வெள்ளி, 6 ஜூன், 2014

பாராட்டும் வாழ்த்தும்!

கடலூர் தொலைத்தொடர்புக் கோட்டத்தின் துணைமேலாளர் உயர்திரு, இராதாக்கிருட்டினன் 31-5-2014 அன்று பணிநிறைவுற்றார். அதையொட்டி விழுப்புரத்தில் அதே நாளில் நடைபெற்ற விழாவில் அவரின் பணிகளைப் பாராட்டி வாழ்த்தி அளித்த பா:   

மதிப்பிற்குரிய இராதாக் கிருட்டினனார்
மகிழ்வுற வாழ்க!


நீயே, அன்புதோய் நேயநல் அமைதியை!
இன்னார்க் கென்னாது எல்லார்க்கும் நல்லை!
இன்னா எண்ணாப் பொன்னுளம் உடையை!
நன்றொரு வர்க்கெனில் நண்ணுவை முன்னே!
என்னதோர் நெருக்கடி எந்தப் பணியரை
இறுக்கினும் உன்றன் ஏமக் காப்பு
இருக்கின் றதென இருப்பர் உறுதியில்!
வாடிக்கை யாளர் வருத்தத் துடனே
தேடிவந் துரைத்திடும் தீராக் குறைதமை
நாடித் தீர்த்தவர் நகைமுகம் காண்குவை!
ஈடிலா நிறைவில் இயம்புவர் நன்றி!
எந்த நாளிலும் வந்தமேல் ஆணை
`எந்திர விரைவினில் முந்திசெய் முயற்சியை!
அன்ன திறமையால் அதிகா ரிகளின்
நன்னம் பிக்கை நனிபெற உழைத்தனை!
தோழமை உணர்வு தோயநின் சங்கத்(து)
ஆழவே இயங்கி அரும்பணி ஆற்றினை!
போராட் டங்களில் போய்முன் நின்றனை!
பேராப் பெரும்பொறுப் பேற்று நடத்தினை!
குடும்ப நிலையிலும் குறையில் லாதே
அடுத்தடுத் தமைந்த கடமையும் ஆற்றினை!
ஒருநா ளில்லை இருநா ளில்லை
பலநாள் பழகினும் தலைநாள் அன்பினை!
வெருட்டல் மருட்டல் விரும்பா இராதாக்
கிருட்டின! நின்னை விரும்பார் யாரே!
மிகுவே கத்துடன் ஏகிய காலம்
தகுபணி நிறைவுறத் தந்ததே ஓய்வு!
நல்லுள நண்ப! தொல்லுல கிதனில்
நில்லுந் தமிழ்மொழி நிலைத்திடு நாள்வரை
கடல்நிலம் விசும்பு காற்றுதீ உளவரை
உடல்நலம் வளத்துடன் திடமுடன் மகிழ்வுற
வாழ்கநீ வாழ்கென வாழ்த்தினம்
ஆழ்ந்தநல் அன்புடன் அகம்மிக நெகிழ்ந்தே!
                  




3 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ரசிக்கவைக்கு வரிகள் கவிதை புனைந்த விதம் அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தமிழநம்பி சொன்னது…

பாச்சிறப்பறிந்து பாராட்டி வாழ்த்திய அன்புக்கு நன்றி ஐயா!

உமா சொன்னது…

ஐயா
வணக்கம்
மிக அருமையான வாழ்த்துப் பா.

வணக்கத்துடன்
உமா