வியாழன், 7 ஆகஸ்ட், 2008

பெரும்பாலும்...!?


            பேருந்தில் செல்வதையே விரும்பாதவன் நான். தவிர்க்க இயலாத நிலையில் ஒருநாள், விழுப்புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பேருந்தில் செல்ல வேண்டிய இக்கட்டு ஏற்பட்டது. அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டிய நேரத்தில் தொடர்வண்டி இல்லை. நிகழ்ச்சி நடக்கும் நேரத்திற்கு முன்னராகவும் செல்ல முடியாத நிலை. வேறு வழியின்றிப் பேருந்தில் ஏறினேன்.           பேருந்தின் முன்பகுதியிலுள்ள மூன்றுபேர் அமரும் இருக்கையில் ஓர் இடம் கிடைத்தது. ஓட்டுநருக்கு இடப்பக்கத்திலுள்ள நடத்துநருக்கான இருக்கையில் ஒருவர் வந்து உட்கார்ந்தார். பேருந்து ஓட்டுநர் உடனே அவரிடம், ‘நடத்துநர் உட்கார வரும்போது எழுந்துவிட வேண்டும்என்று எச்சரிக்கை செய்தார். அதைக் கேட்டுத் தலையாட்டிய அவர், ஓட்டுநரிடம் மிக இயல்பாகப் பல செய்திகளைப் பேசத் தொடங்கினார்.
            தொடக்கத்தில் அரைமனத்துடன் பேசத் தொடங்கிய ஓட்டுநர், பிறகுத் தயக்கத்தை விட்டு மிகப் பழகியவரிடம் பேசுவது போல் பேசத் தொடங்கினார். புதுவையிலிருந்து விழுப்புரம் போகும்
            பேருந்து அது. நிலையத்தை விட்டு வெளியே வந்த போது பேருந்தில் ஏறிய வெள்ளை வேட்டிக்காரர் ஒருவர், நடத்துநர் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநருடன் மிக ஈடுபாட்டோடு பேசிக் கொண்டிருந்தவரை நோக்கி, “ என்ன வேலு, இன்று வழக்கத்தைவிட முன்னராக வருகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும்; அதற்காகத்தான் முன்னராகக் கிளம்பி வந்துவிட்டேன்என்றார் அந்த வேலு.
            ஓட்டுநருடன் அந்த வேலுவின் பேச்சு தொடர்ந்தது. திடுமென வண்டியைத் தடையிட்டு நிறுத்தினார் ஓட்டுநர்! பேருந்து அதிர்ந்து நின்றது. சாலையில் இரண்டு இளைஞர்கள் ஓட்டுநரை முறைத்துப் பார்த்தவாறே அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு சென்றனர்.             பேருந்திற்குள், வண்டி திடுமென நின்றபோது எதிர் இருக்கையின் பின்புறத்தில் இடித்துக் கொண்ட இரு குழந்தைகள் கத்தி அழத்தொடங்கினர். நடத்துநர் இருக்கையில் அமர்ந்திருந்த வேலு உடனே, “கொஞ்சங்கூட ஒதுங்க மாட்டேனென்கிறார்கள்; ஆடு மாடே தேவலை!..எனத் தொடங்கி சாலையில் நடப்பவர்கள் திமிரையும் எதையும் பொருட்படுத்தாப் போக்கையும் பலவாறு விளக்கிக் கொண்டு வந்தார். அந்த ஓட்டுநர் இசைவாக ஆமாம்போட்டுக் கொண்டும் தலையாட்டிக்கொண்டும் வந்தார்.            
            வண்டி விழுப்புரத்தை நெருங்கியது. நான் இறங்க வேண்டிய மாதாக்கோயில் நிறுத்தமும் வந்தது. நான் இறங்கினேன். அந்த வேலுவும் அங்கேயே இறங்கினார். எனக்கு முன்னால் விரைந்து நடந்த வேலு, சாலையைக் கடக்கப் பாய்ந்து சென்றார். விரைந்து வந்த, நெய்வேலியிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்து, அவரருகில் வளைந்து திரும்பி பேரொலியை எழுப்பிச் சட்டென நின்றது.      அப்பேருந்தின் ஓட்டுநர் வேலுவை ஓர் அருவருப்பான உயிரியைப் பார்ப்பதுபோலப் பார்த்து விட்டுப் பேருந்தைக் கிளப்பிச் சென்றார். பின்னால் வந்த என்னிடம் வேலு பொருமினார். பெரிய வண்டியில் உட்கார்ந்து ஓட்டினால் இவர்களுக்குக் கண்மண் தெருவதில்லை; வானூர்தி ஓட்டுவது போன்ற நினைப்பு; சாலையில் போவோரைப் பற்றிக் கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பது கிடையாது...எனத் தொடங்கியவர் நான் என் நண்பர் வீட்டுப் படியேறும் வரையும் பேருந்து ஓட்டுவாரின் அடாவடித் தனங்கள்பற்றிய விளக்கத்தை முடிக்கவில்லை!
            வீட்டுக்குத் திரும்பி வந்த நான் நடந்தவற்றை யெல்லாம் என் மனைவியிடம் விளக்கி, அந்த வேலுவைப்பற்றி என்ன நினைக்கின்றாய்? என்று கேட்டேன். மிக அமைதியாக அவள் சொன்னாள்: பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள்! இதில் வியப்பதற்கு ஏதுமில்லை!அதைக் கேட்டதும் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்து நின்றேன்!          

            *********************************************************

6 கருத்துகள்:

சின்னப் பையன் சொன்னது…

அண்ணி சரியாத்தான் சொல்லியிருக்காங்க...

என் வழி தனி வழி... அந்த வழியில் குறுக்கிடறவங்க எல்லாருமே லூஸுப்பயலுங்க அப்படின்னு நினைக்கறவங்கதான் பெரும்பாலும்...

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

உண்மைதான், அவர்கள் செய்வதே சரி என்ற மனப்பான்மை. இவர்களையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது.

அகரம் அமுதா சொன்னது…

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கின்பின்
என்குற்றம் ஆகும் இறைக்கு!

என்ன அழகாக வள்ளுவர் அன்றே சொல்லிவைத்திருக்கிறார் பார்த்தீர்களா?

தமிழநம்பி சொன்னது…

வந்து
படித்து
கருத்துரைத்த
மூன்று
அன்பர்க்கும்
மனங்கனிந்த
நன்றி!

அ. பசுபதி (தேவமைந்தன்) சொன்னது…

இடுகை சிறப்பாக உள்ளது.

தமிழநம்பி சொன்னது…

நன்றி ஐயா!