தமிழுக்கு ஒதுக்க வேண்டியிருக்கலாம். அது தேவையுமில்லை. முனைவர் பொன்னவைக்கோ கூறியதுபோல் படவடிவில் தொகுத்து ஆராயலாம். கல்வெட்டு எழுத்துப் படிக்கத் தெரிந்தவர்களே தமிழ்நாட்டில் பத்துபேர்கூட இருக்க மாட்டார்கள். அவர்களும் குறைந்து வருகின்றனர். இவற்றைக் கல்வெட்டு ஆய்வு செய்வதற்கு ஒருங்குகுறி தேவையில்லை தேவையானால் உள்மென்பொருள் ஒன்றை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்காக உலகமெல்லாம் பரவியிருக்கும் ஒருங்குகுறி இடத்தை நிரப்பிக்கொள்வது தேவையில்லாத சுமையாகும்.
     அடுத்து ஒரே ஒலியைக்கொண்டு இரு வடிவங்களில் ஒருங்குகுறி அட்டவணை உருவாக்கல் குழப்பம் விளைக்கும். ஒருங்குகுறி அமைப்பினரும் அதை ஏலார்.
     முடிவாக, நாம் பயன்படுத்திவருவதும் தமிழுக்குக் காப்பாக இருப்பதுமான தமிழ் நெடுங்கணக்குப் போன்றதே இப்பொழுது உருவாக்கும் கணினி ஒருங்குகுறிப் பட்டியல். எனவேதான் இதில் கலப்பு நேரா வண்ணம் எச்சரிக்கைக் காட்டுகிறோம்.”
     -என்று ஒருங்கிணைப்புரை கூறி கலந்துரையாடலை முடிவுக்குக் கொண்டுவந்தோம்.
தொடர்ந்து நடவடிக்கை
     இதைத் தொடர்ந்து தென்மொழி அவையத்தையும் ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்க்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் இறையரசன், திரு.திருவள்ளுவன், திரு.இறையெழிலன் 04.12.2010 அன்று முழுநாள் கருத்தரங்கமாகச் சென்னை எழும்பூர்க் கன்னிமாரா நூலகத்தில் உள்ள அண்ணா அரங்கத்தில் கூட்டினோம்.
     கணினியிலும் தமிழிலும் திறன்பெற்ற முன்னாள் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பேரா. தெய்வசுந்தரம், ஆண்டே பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியர்கள் பலரும் அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் ஒளவை நடராசனும், நாடாளுமன்ற உறுப்பினர் தி.கோ.சீ. இளங்கோவன் அவர்களும் கலந்து கொண்டனர்.
     ஒருங்குகுறியில் கிரந்தத்தை நுழைப்பதில் உள்ள சிக்கலே கருத்தரங்கின் தலைப்பாக இருந்ததால் அச் சிக்கல் முழுவதுமாக அலசப்பட்டது. தீர்மானமாக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது.
     இந்த இரு நிகழ்ச்சிகளும், (meenagam.com) இணையதளங்கள் பலவற்றிலும் ஓடு பட நிகழ்ச்சியாகக் காட்டப்பட்டன. ‘கிரந்த எழுத்துகளை அறவே நீக்கத் தமிழறிஞர்கள் கூட்டத்தில் தீர்மானம்’ என்று பல செய்தித்தாள்களில் வெளிவந்தது, பயனுள்ளதாக இருந்தது.

- மாகுன்றன்
தென்மொழி ஆசிரியவுரை
=====
அன்புடையீர்
வணக்கம்
ஒருங்கு குறியில் தமிழுக்கு ஏற்படுத்தப் பட்டுள்ள சிக்கலை நம்
கட்டுரைவழி( thamizhnilam.com இணையதளத்தில்)படித்துவிட்டு, முதல்படியாக
இந்தியச் சட்டத்தின்படி நமக்குள்ள உரிமையைக் கோர இணைப்பு மடலைக்
கையொப்பமிட்டு இந்திய நடுவண் அமைச்சர் முகவரிக்கு அனுப்பவேண்டுகிறேன்.
அன்புடன்
-பூங்குன்றன்
சென்னை
094444 40449
=====================
To,
Hon. Thiru Kapil Sibal
Union Minister for Communications and Information Technology
Electronics Niketan; C.G.O. Complex
New Delhi 110 003
Dear Sir,
Sub: Constitutional Fundamental Right under Article 29(1) of 6 Crore Tamils TO CONSERVE AND PROTECT THEIR LANGUAGE AND SCRIPT –
- Request to scotch diabolic move to sneak into UNICODE Tamil characters, certain non-Tamil and anti-Tamil so called “Grantha” characters.
1. Tamil spoken by more than 6 Cores of citizens of India as Mother Tongue is the oldest living language in India (continuously in use for 3000 years and more) and has a millennia  old alphabet, perfect, excellent and scientific, settled in THOLKAPPIYAM (5th century B.C.or earlier). Its original script evolved in the first millennium B.C. and competent scholars are of the view that the early Tamil script (correctly named Damili by K.S. Krishnan etc and misnamed “Tamil Brahmi” by others) was the mother of the Brahmi script, both southern and northern varieties. Like the scripts of all languages the old Damili script (while adhering to the Tamil alphabet) underwent continuous modifications and the present Tamil script is a settled one since centuries ago, with a few  minor and inconsequential cosmetic changes in the last two centuries.
2. Tamil has never had separate character representions for the varga letters namely the harsh/voiced/voiced and aspirated forms of the stops k, c, t, t and p. Those forms are never phonemic in Tamil. The Tamil does not also have the letters of Sanskrit: j, sh, ksh, s and h. In the middle ages, some bilingual scholars in Tamil and Sanskrit evolved an ersatz script (say, like the Pitman shorthand script) which in addition to the script for the letters of the Tamil alphabet, INCLUDED characters FOR THESE Sanskrit letters also. This ersatz script was called Grantha. (GRANTHA WAS NEVER A LANGUAGE, BUT AN ERSATZ SCRIPT used by bilinguals)
3. This representation submits to the Government of India that under Article 29(1) of the Constitution (extract overleaf) it will be violative of the Fundamental Right of the Tamils, to include in the UNICODE Tamil characters (a) either the five characters (j, etc) or (b) the Varga letters for k, c, t, t and p. As Caldwell and C.P. Brown have pointed out, it was the inclusion of those characters in the middle ages for Telugu and Kannada which led to the  loss of the Tamulian (Dravidian) character of those languages. Tamil should be saved from this peril.
4. Govt. of India should also scotch in the bud the sinister move of Sanskrit afficianados to include in the ersatz Grantha UNICODE script, the five letters special to Tamil: short e, short o, r, l and n, v, x, w, H, d since their snide aim seems to be to manoeuvre to efface the unique and elegant Tamil script and replace it by the “Grantha” script so that  hordes of Sanskrit and non-Tamil words can be imported into Tamil with a view to destroy Tamil.
Thanking you sir,     
Yours sincerely
=====
தமிழர்களே,
கீழ்கண்ட கபில் சிபில் மின்னஞ்சல் முகவரிக்கு நம் கோரிக்கையை அனுப்புவோம்
Mr.Kapil Sibal
19, Teen Murti Marg
New Delhi
110 011
Tel: (011) 23388260, 23782378