வியாழன், 17 செப்டம்பர், 2009

மூன்று வெண்பாக்கள்!

            'அமுதசுரபி' மாத இதழில் வெண்பாப் போட்டிப் பகுதியில் ஈற்றடி கொடுத்து வெண்பா எழுதச் சொல்கின்றனர்.
கடந்த மூன்று இதழ்களில் வந்த என்னுடைய வெண்பாக்கள் :

  1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நன்றாகச் செய்க நயந்து 
என் பாடல் : 
நாடு நனிநல்ல! நாடா தொதுக்கிடுக 
கேடு விளைக்கின்ற கீழ்மைகளை! - தேடுபணி 
பொன்றாப் புகழும் பொதுநலனும் நாடிமிக 
நன்றாகச் செய்க நயந்து! 


  1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : நெஞ்சில் எரியும் நெருப்பு 
என் பாடல் : 
தன்னல வாழ்வே தமதாக்கித் தம்குடும்ப 
இன்னலம் தன்னையே எண்ணிடுவார்! - என்றென்றும் 
வஞ்சஞ் செயவஞ்சார் வாழ்வை நினைக்கையில் 
நெஞ்சில் எரியும் நெருப்பு. 


  1. கொடுக்கப்பட்ட ஈற்றடி : என்றும் திருநாள் எனக்கு 
என் பாடல் : 
வீதிதொறும் மாழ்கமது! வேகவுணா! ஊதுபுகை! 
ஊதியமும் கிம்பளமும் உண்டய்யா! ஏதிங்கே
ஒன்றிவரா மேலாள்! ஒருக்காலும் சிக்கலிலை! 
என்றும் திருநாள் எனக்கு!

--------------------------------------------------------------------------------------------------

4 கருத்துகள்:

உமா சொன்னது…

அய்யா வணக்கம். வெண்பா பதிவில் தங்களின் அறிவிப்பைப் பார்த்தேன். சின்ன வேண்டுகோள், அடிமறிமண்டில ஆசிரியப்பா பாடல்களை எனது வலையிலிட்டுள்ளேன். அருள் கூர்ந்து பிழைத்திருத்தி தங்களின் அறிவுரைகளை பின்னூட்டமாக இட வேண்டுகிறேன். மேலும் முயற்சிக்க எனக்கு உதவியாயிருக்கும். இடையூறுக்கு மன்னிக்கவும். மிக்க நன்றி.
அன்புடன் உமா.

உமா சொன்னது…

திரு. தமிழநம்பி அவர்களுக்கு வணக்கம்.
தங்கள் பாக்கள் அருமை. அதே ஈற்றடிகளுக்கென் முயற்சி

முதுமையில்:

ஆடாத காலும் அமைதியான தூக்கமும்
நாடா மனதினில் நிம்மதியும் - சாடாமல்
என்னுடனே சுற்றமும் சூழ்ந்திருந்தா லாகுமே
என்றும் திருநாள் எனக்கு.


நன்றாகச் செய்க நயந்து.


எத்தொழில் செய்தாலும் இன்பமுண்டு உன்மனதை
அத்தொழில் மீதினில் ஆழ்த்திடுக சத்தியம்
என்றும் தவறா(து) உழைப்பை உரமாக்கி
நன்றாகச் செய்க நயந்து.

தமிழநம்பி சொன்னது…

நன்றி உமா.

இரண்டு வெண்பாக்களும் நன்றாக உள்ளன.

இவற்றைப் பற்றிய உங்கள் மின்னஞ்சலுக்கு நான் எழுதிய விடையைப் படித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
உங்கள் ஆர்வத்திற்கு மீண்டும் நன்றி.

உமா சொன்னது…

//இவற்றைப் பற்றிய உங்கள் மின்னஞ்சலுக்கு நான் எழுதிய விடையைப் படித்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.//

மன்னிக்கவும். இது எனக்குப் புரியவில்லை. நான் தங்களுக்கு மின்னஞ்சல் ஏதும் அனுப்பவில்லை. முகவரியும் என்னிடமில்லை. என் அஞ்சல் முகவரிக்கும் எதுவும் வரவில்லை.
என்ன குழப்பம் என்று தெரியவிலலை.

இவ் வெண்பாக்களை பின்னூட்டமிட்டுவிட்டு என் பதிவில் பதித்தேன் அவ்வளவே.என் மின்னஞ்ச்சல் முகவரி umarameshg@gmail.com