திங்கள், 22 ஜூன், 2009

இனியேனும் முயலாரென்றால்...!



இனவெறிச் சிங்க ளர்க்கே
     இலையெனா தெல்லாம் தந்தார்!
கனவிலும் உரிமை மீட்பே 
     கருதிய தமிழர் குண்டுக்
கனலினில் கருகி மாளக்
     கழியமீ துள்ளோர் துன்பில்
மனஞ்சிதை வுறுதல் போக்க
     மனப்பத னிலைதில் லிக்கே!

ஈழமண் நொசிந்து நைந்தே
     இறந்தவர் ஓரி லக்கம்!
தோழத்தே அடைத்த மந்தைத்
     தொகுப்பெனக் குமைந்தி ழிந்தே
ஆழவே துயருள் மீழ்கி
     அமிழ்ந்துளார் மூன்றி லக்கம்!
சூழலோ அவர்க்க மைத்தச்
     சொல்லொணாக் கொடுமை அந்தோ!

அங்கவர் அடைப்பின் நீங்கி
     அவரவர் வீடி ருந்த
தங்கிடம் செல்லு தற்கே
     தடையிடா தீரென் றந்தச்
சிங்கள ஆட்சி யாளர்
     செவிப்பறை யறையச் சொல்ல
இங்குளார் தில்லி யாரை
     ஏன்வலி யுறுத்தா துள்ளார்?

தமிழினத் தலைமை வேட்டத்
     தகுதியைக் காட்டற் கேனும்
நிமிர்வுற நின்று தில்லி
     நிலையினை மாற்றி ஈழத்
தமிழரின் துயர் துடைக்கத்
     தாமினி முயலா ரென்றால்
இமிழுல கெல்லாந் தூற்றும்!
     இரண்டகர் இவரே என்னும்!

------------------------------------------

4 கருத்துகள்:

NAMNAADHU சொன்னது…

தமிழநம்பி உங்கள் துயரப் படிவுகள் அறுசீர் விருத்தம் மூலம் அழகா வடித்துள்ளீர்கள். அழகான கவிதை. அதிர்வான செய்திகள். –சோலைக்குயில்

தமிழநம்பி சொன்னது…

சோலைக்குயிலுக்கு நன்றி!

Kandumany Veluppillai Rudra சொன்னது…

சிதறத்தான் போகிறது சிங்கள தேசம் –கண்டு பதறத்தான் போகிறார்கள் பெரிய மகாவம்சம் கதறிக் கண்ணீர் விடத்தான் போகிறார்கள் –துண்டு உதறி ஓடத்தான் போகிறார்கள் இல்லாமலே

தமிழநம்பி சொன்னது…

நன்றி ஐயா.